"இந்த கைகள் இசைக்க மட்டுமே," என்று சம்பல்பூரில் பழங்குடியினர் மற்றும் இசைக்கருவிகள் பற்றிய உரையாடல்களுடன் அமைக்கப்பட்ட புகா என்ற திரைப்படத்தை பார்த்த நாளை நினைவுக் கூர்கிறார் கிருஷ்ண சந்திர பாக்.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, படத்திலிருந்து ஒரு வசனத்தை பிழையின்றி க்ருஷ்ணா கூறுகிறார்: "எங்களிடம் உள்ள இந்த பழமையான தொழிலை [துல்துலி] கைவிட முடியாது. என் தந்தையோ, அவரது தந்தையோ ஒருபோதும் கூலி வேலைக்கு சென்றதில்லை."
துல்துலி என்பது ஒரு சம்பல்புரி நாட்டுப்புற இசை பாரம்பரியமாகும். ஒரு நிகழ்ச்சியின் போது ஐந்து தாள வாத்தியங்கள் மற்றும் துளை கருவிகளை இணைக்கிறது. திறன்மிக்க இசைக்கலைஞர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.
தன்னைப் போன்ற துல்துலி இசைக்கலைஞர்களைப் காண வைத்த திரைப்படங்களில் புகா முதலாவது என்று க்ருஷ்ணா கூறுகிறார். மேற்கு ஒடிசாவின் சம்பல்பூர் நகரில் வசிக்கும் இவர், தனது 50களில் மனைவி சுகந்தி பாக் மற்றும் அவர்களது மகன் க்ஷிதீஷ் பாக் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
காசியா [காசி] சமூகம் இசைக்கருவிகளை உருவாக்குகிறது. காண்டா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவற்றை வாசிக்கிறார்கள். இந்த இரண்டு சமூகத்தினரும் விலங்குகளின் தோல் கொண்டு வேலை செய்ததால், அவர்கள் புனிதமற்றவர்களாக கருதப்பட்டனர்," என்கிறார் க்ருஷ்ணா. "அவர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாக இருந்தது. எனவே அவர்கள் நடனம் மற்றும் இசைக்கருவிகளை வாசித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்." காசி மற்றும் காண்டா சமூகங்கள் ஒடிசாவில் பட்டியல் சாதியினராக (SC) பட்டியலிடப்பட்டுள்ளன (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011).
பயன்படுத்தப்படும் ஐந்து கருவிகளில், இந்த சமூகங்கள் டோல் மற்றும் நிஷான் ஆகியவற்றை உருவாக்குகின்றன. அவை விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட டிரம்ஹெட்களைக் கொண்டுள்ளன. நிஷான் இரண்டு பக்கங்களிலும் மான் கொம்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகளை உருவாக்குவதற்கு விலங்குகளின் தோல் மற்றும் கொம்புகளுடன் நுட்பமான வேலைப்பாடு தேவைப்படுகிறது. பாரம்பரியமாக தலித் சமூகங்களிடம் இந்த வேலைப்பாடு விடப்பட்டுள்ளது.












