ஜாகீர் உசேனும், மகேஷ் குமார் சவுத்ரியும் பால்யக்கால நண்பர்கள். நாற்பது வயதிலும் அவர்கள் நெருக்கமாக உள்ளனர். ஜாகீர், அஜ்னா கிராமத்தில் வசிக்கிறார், மற்றும் பாகூரில் கட்டுமான ஒப்பந்ததாரராக பணிபுரிகிறார். மகேஷ், அதே நகரத்தில் ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வருகிறார்.
“பகூர் [மாவட்டம்] மிகவும் அமைதியான இடம். இங்கு வாழும் மக்கள் இடையே நல்லிணக்கம் நிலவுகிறது,’’ என்கிறார் மகேஷ்.
"ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்ற வெளியாட்கள், தங்கள் வார்த்தைகளால் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள்," என்று ஜாகிர், தனது நண்பர் அருகில் அமர்ந்து கூறுகிறார்.
சந்தால் பர்கானாவின் ஒரு பகுதியான பாகூர், ஜார்க்கண்டின் கிழக்கு எல்லையில் உள்ளது. இவர்களுக்கு நவம்பர் 20, 2024 அன்று மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 81 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019 தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான கூட்டணி, பாஜகவை வீழ்த்தியது.
மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில், பாஜக வாக்காளர்களை கவருவதற்காக, அசாமின் முதலமைச்சரை அனுப்பியுள்ளது. பாஜக தலைவர்கள், முஸ்லீம் சமூகங்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டி, அவர்களை ‘வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள்’ என்று முத்திரை குத்தியுள்ளனர் பாஜக தலைவர்கள்.
“எனக்கு பக்கத்து வீட்டில் இந்துக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் என் வீட்டிற்கு வருகிறார்கள், நான் அவர்கள் வீட்டிற்குச் செல்கிறேன்," என்று கூறும் ஜாகீர், "தேர்தலின் போது மட்டும் தான், இவர்கள் இந்து-முஸ்லீம் பிரச்சினையை தூண்டுகிறார்கள். வேறு எப்படி அவர்கள் ஜெயிக்க முடியும்?”
2024 செப்டம்பரில் ஜாம்ஷத்பூரில் நடந்த பேரணியில், பிரதமர் நரேந்திர மோடி ஊடுருவல் பிரச்சினைகளுக்கு அரசியல் முக்கியத்துவம் கொடுத்தார். “சந்தால் பர்கானா [பகுதியில்], ஆதிவாசி மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஊடுருவல்காரர்கள், பஞ்சாயத்துகளில் பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர்,” என்று கூட்டத்தினரிடம் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும், தத்தம் உரைகளில், இதேபோல் பேசினர். பாஜகவின் தேர்தல் அறிக்கை, “ஜார்க்கண்டில் வங்கதேசத்தினரின் ஊடுருவலைத் தடுக்கவும், பழங்குடியின சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்,” என்று கூறுகிறது.












