‘சட்டங்களையும் அரசியல் சாசனத்தையும் அம்பேத்கரின்றி எழுதமுடியாது என்பதை காந்தியும் நேருவும் உணர்ந்திருந்தனர். அதை செய்யக் கூடிய தகுதி கொண்ட நபர் அவர் ஒருவர் மட்டும்தான். அந்த பணியை அவரொன்றும் கெஞ்சி கேட்டுப் பெறவில்லை.’
ஷோபாராம் கெஹெர்வர், ஜடுகர் குப்பம் (மந்திரவாதி காலனி), அஜ்மெர், ராஜஸ்தான்
‘சட்டங்களையும் அரசியல் சாசனத்தையும் அம்பேத்கரின்றி எழுதமுடியாது என்பதை காந்தியும் நேருவும் உணர்ந்திருந்தனர். அதை செய்யக் கூடிய தகுதி கொண்ட நபர் அவர் ஒருவர் மட்டும்தான். அந்த பணியை அவரொன்றும் கெஞ்சி கேட்டுப் பெறவில்லை.’
- ஷோபாராம் கெஹெர்வர், ஜடுகர் குப்பம் (மந்திரவாதி காலனி), அஜ்மெர், ராஜஸ்தான்
‘நாங்கள் குண்டுகள் செய்து கொண்டிருந்த இடத்தை பிரிட்டிஷார் சுற்றி வளைத்தனர். அது அஜ்மெருக்கருகே மலை மீதிருந்த ஒரு காட்டுக்குள். புலி நீரருந்த வரும் ஒரு ஓடைக்கருகே அந்த இடம் இருந்தது. புலி அங்கு வந்து போகும். சில நேரங்களில் நாங்கள் காற்றில் துப்பாக்கிகளால் சுடுவதைக் கேட்டு, நீரருந்தி சென்றுவிட வேண்டுமென அது புரிந்து கொண்டது. இல்லையெனில், காற்றிலல்ல, அதை நாங்கள் சுட்டிருப்போம்.
‘ஆனால் அன்று, அந்த இடத்தை பற்றி பிரிட்டிஷார் தெரிந்து கொண்டு நெருங்கிக் கொண்டிருந்தனர். அது பிரிட்டிஷ் ஆட்சியிருந்த காலக்கட்டம். எனவே சில குண்டுகளை வெடித்தோம். நான் வெடிக்கவில்லை. ஏனெனில் நான் மிக இளைய வயதில் இருந்தேன். என் மூத்த நண்பர்கள் இருந்தனர். அதே நேரத்தில் புலியும் நீரருந்த வந்தது.
‘புலி நீரருந்தவில்லை. பிரிட்டிஷ் போலீஸை விரட்டிச் சென்றது. அனைவரும் ஓடினார்கள். பின்னால் புலி வந்து கொண்டிருந்தது. மலைச்சரிவில் சிலர் விழுந்தனர். சிலர் சாலையில் விழுந்தனர். அந்த குழப்பத்தில் இரண்டு போலீஸார் உயிரிழந்தனர். மீண்டும் அந்த இடத்துக்கு திரும்ப போலீஸுக்கு தைரியம் இல்லை. அவர்களுக்கு எங்கள் மீது அச்சம். வொ தெளபா கர்தே தே (அவர்கள் எங்களை எதிர்கொண்டு பாதிப்பை அடைந்திருக்கின்றனர்).’
இறுதியில் புலி எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பியது. மீண்டும் நீரருந்த உயிரை தக்க வைத்துக் கொண்டது.
அவர்தான் மூத்த விடுதலைப் போராட்ட வீரரான ஷோபாராம் கெஹெர்வர். 96 வயதான அவர் 14 ஏப்ரல் 2022 அன்று அஜ்மெரிலுள்ள அவரது வீட்டில் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் அவர் பிறந்த அதே தலித் குப்பத்தில்தான் இன்னும் அவர் இருந்தார். இருமுறை நகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் எப்போதோ கிளம்பி சென்றிருக்க முடியும். வசதிகள் வந்தும் அங்கிருந்து அவர் அகலவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து அவர் 1930களிலும் 1940களிலும் முன்னெடுத்த போராட்டங்களை தெளிவாக நினைவுகூருகிறார்.
அவர் குறிப்பிடுவது ஏதேனும் ஒரு தலைமறைவு வெடிகுண்டு ஆலையா?
‘அட, அது ஒரு காடு. ஆலை அல்ல... ஃபேக்டரி மெய்ன் தோ கைஞ்சி பந்தி ஹைன் (ஆலையில் கத்திரிக்கோல்கள்தான் செய்வார்கள்). இங்கு (தலைமறைவு எதிர்ப்புப் படையில்) நாங்கள் வெடிகுண்டுகள் செய்தோம்.’
‘ஒருமுறை சந்திரசேகர் ஆசாத் எங்களைப் பார்க்க வந்தார்,’ என்கிறார் அவர். அது அநேகமாக 1930களின் இரண்டாம் பாதியாகவோ 1931ம் ஆண்டின் தொடக்க நாட்களாகவோ இருக்கலாம். தேதிகள் உறுதியாக தெரியவில்லை. ‘சரியான தேதிகளை கேட்காதீர்கள்,’ என்கிறார் ஷோபாராம். ‘என் எல்லா ஆவணங்களும் குறிப்புகளும் தரவுகளும் இந்த வீட்டில் முன்பு இருந்தது. 1975ம் ஆண்டில் இங்கு வெள்ளம் வந்தபோது எல்லாவற்றையும் இழந்து விட்டேன்.’
பகத் சிங்குடன் இணைந்து இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷனை 1928-ல் ஒருங்கிணைத்தவர்களில் சந்திரசேகர் ஆசாத்தும் ஒருவர். 1931ம் ஆண்டின் பிப்ரவரி 27ம் தேதி அன்று, பிரிட்டிஷ் போலீஸுடன் அலகாபாத்தின் ஆல்ஃப்ரெட் பார்க்கில் நேர்ந்த துப்பாக்கி சண்டையில், தன் துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டா மிஞ்சியதும் அதைக் கொண்டு தன்னுயிரைப் போக்கிக் கொண்டவர் ஆசாத். உயிருடன் பிடிபட்டுவிடாமல் ‘ஆசாதாக’ அல்லது சுதந்திரமாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற உறுதியை காப்பாற்றியவர். இறக்கும்போது அவருக்கு வயது 24.
சுதந்திரத்துக்கு பிறகு ஆல்ஃப்ரெட் பார்க் சந்திரசேகர் ஆசாத் பார்க் என பெயர் மாற்றப்பட்டது.
98 வயதாகும் சுதந்திரப் போராட்ட வீரர் காந்தியையும் அம்பேத்கரையும் பின்பற்றுபவராக தன்னைக் குறிப்பிடுகிறார். ‘என்னால் ஒப்புக் கொள்ள முடிந்த கொள்கைகளைத்தான் நான் பின்பற்றினேன்,’ என்கிறார் அவர்
‘ஆசாத் வந்து இடத்தை (வெடிகுண்டு தயாரிப்பவர்களின் முகாம்) பார்த்தார்,’ என்கிறார் அஜ்மெரில் ஷோபாராம். ‘வெடிகுண்டுகளை திறன் மிகுந்ததாக எப்படி செய்ய வேண்டுமென்பதை எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். சிறந்த சூத்திரத்தை சொல்லிக் கொடுத்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பணியாற்றிய இடத்துக்கு அவர் திலகமும் இட்டார். பிறகு அவர் புலியை பார்க்க வேண்டுமென சொன்னார். அவரை இரவு தங்க சொன்னோம்.
‘புலி வந்து சென்றது. நாங்கள் காற்றில் சுட்டோம். ஏன் சுட்டோமென சந்திரசேகர் கேட்டார். நாங்கள் ஆபத்து விளைவிக்க முடியுமென தெரிந்து புலி சென்றுவிடும் என்பதற்காக சுட்டோம் என்றோம்.’ புலி நீரருந்தவும் போராட்ட வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குமான ஏற்பாடு அது.
‘நான் உங்களிடம் சொன்ன அந்த தினத்தன்று பிரிட்டிஷார் முதலில் அங்கு வந்தனர். குழப்பமும் களேபரமும் நேர்ந்தது.’
அங்கு நேர்ந்த சண்டையில் தான் பங்கு கொள்ளவில்லை என்கிறார் ஷோபாராம். ஆனால் அவர் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருந்தார். ஆசாத் வந்தபோது அவருக்கு ஐந்து வயதுதான் இருந்திருக்கும் என்கிறார். ‘மாறுவேடத்தில் இருந்தார். எங்களின் வேலை அவரை வெறுமனே மலையில் இருக்கும் காட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் எங்களின் இடத்துக்கு அழைத்து வருவதாக இருந்தது. இரு சிறுவர்களான நாங்கள் அவரையும் அவரது சக ஊழியர் ஒருவரையும் முகாமுக்கு அழைத்து வந்தோம்.’
அது ஓர் அற்புதமான நாடகம். வெள்ளந்தியாக தொலைந்து போன சிறுவர்கள் மாமாவை தேடும் காட்சி.
‘பட்டறையை ஆசாத் பார்த்தார். அது ஆலை அல்ல. தட்டிக் கொடுத்து சிறுவர்களாகிய எங்களிடம் சொன்னார்: “ஆப் தோ ஷேர் கே பச்சே ஹைன் (நீங்கள் சிங்கக்குட்டிகள்). மரணத்துக்கு அஞ்சாத வீரர்கள் நீங்கள்.” எங்களின் குடும்ப உறுப்பினர்கள் கூட, “நீங்கள் இறந்தாலும் பரவாயில்லை. சுதந்திரத்துக்காகத்தான் இவற்றை நீங்கள் செய்கிறீர்கள்,” என்றனர்.
*****
'தோட்டா என்னை கொல்லவில்லை. நிரந்தரமாக ஊனப்படுத்திவிடவும் இல்லை. என் காலில் பாய்ந்தது. பாருங்கள்?’ வலது காலில் தோட்டா பாய்ந்த இடத்தை காட்டுகிறார். முட்டிக்கு சற்று கீழ் அந்த இடம் இருக்கிறது. தோட்டா வெளியேறிவிட்டது. எனினும் கடும் வலி. ‘மூர்ச்சையடைந்தேன். என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்,’ என்கிறார் அவர்.
இது நடந்தது 1942ம் ஆண்டில். அப்போது அவர் மிகவும் இளமையோடு இருந்தார். 16 வயதுதான். ஆனால் நேரடியாக களத்தில் இறங்கியிருந்தார். இன்றும் 96 வயதில், ஷோபாராம் கெஹெர்வர் நன்றாகவே இருக்கிறார். ஆறு அடி உயரம், ஆரோக்கியம், தடி போல் நேரான உருவம், சுறுசுறுப்பு. ராஜஸ்தானின் அஜ்மெரிலுள்ள அவரது வீட்டில் நம்முடன் பேசுகிறார். 90 வருடங்களாக அவர் வாழ்ந்த பரபரப்பான வாழ்க்கையை சொல்கிறார். தற்போது, அவர் சுடப்பட்ட காலத்தை விவரித்துக் கொண்டிருக்கிறார்.
‘ஒரு கூட்டம் நடந்தது. யாரோ ஒருவர் கட்டுப்பாட்டை மீறி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பேசிவிட்டார். எனவே காவல்துறை சில சுதந்திர போராட்ட வீரர்களை பிடித்துக் கொண்டது. அவர்கள் எதிர்த்து சண்டையிட்டார்கள். காவலர்களை அடிக்கத் தொடங்கினார்கள். இது நடந்தது ஸ்வதந்திரதா சேனானி பவனில் (சுதந்திரப் போராட்ட வீரர் அலுவலகம்). அந்தப் பெயர் சுதந்திரம் பெற்ற பிறகுதான் அந்த இடத்துக்கு நாங்கள் சூட்டினோம். அச்சமயத்தில் அதற்கு பெயரென எதுவுமில்லை.
’அங்கு நடந்த கூட்டங்களில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மக்களுக்கு வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றிய தகவல்களை தினமும் சொல்லிக் கொண்டிருந்தனர். அஜ்மெரின் எல்லா பகுதிகளிலிருந்தும் மக்கள் பிற்பகல் 3 மணிக்கு அங்கு கூடி விடுவார்கள். யாரையும் நாங்கள் அழைக்க வேண்டியிருக்கவில்லை. அவர்களே வந்தனர். அங்குதான் அந்த கடுமையான பேச்சு பேசப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
‘மருத்துவமனையில் எனக்கு நினைவு திரும்பியதும், காவலர்கள் வந்து பார்த்தனர். அவர்களின் வேலையை பார்த்தனர். எதையோ குறித்துக் கொண்டனர். ஆனால் என்னை கைது செய்யவில்லை. “தோட்டா பாய்ந்திருக்கிறது. அந்த தண்டனையே இவனுக்கு போதும்,” என்றார்கள்.
இரக்கத்தினால் அப்படி அவர்கள் சொல்லவில்லை என்கிறார் அவர். காவல்துறை வழக்கு பதிந்திருந்தால், அவர்கள் ஷோபாராம் நோக்கி சுட்டதை ஒப்புக் கொள்ள வேண்டும். அவரோ கடுமையான பேச்சு எதையும் பேசவில்லை. எவரிடமும் வன்முறையாக நடந்து கொள்ளவுமில்லை.
‘பிரிட்டிஷார் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது,’ என்கிறார் அவர். ‘நாங்கள் இறந்திருந்தால் கூட அவர்களுக்கு பிரச்சினையே இல்லை. பல வருடங்களில் கோடிக்கணக்கானோர் இறந்திருக்கின்றனர். பிறகுதான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. குருஷேத்திரத்தில் சூரிய குண்டம் போர்வீரர்களின் ரத்தத்தில் நிரம்பியது போல. இதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். விடுதலையை நாம் சுலபமாக பெறவில்லை. நாங்கள் அதற்கு ரத்தம் சிந்தினோம். குருஷேத்திரத்தை விட அதிக ரத்தம். பிறகு இயக்கம், அஜ்மெரில் மட்டுமின்றி, எல்லா இடங்களுக்கும் பரவியது. போராட்டம் எல்லா இடங்களிலும் நடந்தது. மும்பை, கல்கத்தா (இப்போது கொல்கத்தா)...
‘தோட்டா காயத்துக்கு பிறகுதான் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டாமென முடிவெடுத்தேன்,’ என்கிறார் அவர். ‘போராட்டத்தில் நான் பிழைப்பேனா என தெரியாதல்லவா? மேலும் சமூக சேவை செய்து கொண்டு நான் குடும்பமும் நடத்த முடியாது.’ ஷோபாராம் தன் சகோதரி ஷாந்தி மற்றும் அவரது குழந்தைகள், பேரக் குழந்தைகளுடன் வாழ்கிறார். 75 வயதாகும் அவர் ஷோபாராமை விட 21 வயது இளையவர்.
‘ஒரு விஷயம் சொல்லவா?’ ஷாந்தி கேட்கிறார். பிறகு அமைதியாக உறுதியோடு பேசுகிறார். ‘என்னால்தான் இந்த ஆள் இன்னும் உயிரோடு இருக்கிறார். நானும் என் குழந்தைகளும் இவரைப் பார்த்துக் கொண்டோம். என் கணவர் 45 வயதில் இறந்துவிட்டார். எப்போதும் நான் ஷோபாராமை பார்த்துக் கொண்டேன். அதில் எனக்கு பெருமைதான். இப்போது என் பேரக் குழந்தைகளும் அவர்களின் மனைவிமாரும் அவரை பார்த்துக் கொள்கின்றனர்.
‘கொஞ்ச காலத்துக்கு முன், அவருக்கு உடல்நலம் சரியில்லை. மரணத்தின் விளிம்புக்கு சென்றார். அது 2020ல் நடந்தது. என் கைகளில் அவரை தாங்கிக் கொண்டு நான் பிரார்த்தித்தேன். இப்போது அவர் உயிரோடும் நன்றாகவும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.’
*****
சரி, தலைமறைவு முகாமில் அவர் உருவாக்கிய வெடிகுண்டுகள் என்னவாகின?
‘தேவை இருக்கும் இடங்களுக்கெல்லாம் நாங்கள் பயணித்தோம். நிறைய தேவைகள் இருந்தன. அநேகமாக இந்நாட்டின் எல்லா மூலைகளுக்கும் அந்த குண்டுகளை தூக்கிக் கொண்டு சென்றிருப்பேன் என நினைக்கிறேன். பெரும்பாலும் ரயிலில்தான் பயணித்தோம். ரயில் நிலையங்களிலிருந்து வேறு போக்குவரத்தின் வழியாக பயணித்தோம். பிரிட்டிஷ் காவல்துறை கூட எங்களை கண்டு அஞ்சியது.’
வெடிகுண்டுகள் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?
‘இது போல (கைகளை கொண்டு வட்ட வடிவங்கள் காட்டுகிறார்). இந்த அளவுதான், கையெறி குண்டு போல. வெடிப்பதற்கான நேரத்தை பொறுத்து பல வகையான வெடிகுண்டுகள் இருக்கின்றன. சில உடனே வெடிக்கும்; சில நான்கு நாட்கள் ஆகும். எங்களின் தலைவர்கள் எல்லாவற்றையும் விளக்கி விடுவார்கள். எப்படி செய்ய வேண்டும், வைக்க வேண்டுமென விவரித்து அனுப்புவார்கள்.
’அச்சமயத்தில் எங்களுக்கு பெரும் தேவை இருந்தது! நான் கர்நாடகா சென்றிருக்கிறேன். மைசூர், பெங்களூரு என எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். அஜ்மெர், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கியமான பங்கு வகித்த இடம். பனாரஸும் (வாரணாசி) அப்படித்தான். குஜராத்தின் பரோடாவும் மத்தியப்பிரதேசத்தின் தாமோவும் கூட அப்படித்தான். அஜ்மெரை பார்த்து, இயக்கம் இந்த டவுனில் வலுவாக இருக்கிறது என்பார்கள் மக்கள். இங்கிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் அடிச்சுவடுகளைதான் அவர்கள் பின்பற்றுவார்கள். அதே போல பல வீரர்கள் இருந்ததும் உண்மைதான். ’
ஆனால் ரயில் பயணங்களில் எப்படி தப்பித்தார்கள்? பிடிபடுவதிலிருந்து எப்படி தப்பித்தார்கள்? தபால்துறையில் பிடிபடக் கூடாது என்பதற்காக ரகசியக் கடிதங்களை தலைவர்களுக்கு அவர்கள் கொண்டு செல்வதாக பிரிட்டிஷார் சந்தேகப்பட்டனர். சில இளைஞர்கள் வெடிகுண்டுகள் எடுத்து செல்வதும் அவர்களுக்கு தெரியும்.
‘அந்தக் காலத்தில் தபால் செய்யப்பட்ட கடிதங்கள் யாவும் பரிசோதிக்கப்பட்டன. திறக்கப்பட்டு, வாசிக்கப்பட்டன. அதிலிருந்து தப்பிக்க, எங்களின் தலைவர்கள் ஓர் இளைஞர் குழுவை உருவாக்கி, குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு கடிதங்கள் கொண்டு செல்ல பயிற்சி கொடுத்தனர். “இந்த கடிதத்தை எடுத்துச் சென்று பரோடாவில் இருக்கும் டாக்டர் அம்பேத்கருக்கு கொடுக்க வேண்டும்.” அல்லது வேறு ஒருவருக்கு, வேறொரு இடத்தில். எங்களின் உள்ளாடைக்குள், இரு கால்களுக்கு இடையே வைத்துக் கொள்வோம்.
‘பிரிட்டிஷ் காவல்துறை எங்களை நிறுத்தி கேள்விகள் கேட்கும். ரயிலில் எங்களை பார்த்தால் அவர்கள் இப்படி கேட்பார்கள்: ”வேறு இடத்துக்கு செல்வதாக சொன்னீர்கள். இப்போது வேறு இடத்துக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்?” ஆனால் எங்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும் இது நடக்குமென தெரியும். எனவே பனாரஸுக்கு நாங்கள் சென்று கொண்டிருந்தால், அந்த நகரம் வருவதற்கு முன்னாடியே இறங்கி விடுவோம்.
‘கடிதங்கள் பனாரஸுக்கு செல்ல வேண்டுமென ஏற்கனவே எங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். எங்கள் தலைவர்கள் இப்படி அறிவுறுத்துவார்கள்: “நகரத்துக்கு கொஞ்சம் தள்ளி, சங்கிலியை இழுத்து, ரயிலிலிருந்து இறங்கி விடுங்கள்.” நாங்களும் அப்படி செய்தோம்.
‘அந்த நாட்களில், ரயில்களுக்கு நீராவி எஞ்சின்கள் இருந்தன. எஞ்சின் அறைக்குள் சென்று, ரயில் ஓட்டுநரிடம் துப்பாக்கி காட்டுவோம். “உன்னை கொன்று விட்டுதான் நாங்கள் இறப்போம்,” என அவரை எச்சரிப்போம். அவர் எங்களுக்கு ஓர் இடம் கொடுப்பார். சிஐடி, காவலர்கள் அனைவரும் சில நேரங்களில் வந்து பரிசோதித்தார்கள். ரயில்பெட்டிகளை பரிசோதித்து சாதாரண பயணிகள் அமர்ந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.
’சொன்னபடியே நாங்கள் குறிப்பிட்ட இடத்தில் சங்கிலியை பிடித்து இழுத்தோம். ரயில் நெடுநேரம் நின்றது. பிறகு இருட்டானதும் சில சுதந்திரப் போராட்ட வீரர்கள் குதிரைகள் கொண்டு வந்தனர். அவற்றில் ஏறி நாங்கள் தப்பித்தோம். சொல்லப்போனால், ரயில் பனாரஸுக்கு வரும் முன்னமே நாங்கள் பனாரஸை அடைந்துவிட்டோம்!
‘ஒருமுறை என் பெயரில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. வெடிகுண்டுகள் கொண்டு செல்லும்போது நாங்கள் பிடிபட்டு விட்டோம். ஆனால் அவற்றை தூக்கி எறிந்து விட்டு, தப்பிவிட்டோம். அவற்றை காவலர்கள் கண்டுபிடித்து, எந்த வகையான வெடிபொருட்களை நாங்கள் பயன்படுத்தோம் என தெரிந்து கொள்ள ஆராய்ந்தனர். அவர்கள் எங்களை தேடினர். எனவே நாங்கள் அஜ்மெரை விட்டு கிளம்புவது என முடிவெடுக்கப்பட்டது. நான் (அப்போது) பம்பாய்க்கு அனுப்பப்பட்டேன்.’
மும்பையில் அவருக்கு தஞ்சமளித்தவர் யார்?
’பிருத்விராஜ் கபூர்,’ என பெருமையுடன் சொல்கிறார். அந்த பெரும் நடிகர் 1941-ல் புகழடைந்து கொண்டிருந்தார். இந்திய மக்களின் நாடக சங்கத்தை 1943ம் ஆண்டு உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர் என நம்பப்படுகிறது. கபூரும் பம்பாய் நாடகம் மற்றும் திரையுலகம் சார்ந்த பல முன்னணி நபர்களும் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தார்கள். பலர் பங்கெடுக்கவும் செய்தார்கள்.
‘அவர் எங்களை திரிலோக் கபூர் என்ற அவரது உறவினரிடம் அனுப்பினார். பிறகு அவர் ஹர் ஹர் மகாதேவ் என்கிற படத்தில் நடித்தாரென நினைக்கிறேன். ஷோபாராமுக்கு தெரியாத தகவல், பிருத்விராஜின் தம்பிதான் திரிலோக் என்பது. அவரும் அக்காலக்கட்டத்தில் புகழ் வாய்ந்த நடிகராக திகழ்ந்தவர்தான். ஹர் ஹர் மகாதேவ் 1950ம் ஆண்டில் பெருவெற்றியை ஈட்டிய படம்.
‘பிருத்விராஜ் கொஞ்ச காலத்துக்கு எங்களுக்கு கார் தந்தார். பம்பாயை நாங்கள் சுற்றினோம். அந்த நகரத்தில் கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கு இருந்தேன். பிறகு நாங்கள் திரும்பி விட்டோம். பிற வேலைகளுக்கு நாங்கள் தேவைப்பட்டோம். வாரண்டை உங்களுக்கு காட்ட விரும்புகிறேன். என் பெயரில் இருந்தது. பிற இளைஞர்களுக்கும் வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
‘ஆனால் 1975ம் ஆண்டு இங்கு வந்த வெள்ளம் எல்லாவற்றையும் அழித்து விட்டது,’ என்கிறார் அவர் பெரும் சோகத்துடன். ‘என் ஆவணங்கள் எல்லாம் போய்விட்டன. ஜவஹர்லால் நேரு கொடுத்த சான்றிதழ் உட்பட போய்விட்டன. அந்த ஆவணங்களை பார்த்தால் நீங்கள் ஆனந்தம் அடைவீர்கள். ஆனால் எல்லாம் அடித்து செல்லப்பட்டுவிட்டது.’
*****
‘அம்பேத்கர் மற்றும் காந்தி ஆகிய இருவரில் ஒருவரை மட்டும் ஏன் நான் தேர்ந்தெடுக்க வேண்டும்? இருவரையும் நான் தேர்ந்தெடுக்கலாம்தானே?’
அஜ்மெரிலுள்ள அம்பேத்கர் சிலையிடம் நாங்கள் இருந்தோம். அந்த பெரும் மனிதரின் 131வது பிறந்த தினம் அது. ஷோபாராம் கெஹெர்வரையும் எங்களுடன் அழைத்து வந்திருந்தோம். பழைய காந்தியவாதியான அவர், சிலைக்கு மாலையிடும் விருப்பத்தில் அங்கு தன்னை அழைத்து செல்லும்படி எங்களிடம் கேட்டிருந்தார். அப்போதுதான் இரு ஆளுமைகளில் யாருக்கு அவரின் ஆதரவு என நாங்கள் கேட்டோம்.
வீட்டிலிருக்கும்போது எங்களிடம் சொன்ன விஷயத்தையே வேறு வார்த்தைகளில் சொன்னார். ’அம்பேத்கரோ காந்தியோ இருவரும் நல்ல பணியை செய்திருக்கின்றனர். கார் செல்வதற்கு இரு சக்கரங்கள் வேண்டும். ஏன் முரண்பாடு வருகிறது? மகாத்மாவின் கொள்கைகளில் சில எனக்கு பிடித்ததால், அவற்றை பின்பற்றினேன். அம்பேத்கரின் கொள்கைகளில் பிடித்தவற்றை, பின்பற்றினேன்.’
காந்தியும் அம்பேத்கரும் அஜ்மெருக்கு வந்திருப்பதாக சொல்கிறார் அவர். அம்பேத்கரை பொறுத்தவரை, ‘அவரை ரயில் நிலையத்தில் சந்தித்து மாலை அணிவிப்போம். வேறு இடத்துக்கு செல்லும் ரயில் இங்கு நிற்கும்போது அப்படி செய்திருக்கிறோம்.’ இளம் வயதில் இருவரையும் ஷோபாராம் சந்தித்திருக்கிறார்.
’1934ம் ஆண்டில் நான் சிறுவனாக இருந்தபோது, மகாத்மா காந்தி இங்கு வந்திருக்கிறார். நாம் அமர்ந்திருக்கும் இதே இடத்தில் அவரும் இருந்தார். இதே ஜடுகர் (மந்திரவாதி காலனி) குப்பத்தில்.’ ஷோபாராமுக்கு அப்போது 8 வயது இருக்கும்.
‘அம்பேத்கரை பொறுத்தவரை, எங்களின் தலைவர்களிடமிருந்து சில கடிதங்களை அவருக்குக் கொடுக்க ஒருமுறை பரோடா (வடோதரா) சென்றிருக்கிறோம். காவலர்கள் தபால் அலுவலகத்தில் எங்களின் கடிதங்களை திறந்து பார்ப்பார்கள். எனவே நாங்கள் தனிப்பட்ட அளவில் முக்கியமான கடிதங்களையும் காகிதங்களையும் கொண்டு செல்வோம். அச்சமயத்தில் அவர் என் தலையில் தட்டிக் கொடுத்து, “அஜ்மெரிலா இருக்கிறாய்?” எனக் கேட்டார்.”
ஷோபாராம் கோலி சமூகத்தை சேர்ந்தவர் என்பது அவருக்கு தெரியுமா?
“ஆம், அவரிடம் சொல்லிவிட்டேன். ஆனால் அவர் அதை பற்றி அதிகம் பேசவில்லை. அவர் அந்த விஷயங்களை புரிந்திருந்தார். அவர் பெரும் கல்வியாளர். தேவைப்படும்போது அவருக்கு கடிதமெழுதும்படி அவர் என்னிடம் சொன்னார்.’
‘தலித்’ மற்றும் ‘ஹரிஜன்’ - இரண்டு அடையாளங்களிலும் ஷோபாராமுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ‘ஒருவர் கோலியாக இருந்தால், அப்படி இருக்கட்டுமே. ஏன் சாதியை மறைக்க வேண்டும்? ஹரிஜனோ தலித்தோ எந்த வித்தியாசமும் இல்லை. முடிவில், என்ன சொல்லி அழைத்தாலும் அவர்கள் அனைவரும் பட்டியல் சாதியினர்தான்.’
ஷோபாராமின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள் ஆவர். பெரும்பாலும் ரயில் திட்டங்களை ஒட்டி அவர்கள் வேலை செய்தனர்.
‘அனைவரும் நாளொன்றுக்கு ஒருவேளை மட்டுமே உணவருந்தினோம்,’ என்கிறார் அவர். ‘குடும்பத்தில் மதுப்பழக்கமே இல்லை.’ அவரும் அதே சமூகப்பிரிவை சேர்ந்தவர்தான் என நமக்கு நினைவூட்டுகிறார். ‘(முன்னாள்) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் அந்த சாதியை சேர்ந்தவர்தான். அவர் ஒருமுறை அகில் பாரதிய கோலி சமாஜத்தின் தலைவராக இருந்தார்.’
ஷோபாராமின் சமூகம் பள்ளிக் கல்வியிலிருந்து விலக்கப்பட்டிருந்தது. தாமதமாக பள்ளிக்கு சேர்ந்த முக்கியக் காரணமே அதுதான். அவர் சொல்கையில், ‘இந்துஸ்தானில், உயர்சாதியினரும் பிராமணர்களும் சமணர்களும் பிறரும் பிரிட்டிஷுக்கு அடிமைகளாக மாறினர். தீண்டாமையை எப்போதும் கடைபிடிப்பவர்கள் அவர்கள்.
‘உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், இங்கிருக்கும் பட்டியல் சாதியினரில் பெரும்பாலானோர் அச்சமயத்தில் காங்கிரஸோ ஆரிய சமாஜமோ இல்லாமல் இருந்திருந்தால் இஸ்லாமுக்கு மதம் மாறி விட்டிருப்பார்கள். பழைய பாணியில் எங்களை தொடர்ந்து ஒடுக்கியிருந்தால், சுதந்திரம் கிடைத்திருக்காது.
‘அச்சமயத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் எவரையும் பள்ளியில் சேர்க்கவில்லை. அவனொரு கஞ்சார், அவன் ஒரு தோம் என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள். நாங்கள் தவிர்க்கப்பட்டோம். 1ம் வகுப்புக்கு நான் 11ம் வயதில்தான் சென்றேன். ஏனெனில் ஆரிய சமாஜத்தை சேர்ந்தவர்கள் அச்சமயத்தில் கிறித்துவர்களை எதிர்கொள்ள விரும்பினர். லிங்க் ரோடு பகுதியில் என் சாதியை சேர்ந்த பலர் கிறித்துவ மதத்தை தழுவி விட்டனர். எனவே சில இந்துப் பிரிவுகள் எங்களை ஏற்கத் தொடங்கினார்கள். தயானந்த் ஆங்கில வேதிக் (DAV) பள்ளிகளில் சேரக் கூட எங்களை ஊக்குவித்தார்கள்.’
ஆனால் பாரபட்சம் மறைந்துவிடவில்லை. கோலி சமாஜ் அவர்களுக்கென ஒரு பள்ளியை தொடங்கியது.
“அப்போதுதான் காந்தி, சரஸ்வதி பலிகா வித்யாலயாவுக்கு வந்தார். எங்கள் சமூகத்தின் மூத்தார் தொடங்கிய பள்ளி அது. இன்னும் அப்பள்ளி இயங்கி வருகிறது. எங்களின் பணியைக் கண்டு காந்தி ஆச்சரியம் கொண்டார். “சிறந்த பணியை நீங்கள் செய்திருக்கிறீர்கள். நான் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாக நீங்கள் முன்னேறியிருக்கிறீர்கள்,” என்றார் அவர்.
“கோலிகளாக எங்களால் தொடங்கப்பட்டிருந்தாலும் பிற சாதிகளை சேர்ந்த மாணவர்களும் இணைந்தனர். முதலில், அவர்கள் அனைவரும் பட்டியல் சாதியினராக இருந்தனர். பிறகு, பிற சமூகங்களை சேர்ந்த பலரும் பள்ளியில் இணைந்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் (உயர்சாதி) அகர்வால்கள் பள்ளியை கையில் எடுத்தனர். பதிவு எங்களிடம்தான் இருந்தது. ஆனால் அவர்கள் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டார்கள்.’ அவர் இப்போதும் பள்ளிக்கு செல்வதுண்டு. கோவிட் தொற்று பரவி, பள்ளிகள் மூடும் வரையேனும் அவர் சென்று கொண்டிருந்தார்.
’ஆம், நான் இன்னும் செல்வதுண்டு. ஆனால் அந்த (உயர்சாதி) மக்கள்தான் பள்ளியை நடத்துகின்றனர். அவர்கள் பிஎட் கல்லூரி கூட திறந்துவிட்டனர்.
‘9ம் வகுப்பு வரை நான் படித்திருக்கிறேன். அதில் எனக்கு அதிக வருத்தம் உண்டு. என்னுடைய சில நண்பர்கள் சுதந்திரத்துக்குப் பிறகு ஐஏஎஸ் அதிகாரிகளாகக் கூட ஆகியிருக்கின்றனர். இன்னும் பலர் பெரும் உயரங்களை வாழ்க்கையில் எட்டியிருக்கின்றனர். ஆனால் நான் வாழ்க்கையை சமூக சேவைக்கு அர்ப்பணித்திருக்கிறேன்.’
ஷோபாராம் ஒரு தலித். காந்தியவாதி என அறிவித்துக் கொண்டவர். அவர் உள்ளூர டாக்டர் அம்பேத்கர் மீதும் மதிப்பு கொண்டிருக்கிறார். இப்படி சொல்கிறார்: ‘நான் காந்தியவாதத்திலும் கிரந்திவாதத்திலும் (புரட்சிகர இயக்கம்) இருந்திருக்கிறேன். இரண்டும் நெருக்கமான பிணைப்பு கொண்டவை.’ எனவே, முதன்மையாக அவர் காந்தியவாதியாக இருந்தாலும் மூன்று முக்கியமான போக்குகளில் அவர் தொடர்பு கொண்டிருந்தார் எனலாம்.
காந்தியை நேசித்தாலும் மதித்தாலும் கூட, விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக அவரை ஷோபாராம் பார்த்ததில்லை. குறிப்பாக அம்பேத்கருடனான உறவு வருகையில்.
‘அம்பேத்கர் விடுத்த சவாலை எதிர்கொள்ள காந்தி அஞ்சினார். எல்லா பட்டியல் சாதியினரும் பாபாசாகெப்புடன் சென்று விடுவார்களென காந்தி அஞ்சினார். நேருவும் அஞ்சினார். இதனால் பெரும் இயக்கம் பலவீனமடையும் என அவர்கள் கவலை கொண்டனர். ஆனாலும் இருவருக்கும் அவர் திறமை வாய்ந்தவர் என தெரியும். நாடு சுதந்திரம் அடைந்ததும், இந்த முரணால் அனைவரும் பதட்டத்தில் இருந்தனர்.
‘அரசியல் சாசனத்தையும் சட்டங்களையும் அம்பேத்கரின்றி எழுத முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அவர்தான் அதற்கு தகுதியான ஒரே நபர். அந்த பொறுப்புக்காக அவர் கெஞ்சவில்லை. மற்ற அனைவரும் சட்டங்களுக்கான வடிவத்தை எழுதும்படி அவரை கெஞ்சினர். உலகத்தை உருவாக்கிய பிரம்மாவை போன்றவர் அவர். கற்றறிந்த அறிஞர் அவர். ஆனாலும், இந்தியர்களாகிய நாம் ஒரு கொடுமையான கூட்டம். அவரை 1947ம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் மிகவும் மோசமாக நடத்தினோம். சுதந்திரப் போராட்டத்தில் அவர் விலக்கக் கூட பட்டார். ஆம், இன்றும் எனக்கு உத்வேகமளிப்பவர் அவர்தான்.’
மேலும், ‘நான் மனதளவில் முழுமையான காங்கிரஸ்காரன். உண்மையான காங்கிரஸ்காரன்,’ என்கிறார் ஷோபாராம். அப்படி சொல்வதன் வழியாக அக்கட்சியின் தற்போதைய போக்கு மீதான தன் விமர்சனத்தை வெளிப்படுத்துகிறார். தற்போதைய நாட்டின் தலைமை ‘இந்தியாவை சர்வாதிகாரத்துக்கு கொண்டு சென்றுவிடும்’ என அவர் நம்புகிறார். எனவே ‘காங்கிரஸ் தன்னை மீட்டெடுத்து அரசியல் சாசனத்தையும் நாட்டையும் காக்க வேண்டும்’. ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட்டை அவர் அதிகம் பாராட்டுகிறார். ‘மக்களை பற்றி அவர் அக்கறை கொண்டிருக்கிறார். எங்களை போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களையும் அவர் பார்த்துக் கொள்கிறார்.’ அம்மாநிலத்தில் வழங்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம்தான் நாட்டிலேயே அதிகம். கெலாட் அரசு, ஓய்வூதியத்தை 50,000 ரூபாயாக மார்ச் 2021-ல் உயர்த்தியிருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அதிகபட்ச மத்திய ஓய்வூதியத் தொகை ரூ.30,000-தான்.
ஷோபாராம் தன்னை காந்தியவாதியாகவே காணுகிறார். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இறங்கும்போது கூட அவ்வாறே அவர் தன்னை அடையாளப்படுத்துகிறார்.
’எனக்கு பிடித்தவர்களை நான் பின்பற்றினேன், அவ்வளவுதான். நான் உடன்பட்ட சிந்தனைகள் கொண்ட ஒவ்வொருவரையும் நான் பின்பற்றினேன். அவர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படி செய்வதில் எந்த பிரச்சினையையும் நான் பார்க்கவில்லை. அவர்கள் இருவரிலும் கூட எந்த பிரச்சினையும் எனக்கு தென்படவில்லை.’
*****
ஷோபாராம் கெஹெர்வர் எங்களை ஸ்வதந்திரதா சேனானி பவனுக்கு அழைத்து செல்கிறார். அஜ்மெரின் பழைய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சந்திக்கும் இடம் அது. மும்முரமாக இயங்கும் ஒரு சந்தையின் நடுவே அந்த இடம் அமைந்திருக்கிறது. போக்குவரத்து நெரிசலினூடாக சந்துக்குள் திரும்பும் அவரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க கடுமையாக போராடுகிறேன். நடப்பதற்கு எந்த குச்சியின் துணையுமின்றி அவர் வேகமாக நடந்து செல்கிறார்.
சற்று குழப்பமடைந்து அவர் தடுமாறியது ஒரே ஒரு முறைதான். அவர் பெருமை கொண்ட பள்ளிக்கு நாங்கள் சென்றபோது அது நேர்ந்தது. அங்கு சுவரில் இருந்ததை படித்தார். ‘சரஸ்வதி பள்ளி மூடப்பட்டிருக்கிறது’ என கையால் வரையப்பட்ட ஒரு நோட்டீஸ் அங்கிருந்தது. பள்ளியும் கல்லூரியும் மூடப்பட்டுவிட்டது. காவலாளியும் பிறரும் நிரந்தரமாக அவை மூடப்பட்டுவிட்டதாக சொல்கின்றனர். விரைவில் அது ரியல் எஸ்டேட் மனையாக விரைவில் மாறக் கூடும்.
ஸ்வதந்திரதா சேனானி பவனில் அவர் பழைய சிந்தனைகளில் மூழ்கினார்.
‘15 ஆகஸ்ட் 1947 அன்று செங்கோட்டையில் இந்தியக் கொடியை ஏற்றியபோது நாங்கள் இங்கு கொடி ஏற்றினோம். மணமகள் போல இந்த இடத்தை அலங்கரித்தோம். எல்லா சுதந்திரப் போராட்ட வீரர்களும் இங்கு இருந்தோம். எங்களின் இளமைக்காலம் அது. அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தோம்.
‘இந்த பவனுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. தனியொரு உரிமையாளர் இதற்குக் கிடையாது. நிறைய சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்தனர். எங்களின் மக்களுக்காக நாங்கள் நிறைய செய்தோம். சில சமயங்களில் நாங்கள் தில்லிக்கு சென்று நேருவை சந்தித்திருக்கிறோம். பிறகு, இந்திரா காந்தியை சந்தித்திருக்கிறோம். ஆனால் இப்போது அவர்கள் யாரும் உயிருடன் இல்லை.
’பல பெருமைக்குரிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்திருக்கின்றனர். நான் பணிபுரிந்த பலரும் புரட்சி பக்கமும் சேவை பக்கமும் இருந்தவர்கள்.’ அவர் பெயர்களை சொல்கிறார்.
‘டாக்டர் சர்தானந்த், வீர் சிங் மேத்தா, ராம் நாராயண் சவுதரி. ராம் நாராயண், தைனிக் நவ்ஜோதி பத்திரிகையின் ஆசிரியரான துர்கா பிரசாத் சவுதரியின் அண்ணன் ஆவார். அஜ்மெரை சேர்ந்த ஒரு பார்கவ் குடும்பம் இருந்தது. அம்பேத்கர் தலைமையில் அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுவில் முகுத் பிகாரி பார்கவ் உறுப்பினராக இருந்தார். அவர்களில் எவரும் உயிருடன் இல்லை. கோகுல்பாய் பட் என ஒருவர் இருந்தார். சுதந்திரப் போராட்ட வீரர். ராஜஸ்தானின் காந்தி அவர்.’ சிரோஹி சமஸ்தானத்தின் முதலமைச்சராக கொஞ்ச காலம் இருந்த பட், சமூக சீர்திருத்தம் மற்றும் சுதந்திரப் போராட்டங்களுக்காக அப்பதவியை விட்டு விலகினார்.
ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்த ஒருவருக்கும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு இல்லை என உறுதியாகக் கூறுகிறார் ஷோபாராம்.
‘விரலில் கூட அவர்களில் எவருக்கும் வெட்டுப்படவில்லை’.
ஸ்வதந்திரதா சேனானி பவன் என்னவாகும் என்பதுதான் அவரை தற்போது பெரிதும் கவலைக்குள்ளாக்கும் விஷயம்.
‘எனக்கு வயதாகி விட்டது. தினமும் இங்கு வர முடியாது. நான் நன்றாக இருந்தால் இங்கு தினமும் வந்து ஒரு மணி நேரமாவது கட்டாயம் இருப்பேன். இங்கு வரும் மக்களை நான் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு என்னால் முடிந்த அளவுக்கு உதவுவேன்.
‘என்னுடன் யாரும் இல்லை. அந்த காலத்தில் நான் தனியாக இருந்தேன். பெரும்பாலான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இறந்துவிட்டனர். இன்னும் உயிருடன் இருக்கும் சிலரும் தளர்ந்து போய், ஆரோக்கியம் குன்றி இருக்கின்றனர். எனவே ஸ்வதந்திரதா சேனானி பவனை பார்த்துக் கொள்வது நான் மட்டும்தான். இப்போது கூட நான் அதை பராமரிக்கிறேன். பாதுகாக்க முயற்சிக்கிறேன். ஆனால் அது எனக்கு கண்ணீரை தருகிறது. ஏனெனில் என்னுடன் வேறு எவரும் இல்லை.
‘முதலமைச்சர் அஷோக் கெலாட்டுக்கு நான் கடிதம் எழுதினேன். வேறு யாரேனும் அபகரிக்கும் முன்பு இந்த பவனை எடுத்துக் கொள்ளும்படி கோரியிருக்கிறேன்.
‘இந்த இடம் பல கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. நகரத்தின் மையத்தில் இருக்கிறது. பலர் எனக்கு ஆசை காட்டினர். ‘தனியாக என்ன செய்வீர்கள் ஷோபாராம்? இதை எங்களிடம் கொடுத்து விடுங்கள். கோடிக்கணக்கில் ரூபாய் தருகிறோம்.” என்பார்கள். நான் இறந்தபிறகு அவர்கள் என்ன வேண்டுமானாலும் இந்த கட்டடத்தை செய்து கொள்ளட்டும் என்பேன் நான். என்னால் என்ன செய்ய முடியும்? அவர்கள் கேட்பதை நான் எப்படி செய்ய முடியும்? கோடிக்கணக்கான பேர் இதற்காகவும் நம் சுதந்திரத்துக்காகவும் உயிர் கொடுத்திருக்கிறார்கள். மேலும் அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?
’உங்களின் கவனத்துக்கு இதை நான் கொண்டு வர விரும்புகிறேன். யாரும் எங்களை பற்றி கவலைப்படவில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி யாரும் விசாரிக்கவில்லை. சுதந்திரத்துக்காக, நாங்கள் எப்படி போராடினோம் என விளக்கும் ஒரு புத்தகம் கூட பள்ளிகளில் இல்லை. எங்களை பற்றி மக்களுக்கு என்ன தெரியும்?’
சென்னை பாரதி புத்தாகாலயம் வெளியிடவிருக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு பதிப்பின் ஒரு பகுதி.
தமிழில்: ராஜசங்கீதன்