மார்பக மறுவடிவமைப்பு அறுவை சிகிச்சை பற்றி விசாரிக்க ஹரியானாவின் ரோதாக் மாவட்டத்தின் அரசு மருத்துவமனைக்கு 18 வயது சுமிதி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) முதன்முறையாக சென்றபோது, தீக்காயம் பட்ட நோயாளியாக முதலில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் திருநர் தங்களின் விருப்பத்துக்குரிய பாலினத் தேர்வுக்கான அறுவை சிகிச்சையை பெற, மருத்துவமனை கொண்டிருக்கும் பல செயல்முறைகளை எளிதாக கடப்பதற்கென சொல்லப்படுகிற ஒரு பொய். ஆனாலும் அந்தப் பொய் உதவவில்லை.
எட்டு வருட ஆவண சேகரிப்பு, முடிவுறா உளவியல் பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள், ஒரு லட்சத்துக்கும் மேலான கடன், குலைந்து போன குடும்ப உறவுகள், முன்னாள் மார்பகங்கள் மீதான வெறுப்பு என பெரும் அலைக்கழிப்புக்கு பிறகு ‘டாப் சர்ஜரி’ என அழைக்கப்படும் அறுவை சிகிச்சையை ரோதாக்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஹிசாரின் தனியார் மருத்துவமனையில் செய்து கொண்டார் சுமிதி.
ஒன்றரை வருடங்கள் கழிந்து விட்டது. 26 வயது சுமிதி நடக்கும்போது இன்னும் கூன் போட்டுதான் நடக்கிறார். அறுவை சிகிச்சைக்கு முந்தைய காலத்தில், மார்பகம் கொடுத்த அவமானம் மற்றும் சிரமம் ஆகியவற்றால் ஏற்பட்ட பழக்கம் அது.
இந்தியாவில் சுமிதிதை போல வேறு பாலினம் கொண்டு தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் எத்தனை பேர் என்பதை குறித்த சமீபத்திய கணக்கெடுப்பு எதுவுமில்லை. தேசிய மனித உரிமை ஆணையத்துடன் இணைந்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 2017ம் ஆண்டில் இந்தியாவில் திருநரின் எண்ணிக்கை 4.88 லட்சம்.
2014 National Legal Services Authority v. Union of India case வழக்கில், “மூன்றாம் பாலினத்தவரை” அங்கீகரித்து, அவர்களாகவே தங்களின் பாலினத்தை “அடையாளம் காணும்” உரிமையையும் அங்கீகரித்து, அவர்களுக்கான மருத்துவத்தை அரசாங்கம் அளிக்க வேண்டுமென தீர்ப்பை வழங்கியது. ஐந்து வருடங்களுக்கு பிறகு, பாலினம் உறுதிபடுத்தும் அறுவை சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, உளவியல் சேவைகள் உள்ளிட்ட முழுமையான மருத்துவச் சேவைகளை அரசாங்கங்கள் அச்சமூகத்தினருக்கு வழங்குவதை திருநர் உரிமை சட்டம், 2019 உறுதி செய்தது.









