தானே மாவட்டம், ஷஹப்பூர் தாலுக்காவில் புறநகரில் உள்ள டல்கான் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு மார்ச் 27ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு ஹிரா முகானி வந்தார். ஹிரா அவரது மகன் மனோஜ், மருமகள் ஷாலு ஆகியோர் சிறிது நேரம் கூட ஓய்வெடுக்காமல் 104 கிலோமீட்டர் நடந்தே வந்துள்ளனர். பல்கார் மாவட்டம், தஹானு தாலுக்காவில் உள்ள கஞ்ஜத் கிராமம் அருகே செங்கல்சூளையில் அவர்கள் வேலை செய்துவந்தனர்.
“போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாததால் நாள் முழுவதும் நடந்தோம். எப்போதும் கஞ்ஜதிலிருந்து ஷஹாபூருக்கு அரசுப் பேருந்துகள் இருக்கும்,” என்கிறார் 45 வயதாகும் ஹிரா. மார்ச் 26ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு துணி மூட்டைகள், பாத்திரங்களை சாக்கில் கட்டி தலையில் சுமந்தபடி ஹிராவும், ஷாலுவும் நடக்கத் தொடங்கினர். 12 கிலோ அரிசி மூட்டையை தலையிலும், 8 கிலோ கேழ்வரகு மாவை கையிலும் பிடித்துக் கொண்டு மனோஜ் 21 மணி நேர பயணத்தை தொடங்கியுள்ளார். “அரசுப் பேருந்து எப்போதுமே நேரத்திற்கு வராது என்பதால் நாங்கள் நீண்ட தூரம் நடந்து பழகிவிட்டோம். இதனால் எங்கள் கால்கள் வலிக்கவில்லை. ஆனால் வருமானம் கிடைக்காமல் போனது தான் வருத்தமளிக்கிறது,” என்கிறார் அவர்.
செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக ஹிரா, அவரது 27 வயது மகன் மனோஜ், 25 வயது ஷாலு ஆகியோர் மார்ச் 2ஆம் தேதி வீட்டைவிட்டுச் சென்றனர். இந்தாண்டு மே மாதம் திரும்புவதற்கு அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நாடுதழுவிய பொதுமுடக்கம் அவர்களின் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டது. “மார்ச் முதல் மே மாதம் வரை குறைந்தது ரூ.50,000 சம்பாதிக்கலாம் என நாங்கள் திட்டமிட்டிருந்தோம்,” என்று ஹிரா என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். “சூளை உரிமையாளர் வேலைகளை நிறுத்திவிட்டு எங்களை திரும்பிப் போகச் சொல்லிவிட்டார். மூன்று வாரங்களுக்கு அவர் ரூ.8000 தான் கொடுத்தார்.”
எதிர்பாராத விதமாக, மார்ச் இறுதியில் மூவரும் டால்கன் திரும்பியதை கண்டு ஹிராவின் கணவரான 52 வயதாகும் வித்தலும், 15 வயதாகும் அவரது மகள் சங்கீதாவும் அதிர்ச்சியடைந்தனர் - அவர்களின் வருகை குறித்து தொலைபேசியில் ஹிராவினால் தெரிவிக்க முடியவில்லை. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள வித்தலால் உடலுழைப்பு எதுவும் செலுத்த முடியாது என்பதால் மற்றவர்கள் கஞ்ஜத் சென்ற நிலையில், அவர் சங்கீதாவுடன் கிராமத்தில் இருந்துவிட்டார்.
2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் குடும்பத்திற்கு இரவு உணவு சமைப்பதற்காக பண்ணையில் காய்கறிகளை பறித்துக் கொண்டிருந்தபோது டால்கனில் ஹிராவை நான் சந்தித்தேன். அவர் மகாராஷ்டிராவின் பாதுகாக்கப்பட வேண்டிய பழங்குடியின சமூகமான கட்கரி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
வீட்டிலிருந்து வெளியேறி செங்கல் சூளையில் வேலை செய்வது, ஹிரா குடும்பத்தைப் பொருத்தவரை பெரிய விஷயம் - இதுவே அவர்களின் முதல் முயற்சி. சமீபகாலம் வரையில், அவர்கள் நிலமற்ற விவசாயக் கூலிகளாக வேலைசெய்து வந்தனர். ஆனால் 2017 - 2019 காலகட்டத்தில் மும்பை-நாக்பூர் அதிவிரைவுச் சாலைக்காக டால்கன் பண்ணை உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை விற்றதால், இவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.
“கடந்த ஓராண்டாக விவசாய வேலைகள் அதிகம் கிடைக்கவில்லை, எனவே செங்கல் சூளைக்குச் செல்ல முடிவெடுத்தோம். நாங்கள் துரதிர்ஷ்டசாலிகள். இந்நோயினால் சீக்கிரமாக திரும்ப வேண்டியதாகிவிட்டது,” என்கிறார் ஹிரா.
விவசாயக் கூலி வேலைகளை செய்து ஹிரா, மனோஜ், ஷாலு ஆகியோர் தங்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர். சாகுபடி மற்றும் அறுவடைக் காலங்களில் மாதத்திற்கு 20 நாட்கள் என தினமும் ரூ.100 கூலியாக பெற்று மாதம் சுமார் ரூ.5000-6000 வரை ஈட்டி வந்தனர். அறுவடைக்கு பிறகு, தானே, கல்யாண் அல்லது மும்பையில் கட்டுமான இடங்களில் வேலைசெய்து மனோஜ் ரூ. 6000க்கு மேல் இரண்டு மாதங்களாக சம்பாதித்து வந்தார். “இரண்டு மாதங்கள் சென்றுவிடுவேன். விதைக்கும் காலத்திற்காக ஜூன் மாதம் திரும்பி விடுவேன். சிமெண்ட்டுடன் வேலைசெய்வதை விட பண்ணைகளில் வேலைசெய்வது எனக்குப் பிடிக்கும்,” என்று என்னிடம் 2018ஆம் ஆண்டு அவர் தெரிவித்திருந்தார்.
அரிசி, எண்ணெய், உப்பு என அத்தியாவசியப் பொருட்களுடன் வித்தலின் மருத்துவச் செலவு, ஒரே ஒரு அறை கொண்ட அந்த கூரை மண் வீட்டிற்கான மின் கட்டணம் என குடும்ப வருமானம் செலவிடப்படுகிறது. மாதத்திற்கு இருமுறை ஷஹாபூர் மாவட்ட துணை மருத்துவமனையில் வித்தலுக்கு இரத்த மாற்று சிகிச்சையும், பரிசோதனைகளும் செய்ய வேண்டும். அவருக்கான மருந்துகள் மருத்துவமனையில் இல்லாதபோது மாதம் ரூ.300-400 வரை செலவிட வேண்டியிருக்கும்.
கோவிட்-19 பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டவுடன் தானே, பல்காரில் செங்கல்சூளைகள் மூடப்பட்டன. அதனால் 38 வயதாகும் சகி மைத்ரேயாவின் (முகப்புப் படத்தில் மேலிருப்பவர்) குடும்பத்தினரும் தஹானு தாலுக்காவின் சின்சலி கிராமம் ரண்டோல்படாவிற்கு திரும்பிவிட்டனர். பிப்ரவரி மாதம் முதல் வேலை செய்துவந்த தானே மாவட்டம், பிவாண்டி தாலுக்கா, கணேஷ்புரி அருகே உள்ள சூளையிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரம் நடந்தே அவர்கள் வந்துள்ளனர்.
நான்கு பேர் கொண்ட குடும்பம் - 47 வயதாகும் சகியின் கணவர் ரிஷ்யா, 17 வயதாகும் மகள், 14 வயதாகும் மகன் சுரேஷ் - ஆகியோரும் ரண்டோல்பாடாவில் வசிக்கும் வார்லி பழங்குடியினத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களில் ஒன்று. தானே, பல்காரில் உள்ள பல பழங்குடியின குடும்பங்களைப் போன்று இவர்களும் ஆண்டுதோறும் செங்கல் சூளையில் வேலை தேடி புலம்பெயர்கின்றனர்.
தானே மாவட்டத்திலிருந்து பல்கார் 2014ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு தனி மாவட்டமானது. ஒருங்கிணைந்த மாவட்டத்தின் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின சமூகத்தினர் 1,542,451 பேர் உள்ளனர் - அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 13.95 சதவீதம் (2011 கணக்கெடுப்பு). மா தாகூர், கட்கரி, வார்லி, மல்ஹார் கோலி போன்ற பழங்குடியினர் இம்மாவட்டங்களின் 330,000 ஹெக்டேர் பரப்பிலான காட்டுப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
பழங்குடியின விவசாய கூலித்தொழிலாளர்கள், ஆண்டுதோறும் பண்ணையாளர்கள் வளர்த்த பயிர்களை மழைக்காலத்திற்குப் பிறகு அறுவடை செய்துவிட்டு, தானே, பல்காரிலிருந்து நவம்பர் மாதம் புலம்பெயர தொடங்குவார்கள். அடுத்த மழைக்காலம் வரும் வரை பெரும்பாலானோர் செங்கல் சூளைகளுக்குச் செல்வார்கள்.
சூளைகளில் செங்கல் தயாரிப்பில் ஈடுபடுவதன் மூலம், சகியின் குடும்பத்தினர் ஆண்டிற்கு ரூ. 60,000-70,000 வரை சம்பாதிக்கிறார்கள். “நிலநடுக்கம் வந்து எங்கள் குடிசை சேதமடைந்துவிடும் என அஞ்சி கடந்தாண்டு நாங்கள் வெளியே செல்லவில்லை. வீட்டை பாதுகாக்க இங்கேயே தங்கிவிட்டோம்,” என்று சகி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
2019, மார்ச்சில் நான் அவரைச் சந்தித்தபோது, அவரது ஆஸ்பெஸ்டாஸ் கூரை போடப்பட்ட செங்கல் குடிசையின் சுவர்கள் லேசான நிலஅதிர்வால் விரிசல் விட்டிருந்திருந்தது - 2018 நவம்பர் முதல் பல்காரின் தஹானு, தல்சாரி தாலுக்காகளில் 1000 முறைக்கு மேல் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அந்த மாதம் மிக வலுவாக 4.3 அளவு நிலநடுக்கம் தஹானுவை தாக்கியிருந்தது. எனவே ரண்டோபாடாவின் வார்லி குடும்பங்கள் 2019ஆம் ஆண்டு சூளைகளுக்கு வேலைக்குச் செல்லாமல் வீடுகளை பாதுகாக்க ஊரிலேயே தங்கிவிட்டனர்.
இந்தாண்டு பிப்ரவரி மாதம் சகியின் குடும்பம் சூளைக்கு வேலை தேடிச் சென்றது. ஆனால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் இரண்டு மாதங்களில் திரும்பிவிட்டனர். மார்ச் 27ஆம் தேதி விடிவதற்கு முன் கணேஷ்புரியிலிருந்து தங்களின் ஆடைகள், பாத்திரங்கள், 10 கிலோ அரிசி போன்றவற்றை தலைகளில் சுமந்தபடி அவர்கள் நடக்கத் தொடங்கினர். “சூளை உரிமையாளர் உலையை மூடிவிட்டார். நாங்கள் வேலைசெய்த ஏழு வாரங்களுக்கு மட்டும் அவர் பணம் கொடுத்தார். எங்களுக்கு இது போதாது. கடந்தாண்டும் பற்றாக்குறைதான். ரூ.20,000ஐ வைத்துக் கொண்டு ஆண்டு முழுவதும் என்ன செய்ய முடியும்?” என்கிறார் சகி. உரிமையாளர் ஏன் சூளையை விட்டு வெளியேறச் சொன்னார் எனத் தெரியுமா என்று அவரிடம் கேட்டால்? “ஏதோ வைரஸ், என்று அவர் சொன்னார். மக்கள் ஒருவருக்கு ஒருவர் இடைவெளியுடன் இருக்க வேண்டுமாம்.”
பயிர்களை மழைக்கால அறுவடை செய்துவிட்டு ஆண்டுதோறும் பழங்குடியின விவசாய கூலித்தொழிலாளர்கள் நவம்பர் மாதம் புலம்பெயரத் தொடங்குவார்கள். மழைக்காலம் வரும் வரை செங்கல் சூளைகளுக்குச் செல்வார்கள்
பால்கரின் விக்ரம்கட் தாலுக்காவைச் சேர்ந்த 48 வயதாகும் பாலா வாக் மற்றும் அவரது கட்கரி சமூகத்தினர், 2019, ஆகஸ்டில் பெருமழையால் சேதமடைந்த தங்களின் வீடுகளை மீண்டும் கட்டிவிடலாம் என்று நம்பியிருந்தனர். வைதர்னா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கிராமத்தின் பல வீடுகளை சேதப்படுத்தியிருந்தது. வெள்ளத்திற்கு பிறகு 36 வயதாகும் பாலாவின் மனைவி கெளரி, அவர்களின் மூன்று பதின்பருவ மகள்கள், ஒன்பது வயது மகன் என ஆறு பேர் கொண்ட குடும்பம் - சேதமடைந்த வீட்டின் மேல் பிளாஸ்டிக் தார்பாய் போட்டு வசிக்கத் தொடங்கினர்.
சேதமடைந்த வீட்டை சீரமைக்கும் நம்பிக்கையில் அவர்கள் ஷஹாபூர் தாலுக்கா அருகே உள்ள தெம்பரி கிராம செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்றனர். “மார்ச் 11ஆம் தேதி சென்றுவிட்டு மார்ச் 25ஆம் தேதி திரும்பிவிட்டோம்,” என்று என்னிடம் அவர் தொலைபேசியில் தெரிவித்தார். இரண்டு வாரங்களில் அவர்கள் சம்பாதித்த ரூ.5000ஐ எடுத்துக் கொண்டு 58 கிலோமீட்டர் நடந்தே வந்துள்ளனர்.
“இப்போது எல்லாம் முடிந்துவிட்டது,” என்று குடும்ப கவலை, நம்பிக்கையின்மையுடன் சொல்கிறார் பாலா. “ஆஷா பணியாளர் [அங்கீகரிக்கப்பட்ட சமூக நலப் பணியாளர்] வந்து எங்களை சோப்பு கொண்டு கை கழுவுமாறும், இடைவெளியை கடைபிடிக்குமாறும் கூறினார். எங்கள் குடும்பத்திற்கு முறையாக வீடே கிடையாது. நாங்கள் இதற்கெல்லாம் எங்கே போவது? இதற்கு நாங்கள் இறந்தே போகலாம்.”
கோவிட்-19 நிவாரணத்தின் ஒரு பகுதியாக, பிரதம மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் நேரடி நிதி அளிக்கப்படும் என்று மார்ச் 26ஆம் தேதி நிதியமைச்சர் அறிவித்த செய்தி பாலாவிற்கு கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. “இதுபற்றி எங்கள் கிராமத்தில் சிலர் சொன்னார்கள்,” என்றார். “எனக்கு வங்கி கணக்கே கிடையாது. எனக்குப் பணம் கிடைக்குமா?”
தமிழில்: சவிதா