ராய்ப்பூரின் புறநகரில் இருக்கும் செங்கல் சூளைகளில் மதிய உணவுக்கான இடைவேளை. தொழிலாளர்கள் பலரும் உணவு உண்ணுகிறார்கள் அல்லது தற்காலிக குடிசைகளில் ஓய்வெடுக்கிறார்கள்.
“நாங்கள் சத்னாவை சேர்ந்தவர்கல்,” என்கிறார் மண் குடிசைக்குள் இருந்து வெளியே வரும் பெண். இங்குள்ள தொழிலாளர்கள் பலரும் மத்தியப் பிரதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள். நவம்பர் - டிசம்பர் மாதங்களில் அறுவடைக் காலம் முடிந்ததும் சட்டீஸ்கரின் தலைநகருக்கு வருடந்தோறும் வரும் அவர்கள் மே அல்லது ஜூன் மாத வரை ஆறு மாதங்களுக்கு அங்கு வசிப்பார்கள். இந்தியாவின் பெரிய துறையான செங்கல் சூளைகளில் 10-23 மில்லியன் தொழிலாள்ரகள் (செங்கல் சூளைகளில் அடிமைத்தனம், 2017 ) பணிபுரிகின்றனர்.
இந்த வருடம் அவர்கள் வீடு திரும்பும்போது, புதிய அரசாங்கம் ஒன்றியத்தில் பதவியேற்றிருக்கும். ஆனால் அதற்கான தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பங்காற்ற முடியுமா எனத் தெரியவில்லை.
“வாக்களிக்கும் நேரம் எங்களுக்கு சொல்லப்படும்,” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண்.
தகவலை அநேகமாக ஒப்பந்ததாரரான சஞ்சய் பிரதாபதி கொடுப்பார். குடிசைகளிலிருந்து சற்றுத் தொலைவில் நின்றபடி அவர், “சாத்னாவில் தேர்தல் பற்றி தகவல் ஏதும் எங்களுக்கு இல்லை. தகவல் கிடைத்தால், அவர்களுக்கு நாங்கள் சொல்வோம்,” என்கிறார். சஞ்சயும் இங்குள்ள பல தொழிலாளர்களும் மத்தியப்பிரதேசத்தில் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினராக வரையறுக்கப்பட்டிருக்கும் பிரஜபதி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
சுட்டெரிக்கும் ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை 40 டிகிரி வரை எட்டும். அக்காலக்கட்டத்தில்தான் சூளைத் தொழிலாளர்கள் வார்ப்பு, தீயில் வாட்டுதல், செங்கற்களை சுமப்பது போன்ற கடுமையான பணிகளை செய்வார்கள். தேசிய மனித உரிமை ஆணைய ( 2019 ) அறிக்கையின்படி செங்கற்களை செய்பவர்கள் நாளொன்றுக்கு 400 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். தம்பதியர் ஒன்றாக பணிபுரிகையில் இருவருக்கும் சேர்த்து 600-700 ரூபாய் வரை கொடுக்கப்படும் என்கிறது அறிக்கை. ஒரு கூட்டாக பணிபுரிவது இங்குள்ள தொழிலாளர்கள் மத்தியில் இயல்பு.
உதாரணமாக ராம்ஜாஸ் இங்கு மனைவி ப்ரீத்தியுடன் வந்திருக்கிறார். சிறு கொட்டகைக்கு அடியில் அமர்ந்திருக்கும் 20 வயது இளைஞரான அவர், மும்முரமாக செல்பேசியை பார்த்துக் கொண்டிருக்கிறார். தேர்தல் தேதி உறுதியாக தெரியவில்லை. மே மாதத்தில் ஏதோவொரு நாள் என்கிறார்.
“சாத்னா போய் வாக்களிக்க நாங்கள் 1,500 ரூபாய் செலவழிப்போம். அது எங்களின் உரிமை.” எல்லா தொழிலாளர்களும் செல்வார்களா என்கிற கேள்விக்கு, ராம்ஜாஸ் யோசிக்க, உடனே குறுக்கிடும் சஞ்சய், “அவர்கள் எல்லாரும் போவார்கள்,” என்கிறார்.
சாத்னாவில் தேர்தல் ஏப்ரல் 26 அன்று நடந்தது. இச்செய்தியாளர் தொழிலாளர்களுடன் ஏப்ரல் 23 அன்று பேசினார். அச்சமயத்தில் யாரிடமும் ரயில் சீட்டு இருக்கவில்லை.
புலம்பெயர் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவர் ராம்ஜாஸ். சட்டீஸ்கரின் செங்கல் சூளைகளில் அவரது அப்பா வேலை பார்த்திருக்கிறார். 10ம் வகுப்பு படிக்கும்போது தந்தையை ராம்ஜாஸ் இழந்தார். மூன்று சகோதர்களில் இளையவர். ஒரு சகோதரியும் அவருக்கு இருக்கிறார். பள்ளிப்படிப்பு முடித்ததும் ராம்ஜாஸ் வேலை பார்க்கத் தொடங்கி விட்டார். அவரின் அண்ணனும் கூட சத்னா மாவட்டத்தின் கிராமத்தில் தொழிலாளராக பணிபுரிகிறார். ஐந்து வருடங்களாக புலம்பெயர் தொழிலாளராக ராம்ஜாஸ் வேலை பார்க்கிறார். விழா மற்றும் அவசியங்களின்போது மட்டும் ஊருக்கு செல்வார். சூளையில் வேலை முடிந்தாலும் அவர் இங்கேயே இருந்து கிடைக்கும் வேலைகளை செய்கிறார். சென்சஸ் கணக்கெடுப்பின்படி (2011), வேலை தேடி மத்தியப்பிரதேசத்திலிருந்து 24,15,635 பேர் புலம்பெயர்ந்திருக்கின்றனர்.
பிற மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டும் இந்த கதி இல்லை.
ராய்ப்பூரில் தேர்தல் பிரசாரங்கள் ஓய்ந்து விட்டது. எதிர்க்கட்சியின் தடமே இல்லை. போஸ்டர்களும் பேனர்களும் சூளையருகே எங்கும் தென்படவில்லை. வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளரை அறிவிக்கும் ஒலிபெருக்கிகளும் இல்லை.
பலோதாபஜாரை சேர்ந்த பெண் ஒருவர், வேலையிலிருந்து இடைவேளை எடுத்து ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார். கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் இங்கு அவர் வந்திருக்கிறார். “மூன்று- நான்கு மாதங்களுக்கு முன் நான் வாக்களித்தேன்,” என்கிறார் அவர் 2023 நவம்பர் மாதம், சட்டீஸ்கரில் நடந்த சட்டசபை தேர்தலை குறிப்பிட்டு. ஆனாலும் வாக்களிக்க ஊருக்கு செல்வாரென அவர் கூறுகிறார். சட்டசபை தேர்தலின்போது ஊர்த்தலைவர் தகவல் அனுப்பினார். 1,500 ரூபாய் உணவுக்கும் பயணத்துக்கும் சேர்த்து அனுப்பினார்.
“எங்களை அழைப்பவர்கள்தான் எங்களுக்கு பணமும் கொடுப்பார்கள்,” என்கிறார் அவர். ராய்ப்பூர் மக்களவை தொகுதியில் தேர்தல் மே 7ம் தேதி நடக்கவிருக்கிறது.
தமிழில்
:
ராஜசங்கீதன்