முப்பது வருடங்களுக்கு முன்பு, மூங்கிலை வைத்து எப்படி வேலை செய்வது என்பதை, இளம் சஞ்சய் காம்ப்ளேவுக்கு கற்பிக்க யாரும் விரும்பவில்லை. இன்று, அவர் தனது கலையை காக்க அனைவருக்கும் கற்பிக்க விரும்பும் போது, கற்றுக்கொள்ள யாரும் விரும்பவில்லை. "காலம் எப்படி மாறிவிட்டது என்பது அதிசயமாக இருக்கிறது," என்று 50 வயதான அவர் கூறுகிறார்.
மேற்கு மகாராஷ்டிரா பகுதியில் நெல் விவசாயிகள் பயன்படுத்தும் ஒரு வகையான ரெயின்கோட்டான இர்லாக்கள் காம்ப்ளேவின் கைவண்ணம். இவற்றை அவர், தனது ஒரு ஏக்கர் நிலத்தில் வளரும் மூங்கிலைக் கொண்டு செய்கிறார். "சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஷாஹுவாடி தாலுகாவில் நிறைய மழை பெய்ததால், ஒவ்வொரு விவசாயியும் வயல்களில் வேலை செய்யும் போது, இர்லாவைப் பயன்படுத்தினர்," என்று கெர்லே கிராமத்தில் வசிக்கும் இவர் கூறுகிறார். தனது பண்ணையில் வேலை செய்யும் போது தானும் ஒன்றை அணிவதாக கூறுகிறார். இந்த மூங்கில் ரெயின்கோட், குறைந்தது ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கும். அதுமட்டுமில்லாமல், "அதற்குப் பிறகும், அதை எளிதாக சரிசெய்ய முடியும்," என்று அவர் கூறுகிறார்.
ஆனால் எல்லாம் மாறிவிட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் கோலாப்பூர் மாவட்டத்தில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மழைப்பொழிவு - 1,308 மிமீ (2003) முதல் 973 (2023) வரை குறைந்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
"குறையும் மழைப்பொழிவு, என் கலையைக் கொன்றுவிடும் என்று யாருக்குத் தெரியும்?" என்று இர்லா செய்யும் சஞ்சய் காம்ப்ளே கேட்கிறார்.
"எங்கள் விவசாயம், மழையை நம்பியிருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டுமே நாங்கள் விவசாயம் செய்கிறோம்," என்கிறார் காம்ப்ளே. பல ஆண்டுகளாக, மழையின் மாறுபாடுகளால் பெரும்பாலான கிராமவாசிகள் மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களுக்கு குடிபெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அங்கு அவர்கள் உணவகங்களிலும், தனியார் பேருந்து நிறுவனங்களில் நடத்துனர்களாகவும், கொத்தனார்களாகவும், தினசரி கூலித் தொழிலாளர்களாகவும், தெரு வியாபாரிகளாகவும் இருக்கின்றனர். அல்லது மகாராஷ்டிர வயல்களில் உழைக்கிறார்கள்.
குறையும் மழைப்பொழிவால், எஞ்சியுள்ள விவசாயிகள், நெல் சாகுபடி செய்வதை விட்டு, கரும்புக்கு மாறிவிட்டனர். "ஆழ்துளைக் கிணறுகள் உள்ள விவசாயிகள் கரும்பு சாகுபடிக்கு வேகமாக மாறி வருகின்றனர், இது மிகவும் எளிதாக வளரக்கூடியது." என்கிறார் காம்ப்ளே. ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு முன்பே, இந்த மாற்றம் தொடங்கியது.
ஓரளவுக்கு மழை பெய்தால், மழைக்காலத்தில் காம்ப்ளேவால் சுமார் 10 இர்லாக்களை விற்க முடியும். ஆனால் 2023-ல், அவருக்கு மூன்று ஆர்டர்கள் மட்டும்தான் கிடைத்தது. “இந்த வருடம் மிகக் குறைவாகவே மழை பெய்துள்ளது. யாருக்கு இர்லா தேவைப்படும்? அவரது வாடிக்கையாளர்கள் அம்பா, மஸ்னோலி, தலவாடே மற்றும் சந்தோலி போன்ற கிராமங்களில் இருந்து வருகிறார்கள்.
கரும்பு சாகுபடிக்கு மாறியதும் வேறொரு சிக்கலை உருவாக்கியுள்ளது. "குறைந்த உயரம் கொண்ட பயிர்களைக் கொண்ட வயல்களில் இர்லாக்கள் அணிவது சிறந்தது. ஆனால் பருமனான அமைப்பினைக் கொண்ட கரும்பு வயலில் நீங்கள் இர்லாக்கள் அணிந்து நடக்க முடியாது. ஏனெனில் அது பயிர்களின் தண்டுகளை இடிக்கும்,” என்று தலித் பௌத்தரான சஞ்சய் விளக்குகிறார். பொதுவாக இர்லாவின் அளவு, அதை அணியும் விவசாயியின் உயரத்தைப் பொறுத்தது. "இது ஒரு சிறிய வீடு போன்றது," என்று அவர் மேலும் கூறுகிறார்.
இப்போது கிராமங்களில் விற்கப்படும் மலிவான பிளாஸ்டிக் ரெயின்கோட்டுகள், கிட்டத்தட்ட இர்லாவை ஓரங்கட்டிவிட்டன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, காம்ப்ளே ஒரு இர்லாவை ரூ. 200–300க்கு விற்று வந்தார். இப்போது உயரும் செலவுகளை சமாளிக்க, ரூ. 600க்கு விற்கிறார்.
*****
காம்ப்ளேவின் தந்தை, மறைந்த சந்திரப்பா, ஒரு விவசாயி மற்றும் தொழிற்சாலை தொழிலாளி. சஞ்சய் பிறப்பதற்கு முன் மறைந்த, அவரது தாத்தா, ஜோதிபா தான், அந்த காலத்தில் அவர்களது கிராமத்தில் பொதுவான தொழிலாக இருந்த இர்லாக்களை வடிவமைத்தவர்.
30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, மூங்கில் வேலையைக் கற்றுக்கொண்டால், விவசாயத்தின் மூலம் தனது வருமானத்தை அதிகரிக்கலாம் என்று காம்ப்ளே நம்பினார். "எனக்கு வேறு வழியில்லை. என் குடும்பத்தை ஆதரிக்க நான் பணம் சம்பாதிக்க வேண்டியிருந்தது." என்று அவர் கூறுகிறார்."
அவர் கைவினைக் கற்றுக் கொள்ள முடிவு செய்தபோது, கேர்லேவின் காம்ப்ளேவாடி வசத்தில் (உள்ளூர்) ஒரு மூத்த இர்லா தயாரிப்பாளரை காம்ப்ளே நாடினார். "எனக்கு கற்பிக்குமாறு நான் அவரிடம் கெஞ்சினேன். ஆனால் அவர் மிகவும் பிஸியாக இருந்தார். என்னைப் நிமிர்ந்து கூட பார்க்கவே இல்லை," என்று காம்ப்ளே நினைவு கூர்கிறார். இருப்பினும், கைவிடாத அவர், தினமும் காலையில் அக்கலைஞரைக் கவனித்து, இறுதியில் தானாகவே அந்தக் கலையைக் கற்றுக் கொண்டார்.
காம்ப்ளேவின் மூங்கிலில் முதலில், சிறிய வட்டமான டாப்லிக்கள் (கூடைகள்) செய்து பார்த்தார். அதன் அடிப்படைகளை அவர் ஒரு வாரத்திற்குள் கற்றுக்கொண்டார். சரியாக வரும் வரை அந்த மணல்-பழுப்பு மூங்கில் பட்டைகளை அவர் நாள் முழுவதும் சுற்றி பயிலுவார்.
"என்னுடைய வயலில் இப்போது சுமார் 1,000 மூங்கில் செடிகள் உள்ளன," என்கிறார் காம்ப்ளே. "அவை கைவினைப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் திராட்சைத் தோட்டங்களுக்கு கொடி படர வழங்கப்படுகின்றன. சஞ்சய் சந்தையில் இருந்து சிவாவை (மூங்கில்களின் உள்ளூர் வகை) வாங்க, குறைந்தபட்சம் ஒரு துண்டுக்கு ரூ.50 செலவு செய்ய வேண்டும்.
ஒரு இர்லாவை உருவாக்குவது கடினமான பணியாகும். அதை சஞ்சய் கற்றுக்கொள்ள ஒரு வருடம் ஆனது.
இந்த கலை, சரியான மூங்கில் செடியைக் கண்டுபிடிப்பதில் இருந்து தொடங்குகிறது. உறுதியாக இருப்பதாலும், நீடித்து உழைப்பதாலும், கிராமவாசிகள் சிவாவை பயன்படுத்த விரும்புகிறார்கள். காம்ப்ளே தனது வயலில் உள்ள செடிகளை கவனமாக பரிசோதித்து 21 அடி மூங்கிலை எடுக்கிறார். அடுத்த ஐந்து நிமிடங்களில், அவர் அதை இரண்டாவது முனைக்கு மேலே வெட்டி, அதைத் தனது தோளில் போட்டு இழுக்கிறார்.
ஒரு அறை மற்றும் ஒரு சமையலறை கொண்ட தனது சிராவிற்கு (செந்நிற களிமண்) திரும்பிச் சென்று, அவர் வேலை செய்யும் முற்றத்தில், மூங்கில்களை அமைக்கிறார். மூங்கிலின் இரு முனைகளையும் ஒரே மாதிரியாக இல்லாமல் வெட்ட பார்லியை (ஒரு வகை அரிவாள்) பயன்படுத்துகிறார். அடுத்து, அவர் மூங்கிலை இரண்டு சம பாகங்களாகப் பிரித்து, ஒவ்வொரு துண்டின் வழியாகவும் தனது பார்லியை செங்குத்தாகத் துளைத்து, அதை மேலும் இரண்டு துண்டுகளாகக் கச்சிதமாகப் பிரிக்கிறார்.
மெல்லிய கீற்றுகளை உருவாக்க, மூங்கிலின் பச்சை நிற வெளிப்புற அடுக்கு, பார்லியால் உரிக்கப்படுகிறது. அது போன்ற பல கீற்றுகளை உருவாக்க அவர் குறைந்தது மூன்று மணிநேரம் செலவிடுகிறார். பின்னர் அவை ஒரு இர்லாவை உருவாக்க நெய்யப்படுகின்றன.
" இர்லாவின் அளவைப் பொறுத்து கீற்றுகளின் எண்ணிக்கை அமைகிறது" என்று அவர் விளக்குகிறார். தோராயமாக, ஒவ்வொரு இர்லாவிற்கும் , மூன்று 20 அடி மூங்கில் துண்டுகள் தேவைப்படும்.
காம்ப்ளே 20 கீற்றுகளை, இடையிடையே ஆறு சென்டிமீட்டர் இடைவெளி விட்டு, கிடைமட்டமாக பரப்புகிறார். பின்னர் அவர் இன்னும் சில கீற்றுகளை அவற்றின் மேல் செங்குத்தாக வைத்து, ஒரு சாட்டை (பாய்) எப்படி நெய்யப்படுகிறதோ அதைப் போலவே அவற்றை ஒன்றோடொன்று பின்னி நெசவு செய்யத் தொடங்குகிறார்.
தலைசிறந்த கைவினைஞருக்கு இந்த கீற்றுகளை உருவாக்க ஸ்கேல் அல்லது அளவிடும் டேப் ஏதும் தேவையில்லை, குறிப்புக்காக அவரது உள்ளங்கைகளை மட்டுமே பயன்படுத்துகிறார். "அளவீடுகள் மிகவும் சரியாக இருப்பதால், துண்டுகளின் எந்த பகுதியும் வீணாவதில்லை," என்று அவர் பெருமையாகக் கூறுகிறார்.
"இந்த வடிவத்தை உருவாக்கிய பிறகு, நீங்கள் பக்கங்களில் இருந்து விளிம்புகளை வளைக்க வேண்டும். இதற்கு நிறைய வலிமை தேவைப்படுகிறது," என்று அவர் தொடர்கிறார். அடிப்படை வடிவம் தயாரானதும், அவர் ஒரு மணி நேரம் கீற்றுகளை வளைத்து, ஒவ்வொன்றின் மேற்பகுதியிலும் ஒரு கூர்மையான டேப்பரிங் முடிவைக் கொடுக்கிறார். முழு செயல்முறைக்கும் சுமார் எட்டு மணி நேரம் ஆகும், என்று அவர் கூறுகிறார்.
செய்து முடித்ததும், நீர் நுழையாமல் இருக்க பெரிய நீல நிற தார்ப்பாயால் இர்லாக்கள் மூடப்படுகின்றன. இதை, இர்லாவின் டேப்பரிங் முனையிலிருந்து நீட்டிக்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கயிற்றால், அணிபவர் தன்னுடலில் கட்டிக்கொள்ளலம். நகராமல் இருக்க, பல முடிச்சுகள் வெவ்வேறு முனைகளில் கட்டப்படுகிறது. காம்ப்ளே, தார்ப்பாய்களை அருகிலுள்ள நகரங்களான அம்பா மற்றும் மல்காபூரிலிருந்து, ரூ.50 ரூபாய்க்கு ஒன்றென வாங்குகிறார்.
*****
இர்லாக்கள் தயாரிப்பதுடன், காம்ப்ளே தனது நிலத்தில் நெல்லையும் பயிரிடுகிறார். அறுவடையின் பெரும்பகுதி அவரது குடும்பத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. 40 வயதாகும் அவரது மனைவி மாலாபாய், அவர்களது சொந்த பண்ணையிலும், மற்றவர் பண்ணைகளிலும் களைகளை அகற்றுதல், நெல் விதைத்தல், கரும்பு பயிரிடுவது அல்லது பயிர்களை அறுவடை செய்யும் பணிகளில் ஈடுபடுகிறார்.
" இர்லாக்களுக்கு , போதுமான ஆர்டர்கள் கிடைக்காததாலும், நெல் சாகுபடியில் மட்டும் பிழைக்க முடியாது என்பதாலும், நான் மற்ற வயல்களிலும் வேலை செய்யச் செல்கிறேன்," என்று அவர் கூறுகிறார். 20 வயதிற்குட்பட்ட அவர்களது மகள்கள், கருணா, காஞ்சன் மற்றும் சுபாங்கி, அனைவரும் இல்லத்தரசிகள். இவர்களது மகன் ஸ்வப்னில் மும்பையில் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் இர்லா செய்யப் பயிலவில்லை. "இங்கு பிழைக்க வழி இல்லாததால் நகரத்துக்கு சென்றுவிட்டான்," என்கிறார் சஞ்சய்.
காம்ப்ளே தனது வருவாயை அதிகரிக்க, குருட்கள் (கோழிகளுக்கான கூண்டுகள்) மற்றும் கரந்தாக்கள் (மீன் கூடைகள்) போன்ற மற்ற மூங்கில் பொருட்கள் செய்யும் திறமையையும் பெற்றுள்ளார். ஆனால் அவை ஆர்டரின் பேரில் தயாரிக்கப்படுகின்றன. மேலும் வாடிக்கையாளர்கள் அவற்றை எடுக்க, அவரது வீட்டிற்கே வருகிறார்கள். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, அவர் டோப்ளாஸ் அல்லது காங்கிஸ் எனப்படும் பாரம்பரியமாக அரிசி சேமிக்க பயன்படுத்தப்படும் கொள்கலன்களையும் செய்தார். ஆனால் பட்ராச்சா டப்பாக்கள் (டின் பாக்ஸ்கள்) தற்போது எளிதில் கிடைப்பதால், அந்த ஆர்டர்கள் வருவது நின்றுவிட்டன. இப்போது அவர் அவற்றை தங்கள் வீட்டு உபயோகத்திற்காக மட்டுமே தயாரிக்கிறார்.
"இந்தக் கலையை யார் கற்றுக்கொள்ள விரும்புவார்கள்?" அவரது பொருட்களின் புகைப்படங்களை எங்களிடம் காண்பிப்பதற்காக அவரது தொலைபேசியில் ஸ்க்ரோல் செய்து கொண்டே காம்ப்ளே கேட்கிறார். "அதற்கு இப்போது தேவையும் இல்லை, அதன் மூலம் போதுமான வருமானமும் இல்லை. இன்னும் சில வருடங்களில் அது மறைந்துவிடும்.”
இந்தக் கதை சங்கேத் ஜெயினின் கிராமப்புற கைவினைஞர்கள் பற்றிய தொடரின் ஒரு பகுதியாகும். மேலும் இது மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளையால் ஆதரிக்கப்படுகிறது.
தமிழில் : அஹமத் ஷ்யாம்