தேதி நினைவில்லை என்றாலும் அந்த குளிர்கால இரவின் நினைவை லக்‌ஷ்மிகா தெளிவாக நினைவுகூர்கிறார். அவரது கர்ப்பத்தின் நீர்க்குடம் உடைந்து வலி தொடங்குகையில் “கோதுமைப் பயிர் கணுக்காலுக்கு சற்று மேல் வரை இருந்தது.” அது டிசம்பராகவோ ஜனவரியாகவோ (2018/19) இருக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

பராகவோன் ஒன்றியத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்துக்கு செல்ல ஒரு டெம்போ வாகனத்தை அவரின் குடும்பம் வாடகைக்கு எடுத்தது. அவர்களின் கிராமமான அஷ்வாரியிலிருந்து மையம் ஆறு கிலோமீட்டர் தொலைவு. “மையத்தை அடைந்தபோது நான் பெரும் வலியில் இருந்தேன்,” என்கிறார் 30 வயது லக்‌ஷிமா. தற்போது 5-லிருந்து 11 வயது வரை இருக்கும் அவரின் மூன்று குழந்தைகளான ரேணு, ராஜு மற்றும் ரேஷம் அப்போது வீட்டில் இருந்தனர். “மையத்தின் அலுவலர் என்னை அனுமதிக்க மறுத்து விட்டார். நான் கர்ப்பமாக இல்லை என்றார். என்னுடைய வயிறு நோயால் பருத்திருப்பதாகச் சொன்னார்.”

லக்‌ஷிமாவின் மாமியாரான ஹிராமனி அலுவலரிடம் அவரை அனுமதிக்க மன்றாடியிருக்கிறார். ஆனால் அலுவலர் மறுத்திருக்கிறார். இறுதியில், லக்‌ஷிமா குழந்தை பெற அங்கேயே உதவப் போவதாக அவர்களிடம் ஹிராமனி கூறினார். “என்னுடைய கணவர் என்னை இடம் மாற்றுவதற்காக ஆட்டோவைப் பிடிக்கும் முயற்சியில் இருந்தார்,” என்கிறார் லக்‌ஷிமா. “ஆனால் நகர முடியாதளவுக்கு நான் பலவீனமாக இருந்தேன். மையத்துக்கு வெளியே ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தேன்.”

60களில் இருக்கும் ஹிராமனி லக்‌ஷிமாவுக்கு பக்கத்தில் அமர்ந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு மூச்சை இழுத்து விடும்படி கூறிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் கழித்து, கிட்டத்தட்ட நள்ளிரவு வேளையில், குழந்தை பிறந்தது. அடர்ந்த இருட்டும் உறைய வைக்கும் குளிரும் இருந்ததாக நினைவுகூர்கிறார் லக்‌ஷிமா

Lakshima with her infant son Amar, and daughters Resham (in red) and Renu. She remembers the pain of losing a child three years ago, when the staff of a primary health centre refused to admit her
PHOTO • Parth M.N.

கைக்குழந்தை அமர் மற்றும் மகள்கள் ரேஷம் (சிவப்பு நிறத்தில்) மற்றும் ரேனுவுடன் லக்‌ஷிமா. மூன்று வருடங்களுக்கு முன் ஒரு சுகாதார மைய அலுவலர் மையத்தில் அனுமதி மறுத்ததால் குழந்தையை பறிகொடுத்தது அவர் நினைவில் இருக்கிறது

குழந்தை உயிர் பிழைக்கவில்லை. என்ன நடந்தது என்பதை அறியாத அளவுக்கான சோர்வில் லக்‌ஷிமா இருந்தார். “சுகாதார மைய அலுவலர் அதற்குப் பிறகு என்னை உள்ளே அனுமதித்தனர். அடுத்த நாளே அனுப்பி விட்டனர்,” என்கிறார் அவர் அந்த இரவில் எந்தளவுக்கு பலவீனமாகவும் சோர்வாகவும் அவரிருந்தார் என்பதை நினைவுகூர்ந்தபடி. “அவர்கள் கவனம் செலுத்தியிருந்தால் என் குழந்தை உயிர் பிழைத்திருக்கும்.”

முஷாகர் சமூகத்தைச் சேர்ந்தவர் லக்‌ஷிமா. உத்தரப்பிரதேசத்தின் ஏழ்மையான விளிம்புச் சமூகங்களில் ஒன்றான தலித் குழுவைச் சேர்ந்த முஷாகர்கள் கடுமையான சமூக பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். “எங்களைப் போன்ற மக்கள் மருத்துவமனைகளுக்குச் சென்றால், நாங்கள் சரியாக நடத்தப்படுவதில்லை,” என்கிறார் அவர்.

அந்த இரவில் அவர் நடத்தப்பட்ட விதம், அவருக்கு புதிதில்லை. அத்தகைய விதத்தை அவர் மட்டுமே எதிர்கொள்ளவுமில்லை.

அஷ்வாரியிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் தல்லிப்பூரைச் சேர்ந்த முசாகர் குப்பத்தில் வசிக்கும் 36 வயது நிர்மலா பாகுபாடு இயங்கும் விதத்தை விவரிக்கிறார். “மருத்துவமனைக்கு நாங்கள் சென்றால், அவர்கள் எங்களை ஏற்பதில்லை,” என்கிறார் அவர். “பணியாளர்கள் தேவையின்றி பணம் கேட்பார்கள். மையத்துக்குள் நாங்கள் நுழைவதை தடுப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். ஒருவேளை எங்களுக்கு அனுமதி கிடைத்தால், தரையில்தான் அமரச் சொல்வார்கள். மற்றவர்களுக்கு அவர்கள் நாற்காலிகள் கொடுத்து மரியாதையுடன் பேசுவார்கள்.”

எனவே மருத்துவமனைக்கு செல்ல முசாகர் பெண்கள் தயங்குவதாக சொல்கிறார் 42 வயது செயற்பாட்டாளரான மங்க்ளா ராஜ்பர். வாரணாசியிலிருக்கும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர் அவர். “மருத்துவமனைக்கு செல்ல நாம்தான் பேசி அவர்களை சம்மதிக்கச் செய்ய வேண்டும். அவர்களில் பெரும்பாலானோர் வீட்டிலேயே குழந்தைகள் பெற்றுக் கொள்ளவே விரும்புகின்றனர்,” என்கிறார் அவர்.

Mangla Rajbhar, an activist in Baragaon block, has been trying to convince Musahar women to seek medical help in hospitals
PHOTO • Parth M.N.

மருத்துவ உதவியை மருத்துவமனைகளிலிருந்து பெற முசாகர் பெண்களை ஒப்புக் கொள்ள வைக்க முயலும் செயற்பாட்டாளர் மங்க்ளா ராஜ்பர்

தேசிய குடும்பச் சுகாதார கணக்கெடுப்பின்படி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பட்டியல் சாதிப் பெண்களில் 81 சதவிகிதம் பேர் குழந்தைப் பெற்றுக் கொள்ள மருத்துவ மையத்தை தேர்ந்தெடுக்கின்றனர். மாநிலத்தின் கணக்கிலிருந்து 2.4 சதவிகிதம் குறைவு. பிறந்த குழந்தை இறப்பு விகிதத்துக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். பட்டியல் சாதியினரிடையேதான் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது

தேசிய குடும்பச் சுகாதார கணக்கெடுப்பின்படி , உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பட்டியல் சாதிப் பெண்களில் 81 சதவிகிதம் பேர் குழந்தைப் பெற்றுக் கொள்ள மருத்துவ மையத்தை தேர்ந்தெடுக்கின்றனர். மாநிலத்தின் கணக்கிலிருந்து 2.4 சதவிகிதம் குறைவு. பிறந்த குழந்தை இறப்பு விகிதத்துக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். பிறந்து 28 நாட்களுக்குள் உயிரிழக்கும் குழந்தைகளின் விகிதம் மாநிலத்துடன் (35.7) ஒப்பிடுகையில் பட்டியல் சாதியினரிடையேதான் (41.6) அதிகமாக உள்ளது

ஜனவரி 2022-ல் ராஜ்பர் நடத்திய கணக்கெடுப்பின்படி, ஏழு முசாகர் குப்பங்களில் நேர்ந்த 64 குழந்தைப் பிறப்புகளில், 35 வீட்டுப் பிரசவங்களில் நேர்ந்தவை.

லக்‌ஷிமாவும் 2020ல் மகன் கிரனை பெற்றெடுக்கும்போது வீட்டுப் பிரசவத்தைதான் தேர்ந்தெடுத்தார். “முன்பு நடந்ததை நான் மறந்துவிட வில்லை. திரும்ப சுகாதார மையத்துக்கு செல்லும் வாய்ப்பே இல்லை,” என்கிறார் அவர். “எனவே நான் சமூக சுகாதார செயற்பாட்டாளருக்கு 500 ரூபாய் கொடுத்தேன். அவர் வீட்டுக்கு வந்து நான் குழந்தைப் பெற உதவினார். அவரும் ஒரு தலித்தான்.”

அவரைப் போலவே மாநிலத்தில் இருக்கும் பலரும் மருத்துவமனையிலோ அல்லது ஒரு மருத்துவ அலுவராலோ பாகுபாடு கட்டப்பட்டதாக நினைக்கிறார்கள். ஆக்ஸ்ஃபாம் இந்தியாவால் நவம்பர் 2021-ல் நோயாளிகள் உரிமைகள் பற்றி நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், உத்தரப்பிரதேசத்தின் 472 பேரில் 52.44 சதவிகித மக்கள் பொருளாதார அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டதாக சொல்லியிருக்கின்றனர். 14.34 சதவிகிதம் பேர் மதத்தாலும் 18.68 சதவிகிதம் பேர் சாதியாலும் பாகுபாடு காட்டப்பட்டிருக்கின்றனர்.

பாகுபாடுகளின் பாதிப்பு அளவிலடங்காதது. குறிப்பாக 20.7 சதவிகித மக்கள் பட்டியல் சாதியையும் 19.3 சதவிகித மக்கள் இஸ்லாமிய மதத்தையும் (2011 கணக்கெடுப்பு) சார்ந்திருக்கும் மாநிலத்தில் சுகாதார நீதி இத்தகைய பாகுபாடுகள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு மிகவும் அதிகமே.

இதனால்தான் கோவிட் தொற்று உத்தரப்பிரதேசத்தில் பரவியபோது பலர் பரிசோதனை செய்து கொள்ளவில்லை. “எங்கள் கிராமத்தில் பலர் கடந்த வருடத்தில் நோயுற்றோம். எனினும் வீட்டிலேயே தங்கிவிட்டோம்,” என்கிறார் 2021ம் ஆண்டின் கோவிட் இரண்டாம் அலையை நினைவுகூரும் நிர்மலா. “வைரஸ்ஸால் நீங்கள் அச்சுறுத்தப்பட்டிருக்கும் சூழலில் யார் அவமானப்பட விரும்புவார்?”

Salimun at home in Amdhha Charanpur village. She says she has faced humiliating experiences while visiting health facilities
PHOTO • Parth M.N.

அம்தா சாரன்பூர் கிராமத்து வீட்டில் சாலிமுன். சுகாதார மையங்களுக்கு செல்லும்போது அவமானங்களை சந்தித்ததாக சொல்கிறார்

சந்தாலி மாவட்டத்தின் அம்தா சரன்பூர் கிராமத்தில் 55 வயது சாலிமுன், மார்ச் 2021-ல் நோயுற்றபோது வீட்டிலிருக்க விரும்பவில்லை. “ஆனால் அது டைஃபாய்டுதான்,” என்கிறார் அவர். “ஆனால் நான் பரிசோதனைக் கூடத்துக்குச் சென்றபோது, ரத்தம் எடுக்க வந்தவன் முடிந்த மட்டிலும் தூரமாக நின்று கொண்டான். கைகளை நீட்டி எடுத்தான். அவனைப் போல் பலரைப் பார்த்திருப்பதாக அவனிடம் சொன்னேன்.”

பரிசோதனைக் கூட அலுவலரின் நடத்தை சாலிமுனுக்கு பரிச்சயம். “தப்லிகி ஜமாத் சம்பவத்தால் அப்படி நேர்ந்தது. ஏனெனில் நான் இஸ்லாமியர்,” என்கிறார் அவர் மார்ச் 2020ல் நடந்த நிகழ்வுகளை விவரித்து. அச்சமயத்தில் அம்மதக்குழுவின் உறுப்பினர்கள் தில்லியின் நிஜாமுதீன் மர்காஸில் மாநாடுக்காகக் கூடியிருந்தனர். அவர்களில் நூற்றுக்கணக்கான பேருக்கு பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த கட்டடம் தொற்று பரவும் இடமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு பெரும் வெறுப்புப் பிரசாரம் தொடுக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்திலும் நாட்டின் பல இடங்களிலும் இஸ்லாமியரை அவமதிக்கும் நிகழ்வுகள் பல அரங்கேறக் காரணமாகியது.

இத்தகைய பாரபட்சமான நடவடிக்கைகளைத் தடுக்க தான் செல்லும் சுகாதார மையங்களில் அவற்றைப் பற்றி விளக்குகிறார் 43 வயது செயற்பாட்டாளரான நீது சிங். “நான் இருக்கிறேன் எனத் தெரிந்து கொண்டால், அவர்கள் நோயாளிகளின் வர்க்கம், சாதி, மதம் பார்த்து நடந்து கொள்ள மாட்டார்கள்,” என விளக்குகிறார் அவர். “இல்லையெனில், பாகுபாடு இங்கு பரவலாக இருக்கு,” என்கிறார் சகயோக் என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிங். அம்தா சரன்பூர் இருக்கும் நௌகர் ஒன்றியத்தில் பெண்களின் சுகாதாரப் பிரச்சினைகளுக்காக அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

சாலிமுன் இன்னும் பல அனுபவங்களை குறிப்பிடுகிறார். அவரின் மருமகளான 22 வயது ஷம்சுனிசா 2021 பிப்ரவரியில் நடந்த பிரசவத்தின் சில சிக்கல்களை எதிர்கொண்டார். “ரத்தப்போக்கு நிற்கவில்லை. பலவீனமாகி விட்டாள்,’ என்கிறார் சாலிமுன். “எனவே அவளை நௌகர் டவுனில் இருக்கும் சமூக சுகாதார மையத்துக்குக் கொண்டு செல்லும்படி சுகாதார மையச் செவிலியர் எங்களிடம் சொன்னார்.”

நௌகர் சமூகச் சுகாதார மையத்தில் ஷம்சுனிசாவை பரிசோதித்த துணைச் செவிலியர் ஷம்சுனிசாவின் தையலைச் சேதப்படுத்திவிட்டார். “வலியில் நான் கத்தினேன்,” என்கிறார் ஷம்சுனிசா. “என்னை அடிக்க அவர் கையை ஓங்கினார். ஆனால் என் மாமியார் அவர் கையைப் பிடித்துத் தடுத்துவிட்டார்.”

சமூக சுகாதார மையத்தின் அலுவலர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, வேறு மருத்துவமனைக்கு குடும்பத்தை செல்லச் சொல்லி விட்டனர். “நெளகரிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு எங்களை வாரணாசிக்குப் போகச் சொன்னார்கள்,” என்கிறார் சாலிமுன். “அவளுக்காக நான் கவலைப்பட்டேன். ரத்தப்போக்கு தொடர்ந்தது. குழந்தைப் பிறந்த பிறகு ஒரு முழு நாள் அவளுக்கு எங்களால் சிகிச்சை கொடுக்க முடியவில்லை.”

Neetu Singh, an activist in Naugarh block, says that discrimination is rampant in hospitals
PHOTO • Parth M.N.

நெளகர் ஒன்றியத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர் நீது சிங், மருத்துவமனைகளில் பாகுபாடு பரவலாக இருப்பதாக சொல்கிறார்

பருப்பையும் காய்கறிகளையும் ஒரே நாளில் சமைக்கும் வழக்கத்தை குடும்பம் நிறுத்திவிட்டது. 'சோறுக்கும் ரொட்டிக்கும்கூட அப்படித்தான்,' என்கிறார் சாலிமுன். 'ஏதேனும் ஒன்றுதான் சமைப்போம். இங்கிருக்கும் அனைவருக்கும் சூழல் இதுதான். உயிர் வாழ்வதற்கே பலர் கடன் வாங்க வேண்டியிருக்கிறது'

இறுதியில் நெளகர் ஒரு தனியார் மருத்துவமனையில் அடுத்த நாள் அனுமதிக்கப்பட்டார். “அங்கிருந்த ஊழியர்களில் சிலர் இஸ்லாமியர். அவர்கள் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டினர். அடுத்த சில நாட்களுக்கு மருத்துவர்கள் அவளுக்கு சிகிச்சையளித்தனர்,” என்கிறார் சாலிமுன்.

ஒரு வாரம் கழித்து ஷம்சுனிசா கிளம்பும்போது அவரின் மருத்துவக் கட்டணம் 35,000 ரூபாயாக இருந்தது. “எங்களின் ஆடுகள் சிலவற்றை 16,000 ரூபாய்க்கு விற்றோம்,” என்கிறார் சாலிமுன். “அவசரமாக விற்காமலிருந்திருந்தால், அவற்றுக்கு ஒரு 30,000 ரூபாயேனும் விலை கிடைத்திருக்கும். என் மகன் ஃபரூக் கொஞ்சம் பணத்தை சேமிப்பில் வைத்திருந்தான். மிச்சப் பணத்துக்கு அது போதுமானதாக இருந்தது.”

ஷம்சுனிசாவின் கணவரான 25 வயது ஃபரூக், பஞ்சாபில் தொழிலாளராக பணிபுரிகிறார். அவரின் மூன்று இளையச் சகோதரர்களும் தொழிலாளர்கள்தான். அவர்களின் செலவுகளை சமாளித்து வீட்டுக்குப் பணம் அனுப்ப அவர்கள் போராடுகின்றனர். “அவர் (ஃபரூக்) குழந்தை குஃப்ரானுடன் நேரம் கூட செலவழிக்க முடியவில்லை,” என்கிறார் ஷம்சுனிசா. “ஆனால் நாங்கள் என்ன செய்வது? இங்கு வேலை இல்லை.”

“என்னுடைய மகன்கள் சம்பாதிக்க இடம்பெயர வேண்டியிருக்கிறது,” என்கிறார் சாலிமுன். தக்காளிகளும் மிளகாய்களும் விளைவிக்கப்படும் நெளகரில் ஃபரூக் மற்றும் அவரின் சகோதரர்களைப் போன்ற நிலமற்றக் தொழிலாளர்கள் ஒரு முழு நாள் வேலைக்கு ரூ.100தான் சம்பாதிக்கிறார்கள். “அதோடு வாரத்துக்கு இரு முறை அரை கிலோ தக்காளியோ மிளகாய்களோ கிடைக்கும். அதுவும் போதாது,” என்கிறார் சாலிமுன். பஞ்சாபில் நாளொன்றுக்கு ஃபரூக் 400 ரூபாய் சம்பாதிக்கிறார். வாரத்தில் 3-4 நாட்கள்தான் வேலை கிடைக்கும். “கோவிட் தொற்றுக்குப் பிறகு நாங்கள் வாழ்வதற்கு சிரமப்பட்டோம். சாப்பாட்டுக்குக் கூட வழியில்லை.”

பருப்பையும் காய்கறிகளையும் ஒரே நாளில் சமைக்கும் வழக்கத்தை குடும்பம் நிறுத்திவிட்டது. “சோறுக்கும் ரொட்டிக்கும்கூட அப்படித்தான்,” என்கிறார் சாலிமுன். “ஏதேனும் ஒன்றுதான் சமைப்போம். இங்கிருக்கும் அனைவருக்கும் சூழல் இதுதான். உயிர் வாழ்வதற்கே பலர் கடன் வாங்க வேண்டியிருக்கிறது”

Salimun with Gufran, her grandson
PHOTO • Parth M.N.
Shamsunisa cooking in the house. She says her husband, Farooq, could not spend much time with the baby
PHOTO • Parth M.N.

இடது: பேரன் குஃப்ரானுடன் சாலிமுன். வலது: ஷம்சுனிசா வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் கணவர் ஃபரூக் குழந்தையுடன் நேரம் கழிக்க முடிவதில்லை என்கிறார் அவர்

உத்தரப்பிரதேசத்தின் ஒன்பது மாவட்ட கிராமங்களில், தொற்று வந்த (2020 ஏப்ரலிலிருந்து ஜூன் வரை)  முதல் மூன்று மாதங்களில், மக்களின் கடன் 83 சதவிகிதம் உயர்ந்தது. COLLECT என்கிற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் இந்தத் தரவு திரட்டப்பட்டது.  ஜூலை-செப்டம்பர் மாதங்களிலும் அக்டோபர்-டிசம்பர் 2020லும், கடன் முறையே 87 மற்றும் 80 சதவிகிதங்களாக இருந்ததாக அது பதிவு செய்திருக்கிறது.

இத்தகைய அவலச்சூழலினால் டிசம்பர் 2021-ன் கடைசி வாரத்தில் குழந்தைப் பெற்ற லக்‌ஷிமா 15 நாட்களில் ஒரு செங்கல் சூளையில் வேலைக்கு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார். “வேலை கொடுத்தவர் எங்களின் நிலையைப் பார்த்து உணவுக்கு கொஞ்சம் அதிக பணம் கொடுப்பாரென நம்புகிறேன்,” என்கிறார் அவர் குழந்தையை தாலாட்டிக் கொண்டே. அவரும் 32 வயது கணவரான சஞ்சயும் தலா 350 ரூபாய் ஒரு நாளுக்கு செங்கல் சூளையில் சம்பாதிக்கின்றனர். அவர்களின் ஊரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் செங்கல் சூளை இருக்கிறது

இப்போது கர்ப்பம் தரித்தபோது, வீட்டுப் பிரசவம் வேண்டாமென மங்களா ராஜ்பர் லக்‌ஷிமாவுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார். “அவரை சம்மதிக்க வைத்தது சுலபமாக இருக்கவில்லை. அதற்கு அவரை குறை சொல்ல முடியாது,” என்கிறார் ராஜ்பர். “இறுதியில் அவர் ஒப்புக் கொண்டார்.”

லக்‌ஷிமா மற்றும் ஹிராமனி இம்முறை தயாராகி விட்டார்கள். லக்‌ஷிமாவை அனுமதிக்க ஊழியர் மறுத்த முதல் தடவையே, ராஜ்பரை அழைக்கப் போவதாக அவர்கள் மிரட்டினர். ஊழியர்கள் பணிந்தனர். மூன்று வருடங்களுக்கு முன் குழந்தையை பறிகொடுத்த இடத்திலிருந்து சற்று தூரத்திலிருக்கும் அதே சுகாதார மையத்துக்குள் லக்‌ஷிமா குழந்தை பெற்றார். அந்த சில மீட்டர் தூரம்தான் இறுதியில் மாற்றத்தை கொடுத்திருக்கிறது..

தாகூர் குடும்ப அறக்கட்டளையின் ஒரு சுதந்திர ஊடக நிதி உதவி பெற்று பார்த் . எம்.என் பொது சுகாதாரம் பற்றியும் சிவில் உரிமைகள் பற்றியும் செய்திகளை சேகரித்து வருகிறார். இந்த கட்டுரையிலும் அதன் உள்ளடக்கத்திலும் தாகூர் குடும்ப அறக்கட்டளை எவ்விதமான கட்டுப்பாட்டையும் செலுத்தவில்லை.

தமிழில் : ராஜசங்கீதன்

Parth M.N.

ਪਾਰਥ ਐੱਮ.ਐੱਨ. 2017 ਤੋਂ ਪਾਰੀ ਦੇ ਫੈਲੋ ਹਨ ਅਤੇ ਵੱਖੋ-ਵੱਖ ਨਿਊਜ਼ ਵੈੱਬਸਾਈਟਾਂ ਨੂੰ ਰਿਪੋਰਟਿੰਗ ਕਰਨ ਵਾਲੇ ਸੁਤੰਤਰ ਪੱਤਰਕਾਰ ਹਨ। ਉਨ੍ਹਾਂ ਨੂੰ ਕ੍ਰਿਕੇਟ ਅਤੇ ਘੁੰਮਣਾ-ਫਿਰਨਾ ਚੰਗਾ ਲੱਗਦਾ ਹੈ।

Other stories by Parth M.N.
Translator : Rajasangeethan

ਰਾਜਸੰਗੀਥਨ ਚੇਨਈ ਅਧਾਰਤ ਲੇਖਕ ਹਨ। ਉਹ ਤਾਮਿਲ਼ ਦੇ ਪ੍ਰਮੁੱਖ ਨਿਊਜ਼ ਚੈਨਲ ਨਾਲ਼ ਇੱਕ ਪੱਤਰਕਾਰ ਵਜੋਂ ਕੰਮ ਕਰਦੇ ਹਨ।

Other stories by Rajasangeethan