வெள்ளத்தால் முதன்முறையாக இடம் மாற நேர்ந்ததை மொஹேஸ்வர் சமுவா தெளிவாக நினைவுகூருகிறார். அப்போது அவருக்கு ஐந்து வயதுதான். “எங்களின் வீடுகளில் ஒன்றை வெள்ளம் முதலில் அடித்து சென்றது. நாங்கள் படகுகளில் ஏறி, வசிப்பிடம் தேடி தப்பினோம். அருகாமை தீவுக்கு இடம்பெயர்ந்தோம்,” என்கிறார் தற்போது அறுபது வயதுகளில் இருக்கும் சமுவா.
அசாமின் ஆற்றுத்தீவான ஜுலியின் 1.6 லட்சம் பேர் சமுவாவை போல தொடர் வெள்ளத்தாலும் சுருங்கி வரும் நிலப்பரப்பாலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 1956ம் ஆண்டில் இருந்த 1,245 சதுர கிலோமீட்டரிலிருந்து 2017ம் ஆண்டில் 703 சதுர கிலோமீட்டராக தீவின் நிலப்பரப்பு சுருங்கியிருப்பதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய அறிக்கை குறிப்பிடுகிறது.
“இது உண்மையான சல்மோரா இல்லை,” என்னும் சமுவா, தொடர்ந்து “சல்மோராவை 43 வருடங்களுக்கு முன் பிரம்மபுத்திரா ஆறு எடுத்துக் கொண்டது,” என்கிறார். பிறகு பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறு உருவாக்கிய புதிய சல்மோராவில்தான் சமுவா, தன் மனைவி, மகள் மற்றும் மகனின் குடும்பத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.
அவரின் புதிய வீடு, சிமெண்டாலும் மண்ணாலும் கட்டப்பட்டிருக்கிறது. வெளியே கட்டப்பட்டிருக்கும் கழிவறைக்கு செல்ல ஏணியில்தான் செல்ல வேண்டும். “ஒவ்வொரு வருடமும் நாங்கள் பிரம்மபுத்திரைக்கு நிலத்தை இழந்து வருகிறோம்,” என்கிறார் அவர்.








