நான் வளர்ந்த மாஸ்வாதில், நீருக்கான அன்றாடப் போராட்டத்தை நேரடியாக நான் பார்த்திருக்கிறேன்.
இப்பகுதி மான் தேஷ் மகாராஷ்டிராவின் மையத்தில் இருக்கிறது. நாடோடிப் பழங்குடியான தங்கர் மேய்ப்பர்கள் இங்கு பல நூற்றாண்டுகளாக சுற்றி திரிந்திருக்கின்றனர். தக்காண பீடபூமியின் வறண்ட பரப்பில் அவர்கள் பிழைத்ததற்கு, நீராதாரத்தை கண்டுபிடிக்க அவர்கள் கொண்டிருந்த அறிவுதான் காரணம்.
பானைகளில் நீர் நிரப்ப காத்திருக்கும் பெண்களின் வரிசையை பல ஆண்டுகளாக நான் பார்த்திருக்கிறேன். 12 நாட்களுக்கு ஒருமுறை, ஒரு மணி நேரத்துக்குதான் மாநில அரசு நீர் கொடுக்கிறது. வாரச்சந்தையில் விவசாயிகள் நீர் சார்ந்த பிரச்சினைகளை பேசுகின்றனர். ஆழமாக தோண்டியும் கிணறுகளில் நீர் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் மாசாக இருக்கிறது, சிறுநீரக கல் போன்ற உடல் உபாதைகளை கொடுக்கிறது.
இத்தகைய துயரச் சூழலில் விவசாயத்துக்கு வாய்ப்பே இல்லை. கிராமத்து இளைஞர்கள் மும்பை போன்ற பெருநகரங்களுக்கு புலம்பெயர்கின்றனர்.
கார்கெல்லை சேர்ந்த கெயிக்வாட் என்னும் விவசாயி, தன் மாடுகள் எல்லாவற்றையும் விற்று விட்டு, தற்போது ஆடுகளை மட்டும் வைத்திருக்கிறார். அவரின் நிலங்கள் காய்ந்திருக்கிறது. அவரின் மகன்கள் கூலி வேலைக்காக மும்பைக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். அறுபது வயதுகளில் இருக்கும் கெயிக்வாட் மனைவி மற்றும் பேரக் குழந்தைகளுடன் வாழ்கிறார். இறப்பதற்கு முன் நீர் கிடைத்து விடுமென நம்புகிறார். மொத்த குடும்பமும் தாங்கள் குளித்த நீரைதான் பாத்திரம் கழுவவும் துணி துவைக்கவும் பயன்படுத்துகிறது. அதே நீர்தான் வீட்டுக்கு வெளியே வரும் மாமரத்துக்கும்.
சதாரா மாவட்டத்தின் மான் பகுதியில் பயணித்து, நெடிய நீர் பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் துயரக் கதைகளையும் அவர்களுக்கு நீர் சப்ளை செய்பவர்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்துகிறது நீருக்கான தேடல் படம்.
தமிழில்: ராஜசங்கீதன்