"நான் குற்றம் செய்ததற்காக சிறையில் இல்லை. என் நிலத்திற்காக போராடியதற்காக சிறையில் இருந்தேன். அப்போதும் நான் சிறைக்கு பயப்படவில்லை, இப்போதும் நான் சிறைக்கு பயப்படவில்லை", என்று கூறுகிறார் ராஜ்குமாரி பூயா.
ராஜ்குமாரிக்கு சுமார் 55 வயது இருக்கும். உத்திரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த துமா கிராமத்தில் உள்ள பூயா ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு கன்ஹார் நீர்பாசன திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக அவர் நான்கு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார். துதி வட்டத்திலுள்ள கன்ஹார் ஆற்றில் அணை கட்டுவதற்கு எதிராக ஆர்வலர்களும் மற்றும் உள்ளூர் சமூகங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இடப்பெயர்வு மற்றும் அந்த அணை அவர்களின் நீராதாரத்தை மாசுபடுத்தும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
செய்தி அறிக்கைகளின்படி அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த போராட்டங்களின் போது காவல்துறையினர் கூட்டத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தவிர மக்களை கைது செய்யவும் துவங்கினர். ராஜ்குமாரி (மேலே உள்ள அட்டைப் படத்தில் இடம் இருந்து இரண்டாவது இருப்பவர்) சில நாட்களுக்குப் பிறகு அழைத்துச் செல்லப்பட்டு, துமாவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிர்சாபூரில் உள்ள மாவட்ட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சுகலோ கோண்டு, ராஜ்குமாரியைப் போலவே - அகில இந்திய வன உழைப்பாளர் சங்கத்தில் (AIUFWP) உறுப்பினராக இருக்கிறார். அவர்கள் இருவருமே கன்ஹார் போராட்டத்திலும் கலந்து கொண்டனர். "நான் கன்ஹாரில் பிறந்தவள், அம்மக்களுக்கு நான் என்னுடைய ஆதரவை அளிக்க விரும்பினேன். அங்கு காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய போது நான் அங்கு இல்லை (ஏப்ரல் 14 2015 அன்று காலை 10 மணி அளவில் சுமார் இரண்டு மணி நேரம் நடந்தது). அதன் பிறகு தான் அங்கு சென்றேன். ஆனால் அதற்குள் அது வன்முறைக் களமாக மாறியிருந்தது, எனவே நாங்கள் அனைவரும் வெளியேறி வெவ்வேறு திசைகளில் சென்றோம். ராஜ்குமாரி தனியாகச் சென்றார். நான் என்னுடைய வழியில் சென்றேன்", என்று கூறுகிறார் சுகலோ. (இந்த கதைக்கான நேர்காணல் முடிந்த பின்பு சுகலோ மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் மேலும் காண்க: https://cjp.org.in/sonebhadras-daughter-sukalo/)
"நான் பல வாரங்களாக வெளியில் தங்கி இருந்தேன்", என்று சுகலோ (மேலே உள்ள அட்டைப் படத்தில் வலது புறத்திலிருந்து இரண்டாவது இருப்பவர்) கூறித் தொடர்ந்தார். எங்கள் வலிகளை புரிந்து கொள்ளும் ஆதிவாசி குடும்பமான எனது தொலைதூர உறவினர் ஒருவர் வீட்டிற்கு நான் 5 மணி நேரம் நடந்து சென்றேன். அங்கு இரண்டு இரவுகள் தங்கியிருந்தேன். பின்னர் அடுத்த வீட்டிற்குச் சென்றேன், அங்கு மேலும் 10 நாட்கள் தங்கியிருந்தேன், அதன் பின்னர் அடுத்த வீட்டிற்குச் சென்றேன்” என்று கூறினார்.








