“படிப்பதற்கு எனக்கு பொறுமை இல்லை,” என்கிறார் பார்த்தா பிரதிம் பருவா. மஜுலியின் கராமுருக்கு, நவம்பர் மாத மதியப்பொழுது ஒன்றில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். “படித்து வேலை பெற முடியாதென எனக்கு தெரியும்,” என்கிறார் அவர். கராமுரின் சாரு சத்திரத்தில் இயங்கும் இளம் கயான்-பயான்களில் 16 வயதான அவரும் ஒருவர்.
சத்ரிய பண்பாட்டின் முக்கியமான அம்சமான கயான்-பயான், அஸ்ஸாமின் (வைணவ மட) சத்திரங்களில் பிரதானமாக நடக்கும் மதம் சார்ந்த நாட்டுப்புற கலை ஆகும். சிங்கிகளுடன் பாடும் பாடகர்கள் கயான்கள் எனப்படுகின்றனர். கோல் மேளங்களையும் புல்லாங்குழலையும் வாசிக்கும் வாத்தியக்காரர்கள் பயான் என அழைக்கப்படுகிறார்கள். மஜுலியில் கயானோ பயானோ வேலை அல்ல; அந்த மக்கள் பெருமையுடன் கடைப்படிக்கும் பாரம்பரியமும் அவர்களின் அடையாளத்தின் ஒரு பகுதியும் ஆகும்.
“பள்ளிக்கு பிறகு எனக்கு வேலை கிடைக்கவில்லை எனில், என் விதியில் அது இல்லை எனில், நான் என்ன செய்ய முடியும்?” என இயல்பாக கேட்கிறார் பார்த்தா. 12ம் வகுப்பு தேர்வுக்கு பிறகு அவர் இசையை கற்க விரும்புகிறார். அவரின் அக்கா ஏற்கனவே உத்தரப்பிரதேச கிராமம் ஒன்றில் இசை ஆசிரியையாக இருக்கிறார்.
“என் பெற்றோரும் கவுஹாத்தியில் இசைப்பள்ளியில் சேருவதற்கான யோசனைக்கு ஆதரவாக இருந்தன,” என்கிறார் அவர். “அந்த ஆதரவு மிகவும் முக்கியம். அது இல்லாமல், எப்படி நான் இசை கற்க முடியும்?” அரிசியும் விறகும் விற்கும் சிறு கடையின் உரிமையாளரான அவரின் தந்தை, யோசனைக்கு ஒப்புக் கொண்டாலும் அம்மாவுக்கு சந்தோஷம் இல்லை. தூரமாய் சென்று பார்த்தா படிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை.
நிகழ்ச்சியின்போது பார்த்தா வெண்ணிற குர்தாக்களையும் வேட்டிகளையும் தலைப்பாகையும் அணிவார். செலெங் என சொல்லப்படும் துணியையும் உடலைச் சுற்றி கட்டிக் கொள்வார். பங்குபெறுபவர்கள் மொட்டாமொனி மணிகளும் சந்தன திலகமும் நெற்றியில் அணிவார்கள்.
நிகழ்ச்சியில் பங்கெடுத்து நான் நேர்காணல் செய்த பல இளைய கலைஞர்களில் பார்த்தாவும் ஒருவர். மேடையின் பின்புறம் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஒருவருக்கொருவர் பாகை அணியவும் செலெங்கில் பின் குத்தியும் உதவுகின்றனர்.




























