“என்னை பலமுறை யானைகள் துரத்தியுள்ளன. ஆனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை,” என்கிறார் மகிழ்ச்சியுடன் ரவிக்குமார் நேதம்.
கோண்டு பழங்குடியைச் சேர்ந்த 25 வயதாகும் அவர் அர்சிகன்ஹார் வனத்தொடரின் காட்டுப் பாதையில் நடந்து செல்கிறார். சத்திஸ்கரில் உள்ள உதந்தி சீதாநதி புலிகள் காப்பகத்தில் யானை கண்காணிப்பாளரான அவர் யானைகளின் கழிவுகள், கால்தடங்களைக் கொண்டு எவ்வாறு கண்காணிப்பது என்பதை அறிந்துள்ளார்.
“நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் இந்த காட்டில் தான். இதுபற்றி அறிய நான் பள்ளிக்கு செல்ல வேண்டிய தேவையில்லை,” என்கிறார் தம்தாரி மாவட்டம் தேனாஹி கிராமத்தைச் சேர்ந்த ரவி. 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர் வனத்துறையின் தீயணைப்பு வீரராக நான்கு ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்து, இப்போது கண்காணிப்பாளராக உள்ளார்.
கண்காணிப்பாளர்கள் எங்களை வனத்திற்குள் அழைத்துச் சென்றபோது பூச்சிகளின் ரீங்காரமும், குங்கிலியம் (ஷோரியா ரோபஸ்டா), தேக்கு (டெக்டோனா கிரான்டிஸ்) மரங்களில் காற்றின் சலசலப்பு ஒலியும் கேட்கிறது. அவ்வப்போது பறவைகளின் கூக்குரலும், கிளைகள் முறியும் சத்தமும் கேட்கிறது. தென்படும் தடயங்களுடன் ஒலிகளுக்கும் யானை கண்காணிப்பாளர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.












