லாரிகளில் ஒருவர் பயணிப்பது கிராமப்புறங்களில் சாதாரணமாக நடக்கும் விஷயம். பொருட்களை இறக்கிவிட்டு காலியாக திரும்பும் லாரிகளின் ஓட்டுநர்களுக்கு வருமானம் ஈட்டி தரும் விஷயமும் கூட. யார் வேண்டுமானாலும் அச்சேவையை பயன்படுத்த முடியும். சில நேரங்களில் வாரச் சந்தை முடிந்து வீட்டுக்கு திரும்பும் கூட்டத்துக்கு நடுவே வாகனத்தில் இடம்பிடிப்பது சிரமாமான காரியமாகவும் இருக்கும். கிராமப்புற இந்தியாவில் முதலாளி கவனிக்காத போது ஒவ்வொரு லாரி ஓட்டுநரும் ஒரு வாடகை போக்குவரத்து வழங்குபவராக இயங்குகிறார். போக்குவரத்து கிட்டாத பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட கட்டணம் வாங்கிக் கொண்டு அவர் அச்சேவையை வழங்குகிறார்.
இது ஒடிசாவின் கொராபுட்டில் இருக்கும் நெடுஞ்சாலைக்கு அருகே இருக்கும் ஒரு கிராமம். இரவு கவியத் தொடங்கியதும் மக்கள் வீட்டுக்கு செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தனர். இத்தகைய சூழல்களில் எத்தனை பேர் வாகனத்தில் ஏறுகிறார்கள் என கவனிக்க முடியாது. ஓட்டுநருக்கு மட்டும் ஓரளவுக்கு தெரியும். ஏனெனில் அவர்தான் ஒவ்வொருவரிடமிருந்தும் கட்டணம் வசூலிப்பார். ஆனால் அவருக்கும் உறுதியாக தெரியாது. ஏனெனில் வெவ்வேறு குழுக்களுக்கு வெவ்வேறு கட்டணங்களை அவர் வசூலிப்பார். கோழிகள் கொண்டு வருவோருக்கு ஒரு வகையிலும் ஆடுகளுடன் வருவோருக்கு ஒரு வகையிலும் தலைச்சுமைகளோடு வருவோருக்கு ஒரு வகையிலும் கட்டணம் விதிப்பார். திரும்ப வரும் வாடிக்கையாளர்களுக்கும் முதியோருக்கும் ஓரளவுக்கு கட்டணத்தை அவர் குறைக்கவும் செய்வார். பிரதான நெடுஞ்சாலையில் பரிச்சயப்பட்ட இடங்களில் பயணிகளை இறக்கி விடுவார். அங்கிருந்து அவர்கள் நடந்து சென்று இருளுக்குள் மறைந்து காடுகளுக்குள் புகுந்து வீடுகளை அடைவார்கள்.
30 கிலோமீட்டர் வரை பயணித்து பலர் சந்தைக்கு வந்திருந்தனர். அவர்களின் வீடுகள் நெடுஞ்சாலையிலிருந்து தூரத்தில் இருக்கிறது. இரண்டிலிருந்து ஐந்து ரூபாய் வரையிலான செலவில் அவர்களால் 20 கிலோமீட்டர் வரை, இடம் மற்றும் சிரமம் ஆகியவற்றுக்கேற்ப பயணிக்க முடியும். கட்டணங்கள் ஒவ்வொரு ஓட்டுநருக்கும் சிறிதளவு மாறுபடும். தேவை, அவசரம், பேரம் முதலிய விஷயங்களை சார்ந்து அது மாறும். இந்த பாணியில் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்த எனக்கு அவரை ஒப்புக் கொள்ளச் செய்வதில் ஒரு பிரச்சினை இருந்தது. ஓட்டுநர் அருகே இல்லாமல், பின்னால் வரும் மக்கள் கூட்டத்தினுடனோ அல்லது வாகனத்தின் மேற்புறத்தில் அமர்ந்தோ வர நான் விரும்பினேன்.



