நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விஜயா பார்தாடே பாட்டி ஆனார்‌. அவருக்கு அப்போது 34 வயது தான். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள ஆர்வி கிராமத்தில் இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட குடிசைக்கு வெளியே இருக்கும் கல் மேடையில் அமர்ந்தபடி, "எனக்கு திருமணம் நடந்தபோது 14 வயது தான்", என்று கூறுகிறார். அவரது கணவர் பந்துவுக்கு அப்போது 18 வயதிற்கு மேல் இருக்காது. "நான் எனது பெற்றோரை ஓரிரு வருடங்கள் காத்திருக்கும்படி கூறினேன்", என்று அவர் கூறினார். "ஆனால் அவர்கள் இதுதான் சரியான வயது என்று கூறினர். என்னுடைய தோழிகள் அனைவருக்கும் இதே வயதில்தான் திருமணமானது. அதனால் இதுதான் சரியான வயதாக இருக்கும் என்று நானும் கருதினேன்", என்றார்.

திருமணமான ஒரு வருடத்திற்குள் விஜயா அம்மாவானார். ஐந்து வருடங்களில், அவருடைய பதின் பருவத்திலேயே அவருக்கு மூன்று குழந்தைகள் - இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். ஆறு வருடங்களுக்கு முன்பு அவரது மூத்த மகளான சுவாதிக்கு அவரது 13 வயதில் திருமணம் நடைபெற்றது. நான்கு வருடங்களுக்கு பிறகு அவருடைய இளைய மகளான சீத்தலுக்கு 15 வயதில் திருமணம் ஆனது. ஸ்வாதிக்கு 4 வயதில் ஒரு மகளும் சீத்தலுக்கு ஒரு வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர்.

கிராமப்புற மஹாராஷ்டிராவில் இருக்கும் பார்தாடே குடும்பங்களில் நடக்கும் குழந்தைத் திருமணங்கள் சகஜமானவை. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS) 2015 -16 ஆம் ஆண்டுக்கான தரவுகள் மாநிலத்தில் கிராமப்புறத்தில் உள்ள 20 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் 18 வயதை அடையும் முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று கூறுகிறது. மேலும் கிராமப்புற மகாராஷ்டிராவில் உள்ள 10.4 சதவீதம் பெண்கள் 15 முதல் 19 வயதிற்குள்ளாகவே தாயாகவோ அல்லது கருவுற்றோ இருக்கின்றனர் என்று அந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவில் குழந்தைத் திருமணம் சட்டவிரோதமானது என்று பரவலாக அறியப்பட்டாலும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மற்றும் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு திருமணம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது - அத்தகைய திருமணங்கள் பீட் போன்ற மாவட்டங்களில் இன்னமும் அதிகமாக நடைபெறுகிறது. ஏனெனில் அங்கு விவசாயத்தின் மூலம் வரும் வருமானமும் குறைவு. புலம்பெயர்தலும் அதிகம். பீடில் 20 - 24 வயதுக்குட்பட்ட 51.3 சதவீத பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று 2015-16 (NFHS) தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களில் 18.2 சதவீதம் பேர் தாயாகவோ அல்லது கருவுற்றோ இருந்தனர் என்று அந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

புலம்பெயர்தல் மராத்வாடாவில் குழந்தை திருமணங்களை கட்டாயப்படுத்துகிறது. தொழிற்சங்க மதிப்பீடுகளின்படி - அறுவடை காலத்தில் சுமார் 3 லட்சம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பீடை விட்டு புலம்பெயர்கின்றனர்‌. பெரும்பாலும் அவர்கள் மேற்கு மகாராஷ்டிராவில் இருக்கும் கோல்ஹாபூர், சங்கிலி மற்றும் சத்தாரா ஆகிய மாவட்டங்களுக்கு அல்லது கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்திற்கு கரும்பு வெட்டும் வேலைக்காக புலம்பெயர்கின்றனர். (மேலும் காண்க கரும்பு வயல்களுக்கான தொலைதூர பாதை )

மராத்வாடாவிலிருந்து பருவகால புலம்பெயர்வு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது காரணம் விவசாயத்திற்கான உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு மற்றும் கிட்டத்தட்ட தேங்கி நிற்கும் வருமானம் ஆகியவை. விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் சம்பாப் பயிர்களுக்கான விலை கொள்கை (2017 -18) என்ற தலைப்பிலான அறிக்கை பருத்தி போன்ற பணப்பயிர் உட்பட கிட்டத்தட்ட ஒவ்வொரு பயிருக்கும் முதலீடு மற்றும் வருமானம் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் பொருந்தாத தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இப்பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனை, சிறு விவசாயிகள் தங்கள் முதன்மை வருமான ஆதாரமாக விவசாயத்தை நம்பி இருக்க முடியாது என்பதற்கு மற்றுமொரு காரணமாக இருக்கிறது. ‌‌ இது புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கிறது.

வேலைக்காக புலம்பெயரும் போது தங்களது மகள்களை கவனித்துக் கொள்வது குடும்பங்களுக்கு ஒரு கவலையாக இருக்கிறது என்று அகமது நகரை சேர்ந்த அரசு சாரா நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கல்வியாளரான ஹேரம்ப் குல்கர்னி கூறுகிறார். "மகள்களுக்கு பதின்ம வயது வரும்போது புலம்பெயர் பெற்றோர்கள் அவர்களது மகள்களின் பாதுகாப்பிற்காக கவலைப்பட தொடங்குகின்றனர். அதனால் அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்கின்றனர். மேலும் இதன் மூலம் அவர்களது கடமையைச் செய்து விட்டதாக அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்", என்று அவர் கூறினார்.

A woman in a field with a young girl
PHOTO • Parth M.N.

பேத்தி ஞானேஸ்வரியுடன் விஜயா : சுழற்சியை உடைத்தல்

விஜயாவின் பெற்றோர் பீட் மாவட்டத்தில் உள்ள சிரூர் வட்டத்தின் சிராப்பூர் கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருந்த விவசாயிகள். குழந்தையாக இருந்தபோது, அவரது பெற்றோர்கள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் மார்ச் வரையிலான ஐந்து மாதங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்காக புலம்பெயர்ந்தனர் (இன்னமும் புலம்பெயர்ந்து வருகின்றனர்). "நாங்கள் பருத்தியை பயிரிட்டோம். ஆனால் எங்களது இடம் சிறியது என்பதால் நாங்கள் வேறு வருமான ஆதாரங்களை தேட வேண்டியிருந்தது", என்று சகோதரிகள் இல்லாத விஜயா கூறுகிறார். "புலம்பெயர்ந்தவர்களின் தெளிவற்ற நினைவுகள் தான் என்னிடம் இருக்கிறது. என் பெற்றோர் கரும்பு வெட்ட வயலுக்குச் செல்வர். நான் அவர்கள் ஏற்படுத்திய தற்காலிக குடிசையில் இருப்பேன்", என்று கூறினார். (மேலும் காண்க 2000 மணிநேரத்திற்கு கரும்பு வெட்டும் பணி )

குழந்தை திருமணம் சட்டத்திற்குப் புறம்பானது என்பதை தாண்டி, ஒரு பெண் தனது பதின்ம வயதிலேயே திருமணம் செய்து கொள்ளும்போது பல பாதகமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் மிகவும் இளம் தாய்மார்கள் இடையே தாய் இறப்பு விகிதங்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்றன. தாயே மிகவும் இளமையாகவும் உடல் ரீதியாக பலவீனமாகவும் இருக்கும் போது உண்டாகும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதாகவும் கூறுகின்றன. கருச்சிதைவுகள், பிரசவத்தின் போது குழந்தை இறப்பது மற்றும் எடை குறைந்த குழந்தைகள் ஆகியவை பதின்பருவ கருவுறுதலின் விளைவுகளாகும்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவில் குழந்தைத் திருமணங்களின் புள்ளிவிவர பகுப்பாய்வு என்ற தலைப்பில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை, 20 முதல் 24 வயதுடைய பெண்களைவிட 10 முதல் 14 வயது வரையிலான சிறுமிகள் கருவுறும்போது மற்றும் பிரசவிக்கும் போது இறந்து போவதற்கான வாய்ப்புகள் ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. அதுவே அப்பெண்களுக்கு 15 முதல் 19 வயதாக இருக்கும் போது கருவுறுதல் மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் இறப்பு சாதாரண பெண்களை விட இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிவிக்கிறது.

"குழந்தை திருமணம் மற்றும் குழந்தைப்பேறு ஆகியவை இளம் தாய்மார்களிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்று நன்கு நிறுவப்பட்டிருக்கிறது" என்று ஆய்வறிக்கை கூறுகிறது. "(மேலும் இது) குறை பிரசவங்கள், சிக்கலான பிரசவம் மற்றும் குறைந்த எடையுள்ள குழந்தைகள் பிறப்பது மற்றும் தாய் இறப்பு ஆகியவற்றுக்கு காரணமாகிறது" என்கிறது.

மற்றவை, குடும்ப வன்முறை குழந்தை திருமணத்திற்கும் இடையே உள்ள தொடர்பையும் சுட்டிக்காட்டுகின்றன. "ஒரு இளம் மணப்பெண்ணுக்கு கருத்து சொல்ல வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. மேலும் அவள் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கூறப்படுவதால் அவள் தனக்காக நிற்க தயங்குகிறாள். தவிர குடும்ப வன்முறை குறித்து குடும்பத்தினர் புகார் அளிப்பதில்லை. அதற்கு விழிப்புணர்வு இல்லாததும், தான் மதிக்கப்பட வேண்டியவர் என்ற உணர்வு இல்லாததும் ஒரு காரணமாக அமைகிறது", என்று பூனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர் ரமா சரோதே கூறுகிறார். "இளம் வயதில் தாய்மை அடைவது அவர்களது கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. இது அவர்களின் பொருளாதாரச் சார்பினை அதிகரிக்கிறது அது ஒரு சுழற்சியை நிறுவுகிறது", என்று கூறுகிறார்.

NFHS-ன்படி கிராமப்புற மஹாராஷ்டிராவில் 32.6% பெண்கள் மட்டுமே 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட பள்ளிப்படிப்பை மேற்கொண்டுள்ளனர். மேலும் பீடில் வெறும் 31 சதவீதம் பேர் மட்டுமே அப்படி உள்ளனர்.

விஜயா தனது கிராமப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார். "நான் வளர வளர என்னுடைய பாதுகாப்பு எனது பெற்றோருக்கு ஒரு கவலையாக இருந்தது. அவர்கள் எனக்கு ஒரு வரன் பார்த்தனர். நானும் திருமணம் செய்து கொண்டேன்", என்று அவர் கூறினார். அவரது கணவர் பந்துவின் குடும்பம், 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆர்வியில் வசிக்கிறது. பரம்பரைச் சொத்தில் இருந்து இரண்டு ஏக்கர் நிலம் அவருக்கு கிடைத்தது. அதில் அவர்கள் பருத்தி பயிரிட்டு வந்தனர். "ஒரு முழு பருவத்தில் சுமார் (ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு), நாங்கள் 8 குவிண்டால் அறுவடை மட்டுமே செய்தோம்", என்று அவர் கூறுகிறார். அதன் மூலம் அவர்களுக்கு 22,000 ரூபாய் லாபம் வந்தது. "ஆனால், நாங்கள் கரும்பு வெட்டும் வேலைக்கு செல்லும்போது ஒப்பந்ததாரர்கள் சுமார் 50,000 ரூபாயை முன்பணமாக தருகின்றனர். இதன் பொருள் நாங்கள் ஐந்து மாதங்களுக்கு மிகத் தீவிர உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்பது என்றாலும்கூட இது எங்களைப் பொறுத்தமட்டில் பெரிய தொகை", என்று கூறினார்.

கரும்பு ஒப்பந்ததாரர்கள் இணைகளை மட்டுமே வேலைக்கு அமர்த்துவதால், ஒரு இளம் சிறுமி மற்றும் சிறுவன் திருமணம் செய்துகொண்டால் மற்றுமொரு இணை வயல்களுக்கு புலம்பெயர தயாராக இருக்கும் - மேலும் இது குடும்பத்தின் வருமான ஆதாரத்தை மேலும் பெரிதாக்குகிறது

காணொளியில் காண்க: குழந்தை திருமணங்களை பற்றி பேச விஜயா விரும்புகிறார் இதன் மூலம் குடும்பங்கள் இந்த முறையில் இருந்து வெளியே வர வேண்டும்

கரும்பு ஒப்பந்ததாரர்கள் இணைகளை மட்டுமே வேலைக்கு அமர்த்துவதால், ஒரு இளம் சிறுமி மற்றும் சிறுவன் திருமணம் செய்துகொண்டால் மற்றுமொரு இணை வயல்களுக்கு புலம்பெயர தயாராக இருக்கும் - மேலும் இது குடும்பத்தின் வருமான ஆதாரத்தை மேலும் பெரிதாக்குகிறது. விஜயாவும் பந்தும் திருமணம் ஆன பிறகு ஒவ்வொரு வருடமும் கரும்பு வெட்ட புலம்பெயர்ந்தனர். "எங்களது மகள்கள் வளர்ந்த போது எங்களது பெற்றோர் பட்ட அதே கவலை எங்களுக்கும் இருந்தது. நாங்களும் அவர்கள் செய்த அதே தவறை மீண்டும் செய்தோம்", என்று அவர் கூறினார். "இவ்வளவு குறைந்த வருமானத்தை வைத்து அவர்களை எப்படி கவனித்துக் கொள்ள முடியும் என்று நாங்கள் யோசித்தோம். அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தான் நல்லது என்று நினைத்தோம்", என்று கூறினார்.

பின்னர் சுவாதியும் தனது கணவருடன் கரும்பு வெட்ட புலம்பெயரத் துவங்கினாள். ஆனால் அவர்கள் அதை ஒரு பருவத்திற்கு மட்டுமே செய்தனர். திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவளது கணவர் கிஷோர் பீடின் பட்டோடா தாலுகாவில் உள்ள சிக்காளி என்ற கிராமத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தார். சுவாதி அப்போது 7 மாத கர்ப்பிணி. "அவள் தனது மகள் ஞானேஸ்வரியைப் பெற்றெடுத்த பிறகு அவரது மாமியார் அவளை கவனித்துக் கொள்ள மறுத்துவிட்டார்", என்கிறார் விஜயா. அதனால் சுவாதி தனது தாய் வீட்டிற்கு திரும்ப வேண்டி இருந்தது.

குடும்பத்தை சமாளிக்க உதவும் வகையில் ஆர்வியில் சாந்திவன் என்ற அரசுசாரா நிறுவனத்தை நடத்தி வரும் தீபக் நாகர்கோஜே, புனேவில் உள்ள செவிலியர் பயிற்சித் திட்டத்தில் சுவாதி சேர்வதற்கு நிதியுதவி அளித்தார். விஜயாவும் பந்துவும் ஞானேஸ்வரியை அழைத்துக்கொண்டு களமிறங்கினர். 15 வயதாகும் அவர்களது மகனான ராமேஷ்வருடன் சேர்த்து அவர்களது பேத்தியையும் வளர்த்து வருகின்றனர். அவர்களது மகன் இப்போது சாந்திவனால் ஆர்வியில் நடத்தப்பட்டு வரும் உறைவிடப் பள்ளியில் தங்கி பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால் விஜயாவும் பந்துவும் அறுவடை காலத்தில் புலம்பெயர்வதில்லை. மேலும் அவர்கள் அருகில் உள்ள வயல்களில் கிடைக்கும் வேலைகளையே சார்ந்திருக்கின்றனர். விஜயாவின் இளைய மகளான சீத்தலும் பீட் நகரில் தான் வசிக்கிறார். அங்கு அவரது கணவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

கடந்த 15 ஆண்டுகளில் குடும்ப வன்முறை எதிர்கொண்ட அல்லது திருமணத்திற்குப் பிறகு கைவிடப்பட்ட டஜன் கணக்கான குழந்தை திருமணமான இந்த சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கு உதவியதாக நாகர்கோஜே கூறுகிறார். "பல குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் குடும்பங்கள் விரும்பினால் தவிர நாங்கள் உள்ளே சென்று தடுக்க முடியாது. மேலும் இந்தத் திருமணங்கள் பெரும்பாலும் ரகசியமாக நடைபெறும்", என்று அவர் கூறுகிறார்.

புலம்பெயர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்லும் நடைமுறையை தடுப்பதற்காக பல்வேறு உள்ளூர் அமைப்புகள் கிராமப் பள்ளிகளை தற்காலிக உறைவிட பள்ளிகளாக மாற்ற முயற்சித்தன. ஆனால் உறைவிடப் பள்ளிகள் குறைவாகவே உள்ளன. பொதுவாக அவை மோசமான நிலையில் இருப்பதால் பெற்றோர்கள் தங்களது மகள்களை அங்கு விட்டுச் செல்வதற்கு தயங்குகின்றனர்.

அரசு நடத்தும் அனைவருக்கும் கல்வி திட்டமான சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் பணிபுரியும் புனேவை சேர்ந்த நூதன் மகடே, பருவகால விடுதிகள் திட்டமான ஹங்காமி வஸ்திக்ருஹ் திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு மாதம் 1,416 ரூபாய் அரசாங்கம் வழங்குகிறது என்கிறார். குழந்தைகள் தங்குவதற்கு இது பொறுப்பேற்காது, ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிக் குழுக்களுக்கு வழங்கப்படும் பணம், தாத்தா பாட்டியுடன் தங்கக்கூடிய குழந்தைகளின் உணவு மற்றும் பிறச் செலவுகளை கவனித்துக் கொள்ள உதவுகிறது (மேலும் காண்க: 'கிட்டத்தட்ட கிராமத்தில் உள்ள அனைவரும் வெளியேறி விட்டனர்' )

ஆர்வியில் நான் பேசிய பெற்றோர்கள் பெரும்பாலும் குறைந்த கல்வியோ அல்லது படிக்காமலோ இருந்தனர். மேலும் அவர்களது பெண் குழந்தைகளும் மிக இள வயதிலேயே பள்ளியிலிருந்து நின்றுவிட்டனர். குழந்தைத் திருமணம் சட்ட விரோதமானது என்பது தெரிந்ததால் விஜயாவை தவிர மற்ற அனைவரும் பதிவுக்கு வந்து புகைப்படம் எடுக்க மறுத்து விட்டனர். ஆனால் விஜயா சந்தித்துள்ள அதே இக்கட்டான சூழ்நிலைகளை இவர்களும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

விஜயா குழந்தை திருமணங்களை பற்றி பேச விரும்புகிறார். இதன் மூலம் அவரைப் போன்ற குடும்பங்கள் இந்த முறையிலிருந்து வெளியே வரவேண்டும் என்று விரும்புகிறார். "எங்களது பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க எங்களிடம் பணம் இல்லை. ஆனால் அதே நேரத்தில் கல்வியின் முக்கியத்துவத்தையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை", என்று அவர் தனது மடியில் விளையாடும் சிறுமி ஞானேஸ்வரியைப் பார்த்து கூறுகிறார். "எங்களுக்கு நிகழ்ந்தது இவளுக்கு நிகழாது", என்று கூறினார்.

தமிழில்: சோனியா போஸ்

Parth M.N.

ਪਾਰਥ ਐੱਮ.ਐੱਨ. 2017 ਤੋਂ ਪਾਰੀ ਦੇ ਫੈਲੋ ਹਨ ਅਤੇ ਵੱਖੋ-ਵੱਖ ਨਿਊਜ਼ ਵੈੱਬਸਾਈਟਾਂ ਨੂੰ ਰਿਪੋਰਟਿੰਗ ਕਰਨ ਵਾਲੇ ਸੁਤੰਤਰ ਪੱਤਰਕਾਰ ਹਨ। ਉਨ੍ਹਾਂ ਨੂੰ ਕ੍ਰਿਕੇਟ ਅਤੇ ਘੁੰਮਣਾ-ਫਿਰਨਾ ਚੰਗਾ ਲੱਗਦਾ ਹੈ।

Other stories by Parth M.N.
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose