"முதல் நாள், மஜிதான் என் கையை இப்படி அடித்தார்," என்று 65 வயதான கர்சாத் பேகம், அந்த தருணத்தை விளையாட்டாக நடித்துக் காட்டுகிறார். அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் மஜிதான் பேகம், அப்போது இன்னும் வேடிக்கையாக இருந்து, என்று தனது செயல்களை நியாயப்படுத்துகிறார். "ஆரம்பத்தில் நூல்களுடன் எவ்வாறு வேலை செய்வது என்று கர்சாத்திற்கு தெரியாது. நான் அவளை ஒரே ஒரு முறை அடித்தேன்," என்று கூறும் அவர், "பின்னர் அவள் விரைவாக கற்றுக்கொண்டாள்," என்கிறார்.
பஞ்சாபின் பதிண்டா மாவட்டத்தின் கண்டா பானா கிராமத்தில், மஜிதான் மற்றும் கர்சாத் ஆகிய வயதான பெண்கள் இருவரும் பருத்தி, சணல் மற்றும் பழைய துணிகளிலிருந்து கூட கண்கவர் துர்ரிகள் [கம்பள விரிப்புகளுக்கு] நெசவு செய்வதில் நன்கு அறியப்பட்டவர்கள்.
"35 வயதில் மஜிதானிடம் இருந்து துர்ரிகளை நெசவு செய்வது எப்படி என்பதை நான் கற்றுக்கொண்டேன்," என்கிறார் கர்சாத். "அப்போதிருந்து, நாங்கள் ஒன்றாக விரிப்புகளை நெசவு செய்து வருகிறோம்," என்கிறார் 71 வயதான மஜிதான். "இது ஒருவர் செய்யும் வேலை கிடையாது, இருவர் தேவை."
இரண்டு சகோதரர்களை திருமணம் செய்து கொண்டதால், இருவரும் சகோதரிகள் எனும் உறவு முறையில் குறிப்பிடப்படுகிறார்கள். "நாங்கள் உண்மையான சகோதரிகளை போலவே உணர்கிறோம்," என்கிறார் கர்சாத். மஜிதான் சட்டென்று, "எங்கள் இயல்புகள் முற்றிலும் எதிரானவை என்றாலும்." அதற்கு கர்சாத் உடனடியாக பதிலளிக்கிறார், "அவள் வெளிப்படையாக இருப்பவள். நான் அமைதியானவள்," என்கிறார்.
மஜிதானும், கர்சாத்தும் நெசவு வேலையில் மணிக்கணக்கில் செலவழித்தாலும், தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மாதத்திற்கு சில ஆயிரம் ரூபாய்க்கு வீடுகளில் பணிப்பெண்களாகவும் வேலை செய்கிறார்கள். குறிப்பாக இந்த வயோதிகத்தில் இரண்டுமே உடல் உழைப்புக் கொண்ட வேலைகள்.


















