“இங்கு கல்யாணம் முடித்து வந்ததை நினைத்து வருந்துகிறேன்.”
ஒரு இளம் மணமகளாக, 29 வயது ரோஸி, தனது அனுபவத்தை பகிர்கிறார். ஆனால், இது அவரது தனிப்பட்ட கருத்து மட்டும் இல்லை. ஸ்ரீநகர், தால் ஏரிக்கு அருகில் வசிப்பவர்கள் யாரையும் பெண்கள் மணக்க விரும்பவில்லை என்று அங்கு வசிப்பவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். "ஏற்கனவே எங்களை மூன்று பேர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்," என தனது இளைய மகனுக்கு மணமுடிக்க பெண் தேடும், குல்ஷன் நசீர், கூறுகிறார். "கல்யாண தரகர்கள் கூட இப்போது இந்த பக்கம் வருவதை நிறுத்திவிட்டார்கள்."
இதற்கு காரணம், இங்கு வாழும் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை, என்கிறார், பாரு மொஹல்லாவைச் சேர்ந்த இந்த அம்மா. இத்தனைக்கும், இவர்கள் வசிப்பது, மாநிலத்தின் மிகப்பெரிய நன்னீர் ஏரி இருக்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஒன்பது வருடங்களுக்கு முன்பு, நாங்கள் எங்கள் படகுகளில் சென்று, தால் ஏரியின் பல்வேறு இடங்களில் இருந்து தண்ணீரை சேகரிப்போம்," என்கிறார் தச்சராக பணிபுரியும் முஷ்தாக் அகமது. "அப்போது தண்ணீர் லாரிகள் ஏதும் இருந்ததில்லை."
ஆனால் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, முஷ்தாக், சரியாக, காலை 9 மணிக்கெல்லாம், மாநிலத்தின் தண்ணீர் லாரிகள் வருவதற்காக, பிரதான சாலையில் வந்து காத்திருக்கிறார். குடோ மொஹல்லாவில் வசிக்கும் இவரது 10 பேர் கொண்ட குடும்பம் அவரைத் தான் நம்பி உள்ளது. வசதிக்காக, ரூ. 20,000-25,000 வரை செலவு செய்து, சேமிப்பு தொட்டிகளை வாங்கி, பைப்லைன் அமைத்தார். "ஆனால் மின்சாரம் இருந்தால் மட்டுமே இந்த அமைப்பு செயல்படும், அதிலும் காஷ்மீரில் குளிர்காலத்தில் மின்சாரம், பெரிய பிரச்சினையாகும்," என்கிறார் அவர். இந்த மாதம் (மார்ச்) டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக, அவர்கள் மீண்டும் வாளிகளைத் தூக்கிக் கொண்டு தண்ணீரை சுமந்து செல்ல வேண்டியிருந்தது.
முர்ஷிதாபாத்தின் பெகுன்பரி கிராம பஞ்சாயத்தில் உள்ள ஹிஜூலி குக்கிராமத்திலும் குடியிருப்பாளர்கள் தண்ணீர் லாரிகள் மூலமாக தான் தண்ணீரை பெறுகின்றனர். ஆனால், அவர்களுக்கு வரும் தண்ணீர், தனியார் நிறுவனங்களால் வினியோகம் செய்யப்படுவதால், மேற்கு வங்காளத்தில் 20 லிட்டர் தண்ணீர், 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
“எங்களுக்கு வேறு வழியில்லை, நாங்கள் இந்த தண்ணீரையும் வாங்கவில்லை என்றால், எங்களிடம் குடிக்கக் கூட தண்ணீர் இருக்காது, ”என்கிறார் லால்பானு பீபி.
மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷனால் (ஜேஜேஎம்) பயனடையாதவர்களில் ரோஸி, முஷ்தாக் மற்றும் லால்பானு ஆகியோர் அடங்குவர் என்பது இதிலிருந்தே தெளிவாகிறது. 75 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு (அதாவது 19 கோடி பேருக்கு) பாதுகாப்பான குடிநீர் கிடைத்துள்ளதாக ஜேஜேஎம் இணையதளம் கூறுகிறது. 2019 ஆம் ஆண்டு, 3.5 லட்சம் கோடி செலவில், ஐந்து ஆண்டுகளில், தண்ணீர் குழாய்கள் வழங்குவது, மூன்று மடங்காக்கப்பட்டதாகவும், அதனால், இன்று 46 சதவீத கிராமப்புற வீடுகள் தண்ணீர் குழாய் இணைப்புகளைக் கொண்டுள்ளதாகவும் இந்த இணையதளம் கூறுகிறது.
2017-18 ஆம் ஆண்டு, பீகார் மாநில அரசின் சாத் நிஷ்சய் திட்டத்தின் கீழ், பீகார் அக்பர்பூரில் உள்ள சிந்தா தேவி மற்றும் சுசீலா தேவியின் கிராமத்தில் குழாய்கள் நிறுவப்பட்டன. “இந்த நல் [குழாய்] சுமார் ஆறு-ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. ஒரு தண்ணீர் தொட்டியும் வைக்கப்பட்டது. ஆனால் இந்த நாள் வரை, இந்தக் குழாய்களில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வந்ததில்லை,” என்கிறார் சிந்தா.
இதற்குக் காரணம், சிந்தாவும் சுசீலாவும் தலித்துகள், இவர்களோடு சேர்த்து, மேலும் 40 தலித் வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு கிடைக்கவில்லை. மற்ற உயர்சாதி வீடுகளுக்கு மட்டும் தண்ணீர் இணைப்பு கொடுக்கப்பட்டன. காய்ந்து கிடக்கும் இந்த குழாய் கூட இப்போது சாதி பாகுபாட்டின் அடையாளமாக மாறிவிட்டது.
அவர்கள் வசிக்கும் அக்பர்பூர், தலித் காலனியில், ஒரே ஒரு அடி பம்பு மட்டுமே உள்ளது. இது அங்கு அதிகப்படியாக வாழும், முசாஹர் மற்றும் சமர் சமூகத்தினருக்கு (முறையே மாநிலத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட சாதி) பயன்படுகிறது.
அடிக்கடி இந்த அடி பம்பு பழுதடையும் போது, "நாங்களாக பணம் திரட்டி, அதை சரிசெய்து கொள்கிறோம்," என்கிறார் நாலந்தா மாவட்டத்தில் உள்ள இந்த காலனியில் வசிக்கும் 60 வயதான சிந்தா. இதற்கு மாற்று வழி, உயர்சாதி யாதவர்களிடம் கேட்பதுதான், ஆனால் அவர்கள் கொடுத்து உதவியதே இல்லை.
தலித் மனித உரிமைகள் மீதான தேசிய கேம்பெயின் (NCDHR) ஆய்வு , இந்தியாவில் கிட்டத்தட்ட பாதி (48.4 சதவீதம்) தலித் கிராமங்களுக்கு நீர் ஆதாரங்கள் மறுக்கப்படுவதாகவும், மேலும் 20 சதவீதத்திற்கும் மேலான மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை, என்றும் கூறுகிறது.
மகாராஷ்டிராவின் பால்கரில் உள்ள கே தாக்கூர் பழங்குடியினரான ராகு நடகேயின் கூற்றுப்படி, ஆதிவாசிகளுக்கும் இதே நிலை தான் என்கிறார். அவரது கோண்டே க்ஹ் கிராமத்தில், "தண்ணீர் லாரிகள் வந்ததே இல்லை" என்கிறார். எனவே 1,137 பேருக்கு நீர் ஆதாரமாக இருக்கும் உள்ளூர் கிணறு, வெயில் காலத்தில் வறண்டு போகும்போது, “நாங்கள் தலையில் ஒன்றுமாக கைகளில் ஒன்றுமாக, இரண்டு கலசங்களை [தண்ணீர் எடுத்துச் செல்வதற்கான பானைகள்] சுமந்து கொண்டு, தண்ணீருக்காக, சாலைகள் இல்லாத, காட்டை கடந்து செல்ல வேண்டும்."
ராகு தனது குடும்பத் தேவைகளுக்குப் போதுமான தண்ணீரை எடுத்து வர, மூன்று முறை செல்ல வேண்டும். அதாவது மொத்தமாக, சுமார் 30 கிலோமீட்டர்கள் நடப்பதோடு, ஒன்பது மணி நேரத்திற்கு மேல் செலவிட வேண்டியிருக்கும்.
*****
கக்ரம்பா கிராமத்தில் வசிக்கும் சிவமூர்த்தி சாத்தே, தனது அறுபதாண்டு கால வாழ்க்கையில் ஐந்து வறட்சிகளை பார்த்துள்ளார்.
மகாராஷ்டிராவின் துல்ஜாபூர் பகுதியில், கடந்த இறுபது வருடங்களில், வளமாக இருந்த விவசாய நிலங்களும் தரிசாக மாறிவிட்டதாக ஒரு விவசாயி கூறுகிறார்; இப்போது அங்கு ஒரு புல் கூட முளைப்பதில்லை. இதற்கு, டிராக்டர்களின் பயன்பாட்டை, அவர் குற்றம் சாட்டுகிறார்: “ ஆட் [கலப்பை] மற்றும் எருதுகளைக் கொண்டு நிலத்தை உழுகும்போது, மண்ணில் உள்ள புற்கள், வசனை [இயற்கையான கட்டுகளை] உருவாக்கியது, இது தண்ணீர் மெதுவாக ஊடுருவுவதற்கு உதவியது. டிராக்டர்கள் மண்ணைத் திறப்பதனால், நீர் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு வேகமாக நகர்கிறது.
1972 இல், அவர் ஒன்பது வயதாக இருந்தபோது, "முதல்முதலாக அதுவும் கடுமையான வறட்சியை கண்டதாக கூறுகிறார். தண்ணீர் இருந்தது, ஆனால் உணவு இல்லை. அந்த நாளுக்கு பிறகு, இயல்பு நிலை திரும்பவே இல்லை. சாதே காக்கா , துல்ஜாபூர் நகர், ஞாயிறு சந்தையில் காய்கறிகள் மற்றும் சிக்கூ பழங்களை விற்கிறார். 2014 வருட வறட்சிக்கு தனது ஒரு ஏக்கர் மாம்பழத் தோட்டத்தை இழந்துள்ளார். "நாங்கள் நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்திவிட்டோம், மேலும் அனைத்து வகையான நச்சு இரசாயனங்களையும் பயன்படுத்தி எங்கள் நிலங்களை தரிசாக மாற்றிவிட்டோம்."
தற்போது மார்ச் மாதமாகிறது, "மே மாத பருவமழைக்கு முந்தைய மழை பெய்யாவிடில் இந்த ஆண்டு மிகவும் கடினமாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறுகிறார். குடிநீர் கிடைப்பது நெருக்கடி ஆகிவிட்டது. “ஆயிரம் லிட்டருக்கு 300 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இது எங்கள் தேவைகளுக்கு மட்டுமல்ல, எங்கள் கால்நடைகளின் தேவைகளுக்கும் உதவும்.”
சுவாமிநாதன் கமிஷனின் முதல் அறிக்கை படி, தீவனப் பற்றாக்குறையால் ஏற்படும் கால்நடைகளின் இறப்பு, விவசாயிகளுக்கு அடுத்த பருவத்தில் வரவிருக்கும் கணிக்க முடியாத சூழ்நிலைகளை சமாளிப்பதை இன்னும் கடினமாக்கும் என சுட்டிக்காட்டுகிறது. "இந்த வகையில், வறட்சி, தற்காலிக நிகழ்வாக அல்லாமல், நிரந்தரமாக இயலாமைக்கு வழிவகுக்கும்," என்றும் அறிக்கை கூறுகிறது.
2023 ஆம் ஆண்டு, ஜூன் முதல் செப்டம்பர் வரை, தாராஷிவ் (பழைய உஸ்மானாபாத்) மாவட்டத்தின் துல்ஜாபூர் தொகுதி 570.3 மிமீ (வழக்கமாக 653 மிமீ ஆண்டு மழை பெய்யும்) மழையைப் பதிவு செய்தது. அதிலும் பாதிக்கு மேலான மழை, ஜூலை மாத 16 நாட்களுக்குள்ளேயே பெய்தது. ஜூன், ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் 3-4 வாரங்கள் நீடித்த வறண்ட காலநிலை , நிலத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்காததோடு; நீர்நிலைகள் நிரம்பவும் உதவவில்லை.
கக்ரம்பாவின் விவசாயிகளுக்கு இது ஒரு பெரும் போராட்டம்: “எங்கள் தேவையில், 5-10 சதவீதம் மட்டுமே நிறைவாகிறது [தற்போதைய நிலை]. விரைவில், கிராமம் முழுவதும் நீண்ட வரிசையில் பானைகளையும், ஹண்டாக்களையும் , நீங்கள் காண்பீர்கள்,” என்று பாரி நிருபரை அவர் எச்சரிக்கிறார்.
"இது நிலை [வறட்சி போன்ற சூழ்நிலை] அனைத்தும், மனிதனால் உருவாக்கப்பட்டவை" என்கிறார் சாத்தே காக்கா .
முர்ஷிதாபாத் மாவட்டத்தின் நெருக்கடி வேறு மாறியானது. அங்கு நிலத்தடி நீரில் ஆர்சனிக் கலந்துள்ளது. மேற்கு வங்காள பரந்த கங்கை சமவெளியில் பாகீரதியின் கரையில் அமைந்திருக்கும் இந்த பகுதியில், ஒரு காலத்தில் சுவையான நீரைக் கொண்டிருந்த குழாய்க் கிணறுகளும் வேகமாக வறண்டு வருகின்றன.
பெகுன்பாரி கிராம பஞ்சாயத்தில், குழாய் நீர் இல்லாததால், மக்கள் குழாய் கிணறுகளை நம்பியுள்ளனர் (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ன் படி, இங்கு மொத்த மக்கள் தொகை: 10,983). "நாங்கள் குழாய்க் கிணறுகளைத் தான் பயன்படுத்துகிறோம், ஆனால் அவையும் இப்போது [2023] வறண்டு போய்விட்டன," என்கிறார் ரோஷனாரா பீபி. “பெல்டாங்கா முதல் பிளாக்கில் உள்ள நீர்நிலைகளுக்கும் இதே நிலை தான். குளங்களும் வேகமாக வறண்டு வருகின்றன. மழையின் பற்றாக்குறையாலும், நிலத்தடி நீரை இறைக்கும் மேல்மட்ட பம்புகளின் கவனமற்ற பயன்பாடும், இதற்கு வழிவகுத்தது என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவில், விவசாயம் மற்றும் வீட்டு உபயோகம் ஆகிய இரண்டிற்கும் நிலத்தடி நீர், ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. 2017 அறிக்கையின் படி, இது கிராமப்புற நீர் தேவையில், 85 சதவிகிதத்திற்கு பங்களிப்பதாக கூறுகிறது.
அடுத்தடுத்த பருவமழைகளின் மழைப் பற்றாக்குறையே, நிலத்தடி நீரின் அதிகப்படியான பயன்பாட்டிற்கு காரணம் என்று ஜஹானாரா பீபி விளக்குகிறார். ஹிஜூலி குக்கிராமத்தில் வசிக்கும் 45 வயதான இவர், சணல் சாகுபடி செய்யும் குடும்பத்தில் மணமுடித்துள்ளார். “போதுமான தண்ணீர் இருந்தால் மட்டுமே, அடுத்து விளையும் பயிரை அறுவடை செய்ய முடியும். அறுவடை செய்தவுடன் பயன்படுத்தப்படாவிட்டால், சணல் அழிந்துவிடும். ஆகஸ்ட் 2023 இன் இறுதியில் பெல்டாங்கா முதல் தொகுதி முழுவதும், அறுவடைக்கு தண்ணீர் இல்லாமல், முதிர்ந்து நிற்கும் சணல் பயிர்கள், கடுமையான பருவ மழை பற்றாக்குறைக்கு அடையாளமாகிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும், ஆர்சனிக் மாசுபாடு காரணமாக, இந்த பகுதிகளில் குழாய்க் கிணறுகளை நம்பமுடியாது என்று குடியிருப்பாளர்கள் பாரிக்கு தெரிவிக்கின்றனர். தோல், நரம்பியல் மற்றும் மகப்பேறு ஆரோக்கியத்தை பாதிக்கும் அதிகப்படியான ஆர்சனிக் கலந்த நிலத்தடி நீரால், மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முர்ஷிதாபாத்தும் ஒன்றாகும்.
ஆர்சனிக் மாசுபாடு பற்றி அதிகரித்து வரும் விழிப்புணர்வின் காரணத்தால், அதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது. எனவே, அவர்கள் தற்போது முற்றிலும் தனியார் தண்ணீர் விநியோகஸ்தர்களை நம்பியிருக்கிறார்கள். ஆனால், அந்த் விநியோகஸ்தர்களிடமிருந்து அவர்கள் வாங்கும் தண்ணீரும் பாதுகாப்பானதா என்பது யாருக்கும் தெரியாது.
பெகுன்பரி உயர்நிலைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மற்றும் ஹிஜூலியில் வசிக்கும் ரஜ்ஜு போன்ற சில மாணவர்கள், தண்ணீர் லாரிகளுக்காக பாதியில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வர வேண்டியுள்ளது. ரஜ்ஜு, உதவுவதற்காக தண்ணீர் டேங்கரில் இருந்து தண்ணீரை வீட்டிற்கு எடுத்து வருகிறான். நிருபரை பார்த்து கண்ணடித்தபடி, “வீட்டில் படிப்பதை விட, இது சிறந்தது” என்கிறான்.
இது இவனுக்கு மட்டும் கொண்டாட்டம் இல்லை. ஹிஜூலியிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள காசிசாஹாவில் (மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011ன் படி, இங்கு மொத்த மக்கள் தொகை 13,489) தண்ணீர் விநியோகஸ்தர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஒரு சில ஆர்வமுள்ள சிறுவர்கள், பெரியவர்கள் தங்கள் பானைகள் மற்றும் ஜாடிகளை நிரப்ப உதவுகிறார்கள். "வேனின் மீது அமர்ந்து, கிராமத்தை சுற்றி வர முடிகிறது" என்பதால் இதை விரும்புவதாகச் சிறுவர்கள் கூறுகிறார்கள்.
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் இருந்தாலும், முர்ஷிதாபாத்தின் ஆர்சனிக் பிரச்சினைக்கும், மஹாராஷ்டிரா பால்காரின் வயிற்றுப்போக்கு பிரச்சினைக்கும், ஒரே காரணம், நீர் இருப்பு பற்றக்குறை தான்.
ராகு நடகே தனது கிராமமான கோண்டே க்ஹின் கிணற்றில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும், 227 குடும்பங்கள் இந்த ஒரு நீர் ஆதாரத்தை மட்டுமே நம்பியிருப்பதாகவும் கூறுகிறார். "எங்களுக்கு அருகிலுள்ள ஒரே நீர் ஆதாரம் இது தான்," என்று அவர் கூறுகிறார். மொகடா தாலுகாவில் உள்ள இந்த கிராமத்தில் பெரும்பாலான மக்கள் கே தாக்கூர் பழங்குடியினர் ஆவர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவரது மகன் தீபக் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டார், இதற்கு காரணம் பெரும்பாலும் அவர்கள் குடிப்பதற்குப் பயன்படுத்திய தண்ணீர் என்கிறார். பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது கிராமங்களின் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு பாதிப்பு 33.4 சதவீதமாக இருப்பதாக 2018 ஆம் ஆண்டு ஆய்வு பதிவு செய்கிறது. மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்து, ராகு தினமும் தண்ணீரை காய்ச்சி உயயோகிக்கிறார்.
ஆனால் தண்ணீரைக் காய்ச்சுவதற்கு முன்பு, அதனை எடுத்து வர வேண்டுமே. கோடையில், கிணற்றில் தண்ணீர் வற்றும் போது, கிராமத்தின் பெண்கள் சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாக் ஆற்றுக்குச் செல்கிறார்கள். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செல்லும் அவர்களுக்கு இது மூன்று மணி நேர பயணம் ஆகும். வெயில் ஓரளவுக்கு மிதமாக இருக்கும் அதிகாலை அல்லது பொழுது சாயும் வேளை, நீர் எடுக்கச் செல்கிறார்கள்.
இந்தியத் துணைக்கண்டம் முழுவதும், தண்ணீர் தொடர்பான வீட்டுப் பணிகளின் சுமை பெரும்பாலும் அநியாயமாக பெண்கள் மீது விழுகிறது, மேலும் "இளம் பருவப் பெண்கள் உட்பட சராசரியாக 54 சதவீத கிராமப்புறப் பெண்கள், தினமும் 35 நிமிடங்கள் தண்ணீரை எடுத்து வரச் செலவிடுகிறார்கள்" என்று UNICEF அறிக்கை தெரிவித்துள்ளது. அதாவது இது, ஒரு வருடத்தில் 27 நாட்கள் ஊதிய இழப்புக்கு சமம் ஆகும், என்கிறது.
"ஆண்கள் வேலைக்கு [வெளியே] செல்ல வேண்டும், எனவே நாங்கள் தான் சமைக்க தண்ணீர் கொண்டு வர வேண்டும். காலையில், அடி பம்பில், மிகவும் கூட்டமாக இருக்கும்,” என்கிறார் சிந்தா தேவி. "மதியம், குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும், பின்னர் மாலையில், இரவு உணவு சமைப்பதற்கு தண்ணீர் தேவைப்படுகிறது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த தலித் குடியேற்றத்தின் ஒரே நீர் ஆதாரம் ஒரு சம்பகல் (அடி பம்பு) ஆகும். அங்கு தண்ணீருக்காக வரிசை நீண்டு நிற்கிறாது. “இவ்வளவு பெரிய தோலாவில் [குடியேற்றத்தில்] ஒரே ஒரு அடி பம்பு மட்டுமே உள்ளது. நாங்கள் டோக்னா-பல்டியை [பாத்திரங்களை] சுமந்து கொண்டு வரிசையில் நிற்கிறோம்,” என்கிறார் சுசீலா தேவி.
கோடைக்காலத்தில் அடி பம்பு வறண்டு போகும் போது, இப்பெண்கள், வயல்களுக்குச் சென்று பயிர்களுக்கு பாசனம் செய்யும் தண்ணீரை எடுத்து வருகின்றனர். "சில நேரங்களில், ஒரு கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டியிருப்பதால், தண்ணீர் எடுப்பதற்கு நிறைய நேரம் வீணாகிறது,” என்கிறார் 45 வயதான சுசீலா தேவி.
"கர்மி பட்தா ஹை தோ ஹம் லோகோன் கோ ப்யாசே மர்னே கா நௌபத் ஆ ஜாதா ஹை [கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, தாகத்தால் இறக்கும் சூழல் உருவாகிறது]," என்று மாலை உணவைத் தயாரிக்கத் தொடங்கும் போது, அவர் கோபமாகக் கூறுகிறார்.
இது காஷ்மீரில் முஸாமில் பட், மேற்கு வங்கத்தில் ஸ்மிதா கடோர், பீகாரில் உமேஷ் கே ரே, மகாராஷ்டிராவில் மேதா காலே மற்றும் ஜோதி ஷினோலி, மற்றும் சத்தீஸ்கரில் புருசோத்தம் தாக்கூர் ஆகியோரால் தொகுக்கப்பட்ட பாரி பன்மாநிலக் கதை ஆகும். பாடல்களை, பாரி கிரைண்ட்மில் சாங்ஸ் ப்ராஜெக்ட் மற்றும் சாங்ஸ் ஆஃப் தி ரண் திட்டத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது: கச்சியின் நாட்டுப்புறப் பாடல்களை, நமிதா வைக்கர் மற்றும் பிரதிஷ்தா பாண்டியா ஆகியோர் தொகுத்து வழங்கியுள்ளனர் . சன்விதி ஐயர் இதற்கான கிராபிக்ஸை உருவாக்கியுள்ளார்.
அட்டைப்படம்: புருசோத்தம் தாக்கூர்
தமிழில் : அஹமத் ஷ்யாம்