PHCல் காத்திருக்கும் நேரம் ஷாஹிதாவும், பிற நோயாளிகளும் அரட்டை அடிக்கின்றனர். 18 அறை கொண்ட சுகாதார மையத்தின் தகர கூரையில் 2017 ஜனவரி மாதம் பொருத்தப்பட்ட சோலார் தகடுகள் குறித்து அப்போது பேசப்பட்டது. அசாம் எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் பொருத்தப்பட்ட 20 தகடுகள், 16 பேட்டரிகள் மூலம் 5 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
பல தசாப்தங்களாக இருளில் மூழ்கியிருந்த சுகாதார மையங்களின் தரத்தை சூரிய சக்தி உயர்த்தியுள்ளது. “இப்போது PHCல் மின்சாரமும், குழாய் தண்ணீர் வசதியும் உள்ளது," எனும் ஷாஹிதா, சோலார் தகடுகளை சுட்டிக் காட்டுகிறார். “இப்போது இங்கு கர்ப்பிணிகளும் பரிசோதனைக்கு வருகின்றனர், பிரசவமும் நடைபெறுகிறது.“
பூலோக ரீதியாக தனித்துவிடப்பட்டுள்ள பிர்சிங் போன்ற பகுதியில் வசித்தாலும் ஷாஹிதா மருத்துவமனை பிரசவங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளார். அவர் சொல்கிறார், “ மருத்துவச்சி, அக்கம்பக்கத்தினர் உதவியோடு எனக்கு பிரசவங்கள் [வீட்டில் இரண்டு பிள்ளைகள்] நடைபெற்றது. இரண்டு முறையும் நான் மிகவும் பயந்தேன், வேறு வழியில்லை, எல்லாம் சரியாக நடக்கும் என அவர்கள் நம்பிக்கையூட்டினர்…“
PHCக்கு சூரிய சக்தி கிடைப்பதற்கு முன், கர்ப்பிணிகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் ஆற்றை கடந்து துப்ரி நகரில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். இரவிலும், படகு சேவையில்லாத பகல் பொழுதுகளிலும் படகு வாடகை மிக அதிகம்- ரூ.2000 முதல் ரூ.3000 வரை செலவாகும். இதுவும் மருத்துவ செலவுடன் சேரும்.
பிர்சிங் PHC மதிய நேரத்தில் மூடப்படும் போது அவசர மருத்துவ உதவிக்கு துப்ரிக்கு தான் மக்கள் செல்ல வேண்டும். சூரிய மின்சக்தியின் வருகைக்கு பிறகு சுகாதார மையத்திற்கு புத்துயிர் கிடைத்துள்ளது. “2017 ஜனவரி மாதம் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டன, பிப்ரவரியிலிருந்து மார்ச் மாதத்திற்குள் 18 பிரசவங்கள் பார்த்துவிட்டோம்,” என்கிறார் மருத்துவர் ஜவஹர்லால் சர்கார். 2014 ஃபகிர்கஞ்ச் துணை மண்டல மருத்துவ அதிகாரியாக (தொற்றுநோய்) பணியாற்றி ஓய்வுப் பெற்ற பிறகு அவர் இந்த PHCக்கு தலைமை வகிக்கிறார். “தீவு திட்டில் நம்மிடம் 10 ஆஷா பணியாளர்கள் [அங்கீகரிக்கப்பட்ட சமூக நல செயற்பாட்டாளர்கள்] உள்ளனர். கர்ப்பிணிகள் அனைவரையும் பிரசவத்திற்கு மருத்துவமனை கொண்டு வர வேண்டியது அவர்களின் பொறுப்பு.”