அஞ்சான் கிராமத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் ஒரு புனிதக் குன்றில் புள்ளிகளாக வெள்ளை மற்றும் காவிக் கொடிகள். இயற்கை வழிபாடான சர்ணா நெறியை பின்பற்றும் ஓராவோன் போன்ற பழங்குடி சமூகங்கள் வைத்தவை வெள்ளைக் கொடிகள். ஜார்க்கண்டின் கும்லா மாவட்ட மலையுச்சியில் 1985ம் ஆண்டு அனுமன் கோவிலை கட்டிய இந்துக்கள் வைத்தவை காவிக்கொடிகள். இந்துக் கடவுளின் பிறப்பிடம் அது என அவர்கள் கூறுகின்றனர்.
மூங்கில் கதவில் இருக்கும் இரண்டு பெரிய பேனர்களில் இரண்டு கமிட்டிகளின் பெயர்கள் இருந்தன. வனத்துறையுடன் இணைந்து நடத்தப்படும் கும்லா வன பிரபந்தன் மண்டல் மற்றும் அஞ்சானின் மக்கள் (ஒன்றாக சன்யுக்த் கிராம வன பிரபந்தன் சமிதி என அழைக்கப்படுகிறது) இப்பகுதியின் புனித யாத்திரைகளை 2016ம் ஆண்டிலிருந்து மேற்பார்வையிட்டு வருகிறது. இந்துக்களால் 2019ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட அஞ்சன் தம் மந்திர் விகாஸ் சமிதி, இங்கிருக்கும் கோவிலை பார்த்துக் கொள்கிறது.
நுழைவாயிலைக் கடந்ததும் இரண்டு படிக்கட்டுகள் எதிர்ப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழிபாட்டு பகுதிக்கு செல்கிறது. ஒன்று மலையுச்சியில் இருக்கும் அனுமன் கோவிலுக்கு செல்கிறது. இன்னொன்று இந்து கோவில் வருவதற்கு முன்னிருந்து பழங்குடி பஹான்கள் வழிபடும் இரண்டு குகைகளுக்கு செல்கிறது.
இரு வேறு குழுக்கள் இயக்கும் இரு வேறு கடவுளருக்கான நன்கொடை உண்டியல் அவரவரின் வழிபாட்டு இடத்துக்கருகே இருக்கிறது. ஒன்று குகையருகேயும் ஒன்று கோவிலருகேயும். மூன்றாவதாக ஒன்று முற்றத்தில் இருக்கிறது. அது, பஜ்ரங்தளத்துக்கு சொந்தமானது. இந்த உண்டியலின் நிதி, துறவிகளுக்கான விருந்துக்கான செவ்வாய்க்கிழமை பந்தாராவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இன்னொன்றும் மலையடிவாரத்தில் கிராமத்துக்கருகே இருக்கிறது. பழங்குடியினர் பூஜை செய்யவும் பூஜைக்கான பொருட்கள் வாங்கவும் அது உதவுகிறது.
“இது முழுக்க பழங்குடி பகுதி. அஞ்சானில் முன்பு புரோகிதர்கள் இருந்ததில்லை.” முன்னாள் ஊர்த்தலைவரான 42 வயது ராஞ்செய் ஒராவோன், விந்தையான வழிபாட்டு முறைகளை பார்த்து நான் ஆர்வத்துடன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கிறார். “சமீபத்தில்தான் பனாரஸிலிருந்து புரோகிதர்கள் இங்கு வந்திருக்கின்றனர். ஒராவோன் பழங்குடியினர், பல வருடங்களாக அஞ்சானி தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர். அவர் அனுமனுக்கு சொந்தக்காரர் என்பது எங்களுக்கு தெரியாது,” என்கிறார் அவர்.
“புரோகிதர்கள் வந்தார்கள். அனுமனின் தாய்தான் அஞ்சானி என்கிற கருத்தை பிரபலப்படுத்தினார்கள்,” என்கிறார் ராஞ்செய். “பிறகு அஞ்சான், அனுமனின் பிறப்பிடமாக அறிவிக்கப்பட்டது. யாருக்கும் எதுவும் புரிவதற்கு முன்பே, மலையுச்சியில் அனுமன் கோவிலும் முளைத்துவிட்டது. அதற்கு பெயர் அஞ்சன் தம் என்றும் சூட்டப்பட்டுவிட்டது.
பழங்குடிகள் கோவில் கேட்கவில்லை, என்கிறார் அவர் என்னிடம். அதிகாரத்தில் இருக்கும் துணைப் பிரிவு அலுவலரின் வேலை அது. ஜார்க்கண்ட் அப்போது பிகாரின் பகுதியாக இருந்தது.
கோவில் நிர்மாணிக்கப்பட்டதற்கான காரனமாக அஞ்சானில் இருக்கும் அனுமன் கோவில் புரோகிதர் ஒரு சுவாரஸ்யமான கதையை சொல்கிறார். “என்னுடைய தாத்தா, மாணிக்நாத் பாண்டேவுக்கு ஒரு கனவு வந்தது. அதில் இந்த மலையின் குகைகள் ஒன்றில் அனுமன் பிறந்த காட்சி வந்தது,” என்கிறார் 46 வயது புரோகிதர். கோவில் விவகாரங்களை பார்த்துக் கொள்ள ஊரில் இருக்கும் இரு புரோகிதர் குடும்பங்களில் ஒன்றை சேர்ந்தவர் அவர்.
அதற்குப் பிறகிலிருந்து அவருடைய தாத்தா மலைக்கு சென்று பிரார்த்திப்பதையும் ராமாயணம் வாசிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டார் என்கிறார் அவர். “கவுதம முனிவருக்கும் அவரது மனைவி அகல்யாவுக்கும் பிறந்தவள்தான் அஞ்சனா.” தாத்தா சொன்ன கதையை நமக்கு சொல்கிறார் அவர். “சபிக்கப்பட்டு அவள் இந்த தெரியாத மலைக்கு வந்தாள். அவளுடைய பெயரையே இந்த இடமும் பெற்றது. அஞ்சனா மலை என அழைக்கப்பட்டது. அவளொரு சிவபக்தை. ஒரு நாள் சிவன், அவளுக்கு முன் பிச்சைக்காரர் போல தோன்றி, சாபத்திலிருந்து விடுவிக்க காதில் ஒரு மந்திரத்தை சொன்னார். அந்த மந்திரத்தின் சக்தியில்தான் அனுமர், அவளின் வயிற்றிலிருந்து அல்லாமல், தொடைகளிலிருந்து பிறந்தார்.
”அந்த நாட்களில் ரகுநாத் சிங்தான் கும்லாவின் SDO (துணைப்பிரிவு அலுவலராக) இருந்தார். என் தந்தைக்கு அவர் நெருங்கிய நண்பர். இருவரும் மலையுச்சியில் அனுமர் கோவில் இருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தனர். முதலில் பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆட்டை பலி கொடுத்தனர். ஆனாலும் கோவில் கட்டப்பட்டது. இப்பகுதி அஞ்சனா தம் என அறிவிக்கப்பட்டது,” என்கிறார் அவர் எந்தக் கவலையுமின்றி.
அஞ்சான் கிராமத்தின் பெயர், பழங்குடி தெய்வமான அஞ்சானியம்மா என்கிற பெயரிலிருந்து வந்தது. கிராமத்தை சுற்றியிருக்கும் மலைகளில் தங்கியிருப்பதாக கருதப்படும் இயற்கையின் சக்தியைதான் பழங்குடியினர் அஞ்சானியம்மா எனக் குறிப்பிடுகின்றனர். நூற்றுக்கணக்கான வருடங்களாக அவர்கள் குகைகளில் தெய்வத்துக்கு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
”பல வருடங்களாக மலையின் பாறைகளை மக்கள் கும்பிட்டுக் கொண்டிருந்தனர்,” என்கிறார் 50 வயது கிராமவாசியான மகேஷ்வர் ஒராவோன். “இது இயற்கைக்கான வழிபாடு. அனுமார் இந்த மலையில் பிறந்தார் என்கிற கதை பிறகுதான் பரப்பப்பட்டது.”
பிர்சா ஒராவோன்தான் ஊர்த் தலைவர். அறுபது வயதுகளில் இருக்கும் அவர், அனுமன் கோவில் கட்டப்பட்டதை பார்த்திருக்கிறார். “பழங்குடியினர் இந்துக்கள் இல்லை,” என்கிறார் அவர் தீர்மானகரமாக. “அஞ்சான் கிராமத்தின் பெரும்பான்மை மக்களான ஒராவோன் பழங்குடியினர், சர்ணா மதத்தை பின்பற்றுகின்றனர். மரங்கள், மலைகள், ஆறுகள், ஊற்றுகள் என மொத்த இயற்கையும் சர்ணா நெறியில் வழிபடப்படுகிறது. எங்களின் வாழ்க்கைக்கு உதவும் இயற்கையின் எல்லா விஷயங்களையும் நாங்கள் வணங்குகிறோம்.”
கிராம மக்கள் அடிப்படையில் இயற்கை வழிபாடான சர்ணா நெறியை பின்பற்றுபவர்கள் என்கிறார் ரமானி ஒராவோன். “எங்களின் மக்கள் இயற்கையுடன் தொடர்பு கொண்ட சராகுல் (இலையுதிர் காலம்) விழா, கரம் (அறுவடை விழா) விழா போன்றவற்றை கோலாகலமாக கொண்டாடுவோம். கோவில் கட்டப்படுவதற்கு முன் எங்களுக்கு அனுமனை தெரியாது. நாங்கள் மலைகளை வழிபட்டோம். சில கற்களை கொண்டிருக்கும் ஒரு குகை அங்கு இருக்கிறது. நாங்கள் அவற்றை வழிபட்டோம்,” எனச் சுட்டிக் காட்டுகிறார் அதே கிராமத்தை சேர்ந்த 32 வயதுக்காரர். “பிறகு, அனுமர் பிரபலமாகி விட்டார். இந்த கோவில் வந்தது. வெவ்வேறு இடங்களிலிருந்து மக்கள் வந்து இந்த கோவிலில் கும்பிடத் தொடங்கினர். அப்போதுதான் சில பழங்குடியினரும் அனுமனை வழிபடத் தொடங்கினர்,” என்கிறார் அவர்.
அஞ்சானின் ஒரு பழங்குடி வழிபாட்டுப் பகுதியை இந்து கோவில் ஆக்கிரமித்த கதை புதியதும் இல்லை, ஆச்சரியத்துக்குரிய விஷயமுமில்லை என்கிறார் ரனேந்திர குமார். ஜார்க்கண்டின் பிரபலமான கதை சொல்லியும் நாவல் எழுத்தாளரும் 64 வயது நிறைந்தவருமான அவர், “பல பழங்குடி பெண் தெய்வங்கள் வேத சமூகத்தின் அங்கமாக தொடக்க காலத்திலிருந்தே அபகரிக்கப்பட்டு வருகிறது,” என்கிறார்.
“முதலில் பழங்குடிகளிடமிருந்து பெண் தெய்வங்களை பவுத்தர்கள் கைகொண்டனர். பிறகு அவை இந்து மதத்தின் அங்கமானது. சட்டீஸ்கரின் தெய்வங்களான தாரா, வஜ்ரா தகினி, தந்தேஸ்வரி எல்லாம் பழங்குடி தெய்வங்கள்,” என்கிறார். “பொய்யான ஒற்றுமைகளை பிரசாரம் செய்து பழங்குடிகளை இந்து மதத்துக்குள் ஈர்த்துக் கொண்டிருக்கின்றனர்.”
ஜார்க்கண்டின் குருக் மொழி பேராசிரியரான டாக்டர் நாராயண் ஒராவோன், இன்றும் தொடரும் கட்டாய ஆக்கிரமிப்பு மற்றும் பண்பாட்டு அபகரிப்பு பற்றி விளக்குகிறார். “சிறு மண் சிலைகளும் மரையும், மத விழாக்களுக்கான திறந்த வெளிகளும் இந்துக்களுக்கான தேவி மண்டபங்களாகவும் கோவில்களாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன.” கோவில் கட்டப்பட்டுவிட்டால், பக்தர்கள் கூட்டம் வரும். பழங்குடியினர், தங்களின் வழிபாட்டை தொடர முடியாமல் போய்விடும்.
“ராஞ்சி பகாதி மந்திர், ஹர்மு மந்திர், அர்கோரா மந்திர், கன்கே மந்திர், மொராபடி மந்திர் ஆகியவை இதற்கான உதாரணங்கள்,” என்கிறார் அவர். “இன்றும் கூட இந்தக் கோவில்களுக்கு அருகே பழங்குடி வழிபாடை காண முடியும். குழு கொண்டாட்டத்துக்கும் பழங்குடியினர் பிரார்த்தனைக்கும் பயன்படுத்தப்பட்ட மைதானங்கள் இப்போது துர்கா பூஜைக்கும் வணிக சந்தைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஒராவோன் - முண்டா மக்கள் வழிபட்டு, தம் விழாக்களை கொண்டாடி வந்த, ராஞ்சியின் அர்கோராவுக்கு அருகே இருக்கும் மைதானத்தை சொல்லலாம்.”
ராஞ்சியின் அருகே இருக்கும் தியோரி மந்திரை பற்றி சொல்கிறார் குஞ்சால் இகிர் முண்டா. அங்கு முன்பு கோவில் இருந்ததில்லை என்றும் அவரின் உறவினர்கள்தான் பல காலமாக அங்கிருக்கும் பழங்குடியினருக்கு பூஜை நடத்தியதாகவும் சொல்கிறார். “ஒரு கல் மட்டும் இருந்தது. பல வருடங்களாக முண்டா பழங்குடியினர் அங்கு வழிபட்டு வந்தனர். கோவில் கட்டப்பட்ட பிறகு, இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் வழிபட வரத் தொடங்கினர். அப்பகுதியை அவர்களுக்கான பகுதியென குறிப்பிடத் தொடங்கினர். அப்பிரச்சினை பிறகு நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி தற்போது இரண்டு வழிபாடுகளும் அந்த இடத்தில் நடத்தப்படுகிறது. வாரத்தில் சில நாட்கள் பஹான் பூஜை, பழங்குடிகளுக்காக நடக்கும். பிற நாட்களில் இந்துக்களுக்கு புரோகிதர்கள் பூஜை செய்வார்கள்.”
மலையில் இரு வழிபாட்டு பகுதிகள் இருக்கின்றன. பழங்குடி பஹான்கள் இரு குகைகளில் சடங்குகள் செய்கின்றனர். மலையுச்சியில் இருக்கும் அனுமன் கோவிலில் இந்து புரோகிதர்கள் பூஜை செய்கின்றனர்
இது மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன.
பழங்குடிகளை இந்து மதத்துக்குள் கொண்டு வரும் முயற்சி பல ரகசியமான வழிகளில் முன்னெடுக்கப்படுகிறது. லோகாயுதா புத்தகத்தில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா முக்கியமான கேள்வி கேட்கிறார். 1874ம் ஆண்டின் மக்கள்தொகையில் வெறும் 10 சதவிகிதம் பேர் மட்டும்தான் வைதிக மதத்தை பின்பற்றியவர்கள் என்றால், எப்படி இந்துக்கள் பெரும்பான்மையினராக நாட்டில் மாறினர்? மக்கள்தொகை கணக்கெடுப்பில் விடை இருக்கிறது.
1871 தொடங்கி 1941ம் ஆண்டு வரையிலான மக்கள்தொகை கணக்கெடுப்புகள், பழங்குடி மதங்களை வெவ்வேறு தலைப்புகளில் குறிப்பிடுகின்றன. உதாரணமாக பூர்வக்குடிகள், தொல்குடியினர், பழங்குடிகள், ஆன்மவாதிகள் போன்றவை. ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் கணக்கெடுப்பான 1951ம் ஆண்டின் கணக்கெடுப்பு, பல்வேறு வழிபாட்டு பாரம்பரியங்களையும் பழங்குடி மதம் என்கிற ஒரு புதிய வகைக்குள் கொண்டு வந்தது. 1961ம் ஆண்டில், அதுவும் அகற்றப்பட்டது. இந்து, கிறித்துவர், சமணர், சீக்கியர், இஸ்லாமியர், பவுத்தர் ஆகியவற்றோடு ‘பிறவை’ எனக் குறிப்பிடப்பட்டு சேர்க்கப்பட்டது.
விளைவாக 2011ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு, 0.7 சதவிகிதம் பேரை “பிற மதங்கள் மற்றும் வழிபாடுகளை சேர்ந்தவர்கள்” எனக் குறிப்பிடுகிறது. நாட்டின் பட்டியல் பழங்குடி விகிதமாக குறிப்பிடப்பட்டிருக்கும் 8.6 சதவிகிதத்தில் இது மிகவும் குறைந்த அளவு.
1931ம் ஆண்டிலேயே ஒரு கணக்கெடுப்பு அறிக்கை யில், இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஆணையரான ஜே.ஹெச்.ஹட்டன், பழங்குடி மதங்களுக்குக் கீழ் வரும் எண்ணிக்கை பற்றிய தன் கவனத்தை குறிப்பிட்டிருக்கிறார். “அங்கீகரிக்கப்பட்ட மதத்துக்குள் இல்லையென எவரும் சொன்னால், உடனே எந்தக் கேள்வியுமின்றி ‘இந்து’ மதத்துக்குள் பதிவிடும் வழக்கம் இருக்கிறது,” என எழுதுகிறார். “அந்த எண்ணத்துக்கான காரணம் இதுதான். இந்த நிலம் இந்துஸ்தான் என அழைக்கப்படுகிறது. இந்துக்களின் நாடு. வேறு மதத்தை சார்ந்தவர்களாக குறிப்பிடாமல், இங்கு வாழும் அனைவரும் இந்துக்களாகதான் இருக்க முடியும்.”
*****
”கணக்கெடுப்பில் பழங்குடிகள் எங்களின் மதத்தை எப்படி பதிவு செய்ய முடியும்?”
அஞ்சான் கிராமத்தின் பிரமோத் ஒராவோன் கேட்கும் கேள்வி அதுதான். ”அதற்கான இடம் போய்விட்டது,” என விளக்குகிறார். “எங்களுக்கு தெரியாமலே எங்களில் பலர் இந்துக்களுக்கு கீழே பதிவு செய்துவிட்டோம். ஆனால் நாங்கள் இந்துக்கள் இல்லை. இந்து மதத்தின் மையமே சாதி அமைப்புதான். அதில் எங்களால் பொருந்த முடியாது.”
40 வயதாகும் அவர், “நாங்கள் இயற்கையை வழிபடுபவர்கள். எங்களின் உலகப் பார்வை பரந்து விரிந்தது. புதியவற்றை ஏற்கும் தன்மை கொண்டது. அதில் வெறி கிடையாது. அதனால்தான் எங்களில் சிலர் இந்து மதத்தையோ இஸ்லாமையோ கிறித்துவ மதத்தையோ தழுவினாலும், மதத்தின் பெயரால் யாரையும் நாங்கள் கொல்வதில்லை. எங்கள் மக்கள் மலைக்கு சென்று அனுமனை வழிபட்டாலும் அவர்களை நாங்கள் இந்துக்கள் என சொல்வதில்லை,” என்கிறார்.
அஞ்சானை சேர்ந்த பிர்சா ஒராவோன், “பழங்குடிகள் திறந்த மனம் கொண்டவர்கள். எதற்கும் ஒத்துப் போகிறவர்கள். அவர்களின் நம்பிக்கைகளையும் தத்துவத்தையும் யார் அபகரிக்க முயன்றாலும் ஏதும் சொல்ல மாட்டார்கள். அவர்களுடன் யார் பழகினாலும் பிரச்சினை கிடையாது. அவர்களை அவர்கள் மதிக்கதான் செய்வார்கள். இப்போது நிறைய இந்துக்கள் அஞ்சான் தம்முக்கு அனுமனை வழிபட வருகின்றனர். இஸ்லாமியர்களும் தம்மை பார்க்க வருகின்றனர். அனைவருக்கும் கதவு திறந்தே இருக்கிறது. பல பழங்குடிகள் இரு கடவுளரையும் இப்போது வழிபடுகின்றனர். மலைக்குகையையும் வழிபடுகின்றனர். கோவில் அனுமனையும் வழிபடுகின்றனர். ஆனால் அவர்கள் இன்னும் பழங்குடிகளாகதான் தங்களை கருதுகிறார்கள், இந்துக்களாக அல்ல.
அனுமன் வழிபாடு பற்றிய பிரச்சினை சிக்கலானது.
”பழங்குடிகள் இங்கு ராமனையோ லஷ்மணையோ வழிபடுவதில்லை,” என விளக்குகிறார் கிராமத்தை சேர்ந்த மகேஷ்வர் ஒராவோன். “ஆனால் அனுமன் ஆதிக்க சாதியை சேர்ந்தவராக மக்கள் கருதவில்லை. அவரும் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்தான். அவருக்கு மனித முகத்தைக் கொடுத்து, விலங்கு தோற்றம் கொடுத்து, ஆதிக்க சாதி மற்றும் மத சமூகங்கள் பழங்குடிகளையும் அனுமனை கேலி செய்தது போலவே கேலி செய்கின்றன.”
அனுமன் ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவராக மக்கள் கருதாததால்தான், அவரை பற்றி புரோகிதர்கள் சொன்னவற்றை மக்கள் ஏற்றுக் கொண்டதாக ராஞ்செய் ஒராவோன் கூறுகிறார். “அவர்களில் ஒருவராக இருந்திருந்தால் அவருக்கு வால் இருந்திருக்காது,” என்கிறார் அவர். “அவர் பழங்குடி என்பதால்தான் அவரை விலங்காக சித்தரித்திருக்கிறார்கள். அதனால்தான் அஞ்சானியம்மா அனுமனுக்கு உறவு என சொல்லப்பட்டபோதும் இங்கிருக்கும் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.”
கிராமத்தின் தலைவரான 38 வயது கர்மி ஒராவோன், வருடாந்திர பூஜைக்காக மொத்த கிராமமும் மலைக்கு போகும் வழக்கத்தை நினைவுகூருகிறார். “அச்சமயத்தில் அங்கு குகைகள் இருந்தன. அங்கு மக்கள் சென்று, மழைக்காக வேண்டுவார்கள். இப்போதும் நாங்கள் அந்த பழக்கத்தை பின்பற்றுகிறோம். குழு பூஜை செய்தபிறகு இங்கு எப்படி மழை தொடர்ந்து பெய்கிறது எனப் பாருங்கள்.
“இப்போதெல்லாம் மலையில் கோவில் இருப்பதால் மக்கள் அதை சுற்றி வரவும் செய்கிறார்கள். சில பழங்குடிகள் கோவிலுக்குள் கூட வழிபடுகிறார்கள். சமாதானம் கிடைக்கும் இடத்துக்கு எவரும் செல்ல முடிகிறது,” என்கிறார் அவர்.
இந்துக்களாக தங்களை நினைத்துக் கொள்வதில்லை என கிராமத்தின் பிற பெண்களும் சொல்கின்றனர். ஆனால் அவர்களில் சிலர் கோவிலுக்கும் சென்று வழிபடுகின்றனர். “மலை மீது கோவில் இருந்தால், அது மலையின் அங்கமாகி விடுகிறது. அனுமனை புறக்கணித்துவிட்டு மக்கள் எப்படி மலையை கும்பிட முடியும்? இரு கடவுளரும் ஒன்றாக செயல்பட்டு எங்களுக்கு நல்ல மழையை கொண்டு வந்தால் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது?”
தமிழில் : ராஜசங்கீதன்