அந்தப் பானை மேற்கூரையின் கீழே தொங்க விடப்பட்டுள்ளது.
அந்தப் பானையில் மூலிகைச் செடியோ, சமயக் கட்டுரைகளோ அல்லது அரிசியோ இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். திறந்த முற்றத்தில் தோசை சுடும் அந்த இளம் பெண்ணான ராஜம்கிரி அதைப் பற்றி என்னிடம் சொல்லுவார் என்று நம்புகிறேன். ஆனால் அவரது மாமனாரான ஜி. சித்தையாவின் முன்னால் அந்தப் பெண் மிகவும் மரியாதையுடன் அமைதியாக இருக்கிறார்.
ராஜம், தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தின் அழகிய பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஊசிமலை கிராமத்தில் வசிக்கிறார். அவர் மேய்ப்பர் இனத்தை சேர்ந்த பெண். அவர்கள் அழகான சிவப்பு மற்றும் வெள்ளை பர்கூர் மாடுகளை வளர்கின்றனர் - அந்த மலையின் பெயரைக் கொண்டு பெயரிடப்பட்ட மாடுகள் - இவை தமிழ்நாட்டின் ஐந்து பூர்வீக மாட்டினங்களில் ஒன்று. தினமும் காலையில் ஆண்கள் மாடுகளை மேய்ச்சலுக்காக காடுகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். நான் தற்போது பர்கூரிலிருந்து நாட்டு மாட்டு இனங்களை பற்றிய கட்டுரை ஒன்றை எழுதுவதற்காக வந்துள்ளேன். நான் ராஜத்தை சந்தித்தபோது பெண்களும் குழந்தைகளும் வயதான ஆண்களுமே வீட்டில் இருந்தனர்.
மேலும் அந்தப் பானை மேற்கூரையின் கீழே தொங்கிக்கொண்டிருந்தது.சித்தையாவும், கெஞ்சனும் ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்தனர். சித்தையா, அவருக்கு 50 வயது என்கிறார் உடனே அதை மறுத்து அவரது நண்பர் கெஞ்சனோ முத்தையாவுக்கு 60 வயது 50 இல்லை என்கிறார். பொதுவாக வயது கணக்கிடப்படுவது எப்படி என்பது பற்றியெல்லாம் வயதானவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் அவர்கள் இருவருமே 60 வயதுகாரர்கள் போன்றே தோற்றம் அளித்தனர். அவர்கள் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அடையாளமாக தங்கள் கழுத்தில் ஒரு வெள்ளி லிங்க டாலரை அணிந்திருந்தார்கள். பர்கூரில் இருக்கும் லிங்காயத்துகள் அனைவரும் கால்நடை வளர்ப்பவர்கள், இருந்த போதிலும் அவர்கள் பாலை பருகுவதில்லை. இவர்கள் அனைவரும் சைவ உணவு உண்பவர்கள். "பால் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்படும்" என்கிறார் பர்கூர் மலை மாடு வளர்ப்பவர்களின் சங்கத்தின் தலைவரான சிவசேனாபதி, இவரே எங்களை ஊசிமலைக்கு அழைத்துச் சென்றவர்.
கலாச்சாரத்தை முறையாக பின்பற்றுபவரான ராஜத்தின் மாமனார் வெளியாட்களுக்கு ஒருபோதும் திங்கட்கிழமைகளில் உணவு பரிமாறப் படுவதில்லை என்கிறார். அவர்களுடைய வீட்டுக்குள் நுழைவதற்கு எனக்கு எந்த நாளும் அனுமதி வழங்கப்படமாட்டாது. ஏனெனில் என்னுடைய இருப்பு அவர்களை மாசுபடுத்துவதாக கருதுகின்றனர்.
விறகு அடுப்பு முற்றத்தில் இருப்பதால் நான் அதிர்ஷ்டசாலி என்கிறார் அவர். அதனால் எனக்கு தேவையான டீயை நானே போட்டுக் கொள்ளலாம் என்கிறார். இந்த அடுப்பு மிகவும் எளிமையாக மூன்று கற்களை வைத்து முக்கோணம் போல அமைத்து நடுவே விறகை வைத்து மேலே பாத்திரத்தை வைக்கின்றனர். ராஜம் இரும்பு ஊதுகுழல் மூலம் ஊதி கரியில் தீ வைத்து மூட்டுகிறார். அந்த கரியில் தீ பற்றிக் கொண்டு எரிகிறது. அந்த அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கும் பொழுது அவர் தேயிலையையும், தேவையான சீனியையும் இடுகிறார், சுவையான வரடீ (கருப்பு டீ) தயார்.
ராஜத்தின் வீட்டில் எல்லாமே பழைய பாணியில் உள்ளது. மண்சுவரில் சிவப்பு மற்றும் நீல நிறம் பூசப்பட்டிருக்கிறது. இளம் கன்றுகளுக்காகவே ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. முற்றத்தில் உள்ள விறகு அடுப்பிற்கு அருகில் தோசை மாவு அரைப்பதற்கு தேவையான உரலும், கூடை முடைவதற்குத் தேவையான மூங்கில் குச்சிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.மேலும் அங்கு ஒரு பானை மேற்கூரையின் கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது.
அதைப்பற்றி நான் ராஜத்திடம் கேட்டபொழுது அவர் சிரித்துக்கொண்டே வீட்டின் உள்ளே சென்று ஏதோ இசை அமைப்பான்களின் சுவிட்சை போட்டுவிடுகிறார்.
அந்த பானைக்குள் இருப்பதுதான் ஒலிபெருக்கி என்கிறார். இசைக்காக இருக்கிறது அந்த பானை.
தமிழ் திரைப்பட பாடல் ஒன்று இசைக்கப்படுகிறது, அந்த ஒலிப்பெருக்கி மண் பானைக்குள் இருப்பதால் பாடல் பன்மடங்காக எதிரொலிக்கிறது.
சிறு குழந்தைகளின் கூட்டம் என்னை சுற்றி வந்தது நான் கேட்கும் கேள்விகளில் சிலவற்றுக்கு அவர்கள் பதில் அளித்தனர். அவர்களுள் ஒருவர் ராஜத்தின் மகள் போன்றவள், அவள் என்னிடம் அவரது சித்தப்பாவே(ராஜத்தின் மைத்துனர்) இந்த ஒலிபெருக்கியை அந்த பானைக்குள் வைத்தார் என்கிறார்.
“உனக்கு ஆட பிடிக்குமா?” என்று நான் அவளை கேட்கிறேன். ஆம் என்று தலையசைத்து உடனே வெட்கம் கொள்கிறாள். அவள் அவளுடைய பெயரை கூட சொல்ல விரும்பவில்லை, விருப்ப பாடலையும் சொல்லவில்லை.
ராஜம் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். விறகு எடுத்து வருவதற்காக கொல்லைப்புறத்தக்கு செல்கிறார். நான் அவரை பின் தொடர்கிறேன். தனிமையில், அவர் நான் ஆச்சரியப்படும் வகையில் நன்றாகவே பேசுகிறார். அவர் தனது வாடிக்கையான வாழ்க்கையைப் பற்றி கூறுகிறார் காலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை எவ்வாறு கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது என்பது பற்றியும், விறகு எடுப்பதற்காக செல்ல வேண்டியது பற்றியும், மாவரைக்க வேண்டியதைப் பற்றியும், வீட்டிலேயே குழந்தை பெற்றதை பற்றியும், மருத்துவமனையில் பெற்ற குழந்தையைைப் பற்றியும் கூறினார். "எனக்கு இரண்டுமே பெண் குழந்தைகள், ஒருத்தி பெயர் லலிதா, இன்னொருத்தி பெயர் ஜோதிகா."
இது ராஜம் என்னிடம் கேள்விகள் கேட்கும் முறை, உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள்? நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? உங்கள் தாலி எங்கே என்று கேட்டார்? நான் தங்கம் அணிவது இல்லை என்று சொன்னேன். "என்னுடையதை பாருங்கள்"! என்று தனது இடது கைப் பெருவிரலால் தன்னுடைய தாலிக்கயிற்றை எடுத்து காண்பித்தார். அதில் தங்கத்தாலான தாலியும் சிவப்பு மற்றும் கருப்பு நிற மணிகளும் கோர்க்கப்பட்டு, நான்கு ஊக்குகளையும் அதில் மாட்டி வைத்திருந்தார். நான் புகைப்படம் எடுக்கையில், "நீங்கள் தங்கம் வச்சிருக்கீங்க, ஆனால் போட மாட்டீங்களா?" என்று கேட்டார் ராஜம். அழகிய பர்கூர் மலையில் வீட்டின் கொல்லைப்புறத்தில் சிரித்து மகிழ்ந்து இருக்கிறார் ராஜம்.
தமிழில்: சோனியா போஸ்