“என்னிடம் எப்போதுமே பணம் இருப்பதில்லை,” என்கிறார் பபிதா மித்ரா, குடும்பத்துக்கான பட்ஜெட் திட்டமிடுவதில் உள்ள சிரமத்தை குறித்து. “உணவுக்கென ஒரு பகுதி பணத்தை எடுத்து வைத்து விடுவேன். ஆனால் மருந்துகளுக்கு அதை செலவழிக்கும் சூழல் ஏற்படும். மகன்களுக்கான ட்யூஷன் பணம், உணவுப் பொருளை வாங்க செலவாகிறது. மாதந்தோறும் வேலைக்கு அமர்த்துபவர்களிடமிருந்து நான் கடன் பெற வேண்டியிருக்கிறது…”
கொல்கத்தாவின் கலிகாபூர் பகுதியின் இரு வீடுகளில் வேலை பார்க்கும் 37 வயது தொழிலாளரான அவர், வருடத்துக்கு 1 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். மேற்கு வங்க நாடியா மாவட்ட ஆசான் நகரிலிருந்து இங்கு புலம்பெயர்ந்தபோது அவருக்கு வயது 10. “என் பெற்றோரால் மூன்று குழந்தைகளை வளர்க்க முடியவில்லை. எனவே கொல்கத்தாவில் இருந்த எங்கள் ஊரை சேர்ந்தவர்களின் வீட்டில் வேலை பார்ப்பதற்காக நான் அனுப்பி வைக்கப்பட்டேன்.”
அப்போதிருந்து பல வீடுகளில் பபிதா வேலை பார்த்து வருகிறார். கொல்கத்தாவில் அவர் இருந்த காலத்தில் 27 பட்ஜெட்கள் வந்து விட்டன. அவரது வாழ்க்கையோ அவரைப் போன்ற 4.2 மில்லியன் வீட்டு பணியாளர்களின் வாழ்க்கையோ எந்தவிதத்திலும் மாறவில்லை. சுயாதீன கணக்கெடுப்புகள் அவர்களது எண்ணிக்கையை 50 மில்லியன் எனக் குறிப்பிடுகின்றன.
2017ம் ஆண்டில் பபிதா, தெற்கு 24 பர்கானாஸின் பகாபன்பூர் பகுதியிலுள்ள உச்சேபொடா பஞ்சாயத்தை சேர்ந்தவரும் நாற்பது வயதுகளில் இருந்தவருமான அமல் மித்ராவை மணம் முடித்துக் கொண்டார். ஆலையில் தொழிலாளராக இருந்த கணவரால் அவரின் பொறுப்புகள் அதிகமாகின. குடும்பத்துக்கு கணவரால் குறைந்த பங்களிப்புதான் வந்தது. அவருடைய வருமானம்தான் ஆறு பேர் கொண்ட குடும்பத்தை ஓட்ட பெரிதும் உதவுகிறது. 5 மற்றும் 6 வயதுகளில் மகன்களும் 20 வயதுகளில் ஒரு மகளும் அவரின் மாமியாரும் என பபிதாவும் அமலும் வசித்து வருகின்றனர்.
4ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட பபிதாவுக்கு பாலினம் சார்ந்த பட்ஜெட் குறித்து கொஞ்சம் தெரியும். பெண்கள் முன்னெடுக்கும் வளர்ச்சி என நிர்மலா சீதாராமன் 2025-26 பட்ஜெட் உரையில் குறிப்பிட்டதை குறித்தும் தெரியும். ஆனால் அவரின் அன்றாட வாழ்க்கை அறிவு, அவருடைய பதிலில் வெளிப்படுகிறது: “கஷ்ட காலங்களில் எந்த உதவியும் பெற முடியாத பெண்களை பெருமையாக பட்ஜெட்டில் பேசுவதால் என்ன பயன்?” கோவிட் தொற்றுக்கால நினைவுகளை அவர் மறக்கவில்லை.






