சுக்ரானி சிங்கிற்கு காட்டில் இலுப்பம்பூ சேகரிக்காத நாள் பற்றி நினைவே இல்லை. “நான் சிறுமியாக இருந்தபோது என் அம்மாவுடன் காட்டிற்குச் செல்வேன். இப்போது என் குழந்தையை அழைத்து வருகிறேன்,” என்கிறார் 45 வயது சுக்ராணி. அவர் மரங்களில் இருந்து புதிதாக பூத்த இலுப்பம்பூக்களைப் பறிப்பதற்கு அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிவிடுகிறார். வெப்பம் காரணமாக மரத்திலிருந்து விழும் பூக்களை சேகரிப்பதற்காக மதியம் வரை அவர் காத்திருக்கிறார். வீடு திரும்பியதும் வெயிலில் பூக்களை பரப்பி உலர வைக்கிறார்.
மத்திய பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் உள்ள பந்தாவ்கர் புலிகள் சரணாலயம் அருகே வசிக்கும் சுக்ரானி போன்ற சிறிய விவசாயிகளுக்கு இலுப்பம்பூ என்பது உறுதியான வருவாய் ஆதாரம். மண்பூர் வட்டத்தில் உள்ள பரசி கிராமத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உமரியா சந்தையில் ஒரு கிலோ உலர் பூக்களை ரூ.40க்கு சுக்ராணி விற்கிறார். ஏப்ரலில் 2-3 வாரங்கள் கிடைக்கும் இப்பூக்களை 200 கிலோ வரை அவர் சேகரித்து விடுகிறார். “இந்த மரங்கள் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கவை,” என்கிறார் சுக்ராணி. பூக்களுடன் பழங்கள், மரங்களின் பட்டையும் மருத்துவ குணங்கள், ஊட்டச்சத்து குணங்கள் நிறைந்தவையாக கருதப்படுகிறது.
சீசன் காலத்தில் காட்டிலிருந்து மதியம் 1 மணிக்கு வீடு திரும்பும் சுக்ராணி உணவு சமைத்து தனது கணவர், 5 குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்திற்கு உணவளிக்கிறார். அவரது கணவரின் கோதுமை அறுவடை, சேகரிப்பு பணியில் மதியம் 3 மணியளவில் இணைந்து கொண்கிறார். சுக்ராணியும் அவரது கணவரும் கோண்ட் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கென சொந்தமாக சுமார் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அதில் மழை நீரை நம்பி கோதுமை பயிரிட்டு சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்கின்றனர்.
பரசியில் வசிக்கும் குயவரான சுர்ஜான் பிரஜாபதியும் காட்டில் இலுப்பம்பூ சேகரிக்கிறார். “கிராமத்திற்கு வரும் வியாபாரிகளிடமும், சில சமயம் உள்ளூர் சந்தையிலும் நான் விற்கிறேன்,” என்கிறார் கும்ஹார் சாதியைச் சேர்ந்த (உமரியாவில் ஓபிசி என பட்டியலிப்பட்டுள்ளது) 60 வயது பெரியவர். “இது [இலுப்பை] நல்ல பயன் தரும். பானைகளை விற்று கிடைக்கும் பணத்தில் என்னால் வாழ முடியாது. நான் மதியம் திரும்பும்போது கூலி வேலை கிடைக்கிறதா என பார்ப்பேன்.” வீட்டில் உப்பு, எண்ணெய்க்கு தேவை ஏற்படும்போது அதைச் சமாளிக்க சில கிலோ உலர் இலுப்பை பூக்களை அவர் விற்கிறார்.
காட்டில் வெட்டபடாத ஒரே மரம் இலுப்பை தான் என்கின்றனர் உமரியாவின் உள்ளூர் மக்கள். மாவட்டத்தின் பழங்குடியின சமூகங்கள் இம்மரங்களை மதிப்பதோடு, யாரையும் பட்டினியாக அது விடாது என நம்புகின்றனர். பூக்களும், பழங்களும் உண்ணக் கூடியவை. உலர் இலுப்பம்பூக்களை மாவாக அறைத்து அதை மது கஷாயம் செய்ய பயன்படுத்துகின்றனர்.
மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் காடுகளின் பூர்வீக இலுப்பை மரம் (மதுகா லாங்கிஃபோலியா) இம்மாநிலங்களின் முதன்மையான சிறு வன உற்பத்தி (MFP) ஆகும். இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் (TRIFED), கூற்றுபடி மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 75 சதவீதத்திற்கும் அதிகமான பழங்குடியின குடும்பங்கள் இலுப்பம்பூக்களைச் சேகரித்து ஆண்டிற்கு ரூ.5,000 வருவாய் பெறுகின்றனர்.
ஏப்ரல் தொடக்கத்தில் உதிரத் தொடங்கும் இலுப்பம்பூக்களை காட்டிற்குள் சென்று சேகரிக்க பந்தவ்கர் சுற்றுவட்டாரத்தினர் அனுமதிக்கப்படுகின்றனர்
பந்தவ்கர் சரணாலயத்தை சுற்றி அமைந்துள்ள 1,537 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு காட்டிற்குள் ஹோலி பண்டிகைக்குப் பிறகு உடனடியாக ஏப்ரல் தொடக்கத்தில் உதிரத் தொடங்கும் பூக்களை சேகரிக்க இப்பகுதி சமூகத்தினர் அனுமதிக்கப்படுகின்றனர். பூக்களை உடனடியாகக் கண்டறிந்து கூடைகளில் சேகரிப்பதற்காக குழந்தைகளை பெரும்பாலான பெரியவர்கள் அழைத்து வருகின்றனர்.
காட்டிற்கு ஒவ்வொரு 100-200 மீட்டர் தூரத்திலும் இம்மரங்கள் காணப்படுகின்றன. சீசன் காலத்தில் ஒவ்வொரு மரத்தின் கீழ் கிளைகளிலும் சாக்கு அல்லது துணிகள் தொங்கவிடப்படுகின்றன. “கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சில மரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பல தலைமுறைகளுக்கு முன்பு இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது,” என்கிறார் சுர்ஜான். மரத்திலிருந்து கிடைக்கும் வருவாயை சிலர் தேவையுள்ளோருக்கு விட்டுக் கொடுக்கின்றனர்.
2007ஆம் ஆண்டு பந்தவ்கர் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. தேசிய பூங்காவிற்கு உட்பட்ட முக்கிய மண்டலத்தில் மனிதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இடைப்பட்ட மண்டலம் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. தேசிய பூங்காவிற்கு அருகில் சுக்ராணி குடும்பம் போன்ற பழங்குடியின விவசாயிகளுக்கு சொந்தமாக விவசாய நிலம் இருந்தது. அவையும் பிறகு இடைப்பட்ட மண்டலமானது. பத்தாண்டுகளாக அந்நிலத்தில் அவர்கள் விவசாயத்திற்கு அனுமதிக்கவில்லை என்கிறார் அவர். “காட்டில் பயிர்கள் கிடையாது. பயிர்களை தங்கி பாதுகாக்க முடியாது என்பதால் காட்டிற்குள் பயிரிடுவதை நாங்கள் நிறுத்திவிட்டோம். பட்டாணி, கடலை பருப்பு போன்ற பயிர்களை குரங்குகள் தின்றுவிடுகின்றன.”
பந்தவ்கார் தேசிய பூங்காவாக மட்டும் இருந்தபோத பழங்குடியின விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடும் காலத்தில் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கி வந்தனர். ஆனால் இப்போது அதற்கு அனுமதி இல்லை. இப்போது அவர்கள் இடைப்பட்ட பகுதியில் இலுப்பம்பூ போன்ற சிறு வன உற்பத்திக்கு (MFP) மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். “ புலிகளை தனியாக சந்திப்பதை தவிர்க்க பொழுது விடிவதற்குள் நாங்கள் அனைவரும் ஒன்றாகச் செல்வோம்,” என்கிறார் சுக்ராணி. அவை அங்கு திரிந்தாலும் ஒன்றைக் கூட எதிர்கொண்டதில்லை என்கிறார் அவர்.
அதிகாலை 5.30 மணிக்கு சூரியன் உதிக்கும் முன்பே காட்டிற்குள் மரத்தடிகளில் உள்ள காய்ந்த சருகுகளை கூட்டிவிட்டு இலுப்பம்பூ சேகரிக்கும் பணியை அவர்கள் தொடங்கிவிடுகின்றனர். “பூக்கள் பலமாக இருப்பதால் தரையை கூட்டும்போது இலைகள் மட்டும் வந்துவிடுகின்றனர்,” என விளக்குகிறார் சுக்ராணியின் 18 வயது மகள் ரோஷ்ணி சிங். ரோஷ்ணி 2020ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்தார், கோவிட்-19 பெருந்தொற்றினால் அவரது கல்லூரி படிப்பை நிறுத்தி வைத்துள்ளார். பரசியில் மொத்தமுள்ள 1,400 பேர் கொண்ட மக்கள்தொகையில் 23 சதவீதம் பேர் பழங்குடியினர். படிப்பறிவு பெற்றவர்கள் 50 சதவீதத்திற்கும் (கணக்கெடுப்பு 2011) குறைவானவர்கள். முதல் தலைமுறையாக கற்கும் ரோஷ்ணி கல்லூரிக்கும் குடும்பத்தின் சார்பில் முதலில் செல்ல தீர்மானித்துள்ளார்.
அதிகாலை ஈரக்காற்று பூக்களை சேகரிப்போருக்கு உதவுவதில்லை. “எங்கள் கைகள் குளிரில் இருக்கும்போது சிறு இலுப்பம்பூக்களை [காட்டின் தரையிலிருந்து] சேகரிப்பது கடினம்,” என்கிறார் சுக்ராணியுடன் வந்துள்ள அவரது உறவினரான 17 வயது துர்கா. “இன்று ஞாயிறு என்பதால் பள்ளி கிடையாது. எனவே அத்தைக்கு உதவ இங்கு வந்தேன்,” என்கிறார் அவர். பரசியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாமோகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அவர் 11ஆம் வகுப்பில் வரலாறு, பொருளாதாரம், இந்தி மற்றும் கலை படிக்கிறார். கடந்தாண்டு பொதுமுடக்கத்தினால் மூடப்பட்ட அவளது பள்ளி ஜனவரியில் தான் திறக்கப்பட்டது.
வானளவு உயர்ந்து நிற்கும் இலுப்பை மரத்தைப் பார்த்து தலையசைத்தபடி சுக்ராணி பேசுகையில், “இந்தாண்டு எங்களுக்கு போதிய அளவு [விளைச்சல்] கிடைக்கவில்லை. இயல்பாக கிடைப்பதில் பாதிகூட இல்லை.” அவரது மதிப்பீட்டை சுர்ஜானும் பிரதிபலிக்கும் வகையில் சொல்கிறார், “இந்தாண்டு பூக்கள் குறைவாகவே விழுகின்றன,” என்று. 2020ஆம் ஆண்டு குறைவாக மழை பெய்ததே விளைச்சல் குறைவிற்குக் காரணம் என இருவருமே குற்றம்சாட்டுகின்றனர். இலுப்பையில் பல பருவங்களைக் கண்டுள்ள சுர்ஜன் பேசுகையில், “சாகுபடி சிலசமயம் குறையும், சிலசமயம் அதிகரிக்கும். அது எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.”
புலிகள் சரணாலயத்தின் மற்றொரு பகுதியான பரசியிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மர்டாரி கிராமத்தில் இருக்கும் மணி சிங்கின் வீட்டு முற்றத்தில் இலுப்பம்பூக்கள் சூரிய ஒளியில் உலர வைக்கப்பட்டுள்ளன. வெளிர் பச்சை கலந்த மஞ்சள் பூக்கள் காய்ந்து ஆரஞ்சு நிறமாக மாறுகின்றன. வயது 50களில் உள்ள மணியும், அவரது மனைவி சுனிதா பாயும் காட்டில் அவர்களின் ஐந்து மரங்களில் பூக்களை காலையில் சேகரிக்கின்றனர். அவர்களின் பிள்ளைகள் வேறு பணிகளுக்குச் சென்றுவிட்டதால் இப்பணியை இவர்கள் மட்டும் செய்கின்றனர். “இந்தாண்டு சேகரிக்க அதிக பூக்கள் இல்லை. அவற்றைத் தேட வேண்டி உள்ளது. கடந்தாண்டு 100 கிலோ வரை கிடைத்தது, இந்தாண்டு அதில் பாதிகூட கிடைக்கவில்லை,” என்கிறார் அவர்.
மணி தனது ஒரு ஏக்கர் நிலத்தில் உழுதிடும் இரு காளை மாடுகளுக்கு இலுப்பை மாவு கலந்த வைக்கோலை உணவாக அளிக்கிறார். “இது அவற்றை வலிமையாக்கும்,” என்கிறார் அவர்.
133 வீடுகளை கொண்ட சிறிய கிராமம் மர்டாரி. எல்லா வீட்டிலும் இலுப்பம் பூ பரப்பப்பட்டு காய வைத்து சாக்கில் எடுத்து வைக்கின்றனர். மதியத்திற்கு மேல் சந்தாபாய் பைகா குழந்தைகள், உறவினர்களுடன் கலகலப்பாக வீடு திரும்பினார். அனைவரது கையிலும் கூடை நிறைய அவர்கள் சேகரித்த பூக்கள். அவர்களை மதிய உணவிற்காக கழுவ சொல்லிலிட்டு அவர் பேசுவதற்கு அமர்ந்தார்.
வயது 40களில் உள்ள சந்தாபாயும், அவரது கணவர் விஷ்வநாத் பைகாவும் பைகா பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 2.5 ஏக்கர் நிலத்தில் அரிசி, துவரை பயிரிடுகின்றனர், 100 நாள் வேலைக்கும் அவ்வப்போது செல்கின்றனர்.
“இந்தாண்டு அதிகமாக இலுப்பம் பூ கிடைக்கவில்லை. மழையில்லை என்பதால் பூக்களும் குறைவு,” என்று காலை உழைப்பினால் சோர்வடைந்த சந்தாபாய் சொல்கிறார். மான்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் விளைச்சல் குறைவிற்கு காரணம் என அவர் குற்றம்சாட்டுகிறார். “இரவில் விழும் எதையும் அவை தின்றுவிடுகின்றன, எனவே நாங்கள் காலையில் விரைவாக சென்று அவற்றை விரட்ட வேண்டி உள்ளது. எனது மரங்கள் மட்டுமல்ல, எல்லோருக்கும் இதே நிலைதான்.”
ஒரு மாதம் கழித்து மே மாதத்தில் மர்டாரியிலிருந்து தொலைப்பேசியில் பேசிய சந்தாபாய் அவரது அச்சத்தை உறுதிப்படுத்தினார். “இந்தாண்டு சேகரிப்பு 15 நாட்களில் முடிந்துவிட்டது. எங்களுக்கு சுமார் இரண்டு குவிண்டால் [200 கிலோ] தான் கிடைத்தன. கடந்தாண்டு மூன்று குவிண்டாலுக்கு மேல் கிடைத்தது,” என்கிறார் அவர். விளைச்சல் குறைவு என்பதால் விலை அதிகரித்துள்ளது அவருக்கு சவுகரியத்தை அளிக்கிறது. 2020ஆம் ஆண்டு கிலோ ரூ.35-40 என இருந்த விலை இந்தாண்டு ரூ.50க்கு உயர்ந்துள்ளது.
சுர்ஜன், சுக்ராணி கணித்தது போன்று பரசியிலும் விளைச்சல் குறைவு. சுர்ஜன் இதை தத்துவார்த்தமாக விளக்கினார்: “சில சமயம் உங்கள் வயிற்றுக்கு போதிய உணவு கிடைக்கும், சில சமயம் அப்படி இருக்காது அல்லவா? இதுதான் விஷயம்.”
இக்கட்டுரைக்கு பெரிதும் உதவிய திலீப் அஷோகாவிற்கு கட்டுரையாளர் நன்றித் தெரிவிக்க விரும்புகிறார்.
தமிழில்: சவிதா