“அம்மா, எப்போது பள்ளி மீண்டும் திறக்கும்?” எனக் கேட்கிறார் முனியா. சணல் செடிகளை மெலிதாக்கும் வேலையின் கடைசிக் கட்டத்தை செய்து கொண்டிருக்கிறார் சஹாரா. அறுவடையின் வேலைப்பளு மிகுந்த நாட்கள் இவை. எனவே முனியாவின் கேள்விகளுக்கு பதிலளிக்க அவருக்கு நேரமில்லை.
“ஏன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவில்லை…!” மீண்டும் சிறுமி அதே கேள்வியை கேட்கிறாள். இம்முறை சஹாரா, வேலையை சற்று நிறுத்திவிட்டு, அவளை நோக்கி திரும்பி, குரலில் வெளிப்படும் விரக்தியைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொல்கிறார்: “வெயில் கொளுத்துவது தெரியவில்லையா? எட்டு மாதமாக மழை பெய்யவில்லை.”
“பின் ஏன் அவர்கள் குளிர்சாதனம் நிறுவவில்லை?” முனியா கேள்விகளை விடுவதாக இல்லை.
“அரசாங்கத்திடம் பணம் இல்லை.” சஹாரா பொறுமை இழந்து கொண்டிருந்தார்.
“ஆங்கில வழிப் (பணக்காரர்களுக்கான) பள்ளிகள் எல்லாம் எப்படி நிறைய குளிர்சாதனங்களைக் கொண்டிருக்கின்றன?”
கடின உழைப்பிலும் அமைதியிலும் சஹாரா மாலை வரை மூழ்குகிறார். வேலையை முடிக்காமல் முனியாவுடன் அவர் வீட்டுக்கு வேகமாக திரும்புகிறார். வாக்களிப்பதற்கான நாள் இன்று. தன் எட்டு வயது மகளுடன் சஹாரா, வாக்களிப்பதற்காக ஆரம்பப் பள்ளி வாக்குச்சாவடிக்கு விரைகிறார்.
“ஏன் நாம் ஓட்டு போட வேண்டும், அம்மா?” முனியா இன்று விடுவதாக இல்லை. பேச்சு மாறியதில் சஹாரா சற்று நிம்மதி அடைந்தார். ஆனால் மகளுடன் பேச முடியாதளவுக்கு களைப்பில் இருந்தார் அவர்.
“தொலைக்காட்சியில் ஒருநாள் நான் கேட்டேன். இஸ்லாமியர் வாக்குகள் தேவையில்லை என ஒரு பெரிய தலைவர் பேசிக் கொண்டிருந்தார். நாம் இஸ்லாமியர்கள். ஏன் நாம் ஓட்டு போட வேண்டும்?”
நடந்து கொண்டிருந்த சஹாரா நின்று, சிறுமியை உற்று பார்த்தார். அம்மா முறைத்தால் என்ன அர்த்தமென முனியாவுக்கு தெரியும். எனவே எதுவும் பேசவில்லை.


