“இதைப் பற்றி எங்களுக்கு தெரியாது,” என்கிறார் பட்ஜெட் பற்றிய கேள்விகளை புறக்கணித்து.
“எங்களுக்கு என்ன தேவை என எப்போதேனும் அரசாங் எங்களிடம் கேட்டிருக்கிறதா?” என கேட்கிறார் அவரது மனைவி மண்டா. “அதை செய்யாமல் எப்படி அவர்கள் எங்களுக்காக முடிவு எடுக்க முடியும்? எங்களுக்கு 30 நாட்களுக்கு வேலை வேண்டும்.”
புனே மாவட்டத்தின் குருலி கிராமத்துக்கு வெளியே உள்ள அவர்களின் ஓரறை வீடு வழக்கத்துக்கு மாறாக பரபரப்பாக இருந்தது. “2004ம் ஆண்டில் ஜால்னாவிலிருந்து இங்கு நாங்கள் புலம்பெயர்ந்தோம். எப்போதும் நாங்கள் புலப்பெயர்வில் இருப்பதால், எங்கள் மக்கள் கிராமங்களுக்கு வெளியேதான் வசிப்பார்கள்,” என்கிறார் பாபாசாகேப்.
பிரிட்டிஷ் ஆட்சியால் குற்றப்பரம்பரை என முன்பு முத்திரை குத்தப்பட்டிருந்த அவரின் பில் பார்தி சமூக மக்கள், அக்களங்கம் நீக்கப்பட்டும் தொடர்ந்து பாரபட்சம் பார்க்கப்பட்டு வறுமையில் உழல வைக்கப்படுகின்றனர் என்கிற விஷயத்தை அவர் சொல்லிக் கொள்ளவில்லை. பட்டியல் பழங்குடியாக மகாராஷ்டிராவில் அச்சமூகம் அறிவிக்கப்பட்ட பிறகும் இதுவே நிலை. அவர்களின் புலப்பெயர்வுக்கு காரணமாக பெரும்பாலும் ஒடுக்குமுறைதான் இருக்கிறது.
புலப்பெயர்வுகள் பற்றி பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை நிச்சயமாக அவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. கேட்டிருந்தாலும் அவர்களுக்கு அது ஈர்ப்பை கொடுத்திருக்காது. “புலப்பெயர்வு அவசியமாக கிராமங்களில் இருக்கும் நிலையைப் போக்குவதற்கான சாத்தியங்களை உருவாக்குவதே லட்சியம்,” என 2025-26 பட்ஜெட் உரையில் அவர் பேசி இருக்கிறார்.



