57 வயது பாலாபாய் சவ்தாவுக்கு குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் ஐந்து ஏக்கர் வளமான நிலம் இருக்கிறது. நீர்ப்பாசனம் கொண்ட நிலம். 25 வருடங்களாக அவரின் உரிமையில் நிலம் இருக்கிறது. எனினும் ஒரு சிறு பிரச்சினை இருக்கிறது. அவருக்கு சொந்தமான நிலத்தின் அருகே செல்லக் கூட அவருக்கு அனுமதி இல்லை.
“என் உரிமத்துக்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது,” என்கிறார் பழுப்பாகிப் போன பட்டா ஆவணங்களை பிரித்தபடி. “ஆனால் ஆதிக்க சாதியினரின் கைவசம் இந்த நிலம் இருக்கிறது.”
குஜராத்தின் பட்டியல் சாதியான சமர் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளரான பாலாபாய், உதவி கேட்டு பலரையும் நாடினார். உதவிக்கென சென்று அவர் தட்டக் கூடிய கதவுகள் அதிகம் இல்லை. “ஒருநாள் விடாமல் எல்லா நாட்களும் என்னுடைய நிலத்துக்கு நான் செல்வேன்,” என்கிறார் அவர். “தூர இருந்து அதைப் பார்த்து, என் வாழ்க்கை எப்படி ஆகியிருக்கும் என கற்பனை செய்வேன்…”
த்ரங்கதா தாலுகாவின் பாரத் கிராமத்திலுள்ள விவசாய நிலம், பாலாபாய்க்கு 1997ம் ஆண்டு குஜராத் நில விநியோகக் கொள்கையின்படி ஒதுக்கப்பட்டது. குஜராத் விவசாய நில உச்சவரம்பு சட்டம் 1960-ன்படி கையகப்படுத்தப்பட்ட உபரி நிலம் பொது நன்மைக்காக ஒதுக்கப்பட்ட நிலம்.
சந்தானி ஜமீன் எனப்படும் இந்த நிலங்கள் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களுடன் சேர்த்து “விவசாய நிலம் தேவைப்படும் மக்களுக்கு” - விவசாயிகள் கூட்டுறவு சங்கம், நிலமற்றோர், விவசாயத் தொழிலாளர்கள் போன்றோர் - பட்டியல் சாதி மற்றும் பட்டியல் இன மக்களுக்கான முன்னுரிமையுடன் அளிக்கப்படும்.
இத்திட்டம் காகிதத்தில் செயல்படுகிறது. நடைமுறையில் இல்லை.
நிலப்பட்டா கிடைத்ததும் பாலாபாய் பருத்தி, சோளம், கம்பு ஆகியவற்றை அந்த நிலத்தில் விதைக்க திட்டமிட்டார். வேலை பார்க்கும் இடத்திலேயே வசிக்கலாமென விவசாய நிலத்திலேயே ஒரு சிறு வீடு கட்டவும் நினைத்தார். அச்சமயத்தில் அவருக்கு வயது 32. இளமையாக ஒரு புது எதிர்காலத்தை கட்டக் கூடிய சாத்தியமிருந்த வயது. “மூன்று சிறு குழந்தைகள் எனக்கு இருந்தன,” என்கிறார் அவர். “தொழிலாளராக நான் பணிபுரிகிறேன். அடுத்தவருக்காக இனி உழைக்க வேண்டியதில்லை என நினைத்தேன். சொந்தமான நிலத்தைக் கொண்டு என் குடும்பத்துக்கு நல்ல ஒரு வாழ்க்கையைக் கொடுக்கலாமென நினைத்தேன்.”








