கோரை வெட்டுவதில் திறன்பெற்ற ஒருவர் 15 நொடிகளில் ஒரு செடியை வெட்டி, அரை நிமிடத்தில் குலுக்கி, அடுத்த சில நிமிடங்களில் ஒரு கட்டு கட்டிவிடுகின்றனர். அத்தனை விரைவாக ஒரு சிறந்த கோரை வெட்டுபவரால் இந்த வேலையை முடித்துவிட முடியும். புற்கள் வகையைச்சார்ந்த இந்தச்செடி, அவர்களைவிட உயரமாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு கட்டும் கிட்டத்தட்ட 5 கிலோ உள்ளது. பெண்கள் அவற்றை எளிதாக சுமந்து செல்கிறார்கள். ஒவ்வொருவரும் தலையில் 12 முதல் 15 கட்டுகளை ஒரே நேரத்தில் வெயிலில் அரை கிலோ மீட்டர் தொலைவு சுமந்து செல்கின்றனர். கட்டுக்கு ரூ.2 ஈட்டுவதற்காக இவர்கள் இவ்வளவு கஷ்டப்படவேண்டியுள்ளது.
ஒரு நாளில் அவர்கள் ஒவ்வொருவரும், குறைந்தபட்சம் 150 கோரை கட்டுகள் பறிக்கிறார்கள். இந்த கோரை புற்கள் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தின் ஆற்றுப்படுகையில் அதிகளவில் வளர்கின்றன.
கரூரின் மனவாசி கிராமத்தில், காவிரிக்கரையோரம் உள்ள ஒரு நத்தமேட்டில் இந்த கோரைவெட்டும் பெண்கள் வேலை செய்கிறார்கள். இங்கு கோரை வெட்டுபவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்கிறார்கள். அவர்கள் நாளொன்றுக்கு 8 மணிநேரம் ஒரு சிறிய இடைவேளையுடன் வேலை செய்கிறார்கள். பசுமையாக அடர்ந்து வளர்ந்துள்ள கோரைகளின் தண்டுகளை கையுறையின்றி வெறும் கையிலே அரிவாளால் குனிந்து வெட்டுகிறார்கள். அவற்றை கட்டாக கட்டி, பெற்றுக்கொள்ளும் இடத்தில் ஒப்படைக்கிறார்கள். அதற்கு திறமை, பலம் மற்றம் கடின உழைப்பும் தேவைப்படுகிறது.
பெரும்பாலான பெண்கள் தாங்கள் சிறு பெண்களாக இருந்தது முதலே கோரை வெட்டுவதாக கூறுகின்றனர். “நான் பிறந்தது முதலே கோரைக்காடு தான் எனது உலகம். நான் 10 வயதாக இருந்தபோதிலிருந்தே வயல்களில் வேலை செய்து நாளொன்றுக்கு ரூ.3 சம்பாதிப்பேன்“ என்று 59 வயதான சௌபாக்கியம் கூறுகிறார். 5 பேர் கொண்ட அவரது குடும்பத்திற்கு உணவளிக்க தற்போது அவரது வருமானம் உதவுகிறது.
எம். மகேஸ்வரி (33). கணவனை இழந்த இவருக்கு பள்ளி செல்லும் இரண்டு மகன்கள் உள்ளனர். தன் தந்தை தன்னை மாடு மேய்க்கவும், கோரை வெட்டவும் அனுப்புவதை நினைவு கூறுகிறார். “நான் பள்ளி வாசலை கூட மிதித்ததில்லை“ என்று அவர் சோகமாக கூறுகிறார். “இந்த வயல்வெளிகளே எனது இரண்டாவது வீடு“ என்று அவர் மேலும் கூறுகிறார். ஆர். செல்வி (39) தனது தாயை பின்பற்றி தானும் கோரை வெட்டுகிறார். “எனது தாயும் கோரை வெட்டுபவர்தான். நான் இந்த வேலையை சிறிது வயதில் இருந்தே துவங்கிவிட்டேன்“ என்று அவர் கூறுகிறார்.























