கோடண்ட ராமிரெட்டி ஒன்றும் சாதாரண விவசாயி அல்ல. 26 வயது இளமைத் துடிப்புடன் மேலாண்மை பட்டத்தோடு, தன் கிராமத்தில் உள்ள விவசாய முறைகளையும் தொழில்நுட்பத்தையும் முன்னேற்ற வேண்டும் என்று நினைத்தவர்.
ஆந்திர பிரதேசம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராயம்பள்ளி கிராமத்தில் கிட்டத்தட்ட இருபது ஏக்கர் நிலத்தை அவருடைய குடும்பம் வைத்திருந்தது. விவசாயக் கடனையும், கல்விக் கடனையும் வங்கியின் மூலம் பெற்றிருந்தனர். இது போக வட்டிக்குப் பணம் கொடுக்கும் தனிநபர்கள் சிலரிடமிருந்தும் கடன் வாங்கியிருந்தனர்.
பணத்தேவை காரணமாக அவருடைய பெற்றோர் தங்களின் நிலத்தை அடகுக் கடையில் அடகு வைத்திருந்தனர். ராமிரெட்டி கடுமையாக உழைத்து இரண்டு ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார். ஆக, கிட்டத்தட்ட நிலப் பத்திரத்தை மீட்டும் நிலை வந்துவிட்டது. ஆனால், அவர் குடும்பம் வங்கியில் பெற்றிருந்த கடனை அடைத்தால்தான் அவர் நிலத்தை விற்று தனியார் கடனை அடைக்க முடியும் என்ற நிலை. இதுபோகக் காலம் கடத்தினால் அந்த நிலத்தை வங்கி எடுத்துக்கொண்டுவிடும் என்ற நிலை.
அதிர்ச்சியில் ராமிரெட்டியின் தாயார் - ராமிரெட்டி செய்ய விரும்பியதெல்லாம் தன் தாயாரின் வங்கிக் கணக்குப் புத்தகத்தை வங்கிடமிருந்து திரும்பப் பெறுவதைத்தான்
கடன் கொடுத்த நபர்களிடமிருந்து தன் நிலத்தைக் காப்பாற்ற வேண்டும், என்ற கட்டாயம் ஒருபுறம். வங்கியில் சில செயல்முறைகள் வேறு இருந்தன; அதையும் பின்பற்றியாக வேண்டும். வங்கியில் பெற்ற இதர கடன்களை திரும்பச் செலுத்தியாகிவிட்டது. இருந்தாலும் மிச்சமிருந்த கடன்களைத் திரும்பச் செலுத்துமாறு வங்கி அழுத்தம் கொடுக்க, அது விபரீதத்தில் முடிந்தது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ராமிரெட்டி, ஜூலை 2, 2015 அன்று வங்கி வளாகத்தில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
மனதுடைந்து போன ஸ்ரீனிவாச ரெட்டி(இடது) கூறியது: “வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் எப்படியும் எங்கள் நிலத்தைப் பறிக்க வருவார்கள்”
“அந்தப் பையன் கேட்டதெல்லாம் அவன் அம்மாவின் வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் அதோடு இணைக்கப்பட்டிருந்த நிலப் பத்திரங்கள்தான். அது கிடைத்திருந்தால் தன் நிலத்தின் ஒரு பகுதியை விற்று அடகு வைத்திருந்த நிலத்தை மீட்டிருப்பான்”, என்றார் ராமிரெட்டியின் நண்பர் ஒருவர். “ஆனால் வங்கி மேலாளர் இரண்டு வாரங்களாக புத்தகத்தைத் தர மறுத்துவிட்டார்”
ராமிரெட்டி பல நாட்களாக அனந்தபூர் மாவட்ட உரவகொண்டா நகரிலுள்ள சிண்டிகேட் வங்கிக் கிளைக்குச் சென்றபடி இருந்திருக்கிறார். தினசரி வந்து போய்க்கொண்டிருந்ததனால் அவரது முகம் அங்கு பழக்கப்பட்டதாக ஆகிவிட்டது. அங்குள்ள பலருக்கு அவரது பிரச்னையைப் பற்றித் தெரிந்திருக்கிறது. அவர் கேட்டதெல்லாம் அந்த வங்கிக் கணக்குப் புத்தகத்தைத்தான்; அதை வைத்து தன் நிலத்தை மீட்டு, அதில் இரசாயன உரங்களையும் பூச்சிகொல்லிகளையும் பயன்படுத்தாமல், தான் கற்ற இயற்கை விவசாய முறைகளை செயல்படுத்தலாம் என்று நினைத்தார். விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவரை உந்திக்கொண்டே இருந்தது.
“வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் எப்படியும் எங்கள் நிலத்தை 3-6 மாதங்களுக்குள் பறிக்க வருவார்கள்; அதற்குள் வங்கிக் கணக்குப் புத்தகத்தைத் திரும்பப் பெற்று, இரண்டு ஏக்கர் நிலத்தை விற்று, அவர்களின் கடனை அடைத்துவிடலாம் என்று நினைத்திருந்தோம்”, என்று அழுதார் ராமிரெட்டியின் சகோதரர் ஸ்ரீனிவாச ரெட்டி.
“மண்ணுக்குள் போய்விட்டானே என் சகோதரன்; இனி எப்போதும் அவன் மேலே வர மாட்டானே”, என்று கதறினார் ஸ்ரீனிவாச ரெட்டி
ஜூன் 19 அன்று ராமிரெட்டி தன் தாயாரின் வங்கிக் கடனை அடைத்துவிட்டு நிலப் பத்திரத்தைத் திரும்பப் பெற ஆவலுடன் காத்திருந்தார். கொடுத்த கடனைக் கறாராகக் கேட்டுத் திரும்பப் பெறுவதில் பெயர் பெற்றது அந்த வங்கிக் கிளை. மற்றொரு கடனான கல்விக் கடனை அடைத்தால்தான் வங்கிக் கணக்குப் புத்தகத்தைத் தருவோம் என்று சொல்லிவிட்டது.
“என் தங்கையின் கல்விக்காகப் பெற்ற அந்தக் கடனுக்கு உத்திரவாதம் அளித்தது என் தந்தைதான். அவர் இப்போது இல்லை”, என்று கூறிய ஸ்ரீனிவாச ரெட்டி, “ஆனால் அதற்காக வங்கிக் கணக்குப் புத்தகத்தைத் தர எப்படி மறுக்கலாம்? அது கல்விக்காக வாங்கிய கடன். எங்கள் கிராமத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஐம்பது குடும்பங்கள் இன்னும் கல்விக் கடனைத் திரும்ப செலுத்தாமல்தான் இருக்கின்றன. அவர்கள் அனைவரிடமும் வங்கிக் கணக்குப் புத்தகம் இருக்கிறது”, என்றார் ஆத்திரத்துடன்.
தற்கொலை செய்துகொண்ட இளம் விவசாயியின் சகோதரி மற்றும் இதர குடும்பத்தினர்
ராமிரெட்டியும் விடாமல் வங்கிக்கு சென்று மேலாளரிடம் வங்கிக் கணக்குப் புத்தகத்தைக் கேட்டபடி இருந்திருக்கிறார். “போன வாரம் வங்கி மேலாளரின் தூண்டுதலின் பேரில் போலீஸ் ராமிரெட்டியைக் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றிருக்கிறது. அவனை அடிக்கவும் செய்திருக்கிறது”, என்றார் ராமிரெட்டியின் மாமா நாகிரெட்டி. “அவன் நன்றாகப் படித்தவன்; ஒரு தவறும் செய்யாதவன். போலீஸ் வங்கி மேலாளரின் பக்கம் சென்றுவிட்டது அவனுக்கு அவமானமாக இருந்தது; தாங்க முடியாத கோபம் வந்தது.”
ஆனால் ராமிரெட்டி நம்பிக்கையை இழக்கவில்லை. அவர் தற்கொலை செய்துகொள்ளவிருந்த நாளன்று காலை எட்டரை மணியளவில் தன் மாமாவை அழைத்திருக்கிறார். “ஒரு மந்திரியின் உதவியாளரிடம் பேசியிருக்கிறேன். அவர்கள் நம் பத்திரங்களை மீட்டுக் கொடுப்பார்கள்; எல்லாம் சரியாகிவிடும்”, என்று சொல்லியிருக்கிறார்.
“அப்போது அவன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறான் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை”, என்று உடைந்து அழுதார் நாகிரெட்டி.
“ராமிரெட்டி என்னுடன் பேசியபோது அன்று அவன் தற்கொலை செய்துகொள்வான் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” - ராமிரெட்டியின் மாமா நாகிரெட்டி
ஜூலை 2 அன்று நாகிரெட்டி வழக்கம்போல் வங்கிக்குச் சென்று மேலாளரிடம் வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் நிலப் பத்திரங்களையும் கோரியிருக்கிறார். வழக்கம்போல் அவை மறுக்கப்பட்டிருக்கின்றன. ராமிரெட்டி அங்கிருந்து கிளம்பி மதியம் 1 மணியளவில் மீண்டும் வந்திருக்கிறார், இம்முறை கையில் ‘மோனோக்ரோடோபோஸ்’ என்னும் பூச்சி மருந்துடன். நிலப் பத்திரங்களைத் தராவிட்டால் பூச்சி மருந்தை உட்கொண்டுவிடுவேன் என்று மேலாளரிடம் சொல்லியிருக்கிறார்.
“ராமிரெட்டி வங்கியின் காத்திருப்பு அறையில் உட்கார்ந்து பூச்சி மருந்தைக் குடித்தார்”, என்றார் ‘வார்த்த’ தெலுங்கு நாளிதழில் பணிபுரியும் உரவகொண்டாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கே.ஆனந்த் ராவ். “அன்று வங்கி கூட்டமாகத்தான் இருந்தது. ஆனால் அவர் விஷம் குடித்த இருபது நிமிடங்களுக்கு யாரும் அவரை கவனிக்கவே இல்லை. பிறகு என்ன ஏது என்று விசாரித்து அவரை மருத்துவனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் காலம் கடந்துவிட்டது; மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.”
ராமிரெட்டியின் சட்டைப் பையில் தற்கொலைக் கடிதம் இருந்தது. “சிவசங்கர் சார் அவர்கள் அரசியல்வாதிகளின், பணக்காரர்களின் கைப்பாவையாக மாறிவிட்டார். வேண்டுமென்றே எனக்கு வேதனையை அளிக்கிறார். என் சாவுக்கு சிண்டிகேட் வங்கிக் கிளையின் மேலாளர்தான் காரணம். கடந்த வெள்ளிக்கிழமையன்று போலீசை வைத்து என்னை அடித்தார். இப்படிக்கு உண்மையுள்ள, கோடண்ட ராமிரெட்டி, ஒரு விவசாயியின் மகன்”, என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
கடிதத்தின் இறுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “இப்படிக்கு உண்மையுள்ள, கோடண்ட ராமிரெட்டி, ஒரு விவசாயியின் மகன்”
ராமிரெட்டி ஒரு லட்சியவாதி. இந்த சமூகத்தின் அநீதிகளைக் கண்டு நெஞ்சம் கொதிக்கும் கோபக்கார இளைஞர் அவர். செய்தித்தாளில் எவற்றையேனும் வாசித்துவிட்டு, அது பிறகு என்னானது என்று தெரிந்துகொள்ள முனைவார். புதிதாகக் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற முனைப்புள்ள அவர், பலேகரின் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டு அதைக் கற்றுக்கொள்வதற்காக விசாகப்பட்டினம் சென்றார். சூரிய ஒளி மின்சாரத்தைப் பற்றி அறிந்துகொள்ளக் கர்நாடகம் சென்றார்.
அவரின் தேடல்களுக்கு அவருடைய குடும்பமும் உறுதுணையாக இருந்தது. “அவனை நினைத்தால் எங்களுக்குப் பெருமையாக இருந்தது. எனவே இவற்றையெல்லாம் செய்ய அவன் பணம் கேட்டபோது அதை அனுமதித்தோம்”, என்றார் ஸ்ரீனிவாச ரெட்டி, கண்ணீரை அடக்க முடியாமல். “ஐயோ, தம்பி! விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பானே! இப்படி அநியாயமாக மண்ணுக்குள் போய்விட்டானே! இனி எப்போதும் அவன் மேலே வரவே மாட்டானே!”, என்று கதறினார்.
ராமிரெட்டியின் உடலோடு அவரின் கனவுகளும் கற்றல்களும் சேர்ந்தே புதைகின்றன
இதோ, ஒரு இளம் விவசாயி; விவசாயத்தில் புதுமையைப் புகுத்த நினைத்தவர்; பெருங்கனவாளர். பொருளாதார நெருக்கடியில் சிக்கி, அதிலிருந்து மீளமுடியாமல் விரக்தியோடு அவர் உயிர்விட்ட கதைதான் இது. அவரின் உடலோடு அவரது கனவுகளும் கற்றல்களும் சேர்ந்தே புதைந்துபோயின.