மார்ச் 21ஆம் தேதி சனிக்கிழமை காலை நகரத்தில் பல கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், சந்தைகள் வெறிச்சோடி இருந்தாலும், வீதிகள் அமைதியாக இருந்தாலும், அனிதா கோடாலைப் பொருத்தவரை அது அவருக்கு ஒரு வழக்கமான வேலை நாளாகவே இருந்தது. கோவிட் 19 பரவுவதைத் தடுக்க அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் அன்றைய தினம் மும்பையில் உள்ள பலர் தங்கள் வீடுகளிலேயே அடைந்து கிடந்தனர்.
ஆனால் அனிதா அந்த அமைதியான தெருக்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார், சேறு போன்ற குப்பைகளாக இருந்த சாக்கடை நீரை கழுவிக் கொண்டிருந்தார். அந்த அசுத்தமான நீர் அவரது கால்களிலும் தெரித்தது. "எங்களைப் பொறுத்தவரை எல்லா நாளுமே ஆபத்தானது தான். இந்த கொரோனா காரணமாக மட்டுமல்ல, பல தலைமுறைகளாக இப்படித்தான் எங்களுக்கு இருக்கிறது", என்று அவர் கூறினார்.
காலை ஒன்பது மணி அளவில் கிழக்கு மும்பையின் செம்பூரில் உள்ள மகுல் கிராமத்தில் எம் மேற்கு வார்டில் தெருக்களையும் நடைபாதைகளையும் தூய்மைப்படுத்தும் பணியில் இரண்டு மணி நேரம் ஈடுபட்டிருந்தார்.
இந்த மோசமான சூழலில் அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது? "இந்த முகக் கவசங்கள் எங்களுக்கு நேற்று தான் வழங்கப்பட்டன (மார்ச் மாதம் 20ஆம் தேதி) அதுவும் இந்த வைரஸின் காரணமாக நாங்கள் போராடி பெற வேண்டியிருந்தது", என்று கூறினார். அவரது இடுப்பில் சேலையுடன் சேர்த்து இந்த முக கவசமும் சொருகப்பட்டிருந்தது. மேலும் 35 வயதாகும் அனிதா தனது பாதுகாப்பிற்காக கழுத்தைச் சுற்றி ஸ்கார்ப் அணிந்திருந்தார். இந்த முகக் கவசங்கள் மெல்லியதாக இருக்கிறது மேலும் இதை மறுபடியும் பயன்படுத்த முடியாது (ஏற்கனவே இரண்டு நாட்கள் பயன்படுத்தி ஆகிவிட்டது) என்று அவர் கூறினார். கையுறையோ அல்லது கால்களுக்கு தேவையான பாதுகாப்பு அணிகளோ எதுவும் அவரது பணியில் அவர் கேள்விபடாதவை.
அனிதா மாதங் சமூகத்தைச் சேர்ந்தவர், இச்சமூகம் மஹாராஷ்டிராவில் பட்டியல் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது மேலும் இவரது குடும்பம் பல தலைமுறைகளாக தூய்மை பணியில் தான் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் கூறுகிறார். "எனது தாத்தா மும்பையில் திறந்த வெளியில் இருந்து மனித கழிவுகளை அகற்றி தலையில் சுமந்து கொண்டு செல்வார் என்று அவர் கூறினார். எந்த தலைமுறையாக இருந்தாலும் அல்லது எந்த ஆண்டாக இருந்தாலும், எங்கள் மக்கள் எப்போதும் மனிதர்களாக தங்கள் உரிமைகளை பெற போராட வேண்டி தான் இருக்கிறது", என்று அவர் கூறினார்.
விஷயங்களை இன்னும் மோசமாக்குவதற்கு அனிதா வசிக்கும் மற்றும் பணிபுரியும் பகுதியான மகுல் அருகில் உள்ள ரசாயன தொழிற்சாலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் காரணமாக காற்று மாசு அதிகரித்துள்ளது, காற்று நச்சாக மாறியுள்ளதாக கடந்த சில ஆண்டுகளாக செய்திகளில் வந்துள்ளது.
சேரி புனரமைப்பு ஆணையத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக வடகிழக்கு மும்பையில் உள்ள விக்ரோலி கிழக்கிலிருந்து 2017 ஆம் ஆண்டு அனிதாவும் அவரது குடும்பத்தினரும் இங்கு வந்து குடிபெயர்ந்தனர். அவர்கள் சுபாஷ் நகரில் உள்ள ஒரு அறை மற்றும் சமையலறை கொண்ட குடியிருப்பில் வசித்து வருகின்றனர். ஆறு முதல் ஏழு மாடிக் கட்டிடங்களைக் கொண்ட அந்த குடியிருப்பு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சாலையின் குறுக்கே 15 மீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 60,000க்கும் மேற்பட்ட மக்களுக்காக 17,205 குடியிருப்புகளை உள்ளடக்கிய 72 கட்டிடங்கள் இங்கு கட்டப்பட்டுள்ளன, இவை பெரும்பாலும் பல்வேறு திட்டத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் காலனியாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. நகரில் பல்வேறு திட்டங்களுக்காக இடம் பெயர்க்கப்பட்ட மக்கள் இங்கு குடியமர்த்தப் பட்டிருக்கின்றனர். பெரியதும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே இவர்கள் வசிப்பதால் சுவாசக் கோளாறு, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள், இருமல், கண் மற்றும் சரும எரிச்சல் போன்ற பிரச்சனைகளை இம்மக்கள் அதிகம் சந்தித்து வருகின்றனர்.
நீதிமன்றங்களில் நீண்ட கால போராட்டங்கள் மற்றும் மனுக்களுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாற்று மறுவாழ்வு கிடைக்கும் வரை குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வாடகையாக செலுத்துமாறு நகராட்சி நிறுவனத்திற்கு பம்பாய் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "ஆனால் கடந்த 4 மாதங்களில் பி. எம். சி எதுவுமே செய்யவில்லை என்று அனிதா கூறுகிறார். இந்த அசுத்தமான காற்று மற்றும் இரசாயனங்களின் வாடை காரணமாக சுவாசக் கோளாறு ஏற்பட்டு எனது ஆறு வயது மகன் ஷகீல் அடிக்கடி நோய்வாய்பட்டு வருகிறான். இதில் வைரசும் இங்கு வந்தால் நாங்கள் என்ன செய்வோம் என்று தெரியவில்லை", என்று கூறினார்.
அனிதா நாள் ஒன்றுக்கு ஒப்பந்த தொழிலாளர் என்ற முறையில் ரூபாய் 200 சம்பாதிக்கிறார், அவர் வேலை செய்ய முடியாத நாட்களில் அவருக்கு வருமானம் இருப்பதில்லை. மேலும் அவர் கடந்த மூன்று மாதங்களாக தனக்கான ஊதியத்தை பெறவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக அனிதா கிரேட்டர் மும்பை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறையில் பணியாற்றி வருகிறார் அந்த நிர்வாகத்தினர் தான் பணத்தை நிறுத்தி வைத்திருப்பதாக ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர் என்று அவர் கூறுகிறார்.
அவரது இரண்டு மகள்களும் மற்றும் இரண்டு மகன்களும் மகுலில்லுள்ள நகராட்சி பள்ளியில் படித்து வருகின்றனர். அவரது கணவர் 42 வயதாகும் நரேஷ் செம்பூரின் காலனி வீடுகளில் வீடு வீடாகச் சென்று பூண்டு விற்பனை செய்கிறார் மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஈடாகவும் அவர் பூண்டுகளை விற்பனை செய்கிறார். அவரது மாமியார் செம்பூரில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அதையும் பழைய பொருட்கள் கடையில் விற்பனை செய்து வருகின்றார்.
"நாங்கள் மூவரும் சேர்ந்து மாதம் ஒன்றுக்கு 5000 முதல் 6000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றோம்", என்று அனிதா கூறுகிறார். இந்தத் தொகையை வைத்து ஏழு நபர்கள் கொண்ட எங்களது குடும்பத்தை பராமரிப்பது, மாதாந்திர ரேஷன், மின்சார கட்டணம் மற்றும் பிற செலவுகள் இதுபோக பல்வேறு நோய்கள் மற்றும் சுகாதார சேவைகளையும் நாங்கள் சமாளிக்க வேண்டி இருக்கிறது என்று கூறினார்.
ஆனால் எங்களது மாதாந்திர ஊதியம் இப்படி தாமதமாக கொடுக்கப்படுவதால் ஒவ்வொரு மாதமும் குடும்ப வரவு செலவுகளை சமாளிப்பது மிகவும் கடினமாகி வருகிறது. "அரசாங்கமோ நிர்வாகத்தினரை தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே ஊதியம் வழங்குமாறு கூறுகிறது", என்று அவர் கூறினார். ஆனால் பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தைப் பற்றி ஒன்றும் கூறவில்லை என்று கூறினார்.
அனிதா வேலை செய்யும் இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அதே வார்டில் குப்பை சேகரிக்கும் இடத்தில் கட்டின் கஞ்சே குப்பை குவியலுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கிறார், அவர் வெறும் செருப்புகளை மட்டுமே அணிந்துள்ளார். அனிதாவை போலவே அவரும் மாநகராட்சி நிர்வாகத்தின் திடக்கழிவு மேலாண்மை துறையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார். மாநகராட்சி நிர்வாகம் 6500 தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்தி உள்ளது என்று அத்துறையின் தலைமை மேற்பார்வையாளர் ஆன ஜெயந்த் பரட்கர் கூறுகிறார்.
கட்டின் எடுக்கும் குப்பைகளில் உடைந்த கண்ணாடி துண்டுகள், துருப்பிடித்த ஆணிகள் பயன்படுத்தப்பட்ட சானிடரி நாப்கின்கள் மற்றும் அழுகிக் கொண்டிருக்கும் உணவுகள் ஆகியவையும் அடங்கும். அவர் இந்த பொருட்கள் மற்றும் பிற அபாயகரமான கழிவுப் பொருட்களையும் மூங்கில் குச்சியில் சொருகப்பட்டிருக்கும் கம்பியின் உதவியோடு தோண்டி எடுத்து அதனை ஒரு பிளாஸ்டிக் பாயில் கொட்டுகிறார். பின்னர் அவரும் பிற பணியாளர்களும், இவரது குழுவில் 5 ஆண்கள் உள்ளனர் - அந்த பிளாஸ்டிக் பாயைத் தூக்கி குப்பை வண்டியில் வீசுகின்றனர்.
"இந்த ரப்பர் கையுறைகள் கூட நேற்று (மார்ச் 20 ஆம் தேதி அன்று) தான் எங்களுக்கு வழங்கப்பட்டது", என்று 25 வயதாகும் கட்டின் கூறுகிறார், அவரும் மாதங் சமூகத்தைச் சேர்ந்தவர். வழக்கமாக அவர் தனது வெறும் கைகளாலேயே குப்பைகளைக் கையாளுகிறார். "இது புதிய கையுறை தான் ஆனால் பாருங்கள் ஒரு இடத்தில் கிழிந்து இருக்கிறது. அத்தகைய கையுறைகளை வைத்துக் கொண்டு இந்த குப்பையில் நாங்கள் எங்களது கைளை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்? இதில் இப்போது இந்த வைரஸ் வேறு. நாங்கள் மனிதர்கள் இல்லையா?" என்று கேட்கிறார்.
அப்போது காலை ஒன்பதரை மணி மதியம் 2 மணி வரை அவர் மகுலில் உள்ள 20 இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். "எங்களது வாழ்க்கையைப் பணயம் வைப்பது எங்களுக்கு புதியதல்ல. ஆனால் இந்த வைரஸ் தொற்றின் காரணமாகவாவது நீங்கள் (முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் அரசாங்கம்) எங்களை பற்றி சிந்திக்க வேண்டும்", என்று அவர் கூறுகிறார். "நாங்கள் மக்களுக்காகத்தான் இந்த குப்பைகளில் கிடக்கிறோம் ஆனால் மக்களை எங்களைப் பற்றி சிந்திப்பார்களா?" என்று கேட்கிறார்.
எண்ணற்ற அபாயங்களை கொண்ட தனது வேலைக்கு கட்டின் நாளொன்றுக்கு 250 ரூபாய் சம்பளமாக பெறுகிறார். அவரது மனைவி 25 வயதாகும் சுரேகா வீட்டு வேலை செய்து வருகிறார்.
கொரோனா வைரஸ் இந்த நகரத்திற்கு புதியது தான் ஆனால் இவரும் பிற துப்புரவு தொழிலாளர்களும் பாதுகாப்பான மற்றும் நிரந்தர வேலை, சுகாதார காப்பீடு மற்றும் முகக்கவசம், கையுறைகள் மற்றும் காலணிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழக்கமாக வழங்கும்படி கோரிக்கைகளைத் தொடர்ந்து வைத்துக் கொண்டே தான் இருக்கின்றனர்.
பாதுகாப்பின் தேவை இப்போது இன்னும் அவசியமாகிறது. மார்ச் 18 ஆம் தேதி அன்று தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளுக்காக செயல்படும் மும்பையைச் சேர்ந்த கச்சரா வஹ்த்துக் ஷ்ராமிக் சங்கம், நகராட்சி ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், களத்தில் உள்ள பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் படி கோரியது. அதன் பலனாக மார்ச் 20ஆம் தேதியன்று ஒரு சில பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.
"இந்த வைரஸின் காரணமாக குப்பை லாரிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு சோப்பு மற்றும் சனிடைசர் வழங்க வேண்டும் என்று நாங்கள் பிஎம்சி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டோம். ஆனால் எங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை", என்று எம் மேற்கு வார்டில் குப்பை லாரியில் பணிபுரியும் 45 வயதாகும் தாதாராவ் பட்டேகர் கூறுகிறார், மேலும் அவர் நவ புத்த சமயத்தைச் சேர்ந்தவர். மற்றவர்களின் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள் தொடர்ந்து சுகாதார பரிசோதனைகளை பெறவேண்டும் அவர்கள் தான் இந்த வைரஸ் தொற்று நோய் பாதிக்கும் அபாயத்தில் உள்ளனர்", என்று கூறினார்.
இருப்பினும் தலைமை மேற்பார்வையாளரான பிரட்கர், "நாங்கள் எங்கள் பணியாளர்கள் அனைவருக்கும் நல்ல தரமான முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் சானிடைசர்களை வழங்கியுள்ளோம் என்று கூறுகிறார். மேலும் இந்த வைரஸ் தொற்றின் அசுர வேகத்தை கண்டு அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளோம்", என்று கூறினார்.
கோவிட் 19 பரவுவதை தடுக்க மார்ச் 20 ஆம் தேதி அன்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் ஏராளமான பணி நிறுத்த நடவடிக்கைகளை அறிவித்தார் மேலும் மார்ச் 22 ஆம் தேதி அன்று அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் மார்ச் 21ஆம் தேதியன்று நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் காலை ஆறரை மணி அளவில் நகரத்தின் வார்டுகளில் உள்ள கடை தெருவில் கூடினர் அங்கு அவர்களது வருகை பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்களுக்கு தூய்மைப் படுத்துவதற்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றது.
"எங்களது பணி அத்தியாவசிய சேவையில் ஒரு பகுதி. நாங்கள் வெளியே வந்து தான் ஆக வேண்டும் எல்லையில் இருந்து நம்மை காக்கும் வீரர்களைப் போல மக்களைக் காப்பதற்கு தூய்மைப் பணியாளர்களாகிய நாங்கள்", என்று கூறினார் பட்டேகர்.
ஆனால் தூய்மைப் பணியாளர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கின்றனர்? "அரசாங்கம் தொடர்ந்து கைகளை கழுவ சொல்கிறது. நாங்கள் அதை எப்படி செய்வது? இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் இங்கு தண்ணீர் வருகிறது. மேலும் அந்த கை கழுவும் திரவமான சானிடைசரை எங்களால் விலை கொடுத்து வாங்க முடியுமா? மேலும் நாங்கள் ஒரு பொது கழிப்பறை நூற்றுக்கணக்கான மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையை இருக்கிறது", என்று 38 வயதாகும் அர்ச்சனா சபூஸ்க்வர் கூறினார் இவரும் நவ புத்தா சமூகத்தைச் சேர்ந்தவர். சுபாஷ் நகர் பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து இவர் ஒவ்வொரு நாளும் குப்பைகளை சேகரிக்கிறார் மேலும் தினசரி கூலியாக 200 ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்.
மகுலில் உள்ள சுபா நகரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் செம்பூரில் உள்ள ஆனந்த் நகரில் ஒரு குறுகிய சந்து பகுதியில் அவரது 100 சதுர அடி வீடு உள்ளது. சேரி காலனியில் பல தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்கள் வசிக்கின்றன, இவர்களில் பலர் 1972 ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் போது ஜல்னா, சதாரா மற்றும் சோலாப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து இங்கு வந்தவர்கள். சில வருடங்களுக்கு முன்பு அர்ச்சனாவின் கணவர் ராஜேந்திரா பிற பணியாளர்களுடன் கனமான இரும்பு குப்பைத்தொட்டியை தூக்க முயற்சித்த போது அவரது கால் அதன் கீழ் மாட்டிக்கொண்டு முறிந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார்.
"எப்படி இருந்தாலும் எங்கள் மக்கள் எப்போதும் இறந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் யாரும் எங்களைப் பற்றி கவலைப்பட்டது இல்லை", என்று அர்ச்சனா கூறுகிறார். "இப்போது இந்த வைரஸ் தொற்று மட்டும் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தி விட போகிறது?" என்று கேட்கிறார்.
தமிழில்: சோனியா போஸ்