சுனிதா பர்குடேவின் தாய்மொழி கொலாமி. ஆனால் இந்தப் பருத்தி விவசாயி, நாளின் பெரும்பாலான நேரம் மராத்தியில்தான் பேசுகிறார். “எங்களின் பருத்தியை விற்க, சந்தை மொழி நாங்கள் தெரிந்திருக்க வேண்டும்,” என்கிறார் அவர்.
மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் வளர்ந்த அவரின் கொலாம் பழங்குடி குடும்பத்தினர், வீட்டில் கொலாமி பேசுகின்றனர். சூர் தேவி கிராமத்தில், தான் பிறந்த வீட்டில் தாத்தா, பாட்டி உள்ளூர் மொழியான மராத்தியைப் பேச சிரமப்பட்டதை சுனிதா நினைவுகூருகிறார். “அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை, திக்கி திணறி மராத்தி மொழி பேசினார்கள்,” என்கிறார் அவர்.
குடும்ப உறுப்பினர்கள் பருத்தி விற்க அதிகமாக உள்ளூர் சந்தைகளுக்கு செல்லத் தொடங்கியதில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டனர். புல்காட் கிராமத்தில் இருக்கும் எல்லா கொலாம் பழங்குடிகளும் இப்போது பல மொழிகளையும் பேசுவார்கள். மராத்தி பேசுவார்கள். கொஞ்சம் இந்தி. பிறகு நிச்சயமாக கொலாமி.
மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, சட்டீஸ்கர் ஆகிய இடங்களில் அதிகம் பேசப்படும் திராவிட மொழி கொலாமி. யுனெஸ்கோவில் அருகி வரும் உலக மொழிகளுக்கான புத்தகத்தில், ‘நிச்சயமாக அழிந்து வரும்’ வகையில் இம்மொழி சேர்க்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளால் தாய்மொழியாக கற்கப்படாத மொழிகளின் வகை அது.
“ஆனால் எங்களின் மொழி அழியவில்லை. நாங்கள் பயன்படுத்துகிறோம்,” என்கிறார் 40 வயது சுனிதா.














