“பல மணி நேரங்களுக்கு அழுகிறாள். இறுதியில் தாயை அழைத்து வரச் சொல்கிறாள்,” என்கிறார் ஷிஷுபால் நிஷாத் தன்னுடைய ஏழு வயது மகள் நவ்யாவை பற்றி. “ஆனால் நான் எங்கிருந்து அவளை அழைத்து வருவது? எனக்கே மனம் பேதலிப்பது போலிருக்கிறது. பல வாரங்களாக நாங்கள் தூங்காமல் இருக்கிறோம்,” என்கிறார் சிங்க்தாலி கிராமத்தை சேர்ந்த 38 வயது தொழிலாளி.
ஷிஷுபாலின் மனைவியும் நவ்யாவின் தாயுமான மஞ்சு ’ஆசிரியரின் நண்பரா’க சிங்க்தாலி ஆரம்ப பள்ளியில் பணிபுரிந்தார். உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தலுக்கு கட்டாயப் பணியில் சென்று கோவிட் பாதித்து இறந்த பள்ளி 1621 ஆசிரியர்களில் அவருடைய பெயர் 1282ம் எண்ணில் இடம்பெற்றிருக்கிறது. ஐந்து பேர் கொண்டிருந்த குடும்பத்துக்கு மஞ்சு நிஷாத் வெறும் எண் மட்டுமில்லை.
மூன்று குழந்தைகளுக்கு தாயான அவர்தான் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே உறுப்பினர். மாத வருமானம் 10,000 ரூபாய். ஒப்பந்த வேலையான ஆசிரியரின் நண்பர் வேலைக்கு அவ்வளவுதான் ஊதியம். அந்த வேலைக்கு உத்தரவாதமும் இல்லை. ஆனாலும் மஞ்சு அந்த வேலையில் 19 வருடங்களுக்கு பணிபுரிந்தார். ஆசிரியரின் நண்பரும் பாடம் நடத்துவார். ஆனால் அவரை ஆசிரியரின் உதவியாளர் என்று மட்டுமே வகைப்படுத்தி இருக்கிறார்கள்.
பந்தெல்காண்ட் அதிவிரைவுச்சாலை கட்டுமானத்தில் 300 ரூபாய் நாட்கூலிக்கு பணிபுரிந்து கொண்டிருந்தார். “நான் பார்த்த அந்த வேலை இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. வேறு எந்த கட்டுமானமும் அருகே நடக்கவுமில்லை. கடந்த மாதங்களை மனைவியின் வருமானத்தை கொண்டுதான் ஓட்டினோம்,” என்கிறார் ஷிஷுபால்.
ஏப்ரல் 15, 19, 26 மற்றும் 29ம் தேதிகளில் நடத்தப்பட்ட உத்தரப்பிரதேசத்தின் பிரம்மாண்டமான நான்கு கட்ட பஞ்சாயத்து தேர்தல்களில் வேலை பார்க்க ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அனுப்பப்பட்டனர். முதலில் அவர்கள் ஒருநாள் பயிற்சி எடுத்துக் கொண்டனர். பிறகு இரண்டு நாட்களுக்கு தேர்தல் வேலை – ஒருநாள் தயாரிப்புக்கும் இரண்டாம் நாள் தேர்தலுக்கும். பிறகு மே 2ம் தேதி மீண்டும் ஆயிரக்கணக்கானோர் வாக்கெண்ணும் பணிக்கு வர வேண்டும். இந்த வேலைகளை செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தேர்தல்களை ஒத்திப் போடச் சொல்லி ஆசிரியர் சங்கங்கள் முன் வைத்த கோரிக்கை பொருட்படுத்தப்படவில்லை.
உபியின் ஆசிரியர் கூட்டமைப்பு பட்டியலிட்டிருக்கும் 1621 ஆசிரியர் மரணங்களில் 193 பேர் ஆசிரிய நண்பர்கள். அவர்களில் 72 பேர் பெண்கள். அவர்களில் ஒருவர்தான் மஞ்சு. ஆனால் மே 18ம் தேதி உபியின் ஆரம்பக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிக்கை, பணியில் இருக்கும்போது இறந்தவர்களுக்கு மட்டும்தான் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்றது. இதற்கு அர்த்தம் வேலை பார்த்த இடத்திலேயே ஆசிரியர்கள் இறந்திருக்க வேண்டும் அல்லது வீடு திரும்பும்போது இறந்திருக்க வேண்டும். “குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் எந்த காரணத்தாலும் இறக்கும் ஒருவருக்கான நஷ்ட ஈட்டை மாநில தேர்தல் ஆணையம் அளிக்கும்,” என்கிறது அறிவிக்கை.








