“கரோனா வைரஸ் குறித்த கணக்கெடுப்பு நடத்துவதற்கு, தினமும் குறைந்தது 25 வீடுகளுக்கு மாதத்திற்கு குறைந்தது நான்கு முறை ஒவ்வொரு வீட்டிற்கும் செல்ல வேண்டும்“ என்கிறார் சுனிதா ராணி. இவர் 10 நாட்களுக்கும் மேலாக இப்பணியில் ஈடுபட்டுள்ளார். அதேவேளையில் ஹரியாணாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 180க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 14ஆம் தேதி வரை இரண்டு பேர் இறந்துள்ளனர் என்கிறது மாநில சுகாதாரத் துறை.
“இந்நோயை கண்டு மக்கள் அஞ்சுகின்றனர். தொட்டால் பரவிவிடும் என பலரும் நினைக்கின்றனர். ஊடகங்களில் சொல்லப்படும் ’சமூக விலகல்’ குறித்த தகவல்களை தொடர்ந்து பேசுகின்றனர். அப்படியிருந்தும் அவர்களுக்கு கரோனா வைரஸ் குறித்தும், அதற்காக ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து எப்படி விலகி இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு விளக்குகிறேன். ஆனால், அவர்கள் இதை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை.” என்று சொல்லும் சுனிதா, ”ஏழு பேர் வசிக்க கூடிய 10 அடிக்கு 10 அடி உள்ள வீட்டில் அவர்களால் எப்படி விலகி இருக்க முடியும்“ என்கிறார்.
ஹரியாணாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள நாதுபூர் கிராமத்தில் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளராக (ஆஷா) இருக்கிறார், 39 வயதாகும் சுனிதா. இந்தியாவின் கிராமப்புற மக்களிடம் பொது சுகாதார நலன் குறித்து எடுத்துச் செல்லும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்களில் சுனிதாவும் ஒருவர். பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது, கருவுற்ற மகளிரின் நலன் பேணுதல், குடும்பக் கட்டுப்பாடு குறித்து அறிவுரை வழங்குதல் எனப் பல்வேறு பணிகளையும் கோவிட்-19 தொற்று தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. கோவிட்-19 பொதுநல மற்றும் சமூக நல நெருக்கடியை பெருமளவில் ஏற்படுத்தியுள்ளது.
கோவிட்-19 முதல் தொற்று மார்ச் 17ஆம் தேதி ஹரியாணாவின் குருகிராமில் கண்டறியப்பட்டது. இந்நோய் பற்றி சோனிபட்டில் உள்ள ஆஷா பணியாளர்களுக்கு கண்காணிப்பாளரிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. நான்கு நாட்களில் சோனிபட்டில் முதல் தொற்று உறுதியானது. கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பாதுகாப்பு விதிமுறைகள், எதைப் பின்பற்றுவது என்பன போன்ற எந்த வழிகாட்டுதலும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. சார்ஸ்-CoV-2 எனும் ஆபத்தான வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயிற்சி சுனிதா உள்ளிட்ட 1,270 ஆஷா பணியாளர்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி அளிக்கப்பட்டது. அதேசமயத்தில் தான் நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது அப்போதுதான் மாநிலத்தின் முதல் கோவிட்-19 இறப்பும் பதிவு செய்யப்பட்டது.
சுனிதாவின் கண்காணிப்பில் தோராயமாக 1000 பேர் கிராமத்தில் உள்ளனர். அவரது கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதியில் கோவிட்-19 தொற்று ஏற்படக் கூடிய ஆபத்துள்ள புற்றுநோய், டிபி அல்லது இதய நோயாளிகள், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், ஒவ்வொரு வீட்டின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் வயது போன்றவற்றையும் விரிவாக சேகரித்து பதிவு செய்ய வேண்டும். இது அவருக்கு கூடுதலான புதிய பொறுப்பு. “கரோனா அறிகுறிகளான காய்ச்சல் போன்றவை இருக்கிறதா என்பதை நான் கண்டறிய வேண்டும். எனக்கு இதெல்லாம் கஷ்டமான வேலை கிடையாது. விரிவான பதிவேட்டை தயாரிப்பது எனக்கு பழக்கமான வேலைதான். ஆனால் சூழல்தான் முற்றிலும் வேறாக உள்ளது“ என்கிறார் சுனிதா.
”எங்களுக்கு என்று முகக்கவசம் எதுவும் வழங்கப்படவில்லை. கரோனா வைரஸ் குறித்து எங்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதிதான் முதல் பயிற்சி கொடுத்தார்கள். செய்தித்தாள் படிக்கிறோம், அடிப்படை கல்வியை பெற்றுள்ளோம் . நாங்கள் பாதுகாப்பு கருவிகள் குறித்து கேட்டோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு முகக்கவசம், கை சுத்திகரிப்பான், கையுறை என எதையும் கொடுக்கவில்லை. களத்தில் நாங்கள் இறங்கிய பிறகு சில ஆஷா பணியாளர்களுக்கு பருத்தி முகக்கவசம் அளிக்கப்பட்டது. மற்றவர்கள் வீட்டிலேயே முகக்கவசம் செய்து கொள்கிறோம். கிராமத்தில் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் அவற்றை கொடுக்கிறோம். நாங்கள் எல்லோருமே சொந்தமாக கையுறை கொண்டு வந்துள்ளோம்” என்கிறார் சுனிதா.
எவ்வித பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்றாமல் ஆஷா பணியாளர்களை வீடு வீடாக அனுப்பி கோவிட்-19 குறித்து கண்டறிய சொல்வது என்பது அரசின் அலட்சிய போக்கையே காட்டுகிறது. கரோனா தொற்று ஏற்படும் ஆபத்துள்ளவர்களைக் கண்டறிவது, சாதாரண காய்ச்சலுக்கும் புதிய நோயின் அறிகுறிகளுக்கும் இடையேயான வேறுபாட்டை கண்டறிவது எப்படி போன்ற பயிற்சி ஆஷா பணியாளர்களுக்கு ஒரே ஒருமுறை அதுவும் இரண்டு மணி நேரம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. அவசர கதியில் போதிய பயிற்சி இல்லாமல் ஆஷா பணியாளர்களை அனுப்புகின்றனர். கோவிட்-19 நோய் இருந்தும் அறிகுறி இல்லாதவர்கள் அல்லது நோயாளிகளை அடையாளம் காண்பது எப்படி என்பன போன்ற அடிப்படை விவரங்கள்கூட அவர்களுக்கு சொல்லப்படவில்லை.
சோனிபட்டில் உள்ள பஹல்கர் கிராமத்தைச் சேர்ந்த 39 வயதாகும் ஆஷா பணியாளர் சவி காஷ்யப்பிற்கும் முகக்கவசம் கிடைக்கவில்லை. அவர் தனக்கென தனியாக ஒன்றை தயார் செய்துள்ளார். “சில நாட்களுக்கு முன் என் வீட்டிலேயே முகக்கவசம் தயார் செய்தன். ஆனால் அது போதிய இறுக்கத்துடன் இல்லை. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் கணவர் மருத்துவமனையில் வேலை செய்கிறார். பாதுகாப்பிற்காக துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிக் கொள்கிறேன்“ என்கிறார் சவி காஷ்யப். ஹரியானாவின் ஆஷா சங்க வாட்ஸ் அப் குழுவில் துப்பட்டாவை கொண்டு எப்படி முகத்தை மூடி பாதுகாப்பது என்பதை விளக்கும் காணொளி ஒன்று பிரபலமாக உள்ளது.
பாதுகாப்பு உபகரணங்கள் கோரி ஆஷா சங்கத்தின் சார்பில் ஹரியாணா அரசுக்கு இரண்டு கடிதம் அனுப்பப்பட்டது. 10 முகக்கவசம் அளிப்பதாக அரசு கூறிய நிலையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய 7 முதல் 9 முகக் கவசங்கள், பெரிய பாட்டிலில் கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை சிலருக்கு மட்டும் அனுப்பியுள்ளது. அதுவும் அவர்கள் களப்பணியைத் தொடங்கிய ஆறு நாட்களுக்கு பிறகு.
புதிய நோய்க்கும், காய்ச்சலுக்கும் உள்ள வேறுபாடு பயிற்சி, இரண்டு மணி நேரத்திற்கு, மட்டும் அளிக்கப்பட்டுள்ளது
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஒன்பது முகக் கவசங்கள் சவிக்கு கிடைத்தன. ஒவ்வொன்றையும் மூன்று முறையாவது பயன்படுத்துமாறு அவரிடம் கூறியுள்ளனர். “எவ்வித பாதுகாப்புமின்றி எங்களை எப்படி நோய்த்தொற்றை எதிர்கொள்ள வைக்கின்றனர்? முகக் கவசம் அணியாமல் வெளியே செல்லக் கூடாது என அரசு சொல்கிறது. எங்களிடம் அவை இல்லை. முகக் கவசம் இல்லாமல் வெளியே சென்றால் மக்கள் எங்களை திட்டுகின்றனர்“ என்கிறார் சவி. சிவப்பு நிறத்தில் வைத்துள்ள துப்பட்டாவை மீண்டும் முகக் கவசமாக பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கொதிக்கும் நீரில் அவற்றை இருமுறை அலசுவதாக தெரிவிக்கிறார்.
யாருக்கேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் இதுபற்றி விரிவாக சம்பந்தப்பட்ட துணை சுகாதாரப் பணியாளரிடம் தெரிவிக்க வேண்டும். பிறகு அருகில் உள்ள அரசு மருத்துவமனையிலிருந்து சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் வருகை தந்து வீட்டில் தனிமைப்படுத்துவதா, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதா என்பதை முடிவு செய்வார்கள். “அவர்கள் பற்றி புகார் கூறிவிட்டதாக ஒட்டுமொத்த குடும்பத்தினரும் எங்களை திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டுச் சுவற்றில் ஒட்டப்படும் அறிவிப்பை அவர்கள் அகற்றி விடுகின்றனர். நாங்கள் அதையும் தொடர்ந்து கண்காணித்து, அவர்களுடன் பேச வேண்டும்“ என்கிறார் சுனிதா.
தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் அவருக்கு இருக்கிறது. ஆஷா பணியாளர், சங்கத் தலைவர் என்ற பொறுப்புகளோடு மாதந்தோறும் குறைந்தது 15 பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகள் கொடுப்பது போன்ற பணிகளையும் அவர் செய்து வந்துள்ளார். “ஊரடங்கு காரணமாக இப்போது எந்த கருத்தடை சாதனங்களும் வரவில்லை” என்று சொல்லும் அவர், “ஆணுறைகளும் தீர்ந்துவிட்டது. கடந்த சில மாதங்களாக நாங்கள் செய்து வந்த அனைத்து முயற்சிகளும் இந்த ஊரடங்கு காரணமாக வீணாய் போனது. இந்த ஊரடங்கிற்கு பிறகு எதிர்பாராத கர்ப்பம் அதிகரிக்கும்” என்று கூறுகிறார்.
“முன்பெல்லாம் ஆண்கள் வேலைக்கு வெளியே சென்றுவிடுவார்கள். சிறிய ஜன்னல் வழியாக பெண்கள் எங்களிடம் உரையாடுவார்கள். இப்போது எல்லா ஆண்களும் வீட்டில் உள்ளனர். நாங்கள் கரோனா கணக்கெடுப்பிற்கு சென்று கேள்வி கேட்டால் அவர்கள் அடையாள அட்டையை காட்ட சொல்கின்றனர். அரசு எங்களை அங்கீகரிக்கவில்லை, பணியையும் முறைப்படுத்தவில்லை. அவர்களைப் பொறுத்தவரை நாங்கள் தன்னார்வலர்கள்தான். இதை காரணம் காட்டி பல ஆண்கள் எங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை” என்கிறார் சுனிதா.
களப்பணிக்கு செல்லும்போது எங்களை நம்பும் சில பெண்கள் பேச முன்வருவார்கள். “அவர்களில் ஒருவர் என்னிடம் கருத்தடை மாத்திரை உள்ளதா என கேட்டார் [கணவர் வீட்டிலேயே இருப்பதால் மாத்திரைக்கான தேவை அதிகரித்துள்ளது]. என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. அதற்குள் அப்பெண்ணின் கணவர் வெளியே வந்து என்னை போகச் சொல்லிவிட்டார்.”
தலைவலி, உடல் வலி, காய்ச்சல், கருத்தடை போன்றவற்றிற்கான அடிப்படை மருந்துகள் தேவையின் அடிப்படையில் ஆஷா அமைப்பிற்கு வழங்கப்பட வேண்டும். இப்போது இந்த மருந்துகள் எதுவும் கையிருப்பில் இல்லை. “ஊரடங்கு நேரத்தில் மக்கள் ஒருபோதும் மருத்துவமனைக்கு அல்லது மருந்து கடைகளுக்குச் செல்ல மாட்டார்கள். அவர்களது வீட்டிற்கு செல்லும்போது காய்ச்சலுக்கு மருந்து கேட்டால் என்னிடம் பாராசிடமால்கூட கையிருப்பு இல்லை. நன்கு ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வந்துவிடுவேன். கர்ப்பிணி பெண்களுக்கு இரும்பு, கால்சியம் மாத்திரைகள் கிடைப்பதில்லை. பலரும் இரத்த சோகை உள்ளவர்கள். இதனால் பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படலாம்“ என்கிறார் சுனிதா.
சவி பல பிரச்னைகளை சந்தித்துள்ளார். அவரது கவனிப்பில் உள்ள 23 வயது கர்ப்பிணி ஒருவருக்கு ஏப்ரல் 5ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அப்பெண்ணின் பிரசவத்தை எளிமையாக்குவதும் அவரது பொறுப்பு. “அருகில் உள்ள பொது மருத்துவமனை 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவசரம் என்பதால் எங்களை காவல்துறையினர் அனுமதித்துவிடுவார்கள். ஆனால் நான் திரும்ப தனியாக வரும்போது, காவல்துறையினரிடம் மாட்டிக் கொள்ள வேண்டும். என்னிடம் அடையாள அட்டை என அவர்கள் கேட்கும் எதுவும் கிடையாது“ என்கிறார் சவி. அப்பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய சவி முயன்றார். ஆனால் யாரும் முன்வராத காரணத்தால் அப்பெண்ணின் கணவர் ஆட்டோ ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கோஹனா தாலுக்காவில் கடந்த மார்ச் 30ஆம் தேதி இரண்டு ஆஷா பணியாளர்களை காவல்துறையினர் அடித்துள்ளனர். தேசிய ஊரடங்கு நேரத்தில் சமூக சுகாதார மையக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதால் செல்வதாகவும் அவர் கூறியுள்ளனர்.
தலைவலி, உடல்வலி, காய்ச்சல், கருத்தடை போன்றவற்றிற்கான அடிப்படை மருந்து ஆஷா அமைப்பிடம் வழங்கப்பட வேண்டும்
கோவிட்-19 பரவலை தடுக்க போடப்பட்டுள்ள கடுமையான ஊரடங்கு உத்தரவால் சிசுக்களுக்கு கிடைத்து வந்த முறையான தடுப்பு மருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. எப்போது மீண்டும் தொடங்கும் என்பது தெரியவில்லை. கிராமப்புற கர்ப்பிணி பெண்கள் ஆஷா பணியாளர்களுடன் மருத்துவமனைக்கு சென்று வந்தனர். மருமகள், அக்கா என்றெல்லாம் ஆஷா பணியாளர்களை அழைத்து வந்த அவர்கள் இப்போது வீட்டிலேயே குழந்தைப் பெற்றுள்ளனர். “வழிகாட்டுதலின்றி இது தவறாக முடியலாம்“ என எச்சரிக்கிறார் சுனிதா.
கோவிட்டிற்கு முன்பு ஆஷா பணியாளர்களுக்கு ஹரியாணா அரசின் சார்பில் ரூ. 4,000 மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் ஐந்து அடிப்படைப் பணிகளுக்காக (மருத்துவமனையில் பிரசவம், குழந்தைகளுக்கான தடுப்பூசி, மருத்துவ பரிசோதனை செய்தல், வீட்டில் செய்யப்பட வேண்டிய மருத்துவ பரிசோதனை, குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு ) ரூ. 2,000 அளிக்கப்படும். கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்ய வைப்பது போன்ற பிற பணிகளுக்காக தனிப்பட்ட வகையில் உதவித்தொகை அளிக்கப்பட்டது.
“கரோனா வைரஸ், ஊரடங்கு காரணமாக எங்களது அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுவிட்டன. இந்த (கரோனா வைரஸ்) கணக்கெடுப்பு நடத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு தலா ரூ.1000 மட்டும் அளிக்கப்படுகிறது. மாதத்திற்கு ரூ. 2,500 வரை எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதற்கெல்லாம் மேல் எனக்கு 2019 அக்டோபர் மாதம் முதலே எந்த உதவித்தொகையும் அளிக்கப்படவில்லை. அந்த நிலுவைத் தொகையை எப்போது பெறுவேன்? எப்படி குடும்பத்தை நடத்தி, குழந்தைகளுக்கு உணவளிப்பேன்? “ என்கிறார் சுனிதா.
கோவிட்-19க்கு எதிராக களத்தில் உள்ள மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களின் ஊதியத்தை இரட்டிப்பாக்கி ஏப்ரல் 10ஆம் தேதி ஹரியாணா முதலமைச்சர் மனோஹர் லால் கத்தார் அறிவித்தார். ஆனால் ஆஷா பணியாளர்கள் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் உள்ளதால் அவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. “நாங்கள் எல்லாம் பணியாளர்கள் கிடையாதா?“ என்று கேட்கும் சுனிதா, “தொற்று ஏற்பட்டு வரும் இக்கட்டான சூழலில் அரசு எங்கள் வாழ்க்கையுடன் விளையாடுகிறது“ என்று சொல்லி எங்களுடன் உரையாடலை முடித்துக் கொண்டார். அவரது கணவர் முதன்முறையாக அரிசி சமைத்து கொண்டிருந்தார். அரிசியை தீய வைத்துவிட்டால் என்ன செய்வது, இரவு உணவு வீணாகிவிடுமே? என்ற கவலையில் சுனிதா சென்றார்.
தமிழில்: சவிதா