யசோதாபாய் ஜோர்வார் அவரது மாலை வேளைகளை பன்றிகளை விரட்டுவதில் செலவிடுகிறார். “இவை வயலில் இங்குமங்கும் அதிவேகமாக ஓடும். உண்மையில் இந்த நிலத்தால் எங்களுக்கு பயன் ஒன்றும் இல்லைதான். ஆனால், என்னை ஓய்வின்றி வைத்துக்கொள்வதற்கு நான் எதையாவது செய்ய வேண்டும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
70 வயதை கடந்தவர் ஜோர்வார், கடந்த சில மாதங்களாக, தனது வீட்டில் அவர் தனியாக வசித்து வருகிறார். மஹாராஷ்ட்ராவில் உள்ள பீட் மாவட்டத்தில் உள்ள ஹத்கர்வாடி கிராமத்தில் வாழ்கிறார் அவர். “எனது இரண்டு மகன்களும், அவர்களின் மனைவிகள் மற்றும் 5 குழந்தைகளுடன் பாரமதிக்கு (இது மேற்கு மஹாராஷ்ட்ராவில் இங்கிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) சென்றுவிட்டார்கள்“ என்று அவர் கூறுகிறார். “அவர்கள் எங்கள் கிராமத்தைவிட்டு அக்டோபர் மாத இறுதியில், கரும்பு வெட்டுவதற்காக சென்றுள்ளனர். மீண்டும் மார்ச் மாத இறுதியில் திரும்பி வருவார்கள்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும், மராத்வாதாவின் விவசாயிகள், குறிப்பாக பீட் மாவட்டத்திலிருந்து, கரும்பு வயல்களில் தொழிலாளர்களாக பணிபுரியச் செல்வது வழக்கமான இடம்பெயர்வு தான். விவசாயம் மற்றும் கூலித்தொழிலில் கிடைக்கும் வருமானம் அவர்கள் வாழ்வதற்கு போதுமானதாக இருக்காது. ஒரு தம்பதியினர், ஒரு டன் கரும்பு வெட்ட ரூ.228 பெறுவதன் மூலம் 5 மாதத்தில் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும். ஆண்டுதோறும், பல குடும்பங்களுக்கு இந்த நிரந்தர வருமானம் மட்டுமே, பணத்திற்கான வழியாகும்.
‘எங்கள் இரண்டு ஏக்கர் நிலத்தில் இருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய் கூட இருக்காது“ என்று தெளிவாகக் கூறுகிறார் ஜோர்வார். “விவசாய வேலைகள் நடைபெறும் காலங்களில், நாங்கள் வருமானத்திற்கு வேளாண் கூலித்தொழிலை சார்ந்திருக்கிறோம். தண்ணீரும் மலைப்பாங்கான இடங்களில் எளிதாக கிடைக்காது“ என்று அவர் மேலும் கூறுகிறார். அவரின் மகன்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஹத்கார்வாடியில் தங்கும் 6 – 7 மாதத்தில் அவர்கள், உணவுப்பயிர்களான சோளம், கம்பு மற்றும் துவரம்பருப்பு ஆகியவை பயிரிடுவார்கள். பெரும்பாலும் அதை வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்துவார்கள். இந்த விளைச்சலையே ஜோர்வார் தனியாக இருக்கும்போது உணவுக்காக பயன்படுத்துவார்.
சில கரும்பு வெட்டும் தொழிலாளர்களை, கான்ட்ராக்டர்கள் தம்பதிகளாக தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனெனில், ஒருவருக்கான கூலி அதிகம். மராத்வாதாவிலே இடம்பெயர்வதற்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சதாரா, சங்லி மற்றும் கோல்காபூர் ஆகிய மஹாராஷ்ட்ராவின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவின் பெல்காம் மாவட்டங்களுக்கு பயணம் செய்கின்றனர். (பார்க்க: கரும்பு வெட்ட நெடுந்தொலைவு சாலைப்பயணம் ). பெரும்பாலான பெரியவர்கள் சென்றுவிடுவதால், அவர்களின் கிராமங்கள் வெறிச்சோடி பாலைவனம்போல் காட்சியளிக்கிறது. பெரும்பாலும் வயோதிகர்கள் வீடுகளிலே தங்கிவிடுகிறார்கள். சிலர், முதியவர்களால் பராமரிக்க முடியுமெனில் பேரக்குழந்தைகளையும் விட்டுச்செல்கிறார்கள்.
ராஜன் ஷிர்சாகர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரும், விவசாயிகள் போராளியுமான அவர் கூறுகையில், மராத்வாதாவில், 6 லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்கள் கரும்பு வெட்டுகிறார்கள். அதில் பாதிபேர் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் குறிப்பிட்ட பருவத்திற்கு மட்டும் செல்பவர்களாகும். பள்ளி வாரத குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் மஹாராஷ்ட்ராவில் குறிப்பிட்ட பருவமான 150 நாளில் வெட்டப்படும் கரும்பின் சராசரி அளவில் இருந்து இந்த எண்ணிக்கை தொழிற்சங்கங்களால் கணக்கிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“மஹாராஷ்ட்ராவின் 4 பகுதிகளில் இடப்பெயர்வு அதிகளவில் இருக்கும்“ என்று ஷிர்சாகர் கூறுகிறார். அவர் ரான்ஷேடோ மண்டலத்தில் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள ஷஹாடே தாலுகா மற்றும் சோலாப்பூர் மாவட்டத்தில் சங்கோலி தாலுகாவை குறிப்பிட்டு கூறுகிறார். ஜல்கானின் சலிஸ்கான் தாலுகா முதல் நந்தேடின் கின்வாட் தாலுகா வரையுள்ள சட்புடா சரகம் மற்றும் பாலகாட் சரகம் ஆகிய வழிகளை அடக்கியதாக இருப்பதாக கூறுகிறார்.
மராத்வாதாவில் பால்காட், அகமது நகரின் பத்தார்டி முதல் நந்தேடின் காதர் வரை உள்ளடக்கியது. இது மலைப்பகுதி, தரிசு நிலம் மற்றும் மிகக்குறைந்த மழைப்பொழிவு பெறும் பகுதியாகும். பெரும்பாலான பகுதிகள் பீட்டில் இருந்து 300 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளது. அங்கு சராசரி மழைப்பொழிவே 674 மில்லி மீட்டர் ஆகும். இது மராத்வாதாவின் சராசரிக்கும் கீழான 700 மில்லி மீட்டரைவிட குறைவு. பீட்டின் ஷிரூர் தாலுகாவில், சராசரி மழைப்பொழிவு 574 மில்லிமீட்டர். மழைப்பொழிவு குறைவு மற்றும் பாசனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களும், பருவகால இடப்பெயர்வில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு காரணமாகிறது.
தண்ணீர் பற்றாக்குறையுடன் உயர்ந்து வரும் உற்பத்தி செலவுகள், போதிய மற்றும் நல்ல கடன் வழங்கல் இல்லாததும், மாநிலத்தின் உதவி இல்லாததும் இந்த இடப்பெயர்வுக்கு காரணமாகிறது. பருத்தி, துவரம் பருப்பு, சோயா பீன்ஸ் மற்றும் கம்பு ஆகிய பயிர்களுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்யும் குறைந்தளவு ஆதரவு விலை, விவசாயிகளின் உற்பத்தி விலைக்கு ஈடவதில்லை. அதுவே விவசாயிகளை கூலித்தொழிலாளிகளாக கட்டாயப்படுத்துகிறது. உதாரணத்திற்கு, சோளம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,700 விற்பனை செய்யப்படுகையில், அதன் உற்பத்தி விலை ரூ.2,089 ஆக உள்ளது என்று வேளாண் விலை கமிஷனின்
காரீப் பருவ பயிர்களுக்கான விலை கொள்கை அறிக்கை
(2017 -18) கூறுகிறது. பருத்தி போன்ற பணப்பயிர்களின் சாகுபடி கூட நீடிக்கவில்லை. ஏனெனில், அதற்கான குறைந்தளவு ஆதரவு விலையும், உற்பத்தி விலையும் ஒரே அளவில்தான் உள்ளது. பருவமழை ஓரளவு நன்றாக இருந்தால், அப்போது சிறிது லாபம் கிடைக்கிறது.
பால்காட் சரகத்தில் உள்ள தாரூர், வாத்வாணி, பார்லி, ஷிரூர், பட்டோடா மற்றும் அஷ்தி ஆகிய தாலுகாக்களில் உள்ள கிராமங்கள் அனைத்தும் கரும்பு வெட்டும் காலங்களில் வெறிச்சோடி கிடக்கிறது. 1,250 பேர்கள் வசிக்கும் ஹத்கார்வாடியும் அதில் ஒன்றாகும். மலைகளின் வழியே குறுகலான, சமதளம் நிறைந்த பாதையின் வழியே காரை ஓட்டிச்செல்லும்போது, அந்த இன்ஜின் சத்தத்தை தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை. நாம் கிராமத்தை அடைந்தவுடனும் அதே அமைதி தொடருகிறது. அங்குள்ள மரத்தில் இருந்து பறவைகள் கத்தும் சத்தமும், இலைகள் அசையும்போது ஏற்படும் சூடான காற்றின் சத்தமுமே அந்த அமைதியை துளைக்கின்றன. நாம் நடப்பது கூட சத்தமாக கேட்கிறது.
“கிராமத்தில் யாரேனும் இறந்தால்கூட மற்றவர்களுக்கு சில நாட்களுக்குப்பிறகே தெரிகிறது“ , என்று கூறி ஜோர்வார் சிரிக்கும்போது அவரது முகத்தில் உள்ள சுருக்கங்கள் ஆழமாகின்றன. அவருக்கு ஏதேனும் மருத்துவ அவசர உதவி தேவைப்பட்டால், அவர் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராய்மோஹா கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல, அங்கு அரிதாகவே கிடைக்கும் ஆம்புலன்ஸ் சேவைக்குத்தான் அழைக்க வேண்டும். ஜோர்வார் மற்றும் மற்றவர்களும், உதவி தேவைப்படும்போது, தனது பெற்றோருடன் செல்லமால் தங்கள் வீடுகளிலே தங்கி பள்ளிக்கோ அல்லது மற்ற வேலைகளுக்கோ செல்லும் இளைஞர்களைதான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஒரு சிலர், தனியாக வசிக்கும் தங்களது வயதான பெற்றோரின் பாதுகாப்புக்கு தேவையான பணத்தை கொடுத்துவிட்டுச் செல்கின்றனர்.
“பெரும்பாலும் (முழுவதும்) கிராமத்தினர் அனைவரும் கிளம்பிச்சென்றுவிட்டனர்“ என்று ஜோர்வார் கூறுகிறார். “நானும் எனது கணவருடன் கரும்பு வெட்ட செல்வேன். அவர் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். ஆனால், நாங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே கரும்பு வெட்ட செல்வதை நிறுத்திவிட்டோம். வயதானவர்களுக்கு இந்த தொழிலில் இடம் இல்லை“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
குச்சி ஊன்றி நடக்கும் ஜோர்வர் பகல்நேரத்தில், தண்ணீர் எடுப்பதிலும், அவருக்கான உணவு சமைப்பதிலும் செலவிடுகிறார். “இந்த கிராமத்தில் உள்ள கைப்பம்பில் அடிக்கடி தண்ணீர் வராது. எனவே நான் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தின் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவர நடந்து செல்ல வேண்டும். அவரின் ஒற்றை அறைகொண்ட குடிசையின் முன்புறம் உள்ள கற்தளத்தில் அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, பாபுராவ் சாட்கரின் குரலும் எங்கள் பேச்சு சத்தத்தின் இடையே கேட்கிறது. அருகில் உள்ள வீட்டில் இருந்து வந்த அவர், “இங்கு பேச்சுக்குரல் கேட்டது. அதுதான் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக வந்தேன். இந்த நேரத்தில் இதுபோன்ற உரையாடல்களை கேட்பது வழக்கமில்லாத ஒன்று“ என்று அவர் கூறுகிறார். 70 வயதான அவர் ஒரு பிரம்பின் உதவியோடு மெதுவாகவே நடக்கிறார்.
சாத்கரும் தனது மனைவி சந்திராபாயுடன் கிராமத்திலேயே தங்கிவிட்டார். அவரின் இரண்டு மகன்களும் கரும்பு வயல்களுக்குச் சென்றுள்ளனர். ஆனால், எங்கு என்பது அவருக்கு சரியாகத் தெரியவில்லை. “எனக்கு 7 பேரக்குழந்தைகள் உள்ளனர்“ என்று அவர் கூறுகிறார். “நானும், எனது மனைவியும் பலவீனமாக உள்ளோம். நாங்கள் எங்களை கவனித்துக்கொள்வதே கடினமாக உள்ளதால், எங்கள் மகன்கள் அவர்களின் குழந்தைகளை எங்களுடன் விட்டுச்செல்லவில்லை. எங்களால் பேரக்குழந்தைகளை பார்த்துக்கொள்வது முடியாத ஒன்றாகும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
சாத்கரின் இரண்டு பேரர்கள் 20 வயதை கடந்து திருமணமானவர்கள், அவர்கள் தங்களின் மனைவிகளுடன் கரும்பு வெட்ட சென்றுள்ளார்கள். மற்ற 5 பேரக்குழந்தைகளும் 8 முதல் 16 வயதுடையவர்கள். 5 மாதத்திற்கு அவர்கள் இடம்பெரும்போது பள்ளிக்குச் செல்வதை இழக்கிறார்கள். அதேபோல் ஜோர்வாரின் 5 பேரக்குழந்தைகளும், 5 முதல் 13 வயதுக்குட்பட்டவர்கள். (பார்க்க : 2000 மணி நேரங்களுக்கு கரும்பு வெட்டும் பணி ) அவர்கள் திரும்பி வரும்போது, பாடங்களை புரிந்துகொள்வது அல்லது சீரான கல்வியில் சிரமம் ஏற்படுகிறது.
பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இடம்பெயரும்போது, தங்களுடன் அழைத்துச்செல்வதால், ஹத்கர்வாடியின் துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு வரை ஓரிரு குழந்தைகளே உள்ளனர். 8 வயதான குணால் சட்கர் நம்மை பள்ளிக்கு அழைத்துச்செல்கிறார். தெருவின் இரண்டு புறத்திலும் உள்ள வீடுகளின் மரக்கதவுகள் பூட்டப்பட்டு கிடக்கின்றன. குணால் தனது தாயாருடன் இங்கே தங்கிவிட்டார். ஏனெனில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் தந்தை இறந்துவிட்டார். ஒப்பந்தக்காரர்கள் தம்பதிகளை மட்டுமே வேலைக்கு எடுப்பார்கள். அதனால் அவரது தாயார் அருகிலுள்ள கிராமங்களில் வேளாண் கூலித்தொழில் செய்து வருகிறார்.
சிதாராம் கொக்கடே (31), பள்ளி ஆசிரியர் நாம் பள்ளியை சென்றடைந்தபோது அவரும் அங்கு வந்து சேர்கிறார். “நாங்கள் 9 வயது வரை உள்ள குழந்தைகளை மட்டுமே சேர்த்துக்கொள்வோம்“ என்று அவர் கூறுகிறார். “ஆனால், அந்த வயதுள்ள சிறு குழந்தைகள் தங்கள் தாயாருடன் செல்லவே விரும்புவார்கள். இது அவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களின் பெற்றோம் கரும்பு வெட்டும் வேலையில் மும்மரமாக ஈடுபடும்போது, குழந்தைகளுக்கு படிக்க கற்றுக்கொடுப்பது கடினமான ஒன்று“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
பீட் மாவட்டத்தில், பெற்றோர் இடம்பெயர்ந்து செல்லும்போதும், குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படும். ஹத்கார்வாடியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 1,350 பேர் வசிக்கும் தன்கர்வாடி பள்ளியில் தலைமை ஆசிரியர் பாரத் தக்னே அதில் சிறிது வெற்றி பெற்றுள்ளார். “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஒரு மாணவரை கூட பள்ளியில் காண முடியாது. தற்போது 8ம் வகுப்பு வரை 91 மாணவர்கள் படிக்கின்றனர். அதில் 80 சதவீதம் மாணவர்கள் இன்று வந்துள்ளனர்“ என்று அவர் கூறுகிறார்.
‘‘வயலில் என்ன விளைகிறதோ அதை வைத்து உணவை நானே தயாரித்துக்கொள்வேன். நான் கரும்பு வெட்ட விரும்பவில்லை. மருந்து விற்பவராக வேண்டும்“ என்று அசோக் கூறுகிறார்.
மாநில அரசு நியமித்த பள்ளி குழுவினரால், நடத்தப்படும் கிராமத்தில் உள்ள விடுதியை சீரமைக்க தன்னார்வ நிறுவனங்களின் உதவியோடு நிதி திரட்டியதாக தக்னே கூறுகிறார். பின்னர்தான் அசோக் தனது பெற்றோரை சமாதானம் செய்தார். “கரும்பு வெட்டுபவர்களின் பிள்ளைகளுக்கு, அரசு மாதத்திற்கு 1,416 ரூபாய் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்குகிறது. (குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் விடுதியில் தங்கும் ஹங்கமி வஸ்திகுரு யோஜ்னா திட்டத்தின் கீழ்) அது நிச்சயமாக போதாது“ என்று அவர் கூறுகிறார். “ஆனால், விடுதி சீரமைக்கப்பட்ட பின்னர், நாங்கள் ஒவ்வொரு வீடாகச்சென்று குழந்தைகளை விட்டுச்செல்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று விளக்கினோம். பெற்றோருடன் இடம்பெயர்ந்து செல்லும் குழந்தைகள் அடிப்படை கணிதம் கூட போட முடியாமல் திணறுகின்றனர். அவர்களுக்கு வெளி உலகில் எவ்வாறு வேலை கிடைக்கும்“ என்று அவர் கேட்கிறார்.
பெற்றோர்கள் இதை ஏற்றுக்கொள்வதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது“ என்று தக்னே கூறுகிறார். “சிலர் முதல் ஆண்டில் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் தங்கியவர்கள், மற்றவர்களை ஏற்றுக்கொள்ளச்செய்வதற்கு உதவினர். சிறிது சிறிதாக நாங்கள் அனைவரையும் சமாதானம் செய்தோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
விடுதி புதுப்பிக்கப்படுவதற்கு முன்னரே, அசோக் காத்வே (16) தனது 20 வயது மூத்த சகோதரருடன் வீட்டிலே தங்கியிருக்கிறார். “எனது பெற்றோர்கள் நான் பிறந்தது முதலே கரும்பு வெட்டுகிறார்கள்“ என்று அவர் கூறுகிறார். “நான் இதுவரை அவர்களுடன் சென்றதே இல்லை“ அசோக் தற்போது ராய்மோஹா உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் படிக்கிறார். அவரின் பெற்றோர் இடம்பெயரும் காலங்களில் வீட்டில் தனியாகவே இருக்கிறார். “எனது சகோதரரும் கூலித்தொழிலாளியாக உள்ளார். நான் வயலில் கிடைப்பதை வைத்து எனக்கான உணவை நானே தயாரித்துக்கொள்கிறேன். நான் கரும்பு வெட்ட செல்ல விரும்பவில்லை. நான் மருந்தகப்பணியாளராக விரும்பிகிறேன்“ என்று அவர் கூறுகிறார்.
இங்கு ஹத்கார்வாடியில், ஜோர்வார் மற்றும் மற்றவர்களும் அவர்களின் நீண்ட, தனிமையான பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார்கள். “மதியவேளையில் சிலர், கோயில் அருகே கூடி பேசிக்கொண்டிருப்பார்கள். மாலையில் வயலுக்குச் சென்று வருவோம். எங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது“ என்று அவர் கூறுகிறார்.
தமிழில்: பிரியதர்சினி R.