தெஜ்லிபாய் தேதியா மெல்ல இயற்ஐ விதைகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன், மத்தியப்பிரதேசத்தின் அலிராஜ்பூர் மற்றும் தெவாஸ் மாவட்டங்களில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த தெஜ்லிபாய் போன்ற பில் பழங்குடிகள், இயற்கை விதைகளையும் இயற்கை விவசாயத்தையும் கைவிட்டு, செயற்கை விதைகளுக்கும் ரசாயன உரங்களுக்கும் மாறினர். இதனால் இயற்கை விதைகள் பற்றாக்குறை ஏற்பட்டது என்கிறார் தெஜ்லிபாய். “எங்களின் இயற்கை விவசாயத்துக்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. உழைப்புக்கு சரியான விலை சந்தையில் கிடைக்கவில்லை. மேலும் அந்த 71 வயதுக்காரர், “சேமித்த உழைப்பு நேரத்தால், குஜராத்துக்கு புலம்பெயர்ந்து சென்று அதிக ஊதியத்துக்கு தொழிலாளர் வேலை செய்ய முடிந்தது.”
ஆனால் இப்போது இந்த மாவட்டங்களிலுள்ள 20 கிராமங்களில் கிட்டத்தட்ட 500 பெண்கள், இயற்கை விதைகளை பாதுகாத்து, கன்சாரி நு வடவ்னோ (KnV) என்கிற அமைப்பின் வழிகாட்டலில் இயற்கை விவசாயத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். பில் மொழியில் ‘தெய்வம் கன்சாரிக்கான பாராட்டு’ என அர்த்தம். பில் பழங்குடி பெண்களை கொண்ட வெகுஜன அமைப்பான KnV, பெண்களின் உரிமைக்கு போராடவும் ஆரோக்கியப் பிரச்சினைகளுக்காக செயல்படவுமென 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆரோக்கியப் பிரச்சினைகள் சார்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியதில், KnV உருவாக்க காரணமாக இருந்த பழங்குடி பெண்கள், பாரம்பரிய விவசாய முறைக்கு திரும்புவது, உணவு வழக்கத்தை சரி செய்து, ஆரோக்கியத்தை கொடுக்குமென புரிந்து கொண்டார்கள்.
KnV-ல், தேர்வு செய்யப்பட்ட விதைகள் விற்பனைக்கு தனியாகவும் நாடு முழுக்க பன்மைய இயற்கை விவசாயத்தை பரப்பவென விவசாயிகளுக்கு விநியோகிக்க தனியாகவும் சேமித்து வைக்கப்படும் என்கிறார் கவாடா கிராமத்தை சார்ந்த ரிங்கு அலவா. “அறுவடைக்கு பிறகு, சிறந்த விதைகளை நாங்கள் தேர்வு செய்ய வேண்டும்,” என்கிறார் 39 வயது ரிங்கு.
விவசாயியும் கக்ரானா கிராமத்தின் KnV உறுப்பினருமான ராய்திபாய் சொலாங்கி ஒப்புக் கொள்கிறார்: “விதை தேர்வுதான், விதைகளின் தரத்தை மேம்படுத்தவும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க சிறந்த வழி.
40 வயது ராய்திபாய், “தானியமும் சோளம் போன்ற பயிர்களும் பில் பழங்குடியினரான எங்களின் வழக்கமான உணவு. தானியங்களுக்கு நீர் அதிகம் தேவைப்படாது. சுவையாகவும் இருக்கும்.” தானிய வகைகளின் பெயர்களை பட்டியலிடுகிறார் - பட்டி (குதிரைவாலி), பாடி, ரலா (தினை), ராகி, பஜ்ரா (கம்பு), கோடோ, குட்கி, சங்க்ரி (சாமை).
































