ராதா வளர்த்த நாய்கள் அவற்றின் வீரத்துக்கான விலையைக் கொடுத்திருக்கின்றன. முதல் நாயின் தலை வெட்டப்பட்டது. இரண்டாவது நாய்க்கு விஷம் வைக்கப்பட்டது. மூன்றாவதை காணவில்லை. நான்காவது அவரின் கண் முன்னாலேயே கொல்லப்பட்டது. “என் கிராமத்தைச் சேர்ந்த அதிகாரம் மிக்க நால்வர் எனக்கு இழைத்த அநீதிக்காகச் சிறையில் இருக்கின்றனர்,” என்கிறார் அவர். “வன்புணர்வு வழக்கை திரும்பப் பெறாததால் அவர்கள் என்னை வெறுக்கிறார்கள்.”
ஆறு வருடங்களுக்கு முன்பு நான்கு ஆண்கள் ராதாவை (உண்மைப் பெயர் அல்ல) வன்புணர்வுக்கு உள்ளாக்கினர். கிராமத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பீட் மாவட்டத்துக்கு அவர் சென்று கொண்டிருந்தார். ‘லிஃப்ட்’ கொடுப்பதாக வாகனத்தில் ஏற்றியவர் அவரைக் கடத்திச் சென்றார். ராதாவின் கிராமத்தைச் சேர்ந்த அவரும் அவரின் மூன்று நண்பர்களும் ராதாவை வன்புணர்ந்தனர்.
”பல வாரங்களுக்கு எனக்கு மன உளைச்சல் இருந்தது,” என்கிறார் 40 வயது ராதா. ”அவர்களைச் சட்டம் கொண்டு தண்டிக்க விரும்பினேன். எனவே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தேன்.
சம்பவம் நேரும்போது ராதா, பீட் நகரத்தில் அவரின் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். “என்னுடைய கணவர் அங்கொரு நிதி நிறுவனத்தில் பணி புரிந்தார். எங்களின் விவசாய நிலத்தைப் பார்க்க அவ்வப்போது நான் கிராமத்துக்கு செல்வேன்,” என்கிறார் அவர்.
வழக்கை திரும்பப் பெறச் சொல்லி ராதாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. குற்றவாளிகளும் அவரின் உறவினர்களும் கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் கிராமத்தில் அதிகாரம் கொண்டோருக்கும் நெருக்கமானவர்கள் என்கிறார் அவர். “எனக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தை புரிந்து கொண்டேன். ஆனால் நான் கிராமத்திலிருந்து வெளியேதான் வாழ்ந்தேன். நகரத்தில் எனக்கு ஆதரவாக பலர் இருந்தனர். நான் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் இருந்தேன்.”
மார்ச் 2020ல் கோவிட் தொற்று வந்தபிறகு அவருக்கான பாதுகாப்பு இல்லாமல் போனது. தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் அவரின் கணவர் மனோஜ் (உண்மைப் பெயர் இல்லை) வேலையிழந்தார். “மாதத்துக்கு 10,000 ரூபாய் சம்பாதித்தார்,” என்கிறார் ராதா. “நாங்கள் ஒரு வாடகை ஃப்ளாட்டில் வசித்தோம். மனோஜுக்கு வேலை போனபிறகு எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை. பிழைப்பு சிரமமானது.”
வேறு வழியின்றி, ராதாவும் மனோஜும் அவர்களின் குழந்தைகளும் அரைமனதோடு கிராமத்துக்குச் சென்றனர். ராதா வன்புணர்வு செய்யப்பட்ட அதே ஊர். “இங்கு எங்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. எனவே இங்கு வந்தோம். வேறு எதையும் எங்களால் யோசிக்க முடியவில்லை,” என்கிறார் அவர். குடும்பம் தற்போது குடிசையில் வசிக்கிறது. பருத்தி மற்றும் சோளம் ஆகியவற்றை நிலத்தில் விதைத்திருக்கிறார் ராதா.
கிராமத்துக்கு அவர் வந்தவுடனே குற்றவாளிகளின் குடும்பங்கள் அவரை இலக்காக்கத் தொடங்கியது. “வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. திரும்பப் பெறச் சொல்லி அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது,” என்கிறார் அவர். பின்வாங்க அவர் மறுத்ததும் அழுத்தம் வெளிப்படையான மிரட்டல்களாக மாறியது. “நான் அவர்கள் இருக்கும் கிராமத்திலேயே இருக்கிறேன். என்னை மிரட்டுவதும் தொல்லை கொடுப்பதும் எளிதாகி விட்டது,” என்கிறார் ராதா.




