பண்பாட்டறிவு மற்றும் சமூகப் போக்குகளின் வாகனமாக எப்போதும் நாட்டுப்புற பாடல்கள் இருந்து வருகின்றன. அவ்வப்போது பண்பாட்டு மாற்றம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றுக்கும் அவை பயன்படுகின்றன. நாட்டுப்புற பாடலின் வாய்மொழித் தன்மையும் ஒவ்வொரு முறை பாடப்படும்போது மாறக் கூடிய விதமும், சமூகப் பண்பாட்டில் கொண்டிருக்கும் அடித்தளமும் நாட்டுப்புற பாடல்வகைக்கு இத்தகைய நெகிழ்தன்மையை தருகின்றன
இங்கு வழங்கப்பட்டிருக்கும் பாடல், நாட்டுப்புற இசையின் மீட்டுருவாக்க சக்தியை உள்ளடக்கி, கிராமப்புற பெண்களின் வாழ்க்கை யதார்த்தம் குறித்த விழ்ப்புணர்வை அளிக்கிறது. கச்ச் மற்றும் அகமதாபாத் பகுதிகளின் பல பெண் கலைஞர்களால் பாடப்பட்டிருக்கும் இப்பாடல், உணர்ச்சிப்பூர்வமாக ஒரு சமூக விமர்சனத்தை முன் வைக்கிறது.
இப்பாடலின் சிறப்பம்சமாக பின்னணியில் இசைக்கப்படும் ஓர் இசைக்கருவி இருக்கிறது. ஜோதியா பவா அல்லது அல்கோசா என அழைக்கப்படும் இந்த இரு குழல் காற்றிசைக் கருவி, வடமேற்கு பகுதிகளான பாகிஸ்தானின் சிந்துப் பகுதியிலும் இந்தியாவின் கச்ச், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் பகுதிகளிலும் பாரம்பரியமாக இசைக்கப்படுகிறது.



