“எனது இரண்டு மூத்த மகன்களும், நிலத்தின் சொந்தக்காரருக்காக இரண்டு நாட்கள் வேலை செய்து இருவரும் தலா ரூ.150ஐ சம்பாதித்தனர். அவர்கள் அந்த பணத்தை அவரிடம் இருந்து நெற்பதர்களை வாங்குவதற்காக பயன்படுத்தினர்” என்று வனிதா போயர் கூறுகிறார். அவர் ஒரு மஞ்சள் நிற பிளாஸ்டிக் ஜாடியை திறந்து அதிலிருந்து சில அரிசி மணிகளை எடுத்து என்னிடம் காட்டினார். இவை கதிரக்கப்பட்டபோது சேகரிக்கப்பட்ட பதர் நெல். இவை அரிசியைவிட விலை குறைவு. அதனுடன், ஒரு வாரத்திற்கு தேவையான உப்பு, மிளகாய், மஞ்சள்தூள், சமையல் எண்ணெய் மற்றும் கொஞ்சம் உருளை கிழங்குகள் ஆகியவை வைக்கோலால் வேயப்பட்ட 52 வயதான வனிதாவின் மண் குடிசையில் இருந்தன. இதுவும் உள்ளூர் சமூக சேவகர்களால் அந்த குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்.
“குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு உணவு தானியங்கள் அரசால் வழங்கப்பட்டது. அவர்கள் மார்ச் மாதத்தில் ஊரடங்கு துவங்கியதில் இருந்து மாதந்தோறும் இலவச அரிசி பெற்றனர். ஆனால் எனக்கு குடும்ப அட்டை கிடையாது. எனது குடும்பம் என்ன செய்யும்?” என்று வனிதாவின் கணவரான 55 வயது நவ்சு போயர் கேட்கிறார். “அரசும் எங்களுக்கு உதவாது. எங்களின் வேலையும் நிறுத்தப்பட்டுவிட்டது. நாங்கள் எதை உட்கொள்வோம்?“
நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் வேலைக்காக இடம்பெயர்வோம் என்பதால், நவ்சு, குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கவில்லை என்று கூறுகிறார். அதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறுகிறார். அவர் படிக்காதவர். அவர்களின் மகன்கள் 3 பேரில், ஆனந்த்(18), சிவா(12) மூன்றாம் வகுப்பிற்கு பின்னரும், ராம்தாஸ்(16) நான்காம் வகுப்பிற்கு பின்னரும் படிப்பை பாதியில் விட்டுவிட்டனர். இளைய மகன் கிருஷ்ணா (8) இரண்டாம் வகுப்பும், கடைசி மகள் சங்கீதா (4) அங்கன்வாடியும் செல்கின்றனர்.
போயர் குடும்பத்தினர் பால்கர் மாவட்டத்தில் உள்ள வடா நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போரண்டா என்ற கிராமத்தில் வசிக்கின்றனர். அங்குள்ள குடியிருப்பில் தோராயமாக, 8 குடிசைகளில் கட்கரி ஆதிவாசிகள் வசிக்கின்றனர்.
கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், தொழிலாளர்களின் குடும்பத்தினர் பிவண்டி தாலுகாவில் உள்ள செங்கல் சூளைகளில் வேலை செய்வதற்காக இடம் பெயர்ந்தனர். சூளையில் வேலை செய்யும்போது, பகலிலும், இரவிலும் அதிக சோர்வாக இருக்கும். வாரமொருமுறை சூளை முதலாளியிடம் இருந்து ரூ.400 முதல் ரூ.500 பெற்று தேவையான மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொள்வார்கள். சூளையில் பல மாதங்கள் வேலை செய்த பின்னர், வேலைகள் முடிவடையும்போது, அவர்களின் கூலியை கணக்கிட்டு, அவர்கள் பெற்ற முன் பணம் கழிக்கப்படும். அந்த குடும்பத்திற்கு எந்த கடனும் இல்லையெனில், நவம்பர் முதல் மே வரை ஏழு மாதங்கள் உழைத்த பின்னர் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கிடைக்கும்.






