கொம்பு வாசித்துக் கொண்டிருக்கும்போதே இறந்துவிட வேண்டும் என்பதுதான் எம்.கருப்பையாவின் ஆசை. காற்று வாத்தியமான கொம்பு வாத்தியம் என்பது வரலாற்றில் போர்க்களங்களில் யுத்தம் அறிவிக்க ஊதப்படும் வாத்தியம் ஆகும். இறந்துபோவதற்கான வாத்தியம் என்று கூட சொல்லலாம். யானையின் துதிக்கை போன்ற தோற்றத்துடன் பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்படும் இந்த வாத்தியத்தை கைவிட கருப்பையா விரும்புவதற்கு அது காரணம் அல்ல.
49 வயது கருப்பையாவை பொறுத்தவரை கொம்பு வாசித்தல் என்பது அற்புதமான கலை வடிவம். நான்காம் தலைமுறை வாத்தியக் கலைஞர் அவர். மதுரையிலுள்ள அவரது கிராமத்தில் பிழைப்புக்காக வேறு வழியின்றி ஓட்டும் ஆட்டோ வேலையை காட்டிலும் அவருக்கு அதிகம் பிடித்தமானது கொம்பு வாசிக்கும் வேலைதான்.
முப்பது வருடங்களுக்கு முன் வரை, இந்த கலை உச்சத்தில் இருந்தது என்கிறார் கருப்பையா. 1991ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு கொம்பு வாத்தியம் வாசித்த அனுபவத்தை நினைவுகூர்கிறார் அவர். “அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்களை திரும்பவும் வாசிக்க சொன்னார்!”
ஆனால் இந்த நாட்களில் அவருக்கும் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அவரின் ஊரான மேலகுயில்குடியை சேர்ந்த பிற கொம்பு கலைஞர்களுக்கும் அவ்வளவாக வேலை கிடைப்பதில்லை. ஏற்கனவே இக்கலை வடிவம் தொய்வடைந்து ’பாப்’ இசை அதன் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் சூழலில் மார்ச் 2020ல் தொடங்கிய கோவிட் ஊரடங்கினால் இன்னும் அதிகமாக அக்கலை பாதிக்கப்பட்டிருக்கிறது. கலைஞர்களுக்கு வேலையில்லை. வருமானமுமில்லை.
கோவில்கள், பொது நிகழ்வுகள், இறுதி அஞ்சலிகள் முதலியவற்றில் வேலை கிடைத்தால், ஒரு வேலைக்கு கருப்பையா 700-லிருந்து 1000 வரை வருமானம் ஈட்டுவார். “கடந்த வருடத்திலிருந்து ஊரடங்கு காரணமாக அழகர் கோவில் திருவிழாவில் நாங்கள் வாசிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் எட்டு நாட்கள் வரை எங்களுக்கு வேலை கிடைக்கும்.” கொம்பு கலைஞர்கள் வாசிக்கும் ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையிலிருந்து 20 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் அழகர்கோவிலில் கூடுவார்கள்.
“எல்லாரும் கொம்பு வாசிக்க முடியாது. அதற்கு அதிக திறமை வேண்டும்,” என்கிறார் நாட்டுப்புற கலைஞர்களையும் கலைகளையும் ஆதரிக்கும் சென்னையை சேர்ந்த ‘மாற்று ஊடக மையத்’தின் நிறுவனரான ஆர்.காளீஸ்வரன். நிகழ்வு தொடங்கும்போதும் பிறகு நடுவேயும் வாத்தியம் வாசிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக வாசிக்கப்படுவதில்லை. கலைஞர்கள் 15 நிமிடங்களுக்கு வாசிப்பார்கள். ஐந்து நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒரு 15 நிமிடங்களுக்கு வாசிப்பார்கள். “வாத்தியத்தை வாசிக்கும் கலைஞர் மூச்சை நன்றாக உள்வாங்கிவிட்டு கொம்பு வாத்தியத்துக்குள் ஊதுவார்.” அதிக மூச்சை உள்ளிழுத்து விடும் அவர்களின் பயிற்சியின் காரணமாக பல கலைஞர்கள் 100 வயதாகியும் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக காளீஸ்வரன் குறிப்பிடுகிறார்.
65 வயது கே.பெரியசாமி, மேலகுயில்குடியில் இருக்கும் கொம்பு கலைக்குழுவின் தலைவராக இருக்கிறார். கொம்பு வாசிப்பதை தவிர்த்து அவருக்கு எதுவும் தெரியாது. பலருக்கு அவர் கற்றுக் கொடுத்திருக்கிறார். தற்போது வாத்தியம் வாசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் 30லிருந்து 65 வரையிலான வயதுக்குட்பட்ட ஆண்கள். “எங்களால் வேறு வேலை பார்க்க முடிவதில்லை. எங்களிடம் தரம் குறைந்த அரிசி மட்டும்தான் இருக்கிறது. எப்படி நாங்கள் உயிர்வாழ்வது?” என்கிறார் பெரியசாமி.
அவர் வீட்டிலிருந்த எஃகு குடம், வெண்கல அரிசி பாத்திரம், மனைவியின் தாலி முதலிய விலைமதிப்பான பொருட்கள் யாவும் அடகு வைக்கப்பட்டுவிட்டன. “நீரெடுக்க ப்ளாஸ்டிக் குடங்கள் மட்டும்தான் எங்களிடம் இருக்கின்றன,” என்கிறார் பெரியசாமி பெருமூச்சு விட்டபடி. ஆனால் அவருடைய கவலைகள் கலை வடிவத்தை பற்றிதான் இருக்கின்றன. அந்த கலைக்காகவும் கலைஞர்களுக்காகவும் அரசு ஏதேனும் செய்யுமா? இல்லையெனில், கொம்பு வாத்தியம் வாசித்தல் அவருடன் முடிந்துவிடுமா?
மேலகுயில்குடியின் 20 கொம்பு வாத்திய கலைஞர்களிடம் 15 வாத்தியங்கள் இருக்கின்றன. 40 வருடங்களாக அந்த வாத்தியங்கள் அச்சமூகத்திடம் இருக்கிறது. பரம்பரை உடைமையாக வந்து சேர்ந்த பழைய கொம்பு வாத்தியங்கள் பல ஒட்டுகள் ஒட்டப்பட்டு ஒன்றாக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. நெருக்கடியான காலங்களில் கலைஞர்கள் அவர்களின் கொம்பு வாத்தியத்தை அடகு வைக்கின்றனர். அல்லது விற்கின்றனர். புதிய வாத்தியங்கள் விலை உயர்ந்தவை. 20000 ரூபாயிலிருந்து 25000 ரூபாய் வரை ஆகிறது. அவையும் 250 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் கும்பகோணத்திலேயே கிடைக்கின்றன.
30 வயதுகளில் இருக்கும் பி.மகராஜன் மற்றும் ஜி.பால்பாண்டி ஆகியோர் 10 வயதாகும் முன்னமே கொம்பு வாசிக்கத் தொட்ங்கிவிட்டனர். இருவரும் கலையுடன் சேர்ந்து வளர்ந்தனர். அவர்களின் வருமானமும் வளர்ந்தது. “10 வயதில் வாத்தியம் வாசித்ததற்கு 50 ரூபாய் கிடைத்தது. மிகவும் சந்தோஷமாக இருந்தது. இப்போது 700 ரூபாய் கிடைக்கிறது,” என்கிறார் மகராஜன்.
கொத்தனார் வேலை பார்த்து பால்பாண்டி 700 ரூபாய் நாட்கூலியாக பெறுகிறார். நிலையான வருமானம், உறுதியான வேலை. ஆனால் அவர் விரும்புவதென்னவோ கொம்பு வாசிக்கும் வேலையைத்தான். கொம்பு வாசிக்க அவர் தாத்தாவிடம் கற்றுக் கொண்டார். “தாத்தா உயிரோடு இருக்கும்போது, இந்த கலை எவ்வளவு முக்கியம் என்பதை நான் உணரவில்லை,” என்கிறார் அவர். ஊரடங்கு அவருக்கு இரட்டை பாதிப்பை கொடுத்திருக்கிறது. கட்டுமான வேலையும் இல்லை. கொம்பு வாசிக்கும் வேலையும் இல்லை. “உதவிக்காக நான் காத்திருக்கிறேன்,” என்கிறார் அவர்.
“காளீஸ்வரன் அய்யாவிடமிருந்து உதவி வந்தது,” என்கிறார் கருப்பையா. மே மாதத்தில் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, காளீஸ்வரனின் மாற்று ஊடக மையம் ஒவ்வொரு கலைஞரின் குடும்பத்துக்கும் பத்து கிலோ அரிசி கொடுத்தது. நான்கு மகள்களும் ஒரு மகனும் கொண்ட கருப்பையாவின் குடும்பம் பெரியது. ஆனாலும் சமாளித்துக் கொள்வதாக அவர் கூறுகிறார். “நிலத்தில் விளைவதை கொஞ்சம் நாங்கள் உண்டு கொள்ள முடியும். கத்திரிக்காய்கள் அல்லது வெங்காயங்கள் போன்றவை. ஆனால் நகரங்களில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்?”
இக்கட்டுரையை செய்தியாளருடன் ஒருங்கிணைந்து அபர்ணா கார்த்திகேயன் எழுதியிருக்கிறார்
தமிழில் : ராஜசங்கீதன்