இந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி இரவு 10:30 மணிக்கு ஹையுல் ரகுமான் அன்சாரி மும்பையில் உள்ள லோக்மானியா திலக் டெர்மினஸில் இருந்தார். ஜார்கண்டின் ராஞ்சி மாவட்டத்திலுள்ள ஹதியா ரயில் நிலையத்திற்குச் செல்ல நள்ளிரவு 12:30 மணிக்கு வர வேண்டிய ஹதியா எக்ஸ்பிரஸுக்காக காத்திருந்தார். அங்கிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு ரகுமான் ஆட்டோவில் செல்வார், அங்கிருந்து சத்ரா மாவட்டத்தில் இருக்கும் தனது கிராமத்திற்கு அண்டை கிரமமான அசர்ஹியாவிற்கு பேருந்தில் செல்வார்.
இந்த மொத்த பயணத்திற்கும் அவருக்கு ஒன்றரை நாள் தேவைப்படும்.
ஆனால் ரயில் ஏறுவதற்கு முன்பு ரயில் நிலையத்தில் அமைதியாக ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்த 33 வயதாகும் ரகுமான் ஒரு வருட காலத்திற்குள் இரண்டாவது முறையாக தான் ஏன் மும்பையை விட்டு வெளியேறுகிறார் என்பதை எங்களிடம் கூறினார்.
அவர் தனது வீட்டிற்கு திரும்புவதற்கு ரயில் ஏறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரது புதிய முதலாளி அவரிடம் வேலை குறைந்து வருவதாக கூறினார். "ரகுமான் மன்னிக்கவும், இப்போது உன்னை பணியில் தொடர்ந்து வைத்திருக்க முடியவில்லை, நீ பின்னர் மீண்டும் முயற்சி செய்", என்று அவர் கூறினார். அப்படித்தான் அவர் இன்னும் தொடங்கவேபடாத அவரது சமீபத்திய வேலையை இழந்தார்.
ஜாம்ஷெட்பூரின் கரீம் நகர் கல்லூரியில் மக்கள் தொடர்பு பிரிவில் பட்டம் பெற்ற பின்னர் ரகுமான் 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வந்தார். அவர் காணொலி எடிட்டராக திட்ட அடிப்படையிலான பணிகளை மேற்கொண்டார், அதன் வருமானம் அவருக்கு நகரில் தங்கவும் , வீட்டிற்கு கொஞ்சம் பணம் அனுப்பவும் போதுமானதாக இருந்தது.
ஆனால் மார்ச் 2020ல் கோவிட் 19 காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது மாதம் 40,000 ரூபாய் சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த தனது வேலையை அவர் இழக்க நேரிட்டது. ரகுமான் தனது கிராமத்தைச் சேர்ந்த மற்ற நான்கு நபர்களுடன் மேற்கு பந்தராவின் லால் மிட்டி பகுதியில் ஒரு சிறிய அறையில் வசித்து வந்தார் ஒவ்வொருவரும் மாதம் 2,000 ரூபாய் வாடகை கொடுத்து வந்தனர். அந்தக் காலகட்டம் மிகவும் கடினமாக இருந்தது என்று அவர் நினைவு கூர்கிறார்- ஒரு கட்டத்தில் அவர்களுக்கு ரேஷன் வாங்குவதற்குக் கூட போதுமான பணம் இல்லாமல் இருந்தனர் என்று கூறினார்.
"கடந்த வருடம் மகாராஷ்டிர அரசிடம் இருந்து எனக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை", என்று ரகுமான் கூறினார். அவருடன் முன்னாள் ஒன்றாக பணியாற்றிய நபர் அவருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் பேரிட்சை ஆகியவற்றை வழங்கினார். "அந்த நேரத்தில் நான் மிகவும் மோசமான நிலையில் இருந்தேன், அதைப்பற்றி என்னால் யாரிடமும் பேசவும் முடியவில்லை", என்று கூறினார்.
எனவே கடந்த ஆண்டு மே மாத நடுப்பகுதியில் ரகுமான் அசர்ஹியாவில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக மூன்று மாத வாடகை பணத்தை சேமித்து வைத்தார். அவரும் அவரது அறையில் தங்கியிருந்தவர்களும் ஒரு தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றனர் அவர்கள் ஒரு இருக்கைக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டியிருந்தது. பின்னர் வாடகை கொடுக்க அனுமதிக்குமாறு உரிமையாளரிடம் அவர் வேண்டிக் கொண்டார்.
அவர் தனது கிராமத்திற்கு திரும்பியதும் ரகுமான் தனது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து அவர்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் விதைப்பது அறுவடை செய்வது ஆகிய பணிகளில் ஈடுபட்டார். அவரது பெற்றோர் சகோதரர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் கிராமத்தில் ஒன்றாக சேர்ந்து வசித்து வந்தனர். ரகுமானின் மனைவி 25 வயதாகும் சல்மா கதூன் மற்றும் அவர்களது குழந்தைகளான ஐந்து வயதாகும் முகமது அஹ்லாக் மற்றும் இரண்டு வயதாகும் சைமா நாஸ் ஆகியோரும் அவர்களுடன் வசித்து வந்தனர்.
பெருந்தொற்றுக்கு முன் ரகுமான் வீட்டு செலவிற்கும், பண்ணை செலவிற்கு அவரது குடும்பத்தினர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்கும் 10,000 முதல் 15,000 ரூபாய் வரை அனுப்பி வந்தார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பிறகு மும்பையில் வேலை வாய்ப்பு இருந்ததால் திரும்பிச் சென்றார். பத்து மாத இடைவெளிக்குப் பிறகு 2021 பிப்ரவரி மாதம் அவர் மும்பைக்கு திரும்பினார்.
அதற்குள் அவர் தனது இட உரிமையாளருக்கு 10 மாத வாடகை கொடுக்க வேண்டி இருந்தது. அவர்களது நிலத்தில் வேலை செய்ததன் மூலம் சேமித்த பணம் மற்றும் லக்னோவில் சிறிய எடிட்டிங் வேலை செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தில் மும்பை திரும்பிய பிறகு ஒன்பது மாத வாடகையான 18,000 ரூபாய் செலுத்தினார்.
ஆனால் அவர் புதிய அலுவலகத்தில் புதிய வேலையை துவங்குவதற்கு முன்னரே ஏப்ரல் 5ஆம் தேதி பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது (பின்னர் ஏப்ரல் 14 அன்று முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது). கோவிட் 19 இன் இரண்டாவது அலை அவர் பணியாற்றி வந்த திட்டங்களை மந்தப்படுத்தியது மேலும் ரகுமானின் புதிய முதலாளி அவரை இனி பணியில் வைத்திருக்க முடியாது என்று தெரிவித்தார்.
வேலை தேடுவதில் இருக்கும் நிச்சயமற்ற தன்மை ரகுமானை இதற்கு முன்பு அதிகம் பாதித்ததில்லை. "நான் ஒரு திட்டத்தில் வேலை செய்ய நேர்ந்தால், அது சில நேரங்களில் ஆறுமாதங்கள் ஆகவும் இருக்கும், இரண்டு ஆண்டுகள் ஆகவும் இருக்கும் மூன்று மாதங்களாக கூட இருக்கும். அதற்கு நான் பழக்கப்பட்டு இருந்தேன்", என்று அவர் கூறினார். "ஆனால் அலுவலகங்கள் அனைத்தும் திடீரென மூடப்படும் போது அது மேலும் சிரமம் ஆகிவிடுகிறது", என்று கூறினார்.
முன்னர் ஒரு அலுவலகத்தில் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் மற்ற இடங்களில் விண்ணப்பித்தார். "ஆனால் இப்போது எங்கோ ஓரிடத்தில் வேலை பெறுவது கூட கடினமாக இருக்கிறது. பெருந்தொற்றின் காரணமாக ஒருவர் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் கைகளை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.. மேலும் அந்நியர்களை யாரும் தங்களது வளாகங்களுக்குள் அனுமதிப்பதில்லை. அது எங்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது", என்று ரகுமான் விளக்கினார்.
அவருக்கு தனது கிராமத்தில் வாழத்தான் விருப்பம் என்றும், " ஆனால் இத்தகைய வேலையை (வீடியோ எடிட்டிங்) இங்கிருந்து செய்யமுடியாது. நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் நகரத்திற்குத் தான் செல்ல வேணுடும்", என்றும் கூறினார்.
தமிழில்: சோனியா போஸ்