ஏலியன்கள் போன்ற தோற்றத்துடன், அவர்கள் முழு பிபிஇ உடையுடன் தெற்கு 24 பார்கனாசில் உள்ள அவரது ஊரில் வந்து இறங்குவார்கள். “என்னை ஒரு விலங்கைப்போல் பிடிப்பதற்கு வருவார்கள்“ என்று ஹரன்சந்ர தாஸ் கூறினார். அவரது நண்பர்கள் அவரை ஹரு என்று அழைக்கிறார்கள். இனி அவர்களை நண்பர்களாக தாஸ் கருதவில்லை. ஏனெனில் மருத்துவமனை ஊழியர் என்பதால், அவர்கள் அவரை அண்மையில் புறக்கணித்தார்கள். மக்கள் எனது வீட்டிற்கு பால் ஊற்றுவது மற்றும் மளிகை பொருட்கள் கொடுப்பது ஆகியவற்றை நிறுத்திவிட்டார்கள். நாங்கள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்பட்டோம். தூக்கமில்லாமல் பல இரவுகளை கழித்தோம். எங்கள் வீடுகளின் அருகில் வசித்தவர்கள் எங்களை பார்த்து பயந்தார்கள். “இத்தனைக்கும் ஹரன்சந்ரா கோவிட் – 19 தால் பாதிக்கப்படக்கூடவில்லை“
அவரது குற்றம், அவர் ஒரு மருத்துவமனையில் வேலை செய்தார். பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் இதேபோன்ற பிரச்னைகளை சந்தித்தார்கள். மாவட்ட அளவிலான சுகாதார ஊழியர்கள் அவரை அழைத்துச் செல்ல வந்தது கூட அவருக்கு தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தோடுதான்.
“எல்லோரும் என்னைப்பார்த்து அஞ்சியதற்கு காரணம், நான் மருத்துவமனை ஊழியர் என்பதால், எனக்கு தொற்று இருக்கலாம் என்று எண்ணிதான்“ என்று அவர் கூறுகிறார்.
ஹரன்சந்ரா, 30 வயதுகளின் மத்தியில் உள்ளார். கல்கத்தாவில் உள்ள குழந்தைகள் சுகாதார மைய மருத்துவமனை பராமரிப்பு அறையில் பணிபுரிகிறார். ஒரு அறக்கட்டளை நடத்தும் லாப நோக்கற்ற மருத்துவமனை, இதில் கொல்கத்தா நகரை தவிர கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் சேவையளித்து வருகிறது. பார்க் சர்க்கஸ் பகுதியில் உள்ள இந்த 220 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வருவார்கள். 1956ம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் குழந்தைகள் மையம். வேறு எங்கும் கிடைக்காத தரமான மருத்துவ சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகிறது.
கோவிட் – 19 மற்றும் ஊரடங்கால் அவர்கள் இந்த மருத்துவமனைக்கு வருவது கூட கடினமாக இருந்தது. “இங்கு வருவது கூட பிரச்னையாக இருந்தது“ என்று ரத்தன் பிஸ்வாஸ் கூறுகிறார். அவர் அப்போதுதான் தெற்கு பார்கனாசில் இருந்து வந்திருந்தார். “நான் வெற்றிலை வயலில் தினக்கூலியாக பணிபுரிகிறேன்“ அம்பன் (மே 20ம் தேதி தாக்கிய புயல்) அந்த வயலை அழித்துவிட்டது. நான் எனது வருமானத்தின் ஆதாரத்தை இழந்துவிட்டேன். தற்போது எனது இளைய குழந்தைக்கு காதில் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் அவரை இங்கே கொண்டு வந்துள்ளோம். ரயில் சேவைகள் இல்லாதாதால், மருத்துவமனைக்கு வருவது மிகக்கடினமாக இருந்தது“ என்கிறார். தாஸ் போன்றவர்கள் இரண்டு, மூன்று பேருந்துகளில் ஏறி, ரிக்ஷாவில் வந்து, குறிப்பிட்ட தூரம் நடந்து என்று பயணங்கள் மேற்கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர்.
நிறைய பிரச்னைகள் வரும் என்று அம்மருத்துவமனை மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்த நேரத்தில் ரத்தம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்று ரத்தவியல் துறை மருத்துவர் தாரக்நாம் முகர்ஜி கூறுகிறார். “ஊரடங்கில் ரத்த தான முகாம்கள் அடிக்கடி நடக்கவில்லை. சாதாரண நாட்களில், 60 முதல் 70 ரத்த தான முகாம்கள் ஒரு மாதத்தில் நடைபெறும். (தெற்கு வங்காள பகுதியில் மட்டும்) ஆனால், கடந்த 4 மாதத்தில் மொத்தமே 60 ரத்த தான முகாம் மட்டுமே நடைபெற்றுள்ளது. சில நேரங்களில் ரத்தசோகை நோயாளிகளை அது பாதிக்கும். குறிப்பாக கிராமப்புறத்தினர் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்“ என்று அவர் கூறுகிறார்.
“கோவிட் – 19, குழந்தைகள் பராமரிப்பு திட்டத்தில் பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிட்டது“ என்று நோயெதிர்ப்பு பிரிவு நிபுணர் மருத்துவர் ரினா கோஷ் கூறுகிறார். “ஊரடங்கால், எண்ணற்ற சுகாதார மற்றும் தடுப்பூசி முகாம்கள் நகர்புறம் மற்றும் கிராமப்புறம் என இரு பகுதிகளிலும் திரும்பப்பெறப்பட்டது. இதனால், வரும் ஆண்டுகளில் நிமோனியா, அம்மை, இருமல் போன்ற குழந்தைகளுக்கான பிரச்னைகள் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாம் போலியோவை ஒழித்துவிட்டாலும், அதையும் இது பாதிக்குமோ என்று தோன்றுகிறது“ என்கிறார்.
“தடுப்பூசி முகாம்கள் மற்றும் அது தொடர்பானை அனைத்தும் தடைபட்டதற்கு அரசுதான் காரணம். அரசு மற்ற சுகாதார துறைகளுக்கு, குறிப்பாக கோவிட் பணிக்கு மருத்துவர்களை அனுப்பிவிட்டது. அதனால், தடுப்பூசி நடைமுறைகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன“
மருத்துவமனையை சுற்றிப்பார்த்துவிட்டு, ஏற்கனவே பாதிக்கப்பட்டு குழந்தைகள் குறித்து கவலையாக உள்ளது. அதிகளவிலான நோயாளிகளின் எண்ணிக்கை 12 முதல் 14 வயது வரையாகும். மேலும் சிலர் அதைவிட குறைந்த வயது குழந்தைகளாவார்கள்.
“லூகேமியா நோய் தொற்று உள்ள எனது குழந்தைக்கு முக்கியமாக கிமோதெரபி தேதிகள் தவறிவிட்டன“ என்று நிர்மல் மொண்டல் கூறுகிறார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் கிழக்கு மிட்னாப்பூரைச் சேர்ந்தவர். “ரயில் சேவை வசதி இல்லை. எனக்கு காரில் அழைத்து வர வசதியில்லை. “நாங்கள் மருத்துவமனைக்கு வந்தால், எங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தினாலும் நாங்கள் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துவரவில்லை“ என்கிறார்.
அம்மருத்துவமனையின் துணை இயக்குனர் டாக்டர் அருணாலோக் பட்டாச்சார்யா குழந்தைகளில் பொது அறையை பார்வையிட்டு, அவர்களை பரிசோதிக்கிறார். பொது போக்குவரத்து குறைவாக உள்ளதால், கிராமப்புறத்திலிருந்து வரும் பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமனைக்கு வர முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.
“குழந்தைகளுக்கு கோவிட் இருப்பது வெளியே அவ்வளவாக தெரியவில்லை. பெரும்லான குழந்தைகள் அறிகுறியற்றவர்களாக இருக்கிறார்கள்“ என்று அம்மருத்துவமனையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் பிரபாஸ் பிரஜன் கிரி கூறுகிறார். “சில நேரங்களில் அவர்களில் சிலர் கோவிட் தொற்றுக்கு ஆளாகியிருப்பது, இங்கு அவர்கள் வேறு சிகிச்சைக்காக வரும்போது கண்டுபிடிக்கப்படுகிறது. நாங்கள் சுவாச பிரச்னைகள் உள்ள குழந்தைகளுக்கான தனிமைப்படுத்தும் பகுதியை தனியாக அமைத்துள்ளோம்“ என்கிறார்.
இதற்கிடையில், மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கு தொற்று இருக்குமோ என்று மற்றவர்களுக்கு உள்ள அச்சத்தால் வேறு மருத்துவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சோமா பிஸ்வாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), டாக்டர் தாரக்நாத் முகர்ஜிக்கு அருகில் நின்றுகொண்டிருக்கிறார். அவர் கூறுகையில், “எனது கணவரும் மருத்துவர், நானும் இங்கு ஊழியராக பணிபுரிகிறேன். நாங்கள் தற்போது எங்கள் தந்தையின் வீட்டில் வசிக்கிறோம். அருகில் உள்ளவர்கள் எதிர்ப்பார்கள் என்று எங்களால் எங்கள் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை“ என்று கூறுகிறார்.
முன்னதாகவே மார்ச் 18ம் தேதி, உலக சுகாதார நிறுவனம், சுகாதார ஊழியர்கள், அச்சத்தின் காரமாக தங்கள் குடும்பம் மற்றும் சுற்றத்தினரால், துரதிஷ்டவசமாக தவிர்க்கப்படுவார்கள் என்று எச்சரித்தது. இதுவும் ஏற்கனவே உள்ள சவாலான சூழலை மேலும் கடினமாக்கியது.
சுகாதார ஊழியர்களின் அனுபவம் அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
சில சுகாதார உள்ளவர் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து வருபவர்ககள். அவர்களின் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள், போக்குவரத்து பிரச்னைகள், சமுதாயத்தில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என அனைத்திற்காகவும் மருத்துவமனையே போராடியது. இவற்றில் வலி நிறைந்த விளைவுகளே இருந்தன.
இவையனைத்தும், மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்த ஒரு புதுமையான சூழ்நிலையை உருவாக்கியது. உண்மையில் சில நோயாளிகளே இருந்தனர். ஆனால் பணி அழுத்தம் அதிகரித்தது. “தற்போது, வெளிநோயாளிகளாக 60 பேரே உள்ளனர். வழக்கமாக 300 பேர் வருவார்கள். நோயாளிகள் வருகை 80 சதவீதம் குறைந்துள்ளது. உள்நோயாளிகள் எண்ணிக்கை 220லிருந்து 90ஆக குறைந்து, 60 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் 40 சதவீத ஊழியர்களை வைத்தே நாங்கள் இதை சமாளிக்கவேண்டும்“ என்று மருத்துவமனை நிர்வாகி தெரிவித்தார்.
மருத்துவமனையில் 450 ஊழியர்கள் உள்ளனர். அதில் 200 செவிலியர்கள், 61 வார்டு உதவியாளர்கள், 56 துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் 133 மற்ற துறை ஊழியர்கள் உள்ளனர். 350 மருத்துவர்கள் மருத்துவமனையுடன் பல்வேறு நிலைகளில் தொடர்புடையவர்கள். இதில் 40 – 45 மருத்துவர்கள் முழுநேரமும் அங்குள்ள மருத்துவர்கள். 15-20 மருத்துவர்கள் தினமும் வருபவர்கள். மற்றவர்கள் அறுவைசிகிச்சையாளர்கள், புறநோயாளிகள் மற்றும் மற்ற பிரிவுகளில் பணிபுரிபவர்கள்.
ஊரடங்கு அனைவருக்கும் பெரிய சவாலாக இருந்துவிட்டது. துணை தலைமை செயல் இயக்குனர் ஆராதனா கோஷ் சவுத்ரி கூறுகையில், “நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, மருத்துவ பணியாளர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகளை வழங்குவது என்று அனைத்துமே புதிய பிரச்னைகள். பெரும்பாலான ஊழியர்கள், பேருந்தோ அல்லது ரயில் வசதியோ இல்லாமல் இங்கு வருவதிலும், பின்னர் வீடுகளுக்கு திரும்பிச்செல்வதில் சிரமம் ஏற்பட்டது. “சில சுகாதார ஊழியர்கள் மருத்துவமனையிலேயே தங்கிவிட்டனர். ஏற்கனவே தங்கள் சொந்த கிராமத்தில் இருந்தவர்கள் இதுபோன்ற பிரச்னைகளுக்காகவும், மற்றவர்கள் அஞ்சுகிறார்கள் என்றும் பணிக்கே வரவில்லை.
மருத்துவமனையில் தற்போது பொருளாதார பிரச்னைகளும் உள்ளன. குழந்தைகள் மருத்துவமனை லாபநோக்கற்ற நிறுவனமாகும். மருத்துவர்கள் கட்டணம் பெறுவதில்லை மற்றும் மற்ற கட்டணங்களும் மிகக்குறைவு. (ஏழை மக்களுக்கு இலவசமாகவே சிகிச்சையளிக்கப்படுகிறது). ஊரடங்கு மற்றும் கோவிட் தொற்றையடுத்து நோயாளிகள் வருகை மற்றும் உள்நோயாளிகளின் இருப்பு குறைந்ததால், கிடைத்துக்கொண்டிருந்த சிறிய வருமானமும் குறைந்துவிட்டது. ஆனால் கோவிட் தொற்றால் செலவு மட்டும் வழக்கமான செலவுகளைவிட 15 சதவீதம் கூடுதலாகிவிட்டது.
“அவை சுத்தம் செய்வது, பிபஇ உடை மற்றும் கோவிட் தொற்று தொடர்பான செலிவினங்கள்“ என்று ஆராதனா கோஷ் சவுத்ரி கூறுகிறார். இதனால் நாங்கள் எங்கள் கட்டணத்தை அதிகரிக்க முடியாது. ஏனெனில், இங்கு வருபவர்கள் பெரும்பாலும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், கிராமப்புறத்தில் உள்ளவர்கள் மற்றும் புறநகரில் வசிப்பவர்கள். கட்டணத்தை உயர்த்தினால் அவர்களால் எவ்வாறு கொடுக்க முடியும்?. அவர்களுக்கு கிடைத்து வந்த சிறிய வருமானத்தையும் ஊரடங்கு சிதைத்துவிட்டது. சில நேரங்களில் எங்கள் மருத்துவர்கள் அவர்களின் சொந்த பணத்தை கொடுப்பார்கள். இப்போது தானம் கொடுப்பவர்களால் எங்களால் இயங்க முடிகிறது. ஆனால், அந்த குறைந்த தொகையையும் வைத்து நீண்ட நாட்கள் எங்களால் இயக்க முடியாது“ என்கிறார்.
பல ஆண்டுகளாக சுகாதார கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதில் நமது தோல்வி தற்போது நம்மை வருத்துகிறது என்று மருத்துவமனை துணை இயக்குனர் டாக்டர். அருணாலோக் பட்டாச்சார்யா கூறுகிறார். “இதற்கிடையில், உண்மையில் பாதிக்கப்பட்டது முன்கள பணியாளர்களும், வழக்கமான நோயாளிகளும்தான்“ என்கிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.