நண்பகல். மகாராஷ்டிராவின் உல்லாஸ்நகர் தாலுகாவில் தூறல் நின்றிருந்தது.
தானே மாவட்டத்தின் உல்லாஸ்நகரிலுள்ள மத்திய மருத்துவமனை நுழைவாயிலுக்கு ஓர் ஆட்டோ சென்றது. வெள்ளை மற்றும் சிவப்பு ஊன்றுகோலை இடது கையில் பிடித்துக் கொண்டு, தியானேஸ்வர் ஆட்டோவிலிருந்து இறங்குகிறார். கூடவே அவரது மனைவி அர்ச்சனா அவரது தோளைப் பிடித்துக் கொண்டு இறங்குகிறார். அவரது செருப்பு சகதியில் நின்று தெறித்தது.
சட்டையின் இரண்டு பாக்கெட்டுகளிலிருந்தும் இரு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுக்கிறார் தியானேஸ்வர். அதில் ஒன்றை ரிக்ஷா ஓட்டுநரிடம் கொடுக்கிறார். ஓட்டுநர் மீதி சில்லரையைக் கொடுக்கிறார். சில்லரைக் காசைத் தொட்டுப் பார்க்கிறார் தியானேஸ்வர். “ஐந்து ரூபாய்,” என சொன்னபடி பாக்கெட்டுக்குள் போடும் அவர் பாக்கெட்டுக்கு காசு விழுவதை கூர்ந்து கவனிக்கிறார். 33 வயதான அவருக்கு விழிவெண்படலப் புண் வந்து மூன்று வயதிலேயே பார்வை போய்விட்டது.
அம்பர்நாத் தாலுகாவின் வங்கானி டவுனில் இருக்கும் அவர்களது வீட்டிலிருந்து உல்லாஸ் நகர் மருத்துவமனைக்கு 25 கிலோமீட்டர் பயணித்து அர்ச்சனாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்ய வருகிறார்கள். வருவதற்கு மட்டும் ரிஷாவுக்கு 480லிருந்து 520 ரூபாய் வரை ஆகும். “நண்பரிடமிருந்து (இந்தப் பயணத்துக்காக) 1,000 ரூபாய் கடன் வாங்கினேன்,” என்கிறார் தியானேஸ்வர். “ஒவ்வொரு முறை (மருத்துவமனை வருவதற்கும்) நான் கடன் வாங்க வேண்டியிருக்கிறது.” இருவரும் மெல்ல எச்சரிக்கையாக சிறு சிறு அடியெடுத்து வைத்து, இரண்டாம் தளத்தில் இருக்கும் டயாலிசிஸ் அறையை நோக்கி நடக்கின்றனர்.
குறைபார்வை கொண்ட அர்ச்சனாவுக்கு இந்த வருட மே மாதத்தில் தீவிர சிறுநீரக நோய் மும்பையில் லோக்மான்ய திலக் பொது மருத்துவமனையில் கண்டறியப்பட்டது. “அவளின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன,” என்கிறார் தியானேஸ்வர். 28 வயது அர்ச்சனா, வாரத்துக்கு மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை எடுக்க வேண்டும்.
“சிறுநீரகங்கள் உடலின் முக்கியமான அங்கங்கள். கழிவையும் உடலின் அதிகமான நீரையும் வெளியேற்ற அவை பயன்படுகிறது. அவை செயலிழந்தால், உயிர்வாழ டயாலிசிஸ் செய்யப்பட வேண்டும். அல்லது உறுப்பு மாற்ற சிகிச்சை செய்யப்பட வேண்டும்,” என்கிறார் டாக்டர் ஹர்திக் ஷா. உல்லாஸ் நகர் மருத்துவமனையின் சிறுநீரக நோய் மருத்துவர். ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 2.2 லட்சம் புதிய நோயாளிகள் சிறுநீரகநோயின் இறுதிக் கட்டத்தை அடைகின்றனர். 3.4 கோடி கூடுதல் டயாலிசிஸ் சிகிச்சைகளுக்கான தேவை வருடந்தோறும் ஏற்படுகிறது.
உல்லாஸ்நகர் மருத்துவமனையில் பிரதான் மந்திரி தேசிய டயாலிசிஸ் சிகிச்சைத் திட்ட த்தின் கீழ் அர்ச்சனா டயாலிசிஸ் பெறுகிறார். 2016ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திட்டம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களில் சிறுநீரகங்கள் செயலிழந்தோருக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கவென அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் இச்சேவை வழங்கப்படுகிறது.
“டயாலிசிஸ்ஸுக்கு செலவில்லை. ஆனால் பயணச்செலவுதான் சமாளிக்கக் கஷ்டமாக இருக்கிறது,” என்கிறார் தியானேஸ்வர். அர்ச்சனாவின் டயாலிசிஸ் சிகிச்சைக்கு ஒவ்வொரு முறை வருவதற்கும் ஆகும் ஆட்டோக்கான செலவை அண்டைவீட்டாரிடமும் நண்பர்களிடமும் கடன் வாங்குகிறார் அவர். குறைந்த செலவு கொண்ட உள்ளூர் ரயில் பயணத்தில் பாதுகாப்பு இருக்காது. “அவள் மிகவும் பலவீனமாக இருக்கிறாள். ரயில் நிலையத்திலுள்ள படிக்கட்டுகளில் ஏற முடியாது,” என்கிறார் அவர். “எனக்கு பார்வை கிடையாது. இருந்திருந்தால் கைகளில் அவளை தூக்கிச் சென்றிருப்பேன்.”
*****
உல்லாஸ் நகர் மருத்துவமனையில் அர்ச்சனாவுக்கு மாதந்தோறும் நடக்கும் 12 டயாலிசிஸ் சிகிச்சைகளுக்கென இருவரும் 600 கிலோமீட்டர்கள் ஒவ்வொரு மாதமும் பயணிக்கின்றனர்.
2017ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் 60 சதவிகித டயாலிசிஸ் நோயாளிகள், டயாலிசிஸ் பெற 50 கிலோமீட்டர் தூரம் பயணிப்பதாகவும் கால்வாசி சதவிகித பேர் 100 கிலோமீட்டர் தொலைவில் வாழ்கின்றனர்.
இந்தியாவில் ஏறத்தாழ 4,950 டயாலிசிஸ் மையங்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மை தனியார்துறையில் உள்ளன. ஒன்றிய அரசின் டயாலிசிஸ் திட்டம், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 569 மாவட்டங்களின் 1045 மையங்களின் வழியாக செயல்படுத்தப்படுகிறது. 7,129 டயாலிசிஸ் இயந்திரங்கள் இத்திட்டத்துக்கு பயன்படுத்தப்படுவதாக அரசின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
மகாராஷ்டிராவில் 53 இலவச டயாலிசிஸ் மையங்கள் இருப்பதாக சொல்கிறார் மும்பையிலிருக்கும் சுகாதாரச் சேவை இயக்குநரகத்தின் துணை இயக்குநரான நிதின் அம்பேத்கர். “அதிக மையங்களை உருவாக்க அதிக சிறுநீரக மருத்துவர்களும் வல்லுநர்களும் தேவை,” என்கிறார் அவர்.
‘அர்ச்சுவுக்கு வாழ்க்கை முழுக்க டயாலிசிஸ் தேவை. அவளை இழக்க நான் விரும்பவில்லை’ என மனைவி டயாலிசிஸ் சிகிச்சை பெறும் அறைக்கு வெளியே ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கும் தியானேஸ்வர் கிசுகிசுக்கிறார்
அர்ச்சனாவும் தியானேஸ்வரும் வசிக்கும் வங்கனி டவுனில் அரசு மருத்துவமனை இல்லை. மறுபக்கமோ 2021ம் ஆண்டின் மாவட்ட சமூக மற்றும் பொருளாதார ஆய்வு, 71 தனியார் மருத்துவமனைகள் தானேவில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. “சில தனியார் மருத்துவமனைகள் வெறும் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றன. ஆனால் அவர்கள் ஒரு தடவை சிகிச்சைக்கே 1,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்,” என்கிறார் தியானேஸ்வர்.
எனவே 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உல்லாஸ் நகர் மருத்துவமனைதான் அர்ச்சனாவின் டயாலிசிஸ் சிகிச்சைக்கு மட்டுமின்றி, குடும்பத்தின் எந்த மருத்துவ நெருக்கடிக்கும் அணுகப்படும் இடமாக இருக்கிறது. அம்மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் நடந்த நிகழ்வுகளை தியானேஸ்வர் விவரிக்கிறார்.
ஏப்ரல் 15, 2022 அன்று கிறுகிறுப்பும் பாதத்தில் அரிப்பைப் போன்ற உணர்வும் இருப்பதாக அர்ச்சனா கூறினார். “நான் ஒரு உள்ளூர் தனியார் மையத்துக்கு அழைத்துச் சென்றேன். பலவீனத்துக்காக சில மருந்துகளை அவளுக்குக் கொடுத்தனர்,” என்கிறார் அவர்.
ஆனாலும் அவரது ஆரோக்கியம் மே 2ம் தேதி இரவு குன்றியது. நெஞ்சு வலி வந்து மூர்ச்சையானார். “அவள் அசையவில்லை. எனக்கு பயமாகிவிட்டது,” என்ற தியானேஸ்வர், அர்ச்சனாவுக்கு உதவி தேடி மருத்துவமனைகளுக்கு வாகனத்தில் அலைந்ததை நினைவுகூருகிறார்.
“முதலில் உல்லாஸ் நகர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு அவளுக்கு ஆக்சிஜன் கொடுத்தனர். பிறகு அவளின் நிலை மோசமாக இருந்ததால் கல்வாவிலுள்ள (27 கிலோமீட்டர் தொலைவு) சத்ரபதி ஷிவாஜி மகாராஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லச் சொன்னார்கள்,” என்கிறார் அவர். “கல்வா மருத்துவமனையை நாங்கள் அடைந்தபோது தீவிர சிகிச்சைக்கான படுக்கை இல்லை என சொல்லி, எங்களை சியோன் மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.”
அந்த இரவில் அர்ச்சனாவும் தியானேஸ்வரும் வாடகைக் காரில் 78 கிலோமீட்டர் தூரம் பயணித்தனர். 4,800 ரூபாய் செலவு. அதற்குப் பிறகு குறையவே இல்லை.
*****
அர்ச்சனாவுக்கும் தியானேஸ்வருக்கும் பூர்விகம் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டம். 2013ம் ஆண்டில் திட்டக் கமிஷன் வெளியிட்ட அறிக்கை யின்படி வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் 22 சதவிகித இந்திய மக்கள்தொகையில் அவர்களும் அடக்கம். அர்ச்சனாவின் நோய்க்குப் பிறகு இருவரும் ‘மருத்துவத்துக்கான பெருஞ்செலவையும்’ தாங்க வேண்டியதானது. உணவை தவிர்த்து 40 சதவிகிதம் குடும்பத்தின் செலவு அதிகரித்திருக்கிறது.
மாதம் 12 நாட்கள் சிகிச்சைக்காக செல்லும் பயணத்துக்கு மட்டும் மாதந்தோறும் 12,000 ரூபாய் செலவாகிறது. மருந்துகள் கூடுதலாக 2,000 ரூபாய் ஆகிறது.
அவர்களின் வருமானமும் சரிந்துவிட்டது. அர்ச்சனாவின் நோய்க்கு முன்பு, 53 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தானே ரயில் நிலையத்துக்கு வெளியே கோப்புகளும் அட்டை வைக்கும் இடங்களையும் இருவரும் விற்று வியாபாரம் இருக்கும் நாட்களில் 500 ரூபாய் நாளொன்றுக்கு வருமானம் ஈட்டுவார்கள்.பிற நாட்களில் 100 ரூபாய் மட்டும்தான் கிடைக்கும். வருமானம் கிட்டாத நாட்களும் உண்டு. “மாதத்துக்கு வெறும் 6,000 ரூபாய் மட்டுமே ஈட்டினோம்,” என்கிறார் தியானேஸ்வர். (படிக்க: பெருந்தொற்று காலத்தில் உலகை தொட்டு உணரும் நிலை )
சில வீட்டுச் செலவுகளையும் வாடகையான 2,500 ரூபாயையும் சமாளிக்க மட்டுமே குறைவான அந்த சம்பளம் உதவியது. அர்ச்சனாவின் நோய் அவர்களி பொருளாதாரச் சிக்கலுக்கு பேரடியாக விழுந்தது.
அர்ச்சனாவை பார்த்துக் கொள்ள அருகே எந்தக் குடும்பமும் இல்லாததால், தியானேஸ்வரால் வேலைக்கும் செல்ல முடியவில்லை. “அவள் பலவீனமாக இருக்கிறாள்,” என்கிறார் அவர். “வீட்டுக்குள் நடக்கவோ கழிவறைக்கு செல்லவோ கூட துணையின்றி அவளால் செய்ய முடியாது.”
இவற்றுக்கிடையில் கடன்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நண்பர்களிடமிருந்தும் அண்டை வீட்டாரிடமிருந்தும் ஏற்கனவே தியானேஸ்வர் 30,000 ரூபாய் கடன் வாங்கி விட்டார். இரண்டு மாத வாடகையும் கட்டவில்லை. அர்ச்சனாவின் டயாலிசிஸ் சிகிச்சைக்கு சென்று வர ஆகும் செலவை சமாளிப்பதே இருவரின் தொடர் கவலையாக இருக்கிறது. மாதந்தோரும் வரும் ஒரே நிலையான வருமானம் சஞ்சய் காந்தி நிராதர் பென்சன் திட்டத்தில் கிடைக்கும் 1,000 ரூபாய் மட்டும்தான்.
“அர்ச்சுவுக்கு வாழ்க்கை முழுக்க டயாலிசிஸ் தேவை,” என மனைவி டயாலிசிஸ் சிகிச்சை பெறும் அறைக்கு வெளியே இருக்கும் பெஞ்சில் அமர்ந்திருக்கும் தியானேஸ்வர் கிசுகிசுக்கிறார். “அவளை நான் இழக்க விரும்பவில்லை,” என்கிறார் அவர், குரல் நடுங்க சுவரில் தலைசாய்ந்தபடி.
இந்திய மக்கள்தொகையின் பெரும்பான்மையினரைப் போல, அர்ச்சனாவும் தியானேஸ்வரும் சுகாதாரச் சேவைகள் பெறக் கையை மிஞ்சும் அதிகப்படியான செலவில் உழலுகின்றனர். 2020-21ம் ஆண்டுக்கான பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, கையை மிஞ்சிச் செலவு செய்யும் நிலை உள்ள நாடுகளின் பட்டியலில் அதிகச் செலவு கொண்ட நாடாக இந்தியா பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதுவும் நேரடியாக அழிவு தரக்கூடியப் பெருஞ்செலவு மற்றும் வறுமையைச் சார்ந்ததாகவே இருக்கிறது.
“கிராமப்புறங்களில் டயாலிசிஸ் மருத்துவம் போதுமான அளவில் இல்லை. ஒன்றிய அரசின் திட்டப்படி மையங்கள் துணை மாவட்ட நிலைகளில் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொன்றிலும் மூன்று படுக்கைகள் இருக்க வேண்டும்,” என்கிறார் ஜன் ஸ்வஸ்திய அபியானின் தேசிய துணை ஒருங்கிணைப்பாளரான டாக்டர் அபய் ஷுக்லா. “நோயாளிகளுக்கு ஆகும் பயணச் செலவுகளை அரசு கொடுக்க வேண்டும்.”
அதிகப்படியான செலவு நோயாளிக்கு பிற பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது. உதாரணமாக, ஆரோக்கியமான உணவு எடுக்க முடியாது. அர்ச்சனா ஆரோக்கிய உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களும் சாப்பிட வேண்டும். ஆனால் ஒருவேளை சாப்பாடே இருவருக்கும் சவாலாக இருக்கிறது. “எங்களின் நிலப்பிரபு மதிய உணவோ இரவுணவோ கொடுப்பார். சில நேரங்களில் என் நண்பர் கொஞ்சம் உணவை அனுப்பி வைப்பார்,” என்கிறார் தியானேஸ்வர்.
சில நாட்களில் அவர்களுக்கு உணவே கிடைக்காது.
“வெளியாட்களிடம் எப்படி உணவு கேட்பது? எனவே நான் சமைக்க முயற்சிக்கிறேன்,” என்கிறார் சமையல் செய்து பழகியிராத தியானேஸ்வர். “ஒரு மாதத்துக்கான அரிசி, கோதுமை மாவு மற்றும் பருப்பு வாங்கியிருக்கிறேன்.” படுக்கையில் படுத்திருக்கும் அர்ச்சனா அவர் சமைக்கும் நாட்களில் சமையல் குறிப்புகளை சொல்வார்.
அர்ச்சனா போன்ற நோயாளிகள், நோய் மற்றும் சுகாதாரச் சேவைக்கு ஆகும் செலவுகள் என இரட்டை சுமைக்கு ஆளாகின்றனர். சுகாதாரச் சேவைகள் எல்லா மக்களையும் அடைவதற்கான வழிகள் உருவாக்கப்பட வேண்டும். அதிகப்படியான செலவுகளும் பெருமளவில் குறைக்கப்பட வேண்டும். 2021-22ம் ஆண்டில் பொது சுகாதாரச் செலவு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவிகிதமாக இருந்தது. பொதுச் சுகாதாரத்துக்கான நிதி - தேசிய சுகாதாரக் கொள்கை 2017 முன் வைத்தபடி - மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1 சதவிகிதத்திலிருந்து 2.5-3 சதவிகிதமாக உயர்த்தப்பட ஆலோசனை கூறியிருந்தது 2020-21ம் ஆண்டுக்கான பொருளாதார கணக்கெடுப்பு .அதிகப்படிச் செலவை 65 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதத்துக்கு இது குறைக்க முடியும்.
இந்த பொருளாதார வார்த்தைகள் மற்றும் பரிந்துரைகள் பற்றி அர்ச்சனாவுக்கும் தியானேஸ்வருக்கும் ஒன்றும் தெரியாது. அர்ச்சனாவின் டயாலிசிஸ்ஸுக்காக பெரும் செலவு செய்து வந்த அவர்கள் சீக்கிரம் வீடு திரும்ப விரும்பினார்கள். அர்ச்சனாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு தியானேஸ்வர் அவரை மெல்ல வெளியே அழைத்து வருகிறார். ஓர் ஆட்டோவை அழைக்கிறார். காலைப் பயணத்தில் மிச்சமான 505 ரூபாய் இருக்கிறதா என பாக்கெட்டை ஒருமுறை பரிசோதித்துக் கொள்கிறார்.
“வீட்டுக்கு போக பணம் இருக்கிறதா?” எனக் கேட்கிறார் அர்ச்சனா.
”இருக்கிறது…,” என்கிறார் தியானேஸ்வர் நிச்சயமற்றக் குரலில்.
தமிழில் : ராஜசங்கீதன்