“பட்ஜெட் பெரும் தொகைகளை பற்றியது. ஒரு குடிமகனாக என் மதிப்பு அரசாங்கத்தை பொறுத்தவரை பூஜ்யம்!”
’அரசாங்க பட்ஜெட்’ என்கிற வார்த்தையைக் கேட்டதும் ஏற்படும் கசப்புணர்வை வெளிப்படுத்த சந்த் ரதன் ஹல்தார் தயங்கவில்லை. “என்ன பட்ஜெட்? யாருடைய பட்ஜெட்? அது பெரும் மோசடி!” 53 வயதாகும் அவர் கொல்கத்தாவின் ஜாதவ்பூரில் ரிக்ஷா இழுக்கிறார்.
“பல பட்ஜெட்களுக்கும் திட்டங்களுக்கும் பிறகும் தீதியிடமிருந்தோ பிரதமரிடமிருந்தோ எங்களுக்கு வீடு கிடைக்கவில்லை. தார்ப்பாய் குடிசையில்தான் நான் வாழ்ந்து வருகிறேன். ஒரு அடி வரை அது தரையில் புதைந்திருக்கிறது,” என்கிறார் சந்து. பட்ஜெட் மீதான அவரது நம்பிக்கை இன்னும் ஆழமாக புதைந்து போயிருக்கிறது.
மேற்கு வங்கத்தின் சுபாஷ்கிராம் டவுனை சேர்ந்த நிலமற்றவரான அவர், அதிகாலை சீல்தாவுக்கு செல்லும் உள்ளூர் ரயில் பிடித்த ஜாதவ்பூருக்கு செல்கிறார். அங்கு அவர் மாலை வரை வேலை பார்த்து விட்டு பின் வீடு திரும்புவார். “பட்ஜெட்கள் எங்கள் உள்ளூர் ரயில்களை போல வரும் போகும். நகரத்துக்கு வருவது தற்போது கடினமாகி விட்டது. எங்கள் வெறும் வயிற்றில் அடிக்கும் இத்தகைய பட்ஜெட்டால் என்ன பயன்?” எனக் கேட்கிறார்.




