சந்தோஷி கோரி, உரிமையாளருக்கான புதிய உணர்வை அனுபவிக்கிறார். “விவசாயி கூட்டுறவு நிறுவனத்தை பெண்களாகிய நாங்கள்தான் உருவாக்கினோம். இப்போது எங்கள் ஊரின் ஆண்கள் இது நல்ல முன்னெடுப்பு என ஒப்புக் கொள்கிறார்கள்,” என்கிறார் சிரித்தபடி.
பைராஹா பஞ்சாயத்தின் குச்சாரா கிராமத்தை சேர்ந்த தலித் விவசாயியான அவர், ருஞ்ச் மகளிர் உற்பத்தியாளர் கூட்டுறவு (MFPO) உறுப்பினர் சந்தா 1,000 ரூபாய் கட்டியிருக்கிறார். ஜனவரி 2024ம் ஆண்டிலிருந்து பன்னா மாவட்டத்தின் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி பெண்கள் 300 பேர் அங்கு பதிவு செய்திருக்கின்றனர். ருஞ்சின் ஐந்து மேலாளர்களில் சந்தோஷி ஒருவர். கூட்டங்களில் பேச அவர் அழைக்கப்படுகிறார்.
“முன்பெல்லாம் பிச்சோலியா (வணிகர்) வந்து எங்களின் அரார் தால் (துவரை விதை) அரைக்கப்படாததால், குறைந்த விலைக்கு வாங்குவார். பிறகு அவர் நேரத்துக்கு வருவதில்லை. எங்களுக்கு பணம் நேரத்துக்கு வந்ததில்லை,” என்கிறார் அவர் பாரியிடம். மூன்று குழந்தைகளுக்கு தாயான அந்த 45 வயது பெண், இரண்டு ஏக்கர் மானாவாரி நிலத்தில் துவரை வளர்க்கிறார். குத்தகைக்கு ஒரு ஏக்கர் நிலமும் எடுத்திருக்கிறார். நாட்டிலேயே 11 சதவிகித பெண்களுக்குதான் சொந்தமாக நிலம் இருக்கிறது. மத்தியப்பிரதேசம் விதிவிலக்கல்ல.
யமுனையில் கலக்கும் பகைன் ஆற்றின் துணை ஆறான ருஞ்ச் ஆற்றின் பெயர் சூட்டப்பட்டிருக்கும் ருஞ்ச் MFPO, அஜய்கர் மற்றும் பன்னா ஒன்றியத்தின் 28 கிராமங்களை சேர்ந்த பெண் விவசாயிகளின் கூட்டுறவு நிறுவனம் ஆகும். ஆறு மாதமாக இயங்கி வரும் நிறுவனத்தில் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏற்கனவே லாபம் கிடைத்திருக்கிறது. அடுத்த வருடத்தில் அது இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.










