“அக்கா, ஏதாவது செய்யுங்கள், இல்லாவிட்டால் அவர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் கொன்று விடுவார்கள்!” இது தான் நான் முதன்முதலில் சந்தித்தபோது கிரிஜா தேவி உதிர்த்த வார்த்தைகள். “அவர்கள் என்னை அடிக்காமல் இருப்பதற்கு நான் இந்த சிறிய இருட்டு அறையில் என்னை பூட்டிக் கொண்டேன்,” என்று அவர் விம்முகிறார்.
துலக்க வேண்டிய பாத்திரங்கள் அடுக்கப்பட்டுள்ள வீட்டின் குறுகிய பாதையைக் கடந்து, கிரிஜா தன் கணவன் வீட்டாரிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பூட்டிக் கொண்டுள்ள அறையை அடைந்தேன். அறைக்கு வெளியே சமையலறை, அதையடுத்து தாழ்வாரம். அங்கு தான் அவரது கணவரும், குழந்தைகளும் உணவு உண்டு கொண்டிருந்தனர்.
30 வயதாகும் கிரிஜா, 34 வயதாகும் கட்டடத் தொழிலாளியான ஹேம்சந்திரா அஹிர்வாரை 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 14, 11 மற்றும் 6 வயதுகளில் குழந்தைகள் உள்ளனர்.
வேலையை விடச் சொல்லி அவரது கணவர் குடும்பத்தார் மிரட்டியபோது பிரச்சனை தொடங்கியது. வேலையில் சேர்ந்த பிறகு பிரச்சனை பெரிதாகிவிட்டது. உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தின் கப்ராய் தாலுக்காவில் உள்ள பசோரா அவரது சொந்த கிராமம். இங்கு அவர் அங்கீகரிக்கப்பட்ட சமூக நல செயற்பாட்டாளராக (ஆஷா) உள்ளார். ஊரடங்கிற்கு பிறகு அவரது கணவனின் தாய், தந்தை வீடு திரும்பியுள்ளதால் பிரச்சனை பெரிதாகியுள்ளது.
“ஊரடங்கிற்கு முன் இருவரும் [அவரது மாமனார், மாமியார்] டெல்லியில் இருந்தபோது நிலைமை கட்டுக்குள் இருந்தது,” என்கிறார் கிரிஜா. அவர்கள் கூலித்தொழிலாளிகளாக இருந்தனர். “ஊரடங்கு தொடங்கியது முதல், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கிராமத்தில் ஏதேனும் கருவுற்ற பெண்ணைப் பார்க்க நான் சென்றால் பிற ஆண்களை சந்திக்கச் சென்றுள்ளதாக அவர்கள் சொல்வார்கள். ஆஷாவில் இருப்பவருக்கு கருவுற்ற பெண்களைச் சந்திப்பது கடமை.” அவரது ஆறு வயது மகன் யோகேஷ், மொட்டை மாடிக்கு செல்லும் படியில், எங்களைப் பின்தொடர்கிறான்.
கிரிஜா அதிகம் அழுதிருந்தார். அவரது கண்களும் உதடுகளும் வீங்கி இருந்தன. அவரும், ஹேம்சந்திராவும் கூட்டுக் குடும்பமாக உள்ளனர். அவரது இரு மாமாக்கள், அவர்களின் குடும்பத்தினரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். எனினும் தனித்தனி சமையலறை, வசிப்பிடங்கள் உள்ளன. ஆனால் நுழைவாயிலும், முற்றமும் பொதுவானவை.
கிரிஜாவைப் போன்று பல வீடுகளிலும் சில மாதங்களாக குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. “ஊரடங்கிற்கு பிறகு குடும்ப வன்முறை வழக்குகள் அதிகரித்துள்ளன,” என்று தொலைபேசி வழியாக தெரிவித்தார் மகளிருக்கான தேசிய ஆணைத் தலைவர் ரேகா ஷர்மா. “பெரும்பாலான புகார்கள் இணைய தளம் வழியாக அல்லது வாட்ஸ்அப் எண் வழியாக வருகின்றன. 181 என்கிற உதவி எண் இருந்தாலும், தொலைபேசி வழியாக உரையாடுவது அவர்களுக்கு எளிதானது கிடையாது.”
புகார்கள் அதிகளவில் பதிவு செய்யப்படுவதில்லை. “குற்றப் பிரிவுகளில் குடும்ப வன்முறையும் ஒன்று, எனினும் அது எப்போதும் புகாராக பதிவு செய்யப்படுவதில்லை“ என்கிறார் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை கூடுதல் இயக்குநர் அசீம் அருண். அவர் பிற பணிகளுடன் உபி.யின் காவல் உதவி எண் 112ஐயும் கண்காணித்து வருகிறார். “ஊரடங்கு தொடங்கியது முதல் இப்போது வரை, பதிவு செய்யப்பட்டாத வன்முறை புகார்கள் மிகவும் அதிகம்.”
வன்முறை தொடர்பான உண்மைச் சம்பவங்களுக்கும், புகார் செய்யப்பட்ட சம்பவங்களுக்கும் இடையே இந்தியா மட்டுமின்றி உலகளவில் பெரிய இடைவெளி உள்ளது. ஐ.நா.வின் மகளிர் பிரிவு பின்வருமாறு குறிப்பிடுகிறது: “பதிவு செய்யப்பட்டாத குடும்ப மற்றும் பிற வன்முறைகள் தொடர்பான தரவுகளை திரட்டுவது மிகவும் சவாலானது. 40 சதவீதத்திற்கும் குறைவான பெண்கள் தாங்கள் அனுபவிக்கும் துன்பம் தொடர்பாக உதவி கோருகிறார்கள் அல்லது வன்முறை குறித்து புகார் தெரிவிக்கின்றனர். 10 சதவீதத்திற்கும் குறைவான பெண்கள் காவல்துறையின் உதவியை நாடுகின்றனர். தற்போதைய சூழல், [தொற்றுநோய் மற்றும் ஊரடங்குகள்] புகார் தெரிவிப்பத்தை இன்னும் கடினமாக்கி இருக்கிறது. பெண்கள், சிறுமிகள் தொலைபேசியை பயன்படுத்துவது, உதவி எண்களுக்கு அழைப்பது போன்றவை கடினமாகியுள்ளன. காவல்துறை, நீதித்துறை, சமூக நலம் போன்ற பொது சேவை துறைகளிலும் கட்டுப்பாடுகள் உள்ளன.
“என் கணவரின் தாத்தா நேற்று என்னை தடியால் அடித்ததுடன், என் கழுத்தையும் நெறிக்க முயன்றார்” என்று கண்ணீர் மல்க சொல்கிறார் கிரிஜா. “அண்டை வீட்டுக்காரர் வந்து தடுத்தார். தடுத்த அவரையும் திட்டினார். இப்பிரச்சனை தொடர்பாக அண்டை வீட்டாரிடம் பேச முயன்றால், அதற்கு அவர்கள் உன் வீட்டிலேயே பேசி சரிசெய்து கொள் என்கின்றனர். என் கணவர் வீட்டாரின் ஏச்சுகளை கேட்க முடியாது என்றும் கூறுகின்றனர். என் கணவர் எனக்கு ஆதரவாக பேசினால் இவ்வளவு பிரச்சனை இல்லை. ஆனால் அவர் பெரியோரை எதிர்க்க முடியாது என்கிறார். அப்படி எதிர்த்தால் தன்னையும் அடிப்பார்கள் என அவர் அஞ்சுகிறார்.”
இதுபோன்ற வன்முறையை பல பெண்களும் சந்தித்து உள்ளனர். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி (2015-16), மூன்றில் ஒரு பங்கு பெண்கள் குடும்ப வன்முறையை அனுபவித்துள்ளதாக புகார் கூறியுள்ளனர். அவர்கள் 7 பேரில் ஒருவர் தான் வன்முறையைத் தடுக்க உதவி எண்ணை (காவல்துறை உட்பட) நாடுகின்றனர்.
கிரிஜாவின் குடும்பத்தில் தற்போதைய பிரச்சனைக்கு என்ன காரணம்?
“ஊரடங்கு தொடங்கிய சில வாரங்களில் டெல்லியிலிருந்து கணவர் வீட்டார் [கணவரின் பெற்றோர், தாத்தா, பாட்டி] வந்தவுடன், வீட்டில் குழந்தைகள் உள்ளதால் வைரஸ் தொற்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு நான் கூறினேன். இதற்காக அவர்கள் என்னை திட்டியதுடன், அவமானப்படுத்திவிட்டதாகவும், கோவிட்-19 நோயாளிகள் என அவர்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும் கூறினர். என் மாமியார் என்னை அறைய முயன்றார். எனது வீட்டிற்கு வெளியே 8 முதல் 10 பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். யாரும் உதவ முன்வரவில்லை,” என்கிறார் கிரிஜா. நாங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது யாரும் கவனித்துவிடக் கூடாது என கவனமாக இருந்தார்.
‘ நீதியைத் தேடி’ எனும் 2012ஆம் ஆண்டு அறிக்கை, அமைதியாக இருப்பதன் மூலம் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பது, உலகளாவிய நிகழ்வு என்கிறது. 41 நாடுகளில் 17ல் மனைவியை கணவன் அடிப்பது நியாயமானது என 25 சதவீதத்திற்கும் மேலான மக்கள் கருதுகின்றனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 40 சதவீதம் என கண்டறியப்பட்டுள்ளது.
கிரிஜாவின் சார்பாக அவரது 14 வயது மகள் அனுராதா காவல்துறைக்கு எழுதிய புகார் கடிதத்தை எங்களிடம் காட்டினார். “இதை நாங்கள் காவல்துறையிடம் கொடுக்க நினைத்தோம்,” என்று என்னிடம் சொன்னார் அனுராதா. “ஊரடங்கு காரணமாக நாங்கள் மஹோபா நகருக்குள் அனுமதிக்கப்படவில்லை. எங்களை தடுப்பு வைத்து நிறுத்திவிட்டனர்.” அவரது கிராமத்திலிருந்து இந்த நகரம் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மஹோபா காவல்துறை கண்காணிப்பாளரிடம் தொலைபேசியில் பேசிய கிரிஜா, கிராமத்தை விட்டு வெளியேச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறினார். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். [இந்த செய்தியாளர் மஹோபா நகர காவல் நிலைய அலுவலர் மற்றும் ஒரு காவலருடன் கிரிஜாவின் வீட்டிற்கு வந்ததால், இந்த ஆலோசனை சாத்தியப்பட்டது].
மஹோபா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி லால் பதிதார் பேசுகையில், “நாங்கள் பொதுவாக முதல் அல்லது இரண்டாவது புகார் வரை குடும்ப வன்முறை குற்றத்திற்கு யாரையும் கைது செய்வதில்லை. முதலில் நாங்கள் அவர்களுக்கு அறிவுரை சொல்வோம். உண்மையில் நாங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவர் என இரு தரப்பினருக்கும் இடையே ஒன்று, இரண்டு அல்லது மூன்று முறை பேசுவோம். இதில் எந்த தீர்வும் கிடைக்காத போது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வோம்” என்கிறார்.
'ஊரடங்கிற்கு பிறகு குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது' என்கிறார் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா.
ஊரடங்குடன் “குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்த தகவலின் [புகார்] எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளதை நான் கவனிக்கிறேன். கிட்டதட்ட 20 சதவீதம் வரை குறைந்துவிட்டது. இப்போது மீண்டும் அதிகரித்தது. அதுவும் மதுபானக் கடைகள் மீண்டும் திறந்த பிறகு தான் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குடும்ப வன்முறைக்கும், மதுபானத்திற்கும் தொடர்புள்ளது. இப்போது இதுபோன்ற வழக்குகள் 20 சதவீதம் மீண்டும் குறைந்துள்ளது [ஊரடங்கிற்கு முன் ஒப்பிடுகையில்].”
குடும்ப வன்முறை குறித்து புகார்கள் வருவதில்லையா? “உண்மை தான்,” என்கிறார் ஏடிஜிபி அருண். “குற்றஞ்சாட்டப்பட்டவரே எதிரில் நிற்கும்போது பெண்கள் புகார் தெரிவிக்க முன்வருவதில்லை.”
பல பெண்கள் பிற உதவி எண்கள் அல்லது குழுக்களை நாடுகின்றனர். “ஊரடங்கிற்கு முந்தைய காலம் போல இப்போது குடும்ப வன்முறைச் சம்பவங்கள் மூன்று பங்கு அதிகரித்துவிட்டன. பல புகார்கள் இணைய வழியில் அல்லது தொலைபேசியில் வருகின்றன. எம்பிபிஎஸ் படித்த மருத்துவரிடமிருந்து கூட புகார்கள் வருவது தான் அதிர்ச்சி அளிக்கிறது,” என்கிறார் லக்னோவின் மூத்த வழக்கறிஞரும், வழக்கு மற்றும் சட்டப்பூர்வ முயற்சிகளுக்கான சங்கத்தின் செயல் இயக்குநருமான ரேணு சிங்.
கிரிஜாவைப் போன்று லக்னோ மாவட்ட தலைநகரான சின்ஹாத் பிளாக்கைச் சேர்ந்த பிரியா சிங்கும் குடும்ப வன்முறையால் வீட்டிற்குள் சிக்கியுள்ளார்.
27 வயதாகும் பிரியா 42 வயதாகும் மகேந்திராவை தனது 23ஆவது வயதில் திருமணம் செய்தார். அவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். “முன்பெல்லாம் அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது குடித்துவிட்டு வருவார். இப்போதெல்லாம் மதிய நேரத்திலும் அவர் குடிக்கிறார். இப்போது என்னை அடிப்பதும் தொடர்ச்சியாகிவிட்டது. என் பிள்ளைக்கும் இது புரிந்துவிட்டது. அவன் எப்போதும் அச்சத்தில் இருக்கிறான்,” என்கிறார் அவர்.
“தங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டால் புகார் தெரிவிக்க பொதுவாக மக்கள் முன்வருவார்கள். இப்போது [ஊரடங்கு காரணமாக] அப்படி இல்லை . எனவே நாங்கள் உதவி எண்களை கொண்டுவந்துள்ளோம். இப்போது சராசரியாக தினமும் 4-5 அழைப்புகள் வருகின்றன. இவை அனைத்தும் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் குடும்ப வன்முறை புகார்கள்,” என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) துணைத் தலைவர் மது கார்க்.
லக்னோவில் உள்ள சிகன்காரி துணிக் கடையில் உதவியாளராக பிரியாவின் கணவர் வேலை செய்தார். ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு அவர் இப்போது வீட்டில் இருக்கிறார். கான்பூரில் உள்ள தனது பெற்றோரிடம் சென்ற பிறகு கணவருக்கு எதிராக பிரியா புகார் தெரிவிக்க நினைத்தார்.
“மதுபானம் குடிப்பதற்காக வீட்டில் உள்ள பல பாத்திரங்களை அவர் விற்றுவிட்டார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்,” என்கிறார் பிரியா. “ரேஷன் கடைகளில் வாங்கிய பொருட்களையும் அவர் விற்க முயன்றார், இதை என் அண்டை வீட்டார்கள் என்னிடம் தெரிவித்தபிறகு, அவரை தடுத்து நிறுத்தினேன். அனைவர் முன்பும் என்னை அடிக்கிறார். அவரை யாரும் தடுப்பதில்லை,” என்கிறார் அவர்.
உத்தரப் பிரதேசத்தில் NFHS-4படி, 15-49 வயதிலான திருமணமான பெண்களில் 90 சதவீதம் பேர் குடும்ப வன்முறையை அனுபவிக்கின்றனர் - அதுவும் அவர்களின் கணவர்களால்.
கிரிஜாவின் பெற்றோர் டெல்லியில் அவரது திருமணமாகாத இளம் சகோதரியுடன் வசிக்கின்றனர். “என்னால் அவர்களிடம் செல்வது பற்றி நினைக்கக் கூட முடியவில்லை. அவர்கள் சிறிய குடிசையில் வசிக்கின்றனர். அவர்களால் எப்படி எனக்கும் சேர்த்து சமைத்துபோட முடியும்? இதுவே என் தலைவிதியாக இருக்கலாம்,” என்கிறார் கிரிஜா.
“இந்தியப் பெண்கள் அனைவருமே ஏதாவது ஒருவகையில் உடல்ரீதியாகவோ அல்லது பாலியல்ரீதியாகவோ வன்முறைகளை அனுபவிக்கின்றனர்,” என்கிறது NFHS-4. “76 சதவீதம் பேர் எவ்வித உதவியும் கேட்பதில்லை, அனுபவித்த வன்முறை தொடர்பாக யாரிடமும் சொல்வதில்லை.”
சித்ரகூட் பஹாரி பிளாக்கின் கல்வாரா குர்த் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதாகும் நகீனா கான் தப்பித்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பிரயாக்ராஜில் உள்ள பெற்றோரிடம் செல்ல விரும்புகிறார்.
“என் உடல் முழுவதும் காயங்கள் இருக்கின்றன. வந்து பாருங்கள்,” என்று என்னை வீட்டிற்குள் அழைக்கிறார். “என் கணவர் அடிக்கத் தொடங்கியது முதல் என்னால் நடக்க முடியவில்லை. நான் ஏன் இங்கு வாழ வேண்டும்? அடித்து துன்புறுத்தப்படுவதால் என்னால் ஒரு அடி கூட வைக்க முடிவதில்லை. என்னால் நகர கூட முடியாதபோது ஒரு வாய் தண்ணீர் கொடுக்க கூட யாருமில்லை.”
“எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்” என்கிறார் அவர். “என் பெற்றோர் வீட்டில் என்னை விட்டுச் செல்லுங்கள்.” அவரது பெற்றோரும் வந்து அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டனர். ஆனால் பொது போக்குவரத்து தொடங்கிய பிறகு தான் இது சாத்தியம். வீட்டை விட்டு வெளியே சென்றதும், கார் ஓட்டுநராக உள்ள அவரது கணவரான 37 வயதாகும் சரீஃப் கானுக்கு எதிராக காவல்துறையில் புகார் தெரிவிக்க நாகீனா திட்டமிட்டுள்ளார்.
கோவிட்-19 பரவலை தடுப்பதற்காக அவசர பொது சுகாதாரத்திற்காக மார்ச் 25ஆம் தேதி தேசிய அளவிலான ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஊரடங்கு கிரிஜா, பிரியா, நாகீனா போன்ற பல பெண்களுக்கு வேறு விதமான மருத்துவப் பேரிடரை உருவாக்கிவிட்டது.
“இந்த கிராமத்தில் பல பெண்களும் அவர்களின் கணவர்களால் அடித்து துன்புறுத்தப்படுகின்றனர். ஆனால் இப்படி வாழ்வதை அவர்கள் ஏற்று கொண்டுவிட்டனர்,” என்று பசோராவில் என்னிடம் கிரிஜா தேவி தெரிவித்தார். “இதற்கு எதிராகப் பேசுவதால் எனக்கு பிரச்சனை வரும். நான் பெண் என்பதற்காக பிறர் அவமதிப்பதை எப்படி அனுமதிக்க முடியும். என் வீட்டிலிருந்து வேலைக்கு செல்லக் கூடாது என யார் தடுப்பது? இதற்கு எதிராக எனது இறுதி மூச்சு வரை நான் பேசுவேன்.”
தமிழில்: சவிதா