முகமது சமீமின் குடும்பத்தில் மூன்று பேர், ஆனால் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளில் ஒன்றை உறுதிப்படுத்தும்படி ரயில்வே டிக்கெட் வழங்கும் முகவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். உத்தரபிரதேசத்தில் உள்ள தனது கிராமத்திற்கு திரும்ப முயற்சிக்கும் சமீம், "எனது மனைவிக்கு மட்டுமாவது உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை வேண்டும் என்று விரும்புகிறேன்", என்று கூறினார். "நான் எப்படியாவது ஏறி விடுவேன். எந்த நிலையிலும் என்னால் பயணிக்க முடியும். கடந்த முறை போல மோசமாவதற்கு முன்பு நாங்கள் எங்களது வீட்டிற்கு செல்ல வேண்டும்", என்று கூறுகிறார் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது கிராமத்தை அடைய முயற்சிக்கும் சமீம்.
"உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை பெற டிக்கெட் ஒன்றுக்கு 1,600 ரூபாய் கேட்கிறார் முகவர். அதைப் பேசி 1,400 ரூபாய் ஆகக் குறைத்துள்ளேன்", என்று கூறினார். "எங்களுக்கு ஒரு இருக்கை கிடைத்தால் நாங்கள் ஏறி பின்னர் என்ன தொகை அபராதமாக விதிக்கப்படுகிறதோ அதை கட்டிக் கொள்வோம்". மும்பையிலிருந்து உத்தரப்பிரதேசத்திற்கு வழக்கமான மலிவான ரயில் டிக்கெட் 380 முதல் 500 ரூபாய்தான். உபியின் பைசாபாத் மாவட்டத்திலுள்ள மசோதா வட்டத்திலுள்ள அபூ சராய் கிராமத்தில் சமீமின் இரண்டு மூத்த சகோதரர்கள் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு விவசாய கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர், இது ஒரு பருவகால தொழில்.
22 வயதாகும் சமீம் மற்றும் மும்பையில் உள்ள பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, கோவிட்-19 பரவுவதை சமாளிக்க மஹாராஷ்டிரா அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் புதிய கட்டுப்பாடுகளான தொழிற்சாலைகளை மூடுதல், கட்டுமான பணியை நிறுத்துதல் ஆகியவை காரணமாக 10 மாத காலத்திற்குள் இது இரண்டாவது முறை தங்களது வீட்டிற்கு திரும்பும் பயணமாகும்.
மும்பையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களான, குறிப்பாக பந்த்ரா டெர்மினஸ் மற்றும் லோக்மான்ய திலக் டெர்மினஸ் ஆகியவற்றில் - இங்கிருந்து தான் வடக்கு மாநிலங்களான உத்திர பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவற்றுக்கு பல ரயில்கள் செல்லும், ஏப்ரல் 14ஆம் தேதி புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற விரும்பி ஏப்ரல் 11 - 12 ஆகிய தினங்களில் கிளம்பினர் எனவே அந்த ரயில் நிலையங்கள் கூட்டமாக இருந்தது. மேலும் முடக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பலர் வெளியேற முயற்சிக்கின்றனர்.
சிவசேனா தலைமையிலான மாநில அரசு பொது முடக்க கட்டுப்பாடுகளை ஊரடங்கு என்று அழைக்கவில்லை. ஆனால் இது "எங்களை பொறுத்தவரை இரண்டாவது ஊதிய இழப்பு மேலும் அது எங்களை ஏற்கனவே பாதித்துவிட்டது", என்று கூறுகிறார் சமீம்.






