விடுதலை! விடுதலை! ஒரு நூறு கோடி அழுக்கு விலங்குகள் அரண்மனையின் அருகில் காத்திருந்தன. அந்த விலங்குகள் ஒற்றுமையாக ஆகாயத்தையே அசைத்ததை அவர் வெறுத்தார். விடுதலை! விடுதலை! அந்த மிருகங்கள் கண்ணியமான வாழ்க்கை வாழத் துணிந்ததை அவர் வெறுத்தார். விடுதலை! விடுதலை! அந்த பூச்சிகள் ஒற்றுமையின் இருண்ட கலைகளில் தேர்ச்சி பெறும் உண்மையை அவர் வெறுத்தார். விடுதலை! விடுதலை! மண்ணையும் வியர்வையையும் கம்பீரமான நாற்றுகளாக மாற்ற அந்த பூச்சிகளுக்கு எவ்வளவு துணிச்சல் ? என்ன வித்தை இது? என்ன பைத்தியக்காரத்தனம் இது? விடுதலை! விடுதலை! புத்தியில்லாத புழுக்களுக்கு தங்கள் உழைப்புக்கு ஈடாக பணத்தை கோருவதற்கு என்ன தைரியம்?
பொங்கி எழும் விலங்குகளை அவர் மீண்டும் அதன் கூண்டுகளில் வைக்க வேண்டும். மேகங்களின் கோபுரத்தில் வாழும் புன்னகை பிரபு, கடவுளின் சக்கரவர்த்திக்கு நன்றி. எங்கோ இருந்து புதுமையான நோய் ஒன்று தோன்ற அந்த வணிகத்தில் அவரின் பணப்பெட்டி நிரம்பி வழிந்தது. அது மந்தையை குறைத்தது. விடுதலை! விடுதலை! நிலத்திலிருந்து கிளம்பும் நாற்றத்துக்கான ஒரே மருந்தான அமுதத்தை அவர் கைகளில் உறுதியாக வைத்திருந்தார். அப்பூச்சிகள் இந்த அமுதத்தை இலவசமாகக் கோருவது எவ்வளவு அபத்தமானது?
ஏக்கத்துடன் அவரின் புதிய அரண்மனையின் கோபுரங்களை ஜன்னல் வழியாக அவர் பார்க்க இரவு அவரது ராஜ்யத்தை கவ்வியது. விடுதலை! விடுதலை! அழியட்டும் அந்த குரல்கள், மண்ணை மரகத பச்சையாக்கும் அவ்விரல்கள் அழியட்டும். அமைதி! ஜன்னல் அருகே ஏதோ சலசலத்தது. இலைகளுக்கு நகங்களையும் பூக்களுக்கு கருஞ்சிவப்பு பிணங்களையும் கொண்ட ஒரு விசித்திரமான கொடி படர்ந்து மேலே ஊர்ந்து வந்தது.
துருத்திய அரை ஜன்னல் வெளியில் இரண்டு நிலாக்கள் எழும்பின. ஒன்று வெளியேற்றப்பட்ட எங்கள் ரம்ஜான் பிறை. மற்றொன்று ட்ராக்டரின் தனிச் சக்கரம்.
வெளியேற்றப்பட்ட எங்கள் ரம்ஜான் பிறை
அவள் கண்கள்
அவள் கண்கள்
தூக்குமேடையின் பெருமூச்சு போல
அல்லது ஒரு இனிமையான நிலவில் நனைந்த டார்விஷ் போல.
ஒரு விவசாயியை போல் எரி
ஒரு தேனியை போல் சுவாசி
மல்பெரி மரத்தில் ஜொலிக்கும்
கோடையை போல் ஆடு
அவமானத்தை எவ்வாறு உச்சரிப்பாய்?
ஒரு பெருமூச்சுடனா?
அல்லது ஒரு தொழிலாளியின் கண்களில் இருக்கும் தோட்டாவினாலா?
நிலா ஒரு தஸ்தாக்
நிலா ஒரு கருமையான துணி
நிலா ஒரு புட்டியில் இருக்கும் நீல ஃபோலிடால்
ஒரு வைசாக்கியின் மழை போல்
அவள் வலி
அவள் வலி
அவளின் கலப்பை கடலுக்கான பாலம்
என அறியாமல்
எப்போதும் ஒரு புத்தரின் மணலின் அடியில்
தாகம் கொண்ட ஒரு குண்டூசியால்
பீங்கான் மேகங்களை உடைத்துவிட முடியும்
மரணம் ஒரு நர்கிஸ்
மரணம் ஒரு காலணி
மரணம் ஒரு சுரங்க தொழிலாளியின் எரிசர்க்கரை நீலம்
இதயத்திற்கு நான்கு அறைகள் உண்டு
பசிக்கு ஒன்றும் இல்லை.
ஒன்று லோஹ்ரிக்கு, மூன்று துப்பாக்கிக்கு.
அவமானம் என்பது ஒரு பாடும் பறவை
அவமானம் என்பது ஒரு தானியம்
அவமானம் என்பது சாத்வின் ஆகாயத்தின் ஒரு பிறை
எங்கள் ஜன்னல் அடிக்கட்டையில் இளம் ஊதா.
அவை கொட்டும் அவை மூழ்கும்
அவை கனவுகாணும்
எங்கள் அந்தியொளியின் குழந்தைகள்
அலங்கார மரத்துண்டில் மறையும் ஒரு ஃபீனிக்ஸ் ஆகும் வரை
**********
சொற்களஞ்சியம்:
சாத்வின்:
சந்திர
கட்டத்தின் 14 வது நாள், பொதுவாக மதரீதியான விரதத்தால் குறிக்கப்படுகிறது
(முக்கியமாக இந்து சமூகத்தின் பெண்களால்)
டார்விஷ்:
ஒரு சூஃபி
பிச்சைக்காரன்
தஸ்தாக்:
கதவை தட்டுதல்
ஃபோலிடால்:
ஒரு
பூச்சிக்கொல்லி
லோஹ்ரி:
குளிர்கால
சங்கிராந்தி கடந்துவிட்டதைக் குறிக்கும் பஞ்சாபி பண்டிகை.
மினார்:
மினாரெட், ஒரு மெல்லிய கோபுரம்
நர்கிஸ்: narcissus
poeticus
எனும் மலர் அல்லது ஒரு
கவிஞரின் மஞ்சள் மலர்
வைசாக்கி:
முக்கியமாக
பஞ்சாபிலும், வடக்கின் வேறு சில பகுதிகளிலும் கொண்டாப்படும் வசந்தகால
அறுவடை விழா
இந்த குழு முயற்சிக்கு ஸ்மிதா கட்டோரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக எங்கள் நன்றிகள்.
தமிழில்: கவிதா கஜேந்திரன்