கிருஷ்ணா கவாடே வேகமாக வளர்ந்து விட்டார். கிராமத்தின் பல குழந்தைகள் பள்ளிக்கு சென்றபோது அவர் விவசாயக் கூலியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நாட்கூலி ரூ.200. அவரின் நண்பர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது தினக்கூலி வேலைக்காக கட்டுமானத் தளங்களில் அவர் காத்திருந்தார். ஐந்து வருடங்களுக்கு முன், 13 வயதில், குடும்பத்துக்காக வருமானம் ஈட்டத் தொடங்கினார். குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர். அவரை விட வெறும் மூன்று வயதே அதிகமாக இருந்த சகோதரர் மகேஷ்ஷும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
மனநிலை பாதிப்பு இருப்பதால் அவர்களின் தந்தையால் வேலைக்கு செல்ல முடியாது என்றும் தாய் தொடர்ந்து நோய்வாய்ப்படுகிறார் என்றும் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த 80 வயது ரகுநாத் கவாடே சொல்கிறார். கிருஷ்ணாவின் தாத்தா அவர். “என் மனைவிக்கும் எனக்கும் வயதாகி விட்டது. எனவே என் பேரர்கள் சீக்கிரமாகவே அதிகமான பொறுப்புகளை எடுக்க வேண்டியச் சூழல். கடந்த 4-5 வருடங்களாக அவர்களின் வருமானத்தில்தான் குடும்பம் தாக்குப்பிடிக்கிறது,” என்கிறார் அவர்.
கவாடேக்கள் மேய்ச்சல் சமூகமான தங்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள். விமுக்தா சாதியாக மகாராஷ்டிராவில் பட்டியலிடப்பட்டிருக்கும் பழங்குடிச் சமூகம். நவ்கன் ரஜூரியில் ஒரு சிறுநிலம் குடும்பத்துக்கு உண்டு. ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலம். சோளம் மற்றும் கம்பு அங்கு பயிரிடப்படுகிறது. குடும்பத்தின் உணவுக்கு தேவையான அளவு விளைவிக்கப்படுகிறது.
கிருஷ்ணா மற்றும் மகேஷ் ஆகியோரின் மாத வருமானமான 6000-8000 ரூபாய்தான் குடும்பத்துக்கான செலவுகளுக்கு உதவுகிறது. ஆனால் கோவிட் தொற்று குடும்பத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. மார்ச் 2020-ல் தொடங்கிய ஊரடங்கிலிருந்து இருவருக்கும் வேலை இல்லை. வருமானமும் இல்லை.
“செயற்பாட்டாளர்களும் அரசும் கொடுத்த இலவச உணவுப் பொருட்களை கொண்டுதான் நாங்கள் வாழ்ந்தோம்,” என்கிறார் இருவரின் பாட்டியான 65 வயது சுந்தர்பாய். “வீட்டில் பணம் இல்லை. எண்ணெய், காய்கறி கூட வாங்க முடியவில்லை. ஊரடங்குக்கு பின்னான முதல் மூன்று மாதங்கள் எங்களை நொறுக்கிப் போட்டது.”
ஜூன் 2020-ல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் மெல்ல தொடங்கியபோதும், தினக்கூலி வேலை பீடில் கிடைப்பது கடினமாக இருந்தது. “எனவே புனேவுக்கு புலம்பெயர மகேஷ் முடிவெடுத்தான்,” என்கிறார் ரகுநாத். வீட்டுக்குப் பணம் அனுப்பும் அளவுக்கான வேலை அவருக்குக் கிடைக்கவில்லை. “குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காக கிருஷ்ணா இங்கேயே இருந்துவிட்டான். பீட் மாவட்டத்தில் வேலை தேடினான்.”
ஆனால் அந்த முடிவு ஆபத்தாக மாறிவிட்டது.








