உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பஞ்சாயத்து தேர்தல்களின்போது கட்டாய தேர்தல் பணிக்கு சென்றிருந்த பள்ளி ஆசிரியர்கள் கோவிட் பாதிப்பில் இறந்திருக்கின்றனர். தற்போது வரை 1621 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 1181 பேர் ஆண்கள், 440 பேர் பெண்கள் எனக் கூறுகிறது உத்தரப்பிரதேச ஆசிரியர் கூட்டமைப்பின் பட்டியல். பாரி அப்பட்டியலை ஆங்கிலத்திலும் இந்தியிலும் இங்கு பதிவிட்டிருக்கிறது.
இப்பேரழிவுக்கான காரணங்களாக என்னவெல்லாம் இருந்தன என்பதை விவரிக்கும் கீழ்காணும் கட்டுரையை மே 10ம் தேதி நாம் பிரசுரித்தோம். தேர்தல்களை தள்ளி வைக்குமாறு தொடர்ந்து ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையமும் உத்தரப்பிரதேச அரசும் பொருட்படுத்தவில்லை. தேர்தல் பணிக்கு சென்றதால் கோவிட் பாதிப்படைந்து மரணமுற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை அச்சமயத்தில் 713 ஆக இருந்தது. 540 ஆண்கள், 173 பெண்கள்.
கிட்டத்தட்ட 8 லட்சம் ஆசிரியர்களை அரசு ஆரம்பப் பள்ளிகளில் கொண்டிருக்கும் இம்மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தேர்தல் பணிகளுக்கு அனுப்பப்பட்டனர். தேர்தலும் பெரிய அளவில் நடந்தது. 13 லட்சம் வேட்பாளர்கள் 8 லட்ச தொகுதிகளில் போட்டியிட, 13 கோடி பேர் வாக்களிக்கும் தேர்தலில், அதிகாரிகள் (ஆசிரியர்களும் பிறரும்) நிச்சயமாக பல்லாயிரக்கணக்கானோரை கையாள வேண்டிய சூழலே இருந்திருக்கும். அதுவும் எந்தவகை பாதுகாப்பு முறைகளும் இல்லாத நிலையில்.
உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தல்கள் தள்ளிப் போடப்பட்டதற்கான உதாரணமும் இதற்கு முன் உண்டு. செப்டம்பர் 1994லிருந்து ஏப்ரல் 1995 வரை கூட தள்ளிப் போடப்பட்டிருக்கின்றன. “எதிர்பாராத ஒரு பெருந்தொற்றையும் மனிதாபிமான நெருக்கடியையும் நாம் எதிர்கொண்டிருக்கும்போது ஏன் இந்த அவசரம்?,” எனக் கேட்கிறார் முன்னாள் மாநில தேர்தல் ஆணையரான சதீஷ் குமார் அகர்வால்.
தேர்தல்களுக்கும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் மரணங்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பை உத்தரப்பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் தொடர்ந்து மறுத்து வருகிறார். “தில்லியில் தேர்தல் நடந்ததா? மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்ததா?” என செய்தியாளர்களிடம் மே 12ம் தேதி நொய்டாவில் கேட்டார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மீது பழி போடும் முயற்சியும் நடந்தது. “பஞ்சாயத்து தேர்தல்கள் உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியே நடத்தப்பட்டன,” என செய்தியாளர்களிடம் கூறினார் முதல்வர் ஆதித்யநாத்.
இது பாதி உண்மைதான். தேர்தல்களை தள்ளி வைப்பதற்கான மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உண்மையே. அது தனிநபர் மனு. அரசின் மனு அல்ல. (அரசியல் சாசனத் தேவையின்படி, பஞ்சாயத்து தேர்தல்கள் ஜனவரி 21, 2021க்கு முன்பே நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்). எனினும் தேர்தல்கள் கோவிட் 19 பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட்டு நடத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரப்பிரதேசம் அறிவித்திருந்த கோவிட் 19 பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட்டு தேர்தல்கள் நடத்தப்படுமென நம்பியிருந்ததாக அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏப்ரல் 6ம் தேதி குறிப்பிட்டது. மேலும் அது, “மக்கள் கூட்டம் ஏற்படாத வண்ணம் பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். வேட்புமனு தாக்கல், பிரசாரம், வாக்களிப்பு முதலிய எல்லா நிகழ்வுகளிலும் கோவிட்19 பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்,” எனவும் கூறியது. சரியாக சொல்வதெனில், உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல்கள் நடத்தப்படவில்லை. நீதிமன்ற வழிகாட்டுதலை மீறியதால் ஆசிரியர்களுக்கு பேரழிவு ஏற்பட்டிருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆசிரியர்கள் எழுதிய சமீபத்திய கடிதத்தின்படி, “உச்சநீதிமன்ற விசாரணையின்போது கூட, கூட்டமைப்பு அதன் வாதத்தை வழக்கறிஞரின் மூலம் முன் வைத்தது. வாக்கு எண்ணிக்கையின்போது கோவிட் பாதிப்பு ஏற்படாத வகையில் விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தார்,” எனக் குறிப்பிட்டிருக்கிறது,
“தொடக்கக் கல்வித்துறையோ உத்தரப்பிரதேச அரசோ இத்தனை பெரிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இறந்திருப்பதற்கு, இப்போது வரை வருத்தம் கூட தெரிவிக்காதது மிகவும் துயரத்துக்குரிய விஷயம்,” என கடிதத்தின் ஒரு வரி நம்மை துயருறச் செய்கிறது.
முகக்கவசம், தனிநபர் இடைவெளி முதலிய அவசியமான பாதுகாப்பு முறைகள் கூட கடைபிடிக்கப்படாததற்காக ஏப்ரல் 26ம் தேதி, உயர்நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசுக்கோ மாநில தேர்தல் ஆணையத்துக்கோ உயர்நீதிமன்ற உத்தரவுகளில் உடன்பாடு இல்லாமலிருந்திருக்கும் பட்சத்தில் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கலாம். அவர்கள் செல்லவில்லை. இன்னும் முன்பே கூட, மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் பெருமளவில் நடந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களிலும் கோவிட்-19 பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுவதற்கான எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை.
முக்கியமாக பஞ்சாயத்து தேர்தல் பணிக்கு பிறகு கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த தேர்தல் அதிகாரிகளின் (ஆசிரியர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்கள்) குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாயேனும் நஷ்டஈடாக வழங்கப்பட வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் மே12ம் தேதி கூறியது. நீதிபதிகள் சித்தார்த் வர்மா மற்றும் அஜித் குமார் ஆகியோரின் வார்த்தைகள்: “யாரோ சிலர் தன்னார்வத்தில் தேர்தல் பணி செய்ய வந்ததாகவும் இச்சூழல் இல்லை. தயக்கம் காட்டியபோதும் கட்டாயப்படுத்தப்பட்டு தேர்தல் பணிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.”
போலவே, நாட்டின் எந்த நீதிமன்றமும் உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேச அரசுகளை ஒரு வருடத்துக்கு முன்பே கும்பமேளாவை நடத்தச் சொல்லி உத்தரவிடவில்லை. ஹரித்வாரில் கும்பமேளா 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும். அடுத்த கும்பமேளா 2022ம் ஆண்டில்தான் நடப்பதாக இருந்தது. ஆனாலும் பஞ்சாயத்து தேர்தல்களுக்கு நிகராக அதே காலகட்டத்தில் பல நாட்களுக்கு நடத்தப்பட்ட பெரிய நிகழ்வாக கும்பமேளா இருந்தது. 2022க்கு முன்னால் 2021ம் ஆண்டிலேயே கும்பமேளா நடத்தப்படுவதற்கான உணர்ச்சிமிகுந்த மதரீதியான நியாயங்களும் ஆரூட விவாதங்களும் நடந்தன. ஆனால் கும்பமேளாவையும் பஞ்சாயத்து தேர்தல்களையும் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்பே நடத்தப்படுவதற்கான அரசியல் தேவை பற்றிய விவாதம் எதுவும் நடக்கவில்லை. இத்தகைய சம்பவங்களின் அழிவுத்தன்மை பேசப்படவில்லையெனில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் சமயத்தில் பெரும் சாதனைகளாக இவை முன்னிறுத்தப்படலாம்.
இந்த துயரத்தை பற்றி பாரியில் (மே 10ம் தேதி) வெளியான முதல் கட்டுரை:













