இன்னும் உருவாகிக்கொண்டிருந்த தேசத்தின் உணர்நிலையில் ஜாலியன்வாலாபாக் ஒரு திருப்புமுனை. என்னைப் போல பலர் பகத் சிங் என்னும் மகத்துவம் அங்குதான் தொடங்கியது என்று கேட்டு கேட்டு வளர்ந்தோம். பத்து வயதில் அங்கு சென்ற பகத் சிங் கையோடு எடுத்துச் சென்றிருந்த ஒரு குப்பியில் ரத்தம் தோய்ந்த மண்ணை நிரப்பி கிராமத்திற்கு திரும்பினார். அங்கு தனது சகோதரியுடன் சேர்ந்து தாத்தாவின் வீட்டிலிருந்த ஒரு தோட்டத்தில் அதை கொட்டினார். இருவரும் அந்த இடத்தில் ஒவ்வொரு வருடமும் பூக்களை நட்டு வளர்த்தார்கள்.
ஏப்ரல் 13, 1919ல் பஞ்சாபிலுள்ள அம்ரித்ஸரில் ஆயுதங்கள் இல்லாத ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்ட (379 என்கிறது பிரிட்டிஷ் அரசு) சம்பவம் இன்னமும் அந்த படுகொலைகளை நிகழ்த்தியவர்களையோ அதன் தொடர்ச்சியான அரசுகளையோ தொடவில்லை. இந்த வாரம் அது பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார். அவ்வளவு மோசமான படுகொலைகளுக்கு மன்னிப்பு கோரவில்லை.




