“இங்கு நடக்கும் போராட்டத்தால் நிறுவன மக்கள் கண்டிப்பாக எரிச்சலடைந்திருப்பார்கள். போக்குவரத்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வணிகமும் குறைவாகவே நடைபெறுகிறது,” என்கிறார் குண்ட்லி தொழிற்துறை பகுதியில் உள்ள வீட்டு உபயோக தயாரிப்பு ஆலையின் பாதுகாப்பு கண்காணிப்பாளரான 22 வயது நிசாமுதீன் அலி. ஹரியானா- டெல்லி எல்லையான சிங்குவில் விவசாயிகளின் போராட்டக் களத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அவர் வசிக்கிறார். (குண்ட்லி எனும் பழங்கால கிராமம், இப்போது ஹரியானாவின் சோனிபட் மாவட்ட நகராட்சி கவுன்சிலாக உள்ளது).
இடையூறுகளால் இரண்டு மாதங்களாக நிசாமுதீனுக்கு அவரது நிறுவனம் ஊதியம் வழங்காத போதிலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவைத் தொடர்கிறார். “ஆலை இப்போது சந்திக்கும் பிரச்னையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இதனால் எனது சம்பளம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நான் விவசாயிகளை ஆதரிக்கிறேன்,” என்கிறார் அவர். அவருடைய ஆதரவும் சமநிலையில் இல்லை - “என் ஆலையை 20 சதவீதம் ஆதரித்தால், விவசாயிகளின் போராட்டத்தை 80 சதவீதம் ஆதரிப்பேன்.”
பீகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து சில ஆண்டுகளுக்கு முன் குண்ட்லிக்கு வந்த நிசாமுதீனுக்கு அங்கு 6.5 பிகாஸ் நிலம் (பீகாரில் சுமார் 4 ஏக்கர் நிலம்) உள்ளது. அவரது குடும்பம் கோதுமை, அரிசி, துவரை, கடுகு, பாசிப்பயறு, புகையிலை ஆகியவற்றை பயிரிட்டு வருகிறது. “விவசாயிகள்தான் வாழ்வாதாரத்திற்காக பயிர்களை வளர்க்கின்றனர், அரசோ, அம்பானியோ, அதானியோ அல்ல. இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் வலியை நான் அறிவேன். இந்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், நமக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதுகூட நின்றுவிடும். பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவும் தொடராது,” என்கிறார் அவர்.
“பீகாரில் கோதுமைக்கு கிலோ ரூ.25 வழங்கப்படும் என்று [சில ஆண்டுகளுக்கு முன்] சொல்லப்பட்டது. பீகாரில் [பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ்] ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் அவர்களின் கணக்கில் ரூ.2000 அளிக்கப்பட்டது. பிறகு கிலோ 25 ரூபாய் என்பது 7 ரூபாய் என குறைந்தது. நாங்கள் முன்னேற நினைக்கிறோம். அரசு எங்களை பின்னோக்கி தள்ளுகிறது.”
போராட்டக்காரர்களுடன் உள்ளூர் மக்கள் கோபத்துடன் மோதலில் ஈடுபடுவதாக ஊடகங்களில் சில நாட்களாக செய்திகள் வந்த நிலையில், போராட்டக் குழுவில் இடம்பெறாத நிசாமுதீன் அலி போன்ற சிங்கு பகுதியினரின் ஆதரவு வேறு மாதிரியான பிம்பத்தை தருகிறது.
போராட்டக் களத்திற்கு அருகே சிங்கு எல்லையிலிருந்து 3.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புது குண்ட்லியில் தள்ளுவண்டியில் சிகரெட், தேநீர் விற்கிறார் 45 வயதாகும் மகாதேவ் தாரக். போராட்டம் தொடங்கியது முதல் அவரது அன்றாட வருமானம் சரிந்துவிட்டது. “ஒரு நாளுக்கு 500 முதல் 600 ரூபாய்வரை கிடைக்கும்,” என்கிறார் அவர். “ஆனால் இப்போதெல்லாம் அதில் பாதிதான் கிடைக்கிறது.” அவரது பகுதியில் போராடும் விவசாயிகளுக்கு எதிராக ‘உள்ளூர்வாசிகள்’ சிலர் அண்மையில் குரல் எழுப்பினர். எல்லைகளை திறக்கவும் அவர்கள் கோரினர்.
ஆனால் மகாதேவ் விவசாயிகளை இப்போதும் ஆதரிக்கிறார்.
“சில நாட்களுக்கு முன் விவசாயிகளுடன் மோதலில் ஈடுபட்ட ‘உள்ளூர் மக்கள்’ இப்பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என வலுவாக நம்புகிறேன்,” என்கிறார் அவர். “இங்கு விவசாயிகள் இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. இப்பகுதியில் உள்ள அனைத்து கடைக்காரர்களும் விவசாயிகளை ஆதரிக்கவே செய்கின்றனர். இப்போராட்டம் நடுத்தர மக்களுக்கு பலனளிக்கும். இந்த எளிய உண்மையைக் கூட சிலர் புரிந்துகொள்ளவில்லை.”
மகாதேவின் கடைக்கு அருகே சிறிய கடை நடத்தும் பெண்மணி ஒருவர் கருத்துக் கூற மறுத்துவிட்டார். “நான் ஒரு முஸ்லிம், என் பெயரை சொல்ல விரும்பவில்லை, விவசாயிகளின் போராட்டம் குறித்தும் நான் பேச விரும்பவில்லை,” என முகத்தை மூடியபடி அவர் சொல்கிறார். பிறகு அங்கு வந்த விவசாய வாடிக்கையாளர்களிடம் இன்முகத்துடன் குளிர்பானங்கள், சிப்ஸ், சிகரெட்டுகளை விற்கிறார்.
சிங்கு எல்லை தொடங்கும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பெட்ரோல் பம்பில் 46 வயதாகும ராம்தாரி ஷர்மா வேலை செய்கிறார். முன்பு தினமும் 6-7 லட்சம் என இருந்த வருமானம் இப்போது 1 லட்சம் ரூபாய் என சரிந்துவிட்டது. எல்லையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹரியானாவின் சோனிபட் மாவட்டம் ஜதிகாலன் கிராமத்திலிருந்து பணிக்காக ராம்தாரி தினமும் வந்து செல்கிறார். அவரது குடும்பத்திற்கு அக்கிராமத்தில் 15 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் அவரது சகோதரர் கோதுமை, அரிசி, மக்காசோளம் பயிரிட்டு வருகிறார்.
“சந்தையில் கிடைக்கும் எந்த பொருளிலும் எம்ஆர்பி (அதிகபட்ச சில்லறை விலை) என ஒன்று உள்ளது,” எனும் அவர், “எங்களுக்கு அப்படி எதுவுமில்லை. நாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலையைத் தீர்மானிக்கும் உரிமை எங்களுக்கு வேண்டும். நாங்கள் பயிரிடும்போது அவற்றின் உற்பத்தியை நாங்களே விற்க மட்டும் ஏன் அனுமதி மறுக்கின்றனர்? ஒரு லிட்டர் குடிநீர் [புட்டியில்] 40 ரூபாய்க்கு விற்கிறது. சிறிய நிலத்தில் விவசாயம் செய்வதற்குக்கூட ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. எங்கிருந்து பணம் வரும்? வெள்ளம் ஏற்படுகிறது. சில சமயம் வறட்சி ஏற்பட்டு பயிர்கள் சேதமடைகிறது. கடவுள்தான் எங்களை காக்க வேண்டும். அவரே எங்களை காக்கிறார். ஆனால் சிலர் நடுவில் வந்து தொந்தரவு செய்கின்றனர்.”
விவசாயத்தில் தனது குடும்பம் கடினமாக உழைப்பதை உணர்ந்துள்ள ராம்தாரி, விவசாயிகளின் போராட்டத்தை இப்போது மட்டுமின்றி நாட்டின் சிறப்பான எதிர்காலத்திற்காகவும் ஆதரிப்பதாக தெரிவிக்கிறார். “இந்தியாவில் பகத் சிங் தூக்கிலிடப்பட்டார். அப்போது தனது நாட்டு மக்களையும் சுதந்திர இந்தியாவின் சிறப்பான எதிர்காலத்தையும் அவர் எண்ணியிருந்தார். என் வாழ்க்கை முடிந்துபோகும், ஆனால் நம் எதிர்கால தலைமுறைகளின் வாழ்க்கை பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதனால்தான் நான் போராட்டத்தை ஆதரிக்கிறேன்,” என்கிறார் அவர்.
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.
பெருமுதலாளிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்பதாலும், விவசாயிகள், விவசாயத்தின் மீது அதிகளவு அதிகாரத்தை அவர்கள் செலுத்த வழிவகுக்கும் என்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என விவசாயிகள் இந்த புதிய சட்டங்களை எதிர்க்கின்றனர். இந்திய சட்டப்பிரிவு 32ன்கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் சட்டரீதியான உதவி கோரும் உரிமையை முடக்குவதால் இச்சட்டங்கள் விமர்சிக்கப்படுகின்றன.
“அவர்கள் விவசாயிகள்,” என்கிறார் சிங்கு எல்லையிலிருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெருவில் விவசாயிகள் போராட்டம் தொடர்புடைய சின்னங்கள், கொடிகள், ஸ்டிக்கர்களை விற்கும் 52 வயது ரீட்டா அரோரா. “இக்கடுங்குளிரிலும் அவர்கள் திறந்த வெளியில் அமர்ந்து போராடி வருகின்றனர். தேர்தலுக்கு முன் வாக்கு கேட்கும் அரசு நல்லது செய்வதாக வாக்குறுதி அளிக்கிறது. ஆனால் அவர்கள் அதிகாரத்திற்கு வந்துவிட்டால்? இம்மக்களுக்கு மூன்று சட்டங்களை விதித்து அரசு எத்தகைய ஆபத்தை விளைவித்துள்ளது பாருங்கள். விவசாயிகளிடம்தான் நாம் உணவுப் பெறுகிறோம். அவர்களை புறந்தள்ளுவது என்பது சாத்தியமற்றது.”
புதுடெல்லியின் இந்தியா கேட் அருகே ரீட்டா சிறிய கடை நடத்தி வந்தார். அதில் குளிர்பானங்கள், சிப்ஸ், சிகரெட் போன்றவற்றை விற்று வந்தார். பெருந்தொற்று காலத்தில் அவரது தொழில் முற்றிலுமாக முடங்கியது. பெரும் பொருளாதார இழப்பு தாங்காமல் வருவாய் ஈட்ட அவர் சிங்கு வர முடிவு செய்தார். “தொடக்கத்தில் [போராட்டத்தின்] நான் ஷூக்கள் விற்றேன்,” எனும் அவர், “சட்டங்கள் பற்றியும், விவசாயிகள் ஏன் போராடுகிறார் என்பது பற்றியும் எனக்குத் தெரியாது. பிறகு மக்களிடம் பேசி சட்டங்கள் குறித்து புரிந்துகொண்டேன். அரசு செய்யும் எதுவும் தவறு என்பதை உணர்ந்தேன்.”
அவர் இப்போது அதிகம் ஈட்டாவிட்டாலும், இங்கிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார். “ஒரு நாளுக்கு என் வருமானம் 200-250 ரூபாய் இருக்கும். இதற்காக நான் கவலைப்படவில்லை,” என்கிறார் அவர். “இப்போராட்டத்தில் அங்கம் வகிப்பதை நான் மகிழ்வாக கருதுகிறேன். வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அரசிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.”
சிங்குவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெருவில் காலுறைகள் விற்கிறார் தீபக். எல்லையில் தற்காலிக கடைகளை அமைப்பதற்காக அவர் தினமும் ஆட்டோவில் பயணிக்கிறார். குண்ட்லி நகராட்சி கவுன்சில் பகுதியில் தனக்கு சொந்தமான சிறிதளவு நிலத்தில் அவர் முட்டைகோஸ் விளைவிக்கிறார். “போராட்டம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. என் வருவாய் வெகுவாக குறைந்துவிட்டது. போராட்டத்திற்கு முன்பு நான் தினமும் 500-600 ரூபாய் ஈட்டுவேன், இப்போது ஒரு நாளுக்கு வெறும் 200-250 ரூபாய் தான் கிடைக்கிறது. இதனால் நான் விவசாயிகளை ஆதரிக்க மாட்டேன் என நினைக்காதீர்கள். அவர்களின் பிரச்னை என்னுடையதைவிட பெரியது,” என்கிறார் 35 வயதாகும் தீபக்.
சிங்கு எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் 45 வயது கணவர் ராஜேந்தர் பிரஜாபதியுடன் 40 வயது குஷ்மிலா தேவி தள்ளுவண்டியில் தேநீர் விற்கிறார். புதுடெல்லியில் உள்ள நரேலாவிலிருந்து தினமும் ஆறு கிலோமீட்டருக்கு அவர்கள் பயணிக்கின்றனர். தொடர் போராட்டத்தால் அவர்களின் வருவாய் சரிவதையும் காண்கிறார். “நாங்கள் வழக்கமாக மாதம் 10,000 ரூபாய் வரை ஈட்டி வந்தோம். இப்போது அது 4000-6000 ரூபாய் என சரிந்துவிட்டது. மேலும் டெல்லியிலிருந்து சிங்கு வரும் பாதையில் ஜனவரி 26ஆம் தேதி முதல் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் தொந்தரவு அதிகமாகிவிட்டது. இருப்பினும் நாங்கள் விவசாயிகளை ஆதரிக்கிறோம், ” என்கின்றனர் அத்தம்பதியினர்.
“முதலில் அவர்கள் [அரசு] பணமதிப்பு நீக்கம் செய்தனர்,” என்கிறார் குஷ்மிலா. “பிறகு ஜிஎஸ்டி, பெருந்தொற்றுடன் ஊரடங்கு விதித்தனர், நாங்கள் தொடர்ச்சியாக பல மாதங்கள் பாதிக்கப்பட்டோம். ஆனால் அனைத்து பொருட்களின் விலை மட்டும் உயர்ந்து வருகிறது. விவசாயிகள்தான் நமக்கு உணவளிக்கின்றனர். அவர்களே நம் இருப்பின் ஆதாரம். அவர்களை நாமின்றி வேறு யார் ஆதரிப்பார்கள்?”
தமிழில்: சவிதா