அஸ்தமனத்துக்காக அவர் காத்திருக்கவில்லை. ஓரறை சமையற்கட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த ரண்டாவனி சுர்வாசே திக்கற்ற திசையில் பார்த்துக் கொண்டிருந்தார். சூரியன் அஸ்தமித்து தெருவிளக்குகளும் எரியத் தொடங்கிவிட்டன. துயரப்புன்னகையுடன் அவர், “இந்த இடத்தில் அமர்ந்து கொண்டுதான் என் கணவர் கடவுளர் பாடல்களை பாடிக் கொண்டிருப்பார்,” என்கிறார்.
இந்து மத கடவுள் விதாலை புகழ்ந்து பாடுவதுதான் அவரின் கணவரான பிரபாகர் சுர்வாசேவுக்கு பிடித்த பொழுதுபோக்கு. மகாராஷ்டிராவின் போக்குவரத்து கழகத்தில் எழுத்தராக பணிபுரிந்து இரண்டு வருடங்களுக்கு முன்புதான் 60 வயதானபோது ஓய்வு பெற்றார். அப்போது தொடங்கி, பீட் மாவட்டத்தில் இருக்கும் பார்லி டவுனிலுள்ள வீட்டில் ஒவ்வொரு மாலையும் பிரபாகர் பாடி அண்டை வீட்டாருக்கு உற்சாகம் கொடுப்பார்.
ஏப்ரல் 9, 2021 அன்று கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள் அவரிடம் புலப்பட்டன.
இரண்டு நாட்கள் கழித்து, 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சுவாமி ராமானந்த் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பிரபாகர் சேர்க்கப்பட்டார். பத்து நாட்கள் கழித்து மூச்சு திணறி அவர் இறந்துபோனார்.
அவரின் மரணம் திடுமென நேர்ந்தது. “காலை 11.30 மணிக்கு அவருக்கு பிஸ்கட்டுகள் கொடுத்தேன்,” என்கிறார் அவரின் உறவினரான 36 வயது வைத்தியநாத் சுர்வாசே. “பழச்சாறு கூட அவர் கேட்டார். இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். நன்றாகதான் இருந்தார். பிற்பகல் 1.30 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக சொன்னார்கள்.”
இடைப்பட்ட நேரத்திலும் வைத்தியநாத் மருத்துவமனை வார்டில் இருந்திருக்கிறார். ஆக்சிஜன் அளவு பிற்பகலில் குறையத் தொடங்கியது என்கிறார் அவர். அதுவரை பேசிக் கொண்டிருந்த பிரபாகர் சுவாசிக்க திணறினார். “நான் மருத்துவர்களை அழைத்தேன். ஆனால் எவரும் பொருட்படுத்தவில்லை,” என்கிறார் வைத்தியநாத். “கொஞ்ச நேரம் மூச்சு திணறிய பிறகு அவர் இறந்து போனார். நான் நெஞ்சில் அழுத்தினேன். கால்களை தேய்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை.”
மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் பிரபாகர் இறந்துவிட்டார் என பிரபாகரின் குடும்பம் நம்புகிறது. “மருத்துவமனையில் சேர்த்தபிறகு அவரின் உடல்நிலை மோசமடையவில்லை. அவர் சரியாகிக் கொண்டிருந்தார். ஒருநாள் கூட நான் மருத்துவமனையை விட்டு வெளியேறவில்லை,” என்கிறார் 55 வயது ரண்டவானி. “அவர் இறப்பதற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் கூட மருத்துவமனை வார்டில் பாடுவதை பற்றி சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்.”
ஏப்ரல் 21ம் தேதி மருத்துவமனையில் பல மரணங்கள் நேர்ந்தன. பிற்பகல் 12.45 மணியிலிருந்து 2.15 மணிக்குள் ஆறு நோயாளிகள் இறந்தனர்.
அம்மரணங்கள் ஆக்சிஜன் குறைபாட்டால் நேர்ந்தன என்கிற கூற்றை மருத்துவமனை நிராகரித்தது. “அந்த நோயாளிகளின் நிலை ஏற்கனவே மோசமாக இருந்தது. மேலும் அவர்களில் பலர் 60 வயதுக்கு மேல் இருந்தனர்,” என்கிறார் ஊடக அறிக்கையில் மருத்துவக் கல்லூரியின் தலைவரான டாக்டர் சிவாஜி சுக்ரே.
”மருத்துவமனை நிச்சயமாக நிராகரிக்கும். ஆனால் அங்கு மரணங்கள் ஆக்சிஜன் குறைபாட்டால்தான் நேர்ந்தன,” என்கிறார் அபிஜீத் கதால். விவேக் சிந்து என்கிற மராத்தி நாளிதழில் ஏப்ரல் 23ம் தேதி இச்செய்தியை முதன்முதலாக எழுதிய மூத்த பத்திரிகையாளர் அவர். ”மருத்துவமனை நிர்வாகத்தின் மீது உறவினர்கள் கடும் கோபத்தில் அன்றைய தினம் இருந்தனர். உறவினர்கள் சொன்ன விஷயத்தை எங்களுக்கு தகவல் தந்தோரும் உறுதிபடுத்தினர்.”
ஆக்சிஜன் சிலிண்டர்களும் மருத்துவமனை படுக்கைகளும் கேட்கும் குரல்கள் கடந்த சில வாரங்களாக சமூகதளங்களை நிரப்பிக் கொண்டிருந்தன. இந்திய நகரங்களில் இருந்த மக்கள் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் உதவிகள் கேட்டனர். ஆனால் சமூகதள பயன்பாடு அதிகம் இல்லாத பகுதிகளில் ஆக்சிஜன் குறைபாடு பெரும் அச்சத்தை விளைவிப்பதாக இருந்தது.
மருத்துவமனையிலிருந்து பெயர் வெளியிட விரும்பாத ஒருவர், ஒவ்வொரு நாளும் ஆக்சிஜன் தேவையை எதிர்கொள்வது பெரும் போராட்டமாக இருக்கிறது என்றார். “ஒருநாளுக்கு 12 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எங்களுக்கு தேவை. ஆனால் 7 மட்டும்தான் (நிர்வாகத்திடமிருந்து) கிடைக்கிறது,” என்கிறார் அவர். “குறைபாட்டை எதிர்கொள்வது ஒவ்வொரு நாளும் பெரும் போராட்டம். அங்கும் இங்குமென நாங்கள் சிலிண்டர்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம்,” பீட் மாவட்டத்தில் கொடுப்பவர்களையும் தாண்டி, அருகேயுள்ள அவுரங்காபாத் மற்றும் லதூர் போன்ற நகரங்களிலிருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கப்பட்டன.
சுவாமி ராமானந்த் அரசு பல் மருத்துவக் கல்லூரி மாநில அரசால் கோவிட் மருத்துவமனை என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. மொத்தமாக 402 படுக்கைகள் இருக்கின்றன. அதில் 265 ஆக்சிஜன் படுக்கைகள். ஏப்ரல் மாத இறுதியில், பார்லியின் அனல் மின் நிலையத்தின் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை ஆக்சிஜன் குறைபாட்டை நீக்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. மருத்துவமனையில் தற்போது 96 வெண்டிலேட்டர்கள் இருக்கின்றன. அவற்றில் 25, PM Cares நிதியின் கீழ் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் கிடைத்தது.
25 வெண்டிலேட்டர்களும் குறைபாடாக இருந்தன. மே மாத முதல் வாரத்தில், இரண்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் அவற்றை சரிசெய்வதாக 460 கிலோமீட்டர் தொலைவிலிருந்து தன்னார்வத்தில் வந்தனர். சிறு குறைபாடுகளை கொண்ட 11 வெண்டிலேட்டர்களை அவர்களால் சரிசெய்ய முடிந்தது.
நோயாளிகளின் உறவினர்களுக்கு மருத்துவமனைக்கு இருந்த நெருக்கடி தெரிந்திருந்தது. “ஒவ்வொரு நாளும் உங்களின் கண் முன்னால் மருத்துவமனை ஆக்சிஜனுக்கென நொறுங்கிக் கொண்டிருக்கும்போது, பதட்டமாக இருப்பது இயல்புதான்,” என்கிறார் வைத்தியநாத். “ஆக்சிஜன் பற்றாகுறை இந்தியா முழுவதும் இருக்கும் பிரச்சினை. சமூகதளத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் எப்படி உதவி கொள்கின்றனர் என்பதை நான் பார்க்கிறேன். கிராமப்புற பகுதிகளில் அந்த வாய்ப்பு எங்களுக்கு இல்லை. நான் ஒரு பதிவு எழுதினால் யார் கவனிப்பார்கள்? மருத்துவமனையின் கருணையில்தான் நாங்கள் இருக்கிறோம். எங்கள் விஷயத்தில் நாங்கள் பயந்தது நடந்துவிட்டது.”
பிரபாகரின் இழப்பு ரண்டவானியாலும் அவர்களின் மகன், மருமகள் மற்றும் 10, 6, 4 வயதுகளில் இருக்கும் மூன்று பேத்திகள் ஆகியோராலும் ஆழமாக உணரப்பட்டிருக்கிறது. “அவர் இல்லாமல் குழந்தைகள் தவிக்கின்றன. அவர்களுக்கு என்ன சொல்வதென எனக்கு தெரியவில்லை,” என்கிறார் ரண்டவானி. “மருத்துவமனையில் அவர் பல முறை அவர்களை பற்றி என்னிடம் கேட்டிருக்கிறார். வீடு திரும்புவதற்காக அவர் காத்திருந்தார். இறந்துபோவார் என நான் நினைக்கவில்லை.”
வீட்டுப் பணியாளராக வேலை பார்த்து மாதந்தோறும் 2500 ரூபாய் வருமானம் ஈட்டும் ரண்டவானி வேலைக்கு திரும்ப விரும்புகிறார். “எனக்கு வேலை கொடுத்தவர்கள் இரக்கம் கொண்டவர்கள். வேலைக்கு திரும்ப வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை,” என்கிறார் அவர். “ஆனால் நான் சீக்கிரம் வேலைக்கு போகத் தொடங்கிவிடுவேன். அது என்னை இயக்கத்தில் வைத்திருக்கும்.”
மே 16ம் தேதி வரை, பீட் மாவட்டத்தில் 75500 கோவிட் பாதிப்புகளும் 1400 மரணங்களும் தொற்றால் பதிவாகியிருந்தன . அருகாமை ஒஸ்மனாபாத் மாவட்டம் 49700 பாதிப்புகளும் 1200 மரணங்களும் கண்டிருந்தது.
பீடும் ஒஸ்மானாபாத்தும் மராத்வடாவின் விவசாய நெருக்கடி நிறைந்த பகுதியில் இருக்கின்றன. மகாராஷ்டிராவின் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளின் தற்கொலைகள் அப்பகுதிகளில்தான் நேர்ந்தன. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இம்மாவட்டங்களிலிருந்து வேலை தேடி இடம்பெயர்ந்துவிட்டனர். குடிநீர் பஞ்சம் மற்றும் கடன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள், இப்போது ஒரு பெருந்தொற்றை குறைந்த வசதிகளுடனும் குறைபாடான சுகாதார கட்டமைப்புடனும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
90 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் ஒஸ்மனாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையின் சூழலில் பெரிய வேறுபாடு இல்லை. கோவிட் நோயாளிகளின் உறவினர்கள் சுட்டெரிக்கும் வெப்பத்தில் தங்களின் பதட்டங்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டு காத்திருக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் ஒருநாள் தேவையான 14 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜனை கொண்டு வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
கோவிட் 19-ன் முதல் அலை 2020ல் நெர்ந்தபோது 550 ஆக்சிஜன் படுக்கைகள் ஒஸ்மனாபாத்தில் தேவைப்பட்டது என்கிறார் மாவட்ட மாஜிஸ்திரேட்டான கவுஸ்துப் திவகாங்கர். இரண்டாம் அலை வருவது உறுதியானதும் மாவட்ட நிர்வாகம் அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்க தயாரானது.
பிப்ரவரி 2021-ல் தொடங்கிய இரண்டாம் அலை, இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. முதல் அலையில் மாவட்டத்துக்கு தேவைப்பட்ட படுக்கைகளை காட்டிலும் மும்மடங்கு அதிகமாக ஆக்சிஜன் படுக்கைகள் இந்த அலையில் தேவைப்பட்டது. தற்போது 944 ஆக்சிஜன் படுக்கைகளும் 254 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் 142 வெண்டிலேட்டர்களும் ஒஸ்மனாபாத்தில் இருக்கின்றன.
லதூர், பீட் மற்றும் ஜல்னா ஆகிய இடங்களிலிருந்து மருத்துவ ஆக்சிஜனை மாவட்ட நிர்வாகம் வாங்கிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவின் பல்லாரியிலிருந்தும் தெலெங்கானாவின் ஹைதராபாத்தில் இருந்தும் கூட ஆக்சிஜன் வரவழைக்கப்படுகிறது. மே மாதத்தின் இரண்டாம் வாரத்தில், குஜராத்தின் ஜாம் நகரிலிருந்து ஒஸ்மனாபாத்துக்கு விமானம் வழியாக ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. மே 14ம் தேதி நாட்டிலேயே முதன்முறையாக ஒஸ்மனாபாத்தின் சொராக்கலியில் இருக்கும் தாராஷிவ் சர்க்கரை ஆலையில் எத்தனாலிலிலிருந்து மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டது. ஒருநாளில் 20 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அது உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
மாவட்ட மருத்துவமனையின் 403 படுக்கைகளை 48 மருத்துவர்களும் 120 மருத்துவப் பணியாளர்களும் மூன்று வேலை நேரங்களில் பார்த்துக் கொள்கின்றனர். மருத்துவமனையின் அதிகாரிகளும் காவலர்களும், நோயாளிகளின் படுக்கை அருகே அமர விரும்புபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதை பார்க்க முடிகிறது. நோயாளிகளின் குடும்பத்தினர் காலியான படுக்கை கிடைக்குமா என அவ்வப்போது தேடுகிறார்கள்.
ருஷிகேஷ் கடேவின் 68 வயது தாய் ஜனாபாய் தனது இறுதி மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தபோது அவர் இறப்பதற்காக வராந்தாவில் ஒருவர் காத்துக் கொண்டிருந்தார். அவரின் உறவினர் ஒருவருக்கு படுக்கை தேவைப்பட்டது. “மூச்சு விட முடியாமல் அவர் போராடிக் கொண்டிருக்கும் போது, அந்த நபர் தொலைபேசியில் வேறொருவரை அழைத்து படுக்கை சீக்கிரமாக இங்கு காலியாகி விடும் என சொல்லிக் கொண்டிருந்தார்,” என்கிறார் 40 வயது ருஷிகேஷ். “அது மிகவும் அருவருப்பாக இருந்தது. ஆனாலும் அவரை நான் குற்றம் சொல்லவில்லை. இது ஒரு இக்கட்டான சூழல். அவரின் இடத்தில் இருந்திருந்தால் நானும் அதே விஷயத்தை செய்திருக்கலாம்.”
ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் குறைபாட்டால் அவரின் தந்தை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருநாள் கழித்து ஜனாபாய் அனுமதிக்கப்பட்டார். “எங்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு அதுதான்,” என்கிறார் ருஷிகேஷ்.
ருஷிகேஷ்ஷின் 70 வயது தந்தை சிவாஜி ஏப்ரல் 6ம் தேதி கோவிட் தொற்றால் உடல்நலம் குன்றினார். அடுத்த நாளே ஜனாபாய்க்கும் அறிகுறி தென்பட்டது. “என் தந்தையின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை நகரத்தில் இருக்கும் சாகியாத்ரீ மருத்துவமனையில் சேர்த்தோம்,” என்கிறார் ருஷிகேஷ். “எங்களின் குடும்ப மருத்துவர் என் தாய் வீட்டிலேயே தனிமை சிகிச்சையில் இருக்கலாம் என்றார். அவரின் ஆக்சிஜன் அளவு நன்றாகதான் இருந்தது.”
ஏப்ரல் 11ம் தேதி காலையில், சாகியாத்ரீ தனியார் மருத்துவமனையை சேர்ந்த ஒரு மருத்துவர் ருஷிகேஷை தொடர்பு கொண்டு அவரின் தந்தை சிவாஜியை மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றுவதாக தெரிவித்தார். “அவர் வெண்டிலேட்டரில் இருந்தார்,” என்கிறார் ருஷிகேஷ். “மாவட்ட மருத்துவமனைக்கு அவரை மாற்றிய கணத்திலிருந்து அவருக்கு மூச்சு திணறல் அதிகமானது. இடமாற்றம் அவருக்கு நலிவை ஏற்படுத்தியிருந்தது,” என்கிறார் அவர். “திரும்பிச் செல்ல வேண்டுமென அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். தனியார் மருத்துவமனையில் சூழல் நன்றாக இருந்தது,” என்கிறார் அவர்.
மாவட்ட மருத்துவமனையில் இருந்த வெண்டிலேட்டரால் தேவைப்படும் அழுத்தத்தை தொடர்ந்து கொடுக்க முடியவில்லை. “ஏப்ரல் 12ம் தேதி இரவு முழுவதும் அவரின் ஆக்சிஜன் கவசத்தை பிடித்தபடி இருந்தேன். ஏனென்றால் அது விழுந்து கொண்டிருந்தது. ஆனால் அவரின் நிலைமை மோசமடைந்தது. அடுத்த நாள் அவர் உயிரிழந்துவிட்டார்,” என்கிறார் ருஷிகேஷ். சிவாஜியுடன் தனியார் மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்ட நான்கு நோயாளிகளும் இறந்தனர்.
ஏப்ரல் 12ம் தேதி ஜனாபாய் மூச்சுத்திணறலின் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஏப்ரல் 15ம் தேதி அவர் இறந்தார். 48 மணி நேரங்களில் ருஷிகேஷ் அவரது பெற்றோரை இழந்தார். “அவர்கள் ஆரோக்கியமாக இருந்தனர்,” என்கிறார் அவர் குரல் நடுங்கியபடி. “அவர்கள் கடுமையாக உழைத்து எல்லா கடினமான சூழல்களையும் சந்தித்து எங்களை வளர்த்து ஆளாக்கினார்கள்.”
ஒஸ்மனாபாத்திலுள்ள வீட்டின் முகப்பு அறையில் ஒரு பெரிய குடும்ப புகைப்படம் மாட்டப்பட்டிருக்கிறது. ருஷிகேஷ், அவரின் அண்ணனான 42 வயது மகேஷ் மற்றும் அவர்களின் மனைவிகள், குழந்தைகள் அனைவரும் சிவாஜி மற்றும் ஜனாபாய் ஆகியோருடன் ஒன்றாக வாழ்ந்திருந்தனர். கூட்டு குடும்பத்துக்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் நகரத்துக்கு வெளியே இருக்கிறது. “அவர்களின் மரணம் எதிர்பாராதது,” என்கிறார் ருஷிகேஷ். “ஒருவர் ஆரோக்கியமாக இருந்து உங்களுக்கு முன்னால் தினமும் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பவராக இருந்து திடீரென மறைந்துபோனால், அவர்களின் இழப்பை அத்தனை சுலபத்தில் ஏற்க முடியாது.”
பார்லியிலுள்ள வீட்டுக்கு வெளியே இருக்கும் ரண்டவானியும் கணவரின் இழப்பை ஏற்க முயன்று கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மாலையும் பிரபாகர் பாட்டு பாடிய அந்த இடத்தில் அவர் இப்போது இல்லாமலிருப்பதை ஏற்க அவர் போராடிக் கொண்டிருக்கிறார். “அவரை போல் நான் பாட முடியாது,” என்கிறார் அவர் புன்னகையுடன். “பாட முடிந்தால் நன்றாக இருக்கும்.”
தமிழில் : ராஜசங்கீதன்